Sunday, February 19, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! சபாபதி நாவலர்! 2

பின்னர் இவர் திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்தார். அங்கே அப்போது பதினாறாம் பட்டம் மகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் அருளுபதேசம் பெற்று கிட்டத்தட்ட 12 வருடம் அங்கேயே இருந்து இலக்கணம், இலக்கியம், சித்தாந்தம், தத்துவம், வேதாந்தம் அனைத்தும் கற்று ஞான நூல்களையும் கற்றுத் தேர்ந்து மஹா சந்நிதானத்தின் அருளுபதேசத்தையும் பெற்றார். ஆதீனத்தின் வித்துவானாகவும் விளங்கினார். ஆதீனத்தினால் “நாவலர்” என்னும் பட்டமும் வழங்கப் பட்டு கெளரவிக்கப்பட்டார். மாதவச் சிவஞான யோகிகளின் திருக்கரத்தால் எழுதப் பட்ட சிவஞான மாபாடியத்தின் மூல ஓலைச்சுவடியை வேறு யாருக்குமே கொடுக்காத ஆதீனகர்த்தா சபாபதி நாவலரிடம் கொடுத்துப் படிக்கச் செய்யும் அளவுக்குச் செல்வாக்குப் பெற்றிருந்தார்.

சிதம்பர சபாநாத புராணம் தவிரவும் வடமொழியிலிருந்து இவர் மொழிபெயர்த்த மற்ற நூல்களில் அப்பைய தீக்ஷிதரின் சிவகர்ணாம்ருதம், அரதத்தாசாரியாரின் சதுர்வேத தாற்பரிய சங்கிரஹம் ஆகிய மொழிபெயர்ப்புக்களையும் செய்தார். சிவகர்ணாம்ருதம் சிவபரத்துவத்தைப் பூர்வபக்கம், சித்தாந்தம் என இருபகுதிகளாய்ச் சொல்லப்பட்டுத் திருப்பனந்தாள் காசி மடத்து அதிபதியவர்களின் அருளாசியோடு 1885-ஆம் ஆண்டில் வெளி வந்தது. சதுர்வேத தாற்பரிய சங்கிரஹமோ முதல் இரண்டு பதிப்புக்கள் யாரால் வெளியிடப்பட்டன எனச் சொல்லமுடியவில்லை. ஆனால் மூன்றாம் பதிப்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1924-இல் வெளியிடப்பட்டதாக அறிகிறோம். அதோடு இந்நூலின் சிறப்பைப் பாராட்டியும், வடமொழியில் இருந்த இந்நூல் வடமொழி தெரிந்தோர்க்கே பயன்பட்டு வந்த நிலையில் சபாபதி நாவலர் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலின் பொருளைத் தெளிவான தமிழில் அழகுற விளக்கிப் பெரும் தொண்டாற்றி இருக்கிறார் சபாபதி நாவலர் எனக் கூறி இருப்பதாகவும் அறிகிறோம்.

மேற்கண்ட நூற்களைத் தவிர அப்பைய தீக்ஷிதரின் மேலும் இரு நூல்களான பாரத தாற்பரிய சங்கிரஹம், இராமாயண தாற்பரிய சங்கிரஹம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார். ஈழத்தில் அந்நாட்களில் பெரிதும் செய்யப்பட்ட மதமாற்றத்தைக் கண்டிக்கும் வகையில் இயேசுமத சங்கற்ப நிராகரணம் என்னும் நூலையும் எழுதினார். இதைப் பாராட்டி திரு சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் தம் சிறப்புப் பாயிரத்தில் கீழ்க்கண்ட வண்ணம் பாராட்டி உள்ளார்.

சைவமாகிய தாமரைத் தடமொளி தழைப்பப்
பொய்வரும் விவிலிய கயிரவம் பொலிவிழப்ப
மெய்வரும் புலவோ ரளிகூட்டுண விவனூல்
தெய்வஞா யிறொன் றெழுந்தெனத் திகழ்ந்ததையன்றோ.

இது யாழ்ப்பாணம் நல்லூரில் வெளியிடப் பட்டது. இலக்கண விளக்கச் சூறாவளிக்கு ஏற்பட்ட பழியை மறுத்து இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு, வைதிக காவியங்களான ராமாயணம், பெரிய புராணம், தணிகைப் புராணம் போன்றவற்றை மறுத்துச் சிலர் பெரிதும் பாராட்டிய சிந்தாமணியை மறுத்து வைதிகக் காவியங்களின் மாட்சியை நிலைநாட்டும் வண்ணம் எழுதப் பட்டது வைதிக காவிய தூஷண மறுப்பு என்னும் நூல். மேலும் ஞானசூடாமணி, ஞானாமிர்தம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, திருவிடைமருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, மாவையந்தாதி, சிதம்பர பாண்டிய நாயக மும்மணிக் கோவை, வடகோவைச் செல்வ விநாயகர் இரட்டை மணிமாலை, நல்லைச் சுப்பிரமணியக்கடவுள் பதிகம், வதிரிநகர்த் தண்டபாணிக்கடவுள் பதிகம், புறவார்பனங்காட்டூர்ப் புறவம்மை பதிகம், சிவஞானயோகிகள் குருபூசைமகோற்சவம், திராவிடப்பிரகாசிகை போன்ற நூல்களையும் எழுதியுள்ளார்.


திராவிடப் பிரகாசிகையின் சிறப்புப் பாயிரத்தில் சபாபதி நாவலர் அவர்கள்,

“தமிழின் தொன்மை மரபினையும், அதனிலக்கண மரபினையும், அதனிலக்கிய மரபினையும், சாத்திரமரபினையும், நல்லாசிரியர் வழிநின்று தெளிதரற்குரிய நற்றவ அறிவு மாட்சியுடையரல்லாதார் சிலர் இக்காலத்துத் தாம் தாம் அறிந்தவற்றால் முறை பிறழக் கொண்டு தமிழ்மொழியினும் பிறமொழியினும் பலவாறெழுதி வெளியிட்டு வரம்பழித்தானும் அவர் உரையின் பொய்ம்மை தேறமாட்டாத பேதைநீரார் அவற்றினை மெய்யெனக் கொண்டு தமிழ் நல்லாசிரியர் தெய்வப்புலமை மாட்சியினையும், அவர் நூலுரைகளின் தாரதம்மிய முறையினும் வரன்முறை போற்றாது புறம்பழித்துத் தமக்கும் பிறர்க்குங் கேடுசூழதலானுந் தமிழுலகமற்றவற்றின் உண்மைதேறி உறுதிப்பயன் எய்துதற்பொருட்டு அத்திறனெல்லாம் விளக்கித் திராவிடப்பிரகாசிகை என்னும் பெயரினால் இவ்வசன கிரந்தம் இயற்றுவோமாயினோம்.”


என்று கூறியுள்ளார். இராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்களால் கெளரவிக்கப்பட்ட சிலருள் சபாபதி நாவலரும் ஒருவர். சிதம்பரம் கோயிலின் குடமுழுக்குக்காகச் சிதம்பரம் சென்ற ராஜா சேதுபதி அவர்கள் நாவலரைக் கண்டும், அவரின் தமிழ்ப்பற்றையும், சைவப் பற்றையும் கண்டு வியந்து பாராட்டி அவரைத் தம்மோடு அழைத்துச் சென்றார். அங்கே தம் அரண்மனையில் சபாபதி நாவலரைத் தங்க வைத்து சைவ சித்தாந்தக் கொள்கைகளை விளக்கச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தார்.

நாவலரைத் தம்முடன் திரு உத்தரகோசமங்கை, திருச்செந்தில் , திருக்குற்றாலம் போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்று அங்கெல்லாம் பெரியபுராணச் சொற்பொழிவுகளும், சைவ சித்தாந்தச் சொற்பொழிவுகளும் செய்ய வைத்து மக்களும், அறிஞர் பெருமக்களும் நாவலரின் சொற்திறனையும், அறிவையும், கல்வியையும், ஞானத்தையும் வியந்து பாராட்டும்படி செய்தார். சேதுபதி மன்னர் நாவலரை “சைவ சிகாமணி” “பரசமய கோளரி” என்னும் பட்டப் பெயர்களால் அழைத்து மகிழ்ந்தார். நாவலரை அடிக்கடி தம் ஊருக்கு அழைத்துச் சொற்பொழிவுகள் செய்ய வைத்துப் பரிசில்களை அளிப்பதை வழக்கமாய்க் கொண்டிருந்தார். ஓர் முறை இரண்டாயிரம் வெண்பொற்காசுகளை அவருக்குப் பரிசாக அளித்ததோடு அல்லாமல், மேலும் உதவியும் செய்வதாக வாக்களித்தார்.

சேதுபதி மன்னர் அளித்த பரிசோடு சென்னை வந்த நாவலர், “சித்தாந்த வித்தியாநு பாலன சாலை” என்னும் பெயரில் ஓர் அச்சகத்தை நிறுவினார். அதன் மூலம் “ஞானாமிர்தம்” என்னும் செந்தமிழ்ச் செய்தித் தாளை வெளியிட்டார். “சுதேச வர்த்தமானி” என்னும் பத்திரிகையும் வெளியிட்டார். இவரின் ஞானாமிர்தத்தைப் பாராட்டி அக்காலம் வெளிவந்து கொண்டிருந்த,”பிரம்ம வித்யா” என்னும் பத்திரிகைத் தலைவர் சபாபதி நாவலரைத் திருப்பாற்கடலாக வர்ணித்து, அத்தகைய திருப்பாற்கடலில் பிறந்த ஞானாமிர்தம் புத்தி என்னும் மந்தரத்தால் கடையப்பட்டு வெளிவருவதாய்ப் பாராட்டியுள்ளார். சிலகாலம் அந்தச் செய்தித் தாள் வெளிவந்தது. அக்காலகட்டத்தில் சபாபதி நாவலர் மயிலையில் தங்கி இருந்து கபாலீஸ்வரர் கோயிலில் மண்டபத்திலும், திருவள்ளுவ நாயனார் கோயிலிலும் சொற்பொழிவுகள் செய்து வந்தார். இவ்வாறு சைவத்துக்கும், தமிழுக்கும் பெரும் தொண்டாற்றிய சபாபதி நாவலர் அவர்கள் 1903-ஆம் ஆண்டு தமது 58-ஆம் வயதில் சிதம்பரம் சென்று தில்லையெம்பெருமானைத் தரிசிக்கச் சென்றவர் தமது இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார்.

தம் நண்பர்களான சிவப்பிரகாச பண்டிதர், பொன்னம்பலப் பிள்ளை, சாமிநாதப் பண்டிதர் ஆகியோரை அழைத்துத் தேவாரப் பாடல்களின் பொருளுரைக்கச் சொல்லிக் கேட்டவண்ணம் தம் இன்னுயிரை நீத்தார்.

நீண்டுயர் சோலை வடகோவை நற்பதி மேவுதமிழ்
மாண்புடைச் சைவன் சபாபதி நாவலன் வான்சிறப்ப
ஆண்டுயர் சோபகிரு தானிமாத மமரபக்கம்
வேண்டிய பஞ்சமி வான்பதம் புக்கான் விருந்துகந்தே.


நாவலரிடத்தில் மாணவர் பலர் வந்து கல்வி கற்றுச் சிறப்படைந்தனர். அவர்களுள்,

சிதம்பரம் அ. சோமசுந்தர முதலியார்,
விழுப்புரம் இராமசாமி பிள்ளை,
மாகறல் கார்த்திகேய முதலியார்,
மயிலை சு. சிங்காரவேலு முதலியார்,
மாவை விசுவநாத பிள்ளை,
சிதம்பரம் சிவராமச் செட்டியார்,
திருமயிலை பாலசுந்தர முதலியார்,
கழிபுரம் சிப்பிரகாச பண்டிதர்

முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்

நண்பர்களுக்கு,

நான் எழுதி வரும் இந்தத் தொடர்களின் குறிப்புகளுக்கு உதவிய நூல்களைக் குறித்துக் குறிப்பிட்டதில்லை. திரு இன்னம்புரார் அவர்கள் நினைவூட்டினார். ஆகவே கீழே தகவல்கள் கொடுத்திருக்கிறேன். இதுவரை குறிப்பிடாமைக்கு மிகவும் மன்னிக்கவும்.


பொதுவாய்த் தமிழ் இலக்கிய வரலாறு புத்தகம் படித்துக் குறிப்புகள் எடுத்தவையே. பெயரைக் குறிப்பிட்டு கூகிளில் தேடும்போது உதவிக்கு வருவது விக்கிபீடியா தான். விக்கியே தகவல்கள் கொடுக்கின்றன. கோபாலகிருஷ்ண பாரதியார், மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை, உ.வே.சா. போன்றவற்றிற்கு தெய்வத்தின் குரலில் கிடைத்த சில விஷயங்கள். எந்த பாகம்னு நினைவில் இல்லை. அதுவும் காமகோடி தளத்தில் இணையத்திலேயே கிடைக்கிறது. குறிப்பிடக் கூடாது என்றில்லை. தோன்றவில்லை. :((((இனிமேல் குறிப்பிடுகிறேன். மிகவும் மன்னிக்கவும். ஆனால் படித்த நினைவுகளிலேயே சிலவற்றை எழுதுவதால் எதில் படித்தேன் எனச் சொல்ல முடியவில்லை. :(((((

மெய்கண்டார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் போன்றோரைக் குறித்தெல்லாம் நான் சிதம்பர ரகசியம் தொடர் எழுதுகையிலேயே தகவல்கள் சேகரித்தேன். எங்கள் கட்டளை தீக்ஷிதர்கள் உதவினார்கள். அதைச் சிதம்பர ரகசியம் தொடரில் குறிப்பிட்டிருந்தேன். மன்னியுங்கள். சபாபதி நாவலர் குறித்த குறிப்புகளுக்குப் பெரும்பாலும் "நூலகம்" தளத்தின் குறிப்புக்கள் உதவின.

1 comment:

  1. உங்களின் இந்த வலைத்தளம் மிகவும் நன்றாக உள்ளது.உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் .ஞானாமிர்தம் போன்ற பழமையான நூல்கள் பற்றிய தகவல் இருப்பின் எனக்கு ஈமெயில் பண்ணுங்கள் .my e mail:lionrssv@gmail.com

    ReplyDelete