Tuesday, April 3, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! பட்டினத்தார் 2

மருதவாணராகத் தம்மிடம் வந்து வளர்வது இறைவனே என்ற உண்மை பட்டினத்தாருக்குத் தெரியவில்லை. பையனை வணிகத்தில் ஈடுபடுத்துகிறார். வணிகக் கப்பல்களோடு வணிகம் செய்ய வெளிநாடுகளுக்கும் அனுப்பினார். வணிகம் முடிந்து மருதவாணன் திரும்பி வந்தான்; திரும்பி வந்த மகன் கப்பல் நிறையப் பொருட்களைக் கொண்டு வந்திருப்பான் என எதிர்பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அவருக்கு வந்து சேர்ந்ததோ ஓலைத் துணுக்கு ஒன்றும், காதற்ற ஊசி ஒன்றும் தான். கப்பலிலும் எருவிராட்டியும், தவிடுமாகவே நிரம்பி இருந்ததை அறிந்தார். கோபம் கொண்ட பட்டினத்தார் அந்த ஓலையை எடுத்துப் படிக்கையில் “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என அதில் எழுதப் பட்டிருந்ததைப் படித்தார். அதைப் படித்த பட்டினத்தாருக்குத் தூக்கி வாரிப் போட்டது. இத்தனை செல்வம் சேர்த்தும் என்ன பயன்! எதைக்கொண்டு போகப் போகிறோம். எதுவும் இல்லை.
அனைத்துச் சொத்துக்களையும், ஆடம்பரமாளிகையையும், விட்டுவிட்டு உடனடியாகத் துறவு மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியேறித் துறவியாகத் திரிந்த அவரால் தனக்கும், அவர் மூலம் கிடைத்த சொத்துக்களுக்கும் பங்கம் ஏற்படுமோ என நினைத்த அவர் சொந்தத் தமக்கையார், அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுக்க அதை அறிந்த பட்டினத்தடிகள், அந்த அப்பத்தை வீட்டுக் கூரையில் செருகிவிட்டு, “தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” எனக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகல, வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதைக் கண்ட உறவினர் பட்டினத்தாரின் சக்தியை அறிந்து கொண்டனர். இவர் ஒரு சித்தர் எனப் புரிந்து கொண்டனர். தன் அன்னையிடம் அவர் இறக்கும் தருவாயில் எங்கிருந்தாலும் தான் வந்து எரியூட்டுவதாய்க் கூறி இருந்தார் பட்டினத்தார். அவ்வாறே அவர் அன்னையார் இறந்துவிடப் பட்டினத்தார் சரியான நேரத்துக்கு அங்கே வந்து சேர்ந்தார். இவர் வந்து எரியூட்டக் கூடாதென உறவினர்கள் அதற்குள்ளாகச் சிதையைத் தயார் செய்திருந்தனர் ஆனால் சுடுகாட்டிற்குப் போய்ச் சேர்ந்த பட்டினத்தார் காய்ந்த கட்டைகளால் அடுக்கப் பட்டிருந்த சிதையை அகற்றிவிட்டுப் பச்சை வாழைமட்டைகளையும், வாழை இலைகளையும் அடுக்கினார். பின்னர் கீழ்க்கண்ட பாடல்களைப் பாடி அன்னையின் மரணத்திற்குத் தன் துயரத்தை வெளிப்படுத்தினார்.



ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச்-செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

முந்தித்தவம் கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத்-தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

வட்டிலிலும், தொட்டிலும், மார்மேலும், தோள்மேலும்,
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே-அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்?

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு?
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல்-உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே! என அழைத்த வாய்க்கு?

அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே! என அழைத்த வாய்க்கு?

முன்னை இட்ட தீ முப்புரத்திலே;
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்;
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே;
யானும் இட்ட தீ மூள்க! மூள்கவே!

வேகுதே தீயதனில்; வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ!-மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.

வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில்
வந்தாளோ! என்னை மறந்தாளோ-சந்ததமும்
உன்னையேநோக்கி உகந்துவரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்?

வீற்றிருந்தாள் அன்னை; வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள்; இன்று வெந்து நீறானாள்; பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள்! ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்!//
அவ்வளவில் பச்சை வாழை மட்டை பற்றி எரிந்தது. சுற்றிலும் இருந்தவர் திகைத்துப் பார்க்கையிலேயே அங்கே எதையும் வேண்டாமல் அங்கிருந்து சென்றார் பட்டினத்தார்.

9 comments:

  1. வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம்.
    நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும்.
    http://sagakalvi.blogspot.com/2012/04/blog-post_03.html

    ReplyDelete
  2. நன்பா, பட்டினத்தார் பதிவு அருமை நெகிழ்வாக உள்ளது.

    ReplyDelete
  3. பிரமாதம். இதைத் தவற விட்டிருக்கிறேனே!
    ஆத்தாள் என்பது பதினாறு பதினேழு நூற்றாண்டு கால வழக்கு என்று படித்த நினைவு.

    பொதுவாகவே சிவனடியார்கள் (ஆழ்வார்கள் கூட) இறையுடனான தொடர்பை அதிகமாகவே இழுத்திருக்கிறாகள் என்று நினைக்கிறேன். திருவாசகத்தில் சில பாடல்கள் நாத்திக மணம் கமழ்வதாக எனக்குத் தோன்றும். விவரமாக எழுத நேரம் எடுக்க முடியவில்லை. பட்டினத்தார் போன்ற விரக்தி (சரியா?) பாடல்கள் இறை நம்பிக்கையுடன் எழுதியிருக்கச் சாத்தியம் குறைவு என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. பச்சை வாழை மட்டை எப்படிப் பற்றி எரியும்? கேள்வி கேட்காமல் ஏற்க வேண்டியவற்றுள் இது ஒன்று. தமிழுக்காக :-),

    ReplyDelete
  5. பச்சை வாழைமட்டையை வைத்துத் தீமூட்டினார் எனில் பட்டினத்தாரின் சக்தியைப் புரிந்து கொள்ள இயலும் அல்லவா?

    ReplyDelete
  6. //திருவாசகத்தில் சில பாடல்கள் நாத்திக மணம் கமழ்வதாக எனக்குத் தோன்றும். விவரமாக எழுத நேரம் எடுக்க முடியவில்லை. பட்டினத்தார் போன்ற விரக்தி (சரியா?) பாடல்கள் இறை நம்பிக்கையுடன் எழுதியிருக்கச் சாத்தியம் குறைவு என்று நினைக்கிறேன்.//

    அனைத்தையும் கடந்த ஓர் நிலையில் பாடி இருப்பதால் விரக்தியாக உங்களுக்குத் தோன்றுகிறதோ என்னமோ! :))))மாணிக்க வாசகர் முழுக்க முழுக்கத் தன்னை மறந்த நிலையிலேயே இருந்திருக்கிறார் என எனக்குத் தோன்றும்.

    ReplyDelete
  7. அதோடு நாத்திகம் என்பதே ஆத்திகத்தின் எல்லைக்கோடு அல்லது இறைவனுக்கு அருகாமையில் என்பது என் கருத்து. ஆனால் போலி நாத்திகம் இல்லை. உங்களைப் போன்ற உண்மையான நாத்திகவாதிகளே இறையருளுக்கு அருகே, மிக மிக அருகே இருக்கிறீர்கள். சூக்ஷ்மமான அந்தக் கோட்டைத் தாண்டி விட்டால்!!!!!!!!!!!!!!!!!!!! நடப்பதே வேறு.

    ReplyDelete
  8. "அதோடு நாத்திகம் என்பதே ஆத்திகத்தின் எல்லைக்கோடு அல்லது இறைவனுக்கு அருகாமையில் என்பது என் கருத்து"--This is in line with the saying that ' in the ultimate analysis , opposites meet '..

    ReplyDelete
  9. Thank You Mawley Sir, for your keen observation. :D

    ReplyDelete