Sunday, December 9, 2012

ஶ்ரீமஹா பக்த விஜயம், பத்ராசலம் ராமதாஸர்!


விஷம் குடிப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை ஸ்ரீராமனையும், அவன் பிரிய மனைவியான சீதம்மாவையும் நினைத்த கோபன்னா, சீதம்மா நீயாவது உன் கணவனிடம் போய்ச் சொல்ல மாட்டாயா?  இன்னும் எத்தனை காலம் எனக்கு இந்த தண்டனை? என மனமுருகிப் பிரார்த்தித்தார்.  தியானத்திலும் ஆழ்ந்து போனார்.  அங்கே சீதம்மா மாயம்மாவுக்கு மனதில் ஒரே வேதனை.  இந்த கோபன்னா இத்தனை தூரம் மனமுருகிப் பிரார்த்தனைகள் பல செய்தும் நம் கணவர் வேடிக்கை பார்க்கிறாரே இது என்ன நியாயம் என மனதிலேயே கேட்டுக் கொண்ட கேள்வியை இன்று நேரிலும் கேட்டுவிட்டாள்.  “சுவாமி, கோபன்னா எத்தனை நல்லவன்?  நம் கோயிலுக்காக அன்றோ அவன் உழைத்தான்!  ஒரு காசு கூட சொந்தமாக எடுத்துக் கொள்ளவில்லையே.  அதோடு நம்மிடம் எவ்வளவு பக்தியுடனும் பிரேமையுடனும் இருக்கிறான்.  அவனை இப்படிப் பரிதவிக்க விட்டு விட்டுத் தாங்கள் இங்கே ஆனந்தமாய்க் காலம் கழிக்கலாமா?” என வினவ, ஸ்ரீராமனின் முகத்தில் இளநகை பூத்தது.  “சீதே, போன பிறவியிலும் பரம பக்தன் ஆன இவன், ஒரு கிளியைப் பிடித்து வந்து கூண்டில் அடைத்து வளர்த்து வந்தான்.  பனிரண்டு ஆண்டுகள் அவ்விதம் வளர்த்து வந்ததால் அதே பனிரண்டு ஆண்டுகள் இவனும் தண்டனை அனுபவிக்க நேர்ந்தது.  இன்றோடு அந்தச் சிறை வாசம் முடிவடைகிறது.  நானும், லக்ஷ்மணனுமாய் நாளை தானீஷாவைப் போய்ப் பார்த்து இவன் கடன்களை அடைக்கப் போகிறோம். “ என்றான் ஸ்ரீராமன்..

“வெகு அழகு ஸ்வாமி, ஆயுளையே உங்கள் சேவையில் கழித்து வரும் கோபன்னாவை விட்டுவிட்டு, தானீஷாவுக்குப் போய் தரிசனம் கொடுக்கப்போகிறீர்களே!” என்றால் சீதை ஏமாற்றமுடன். 
“சீதே, தானீஷா கோபன்னாவைச் சிறையில் அடைத்த குற்றம் ஒன்று மட்டுமே செய்தான்.  ஒரு நல்ல அரசனாகக் குடிமக்களை நன்கு பேணி வருகிறான்.  நீதிமானாகவும், நேர்மை, நியாயத்தில் நம்பிக்கை கொண்டவனாகவும் உள்ளான்.  மேலும் அவன் போன பிறவியில் காசியில் அந்தணனாகப் பிறந்து ஈஸ்வரனுக்கு ஆயிரம் குடங்கள் அபிஷேஹம் செய்யப் பிரார்த்தித்துக் கொண்டவன்.  இதன் மூலம் பெரிய பதம் கிடைக்கும் என எண்ணினான்.  ஆனால் 999 –வது குடம் வந்தும் ஒன்றும் கிடைக்கவில்லை, என ஆயிரமாவது குடத்தை அந்த ஈசன் தலையிலேயே போட்டு உடைத்துவிட்டான்.  அந்த வினைப்பயன் தான் அவன் இவ்வாறு பிறக்க நேரிட்டது.  மேலும் அவனுக்கு ஸ்ரீராமனின் தரிசனம் கிடைக்கும் என ஈசனே வாக்குக் கொடுத்துள்ளார்.  ஈசன் வாக்குப் பொய்யாகலாமா?”  என்றான் ஸ்ரீராமன்.

மறுநாள் நடு நிசி. தானீஷாவின் அந்தப்புரத்திலே அவன் ஆழ்ந்த உறக்கத்திலே இருந்தான்.  ஏதோ கனவு கண்டு கொண்டிருந்தான்.  அப்போது தூங்கிக் கொண்டிருந்த அந்தப்புர பாராக் காவலையும் தாண்டிக் கொண்டு இரு சிப்பாய்கள் கையிலே ஒரு பெரிய பணப்பையோடு இடையிலே கால் சராய் தரித்து, வாளை இடுப்பிலே ஏந்திய வண்ணம் வந்தனர்.  அவர்கள் அழகையும், கம்பீரத்தையும் பார்த்தால் அரசகுமாரர்களோ என்னும்படி இருந்தது.  இருவரும் பாராக் காவற்காரர்களிடம் வந்தபோது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.  சிரித்துக்கொண்ட இருவரும் அந்தப்புரக் கதவில் கை வைக்கக் கதவு தானாகத் திறந்தது.  கனவு கண்டதில் விழித்த தானீஷா அந்தப்புரக் கதவு திறப்பதைக் கண்டதும் திடுக்கிட்டுப் பார்க்க எதிரே இரு சுந்தரபுருஷர்கள் நின்றனர்.  அறையே கோடி சூரியப் பிரகாசமாக ஜொலித்தது.  அந்த வெளிச்சத்தையும் இரு இளைஞர்களின் அழகையும், அவர்களின் தேஜஸையும் கண்ட தானீஷா இருவரையும் பார்த்து யார் எனக் கேட்க, அவர்கள், “நாங்கள் கோபன்னாவின் வேலையாட்கள்.  என் பெயர் ராம்ஜி. இவன் பெயர் லக்ஷ்மண்ஜி. பத்ராசலத்திலிருந்து வருகிறோம்.”  என்றனர்.

“வேலையாட்களா?  எத்தனை வருடங்களாகச் செய்கிறீர்கள்? என்ன சம்பளம் உங்களுக்கு?” தானீஷா கேட்டான்.

“ஐயா, நாங்கள் பல தலைமுறைகளாகச் செய்து வருகிறோம்.  சம்பளமெல்லாம் கிடையாது.  அந்த ராமர் கோயில் பிரசாதத்துக்காகச் செய்கிறோம்.”
“ஆச்சரியமாய் உள்ளதே.  இப்போது என்ன வேலையாக இங்கே வந்திருக்கிறீர்கள்?”
“ஐயா, கோபன்னா உங்களிடம் கடன் பட்டிருக்கிறாராமே.  அதை அடைக்கச் சொல்லி எங்களை அனுப்பி வைத்தார்.  பணத்தைக் கொண்டு வந்துவிட்டோம்.  இதோ உமக்குச் சேர வேண்டிய ஆறு லக்ஷம் பொன்கள். “ கையிலிருந்த பணப்பையைப் பிரித்து அவிழ்த்துக் கொட்ட, கலகலவென சப்தித்துக்கொண்டு தங்க நாணயஙக்ள் உருண்டோடின.  “இவற்றைச் சரி பார்த்துக் கொண்டு, கடன் தீர்ந்ததற்கான ரசீதைக் கொடுங்கள் ஐயா, “ என அவர்கள் அவசரப் படுத்த இந்த நட்ட நடுநிசியில் இந்த இருவரும் எங்கிருந்தோ வந்து கோபன்னாவின் கடனைத் தீர்ப்பதை எண்ணி எண்ணிப் பார்த்த தானீஷாவுக்கு வியப்புத் தாங்கவில்லை.  அது சரி இவர்களை உபசரிக்கக் கூட இல்லையே.  எப்படி உபசரிப்பது?  தானீஷா குழப்பத்துடன் அவர்களிடம் இந்த நடுநிசியில் உங்களை எப்படி உபசரிப்பது எனத் தெரியவில்லை, என்று சொல்ல, இருவரும் வேலைக்காரர்களான தங்களுக்கு எந்த விதமான உபசாரமும் வேண்டாம் எனவும், ரசீதைக் கொடுக்கும்படியும் திரும்பக் கேட்டனர்.  தானீஷா ரசீதைக் கொடுக்க இருவரும் இருண்ட சிறையிலிருந்து கோபன்னாவைப் பார்க்கப் போனார்கள்.  கோபன்னாவைப் பார்த்த லக்ஷ்மணனுக்கு மனம் உருக, அண்ணனிடம், “நீ செய்தது அநியாயம், நமக்கு வானளாவக் கோயில் எடுத்தவன் சிறையில் வாடுகிறான்.  அவன் நிலைமையைப் பாருங்கள்.  எலும்பும் தோலுமான உடலுடனும், குழி விழுந்த கண்களோடும், சடாமுடியோடும், தாடியோடும் பிச்சைக்காரனைப் போல் நிர்க்கதியாய்ப் படுத்திருக்கிறான்.  நீங்கள் இன்னும் முன்னமே உங்கள் கருணையைக் காட்டி இருக்கலாகாதா?” என்று சொல்ல, ஸ்ரீராமனோ, “அப்பனே, இது பூர்வ ஜன்ம வினை. இதை இவன் அனுபவித்தே தீர வேண்டும்.  ஊழ்வினையைத் தடுக்க என்னாலும் இயலாது.  சரி, நீ இப்போது  உள்ளே சென்று விஷக்கிண்ணத்தைக் கவிழ்த்து வா!” எனச் சொல்ல லக்ஷ்மண்ஜியும் ஆதிசேஷனாக மாறி உள்ளே சென்று விஷக்கிண்ணத்தைக் கவிழ்க்கிறான்.  ரசீதை கோபன்னாவின் பக்கத்திலே வைக்கிறார்கள்.  பின்னர் இருவரும் மறைந்தனர்.

அரசன் தங்க நாணயங்களைப் பார்த்துப் பார்த்து அதிசயித்தான்.  அவற்றின் முத்திரையைச் சோதிக்க ஸ்ரீராம் என அவற்றில் எழுதி இருந்தது.  இயன்றவரை பல நாணயங்களைச் சோதித்தும் அனைத்திலும் ராமன் பெயரே இருக்கவும்.  தானீஷாவுக்கு உண்மை புரிந்தது.  கோபன்னாவுக்காக வந்தது சாக்ஷாத் ஶ்ரீராமனும், லக்ஷ்மணனுமே என்பதை உணர்ந்தான்.  கோபன்னா எத்தனை பெரிய மஹான் என்பதும் புரிந்தது அவனுக்கு.  

1 comment:

 1. //சீதம்மா நீயாவது உன் கணவனிடம் போய்ச் சொல்ல மாட்டாயா? இன்னும் எத்தனை காலம் எனக்கு இந்த தண்டனை? என மனமுருகிப் பிரார்த்தித்தார்.//

  "நனு ப்ரோவமனி செப்பவே.... சீதம்மதல்லி...."

  //ஸ்ரீராமனின் தரிசனம் கிடைக்கும் என ஈசனே வாக்குக் கொடுத்துள்ளார். ஈசன் வாக்குப் பொய்யாகலாமா?” //

  ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம்... ஒரு முன்கதை...

  என்னதான் கோவில் கட்டியிருந்தாலும் அரசாங்கப் பணத்தை எடுத்துக் கட்டியது தவறுதானே!

  ReplyDelete