Friday, May 25, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! குரு ஞான சம்பந்தர்!

கொட்டும் மழையிலும் கைவிளக்கோடு ஞானசம்பந்தர் நின்று கொண்டிருக்க அவரைச் சுற்றி வட்டமாக மழைத்துளி விழாமல் இறையருள் காத்து நின்றது. மழை நீர் கூட அவர் இருந்த பக்கம் வராமல் அஞ்சியதைப் போல் ஒதுங்கியே ஓடிற்று.  விடிய விடிய நின்று கொண்டிருந்தார் ஞானசம்பந்தர்.  மெல்ல மெல்லப் பொழுதும் விடிந்தது.  கமலை ஞானப் பிரகாசர் இல்லறத் துறவி.  ஆகையால் அவருக்கு மனைவி  இருந்தார்.  அவர் காலையில் எழுந்து வாசலைத் திறந்து விளக்கு ஏற்றிக் கோலம் போடுவதற்காகக் கதவைத் திறந்தார்.  திறந்தவர் அதிர்ந்து போனார்.  ஞானசம்பந்தர் கைவிளக்கோடு நின்று கொண்டிருப்பதையும், கை விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருந்ததையும், மழை லேசாகத் தூறலாகப் போட்டுக் கொண்டிருந்ததையும், இரவில் நல்ல மழை பெய்திருப்பதற்கான அடையாளங்களையும் கண்டார்.   ஞானசம்பந்தரைப் பார்த்தார்.  அவர் நனையவில்லை என்பதையும் அந்த மழையிலும் விளக்கும் அணையவில்லை என்பதையும் கண்டார்.  வியந்தார். உடனே ஓடிச் சென்று தன் கணவரிடம் விஷயத்தைக் கூறினார்.  அப்போது தான் கமலை ஞானப் பிரகாசருக்கு முதல் நாள் இரவில் ஞானசம்பந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு வழி காட்டி வந்திருக்கும் விபரம் புரிந்தது.  வெளியே ஓடோடி வந்தார்.

பதறிப் போனார். விடிய விடிய இரவு முழுதும் இப்படி நிற்க வேண்டுமெனில் எவ்வளவு ஆழமான குரு பக்தி இருக்க வேண்டும். இதை நினைத்து இப்படியும் ஒரு சீடனா தமக்கு என எண்ணி ஒரு பக்கம் ஆனந்தம் அடைந்தார்.  கண்களில் கண்ணீர் பெருகியது.  இப்படியும் ஒரு சீடனா எனக்கு என அவரை ஆரத் தழுவிக் கண்ணீர் சொரிந்தார்.  “அன்பரே, நீர் சீடராயிருக்கும் நிலையைக் கடந்து விட்டீர்.  உம்மைப் போன்ற சீடன் எனக்குக் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேனோ! நீர் இனி ஆசாரியராக இருக்கும் தகுதியைப் பெற்று விட்டீர்கள்.  நீர் சாதாரணமான ஞானசம்பந்தனும் இல்லை.  குரு ஞானசம்பந்தர்.  தகுந்த இடத்தில் சென்று இரும்.  உம்மைத் தேடி வரும் பக்குவம் அடைந்த ஆன்மாக்களுக்கு சிவஞானப் பொருளை உபதேசம் செய்து ஆட்கொள்ளுவீராக.  சைவ சமயப் பரிபாலனமும் உம்மால் நடைபெறட்டும்.” என ஆசிர்வாதம் அளித்து அவரைத் தனியாகப் போய் ஆசாரியராக இருக்கும்படி கட்டளையும் இட்டார்.

ஆனால் குருஞானசம்பந்தருக்கோ தன் குருவை விட்டுப் பிரிய மனமில்லை.  மனம் வருந்தி குருவானவர் எப்படி இவ்வாறு சொல்லலாயிற்று என்பதை ஒரு பாடல் மூலம் உணர்த்தினார்.  “கனக்கும் பொதிக்கும் எருதுக்கும் தன்னிச்சை கண்டதுண்டோ
எனக்கும் உடற்கும் எனதிச்சையோ இணங்கார் புரத்தைச்
சினக்கும் கமலையுள் ஞானப் பிரகாச சிதம்பர, இன்று
உனக்கிச்சை எப்படி அப்படியாக உரைத்தருளே.”
இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்த கமலை ஞானப் பிரகாசர், குரு ஞானசம்பந்தரைத் தேற்றினார். அண்மையில் காவிரிக்கரையில் தெற்குப்பக்கம் மயிலாடுதுறைக்கு அருகே உள்ள வில்வாரண்ய க்ஷேத்திரத்துக்குச் சென்று அங்கே மடம் அமைக்கக் கூறினார்.  வில்வாரண்யம் யமன் வழிபட்டுப் பேறு பெற்றதால் தருமபுரம் என்ற பெயரிலும் அழைக்கப் படும் எனவும் கூறி அங்கே சென்றிருந்து மடம் அமைத்து சைவத்தையும் தமிழையும் வளர்க்குமாறு கட்டளையிட்டார்.  தன்னை வாரந்தோறும் வந்து தரிசிக்கலாம் எனவும் கூறி ஆறுதல் சொன்னார்.

அதன்படி குருஞானசம்பந்தர் திருவாரூரினின்று கிளம்பி மயிலாடுதுறை வந்து தருமபுரத்தை அடைந்தார்.  தருமபுரீசுவரரையும், அபயாம்பிகையையும் வணங்கித் தாம் தங்க ஒரு மடமும், அதில் தாம் அன்றாடம் வணங்கும் சொக்கலிங்கத்திற்கு ஒரு கோயிலும் அமைத்தார்.  அதுகாறும் தருமபுரீஸ்வரர் கோயிலை நிர்வகித்த நிர்வாகிகளான முனிவர்கள் இவரிடம் நிர்வாகத்தை ஒப்புவித்துவிட்டு ஓய்வும், தவம் செய்யவும் வேண்டித் தென்னாடு சென்றனர். குருஞானசம்பந்தர் நிலையாகத் தருமபுரத்திலேயே தங்கினார்.  வாரந்தோறும் ஆரூர் சென்று குருவையும், ஆரூர்த் தியாகேசனையும் வணங்கி வந்தார்.  குருஞானசம்பந்தரின் ஞானமும், அறிவும் நாலாதிசையிலும் பரவலாயிற்று.  சீடர் பலர் வந்து அவரிடம் சரணடைந்தனர்.  தருமை ஆதீனம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.

சிதம்பர வழிபாட்டிற்காக ஒரு முறை சிதம்பரம் சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் தங்கி இருந்தார்.  அப்போது இரவு, பகலாக நிட்டையில் இருந்த இவருக்கு சிவகாமி அம்மை அர்த்த ஜாமப் பள்ளியறைப் பிரசாதங்களைக் கொடுத்து அருளினார்.  இவர் காலத்தில் வில்வாரண்யத்தில் பசுவும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தியதாக வரலாறு சொல்கிறது.  இதை தருமை ஆதீனத்தின் முத்திரைச் சின்னத்தில் ஓவியமாகக் காண முடிகிறது.  குரு ஞானசம்பந்தர் அருளிய  நூல்களாவன:

1.சொக்கநாதக் கலித்துறை
2. சொக்கநாத வெண்பா
2. சிவபோத சாரம்
4. பண்டாரக் கலித்துறை என்னும் ஞானப் பிரகாச மாலை
5. நவரத்ன மாலை
6. சோடசகலாப் பிராசாத சட்கம்
7. திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்
8. முத்தி நிச்சயம்.

இவற்றை ‘குரு ஞானசம்பந்தர் அட்டகம்” என்னும் பெயரால் அழைக்கின்றனர்.  இதைத் தவிர ஞானாவரண விளக்கம், சிவபூசா பத்ததி போன்ற நூல்களையும் இவர் இயற்றி இருக்கக் கூடும் எனத் தெரிய வருகிறது.   ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து, மதுரையில் சொக்கநாதரின் திருவருளைப் பெற்று, திருவாரூரில் குரு கமலை ஞானப் பிரகாசரின் மூலம் குருவருள் பெற்று, மயிலாடுதுறைக்கருகே தருமபுரத்தில் தாமே குருவாய் அமர்ந்த குருஞானசம்பந்தர் விரைவில் தமது முத்திப்பேற்றுக் காலம் நெருங்குவதை உணர்ந்தார்.  தமக்குப் பின் மடத்தை நிர்வகிக்கவும் ஆதீனத்தில் ஆட்சி புரியும், தம் மாணாக்கர்களில் சிறந்தவரான ஆனந்த பரவசர் என்பாருக்கு ஞான உபதேசம் செய்து ஆசாரியத் தலைமையை நல்கித் தாம் புதிதாய்க் கட்டிய ஞானபுரீசுவரர் கோயிலில் சிவலிங்கப் பெருமான் திருவடி நிழலில் நிட்டையில் ஆழ்ந்து முத்தி அடைந்தார்.

தேவாரம் தளத்தின் உதவியோடு எழுதப் பட்டது.

1 comment:

  1. இன்றே இப்பெட்டகம் அடைந்தேன்.

    ReplyDelete