Wednesday, August 21, 2013

அப்பா! 1

மயக்கமாய்க் கிடந்தவரைப் பார்த்துத் திகைத்து நின்றாள்.கலா. ஒரு நிமிடம் அவளுக்குத் தான் ஒரு மருத்துவர் என்ற எண்ணமே வரவில்லை.  அவரை சோதித்துக் கொண்டிருந்த நர்ஸ் நிமிர்ந்து அவளைப்பார்த்து, பிபி ஏறி இருக்கு டாக்டர்!  ஷுகர் ரான்டம் செக் பண்ணினதிலேயே நிறைய இருக்கு. மாதிரி ரத்தம் சோதனைக்குக் கொடுத்திருக்கேன்.  அந்த ரிப்போர்ட் சாயந்திரம் தான் கிடைக்கும்."

சட்டெனச் சுதாரித்துக் கொண்டாள் கலா.  "இவரை அழைத்து வந்தது யார்?" எனக் கேட்டாள்.  நர்ஸ் வெளியே சென்று அழைக்க உள்ளே வந்தார் ஒருவர்.  அவரைப் பார்த்த கலா, "இவர் உங்களுக்கு என்ன உறவு?" எனக் கேட்டாள்.

இதற்குள்ளாக முழுமையாகச் சுயநிலைக்கு வந்துவிட்டாள் கலா.  ஆகவே அவள் குரல் பிசிறின்றித் தெளிவாக இருந்தது.  வந்தவர் அவளைப் பார்த்து, " பக்கத்து வீட்டுக்காரர் டாக்டர்.  இன்று காலையிலிருந்தே ஆள் வெளியே வரவே இல்லை.  அதான் உள்ளே சென்று பார்த்தப்போ மயங்கிக் கிடந்தது தெரிந்தது.  இங்கே கூட்டி வந்தேன்."  என்றார்.

"அப்படியா?  இந்தப் பகுதியைச் சேர்ந்தவரா?  எத்தனை நாட்களாகத் தெரியும் உங்களுக்கு?" என்று கேட்ட வண்ணமே தன் சோதனையைத் தொடர்ந்தாள் கலா.

"ஆறேழு மாதங்கள் முன்னால் வந்தார். இங்கே பக்கத்து வீட்டில் ஒரு போர்ஷனை எடுத்துக் கொண்டு குடி வந்தார்.  இவருக்கு வங்கிக்குப் போக வர, மற்றும் சில தேவையான சாமான்களை வாங்கித் தர என அழைப்பார்.  வயசானவர் ஆச்சே, துணைக்கும் யாரும் இல்லையே என உதவிகள் செய்வேன். அப்படித்தான் பழக்கம்." என்றார் வந்தவர்.

"சரி, இவருக்குச் சர்க்கரை நோயும் இருக்கு.  ரத்த அழுத்தமும் இருக்கு.  அதனால் மயங்கி இருக்கார். சாப்பாடும் சரியாகச் சாப்பிடலை போல.  நான் இங்கே இவரை அட்மிட் செய்து கொள்ளவா?" என்றாள் கலா.

தயங்கினார் வந்தவர்.  "என்ன செலவாகுமோ?  அவர் ஒத்துக்கணும்.  அவரைப் பார்த்தால் அவ்வளவு பணம் இருக்குமானு தெரியலையே!"  என்று வாய்விட்டுத் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் கூறிக் கொண்டார். சிரித்தாள் கலா.  பின்னர்," இவர் வீட்டுச் சாவி உங்களிடம் தானே இருக்கு? அங்கே கொஞ்சம் தேடிப் பார்த்து இவர் உறவினர்களில் எவரேனும் ஒருத்தர் தொலைபேசி எண்ணோ, விலாசமோ கிடைக்கிறதா பாருங்கள்.  இவர் எனக்குத் தெரிந்தவரின் அப்பா போல் இருக்கிறது.  பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டதால் நிச்சயம் செய்து கொள்ள முடியவில்லை.  ஆனாலும் நான் அட்மிட் செய்து கொள்கிறேன்.  நீங்கள் இவருடைய அறையில் தேடிப் பாருங்க. பணத்தைக்குறித்து இப்போதைக்குக் கவலை வேண்டாம்." என்றாள் கலா.  அவள் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தாள்.

வந்தவர் கிளம்பிச் செல்ல மணியை அடித்து ஆட்களை வரவழைத்த கலா, நர்ஸிடம்  "இந்தப் பெரியவரை ஒன்பதாம் எண் படுக்கையில் விடுங்க.  நர்ஸ், கேஸ் ஷீட் தயார் செய்து விடு. நான் இந்த பிரிஸ்க்ரிப்ஷனில் எழுதி இருக்காப்போல் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து விடு.  திட ஆகாரம் இப்போதைக்கு வேண்டாம்.  க்ளூகோஸ் ஏறட்டும்." என மடமடவென உத்தரவுகளைப் பிறப்பித்தாள் கலா.  அவள் வாய் பேசிக்கொண்டிருந்தாலும் மனதுக்குள் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது.
*********************************************************************************
குழம்பைக் கீழே இறக்கினாள் சந்திரா.  ஒரு நிமிடம் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டாள்.  சட்டென ஒரு கிண்ணத்தை எடுத்துக் குழம்பால் நிரப்பினாள்.  அதை எங்கே வைப்பது?  சற்றே தடுமாறியவள் ஒரு தட்டைப் போட்டு மூடிவிட்டு அதைச் சாதம் வைத்திருக்கும் வெண்கலப் பானையிலேயே உள்ளே அழுத்தினாள்.  மேலே கொஞ்சம் சாதத்தைப் போட்டு மூடிவிட்டாள்.  தட்டுப்போட்டிருந்ததால் குழம்பு உள்ளே சிந்தாது.  சிந்தினாலும் அடி சாதத்தில் தான் இருக்கும்.  அதை அவள் எடுத்துக் கொள்வாள்.  குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்று பார்த்தாள்.  அவ்வளவு நேரம் அவளையே கவனித்துக்கொண்டிருந்த சசி சட்டெனப் புத்தகத்தில் பார்வையைப் பதித்தாள். அவளின் இரு சகோதரர்களும் குளிக்கச் சென்றிருந்தனர்.  அவர்கள் இருவரும் ஒரே பள்ளி.  சசி மட்டும் பெண்கள் பள்ளியில் படித்து வந்தாள்.  அதுவும் இன்னும் எத்தனை நாட்களுக்கோ!  சந்திராவின் மனம் கலங்கியது.

வாசலில் பேச்சுக்குரல் கேட்டது.  அவன் வந்துவிட்டான்.  ஜெயராமன் தான்.  அவள் கணவன்.  இப்படி மரியாதை இல்லாமல் நினைக்கிறோமோ என சந்திராவுக்குள் குற்ற உணர்ச்சி தோன்றினாலும் மரியாதை கொடுக்கத் தோன்றவில்லை.  வந்தவுடன் என்ன செய்தே? என்ன பண்ணினே?  எதை எடுத்தே?  எங்கே வைச்சே என ஆயிரம் கேள்விகள் கேட்பான். நம் வீடுதானே என்ற சுதந்திரம் கிடையாது.  ஒரு கடுகு தாளிப்பது என்றால் கூடக் கணக்கு ஒப்பிக்க வேண்டும். அஞ்சறைப் பெட்டியில் சாமான்களை நிரப்புவது அவன் தான்.  நிரப்பிய சாமான்கள் எத்தனை நாட்கள் வருகின்றன என்ற கணக்கும் வைத்திருப்பான். இதோ, இப்போ உள்ளே வந்தான் எனில் இதைக் கண்டு பிடித்தால்!! ஒரு பிரளயமே நடக்கும்.  அப்படி ஒண்ணும் கெட்ட பழக்கம் உள்ளவன் அல்ல.  எந்தவிதக் கெட்ட பழக்கங்களும் இல்லை.  வெற்றிலை, பாக்குக் கூடப் போடமாட்டான். ஆனால் அது எல்லாத்துக்கும் சேர்த்து வைத்துப்பெண் என்றாலே மட்டமாக நினைப்பவன்.  ஆண்களுக்குத் தொண்டு செய்வதற்கே பெண் பிறவி என நினைப்பவன்.

கல்யாணம் ஆகிச் சில மாதங்களுக்கே அவள் வாழ்க்கை இன்பமயமாக இருந்தது.  பின்னர் திடீரென மாறிவிட்டான். தினம் தினம் அடி, உதை தான்.  அவள் சாப்பிடுவதைக் கணக்குப் பண்ணுவான். பிறந்த வீட்டுக்குப் போ என விரட்டி விடுவான்.  மூன்று குழந்தைகள் எப்படிப் பிறந்தது நமக்கு எனப் பல சமயம் எண்ணிக் கொள்வாள் சந்திரா.  முதல் குழந்தை மட்டுமே விரும்பிப் பெற்றது.  இரண்டாவதான சசி பிறந்தப்போவே அவன் கொடுமை அதிகம் ஆகிவிட்டது.  பிள்ளைத் தாய்ச்சி என்று கூடப் பார்க்காமல் அடித்து இந்தக் குழந்தை என்னுடையதல்ல என்றெல்லாம் சொல்லி அவளை அவமானப் படுத்தினான்.  எப்படியோ பெண்ணைப் பெற்றுவிட்டோமே என்று  அவள் கவலைப்பட்டாலும் சசி அப்படியே நிறத்திலும், குணத்திலும் தந்தையைக் கொண்டிருந்தாள்.  குணம் நல்லபடியாக இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள் சந்திரா.  பெண்ணைப் பார்த்ததும் சில வருடங்களுக்கு அவள் மேல் அன்பு காட்டிய ஜெயராமனோ மூன்றாவதாகப் பிறந்த பிள்ளைக்குப் பின்னர் முற்றிலும் மாறிவிட்டான்.

பெண்ணாய்ப் பிறந்தது அவர்கள் குற்றமா?  ஆனாலும் ஜெயராமனுக்குத் தான் குடும்பத் தலைவன்.  தான் சம்பாதித்து இவர்களுக்குச் சோறு போடுகிறோம் என்ற எண்ணம் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது.  அதைச் சொல்லிலும், செயலிலும் காட்டினான்.  ஒருநாள் சசி ரொம்பப் பசியா இருக்குனு சீக்கிரம் சாப்பிட உட்கார, ஜெயராமன் பேசிய பேச்சுக்கள் காது கொண்டு கேட்க முடியாது.  அன்றிலிருந்து பசி பொறுக்கப் பழகிவிட்டாள் சசி.  என்றாலும் வளரும் குழந்தை அல்லவா?  பள்ளி வேறு தூரத்தில் இருக்கிறது.  அதற்குப் பேருந்தில் தான் செல்லணும்.  அதற்கான காசை அவனிடமிருந்து வாங்குவதற்குள் போதும், போதும்னு ஆகிடும். இன்னும் எத்தனை நாட்கள் இந்தக் கொடுமையோ என ஏங்கினாள் சந்திரா.

ஜெயராமன் வரும்போதே கத்திக் கொண்டு வந்தான். யார் மேல் கோபமோ, தெரியவில்லை.  உள்ளே வந்ததுமே சந்திராவிடம், "அங்கே என்னம்மா செய்துண்டிருக்கே?  சமைச்சு முடிச்சாச்சுன்னா இந்தப் பக்கம் வா னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்! உப்புப் பார்க்கிறேன், புளி பார்க்கிறேன், ருசி பார்க்கிறேன்னு நீ சாப்பிட்ட மிச்சத்தைச் சாப்பிடணும்னு எனக்குத் தலையெழுத்து இல்லை. " என்றான்.  சந்திரா நகர்ந்துவிட்டாள்.  உப்பில்லாமல் சமையல் இருந்தால் அதற்கும் அவளுக்கு அடி விழும்.  முன்னால் பார்த்தால் அதுவும் தப்பு.  என்றாவது மறக்காதா!  மனிதர்கள் தானே எல்லாருமே!  அதற்குள்ளாக ஜெயராமன் தட்டைப் போட்டுக் கொண்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட உட்கார்ந்துவிட்டான்.  சந்திராவுக்குத் திக் திக் என்று இருந்தது.  கறியைத் தட்டில் போட்டுக் கொண்டவன் சாதம் எடுக்கக் கரண்டியை வெண்கலப் பானையில் விட்டான். "டங்"கென்று கரண்டி எதிலோ மோதியது.

2 comments:

  1. இரண்டு கதைகளா...? தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. ஹாஹாஹா, டிடி, நல்வரவு. வாங்க வாங்க. இப்போதைக்கு அவுட்லைன் மட்டும் இருக்கு. கதையை விரிவாக்கணும். :))))

    ReplyDelete