Friday, December 16, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! ஆறுமுக நாவலர் 2

தமிழ்நாட்டில் இருந்தது போல் ஆதீனங்கள், மடங்கள் ஆகிய எதுவும் இலங்கையில் இல்லை. மதமாற்றம் என்பது ஆளவந்தவர்களால் தீவிரமாக்கப்பட்டதொரு சூழ்நிலையில் நாவலர் தன்னந்தனியராக இருந்து அவரே ஓர் அமைப்பாக இயங்கினார். சைவசமய நூல்களைச் சரியானபடி போர்க்கலன்களாக இயங்கும்படி படைத்தார். அப்படி அவர் படைத்த நூல்களில் குறிப்பிடத்தக்கவை சைவ சமய தூஷணப் பரிகாரம், 1854-ஆம் ஆண்டிலும் அதற்கு முன்னர் சுப்பிரபோதம் 1853 இலும் வெளிவந்து அனைவரின் பேராதரவைப் பெற்றது என்று சொல்வதை விட மாற்றுச் சமயத்தினரும் வியந்து பாராட்டத்தக்க அளவுக்குச் செல்வாக்கைப் பெற்றது என்பதே உண்மையாகும். கிறிஸ்தவப் பாதிரிமார்களே இவருடைய கிறிஸ்தவமதக் கண்டனங்களை வியந்து பாராட்டி இருக்கிறார்கள் என்றால் இவரின் எழுத்தாற்றலைக் குறித்து என்ன சொல்ல முடியும்!

அதன் பின்னர் சைவ சமய வழிபாட்டு முறைகளை விளக்கும் நூல்களைச் சிறிது சிறிதாக வெளியிட்டார். நித்ய கர்ம அனுட்டான விதி, ஆலய தரிசன விதி போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவை. யாழ்ப்பாணத்து நல்லூரின் சைவ சமயம் கந்தபுராணத்தில் குறிப்பிடப்படும் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் கிறிஸ்துவப் பாதிரிமார்களோ சுப்பிரமணியர் வழிபாட்டையும் நல்லூரில் இருந்த கந்தசாமிக் கோயிலையும் குறித்து இழிவாகப் பேசி வந்தனர். இதை முறியடிக்க நாவலர் சுப்பிரமணிய போதம் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். கந்தபுராணத்துக்கு இவர் எழுதிய உரையும் வெளிவந்தது. இவருடைய கந்தபுராணச் சொற்பொழிவுகளும் பெரும் ஆதரவைப் பெற்றன. உயிர்ப்பலியுடன் கூடிய சிறு தெய்வ வழிபாடுகளை முற்றிலும் எதிர்த்தார். ஆகமவழியான கோயில்களில் முறைப்படி ஆகமம் கற்றவர்களே வழிபாடுகள் செய்யத் தக்கவர்கள் எனக் கூறினார். தேவதாசிகள் முறை, வாணவேடிக்கைகள், கோயில்களில் ஊழியர்கள் செய்யும் அட்டூழியம் போன்றவற்றையும் வெளிப்படையாக எதிர்த்து வந்தார்.

இவர் சென்னை வந்தபோது தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்கு வருடங்கள் தங்கினார். சென்னையைத் தம் சென்மபூமியிற் சிறந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் இருந்த காலகட்டத்தில் சிதம்பரத்தில் சைவத் தொண்டுகள் செய்யவெனச் சென்ற நாவலர் அங்கே ஓர் பாடசாலையையும் ஆரம்பித்தார். 1864-ஆம் ஆண்டு சைவப் பிரகாச வித்தியாசாலை என்னும் பெயரில் தொடங்கினார். சென்னை தங்கசாலையில் வித்தியாநுபாலன யந்திரசாலையும் நிறுவிப் புத்தகங்களை அச்சிட்டார். தமிழ்ப்பணி வேறு, சைவ சமயப்பணி வேறு என வலியுறுத்தி வந்தார். சைவ சமயத்தையும், தமிழையும் வேறுபடுத்திக்காணவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். படிப்பறிவில்லா ஜனங்களே சைவ சமயத்தைத் தமிழ்ச்சமயம் எனவும், சைவக்கோயிலைத் தமிழ்க்கோயில் எனவும் கூறுவதாகவும் தமிழ் என்பது சமயம் அல்ல எனவும் அது ஒரு மொழி எனவும் தெளிவுபடக் கூறினார். சிதம்பரத்தில் இவர் தங்கி இருந்த சமயம் வள்ளலார் வடலூரில் பிரபலம் அடைந்திருந்தார். சிதம்பரம் கோயிலில் வள்ளலாரால் பாடப்பட்ட திருஅருட்பா நாவலருக்கு உகந்ததாக இல்லை. அதைத் தீவிரமாக எதிர்த்தார்.

1868-ஆம் ஆண்டு சென்னையிலும், சிதம்பரத்திலும் மாறி மாறி அருட்பா மறுப்பு குறித்துச் சொற்பொழிவுகள் இயற்றி வந்தார். அவ்வுரைகளின் அடிப்படையில் போலி அருட்பா மறுப்பு என்னும் நூலும் வெளிவந்தது. நாவலரின் சமய வாழ்க்கையில் இது சற்றுக் கசப்பான நிகழ்வாகும். வள்ளலாரையும், சிதம்பரம் கோயிலின் தீக்ஷிதர் ஒருவரையும் எதிர்த்துக் கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் நாவலரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிதம்பரம் சபா நடேச தீக்ஷிதருக்கு 50ரூ அபராதமும் கட்டத்தவறினால் ஒரு மாதச் சிறைத்தண்டனையும் கொடுத்தார். வள்ளலாரின் மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமின்மையாலும், வள்ளலார் தாம் நாவலரை எதுவும் சொல்லவில்லை என்றதாலும் தள்ளுபடி செய்யப்பட்டது. என்றாலும் இவ்வழக்கின் மூலச்சான்றுகள் சரிவரக் கிடைக்கவில்லை. பத்திரிகைச் செய்திகளை ஒட்டிப் பலரும் எழுதி இருப்பவையே கிடைக்கின்றன.

சைவ சமயப் பிரசாரத்தில் தீவிரமாக இருந்த நாவலர் சமூக சீர்திருத்தத்தில் இக்கால நோக்கின்படி ஒரு பிற்போக்குவதி எனப்பட்டார். வர்ணாசிரமத்தை ஆதரித்தும், தீண்டாமைக் கருத்துக்களை ஆதரித்தும் தம் சைவ வினா-விடை புத்தகத்தில் எழுதி உள்ளார். இவ்வளவு அருந்தொண்டாற்றிய நாவலரின் கடைசிப் பிரசங்கம் 1879-ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருநக்ஷத்திரமான ஆடி சுவாதி தினத்தன்று நடந்தது. வண்ணார்பண்ணையில் நடந்த அந்தப் பிரசங்கத்திற்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் குன்றினார் நாவலர். 1879-ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 18-ஆம் நாள் மிகவும் உடல்நலம் குன்றி குளிக்கக் கூட முடியாமல் இருந்தார் நாவலர். வேறொருவரைக் கொண்டு அன்றாட வழிபாடுகளைச் செய்ய வைத்தார். கார்த்திகை 21-ஆம் நாள் வெள்ளியன்று இரவு அடியார்களை தேவாரம், திருவாசகம், போன்றவற்றை ஓதச் சொல்லிக் கேட்டவண்ணம் கங்காதீர்த்தம் அருந்தி, விபூதியைத் தரித்துக்கொண்டு, உருத்திராக்ஷ மாலையையும் அணிந்து கொண்டு பஞ்சாக்ஷரத்தை நினைத்தவண்ணம் தலைமேல் கைகளைக்கூப்பிய வண்ணம் இறைவனடி சேர்ந்தார்.

ஆறுமுக நாவலருக்கெனத் தனி இணைய தளம் உள்ளது. அவரின் சிலையும், மண்டபமும் யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment