Thursday, December 25, 2008

இப்போத் தான் சொல்ல முடிந்தது!

ஹிஹிஹி, இங்கேயும் பஜனை பண்ண ஆரம்பிச்சுட்டேன் என்று சிஷ்ய(கோ)கேடிங்க பல்லைக் கடிக்கிறது தெரியுது, இல்லை, இல்லை, பஜனை எல்லாம் பண்ணலை. ஏப்ரல் மாசம் பண்டரிபுரம் போயிட்டு வந்துட்டு அது பத்தி எழுத நினைச்சேன், எழுதவே முடியலை. பண்டரிநாதர் படத்தைப் போட்டு வச்சுட்டுப் பதிவே எழுதமுடியலையே அதான், ஏதாவது எழுதலாம்னு.

பண்டரிநாதர் கதை எல்லாம் இங்கே சொல்லப் போறதில்லை. அது தனியா வச்சுக்கலாம்.இந்திய ரயில்வேயின் சுற்றுலாத் திட்டத்தில் செல்லும் ரயில் பயணத்தின் மூலம் நாங்க மந்த்ராலயம், நாசிக், பஞ்சவடி, த்ரயம்பகேஸ்வர் கோயில், ஷிர்டி, சனி ஷிங்கனாபூர் மற்றும் பண்டரிபுர் போனோம். மதுரையில் இருந்து கிளம்பும் இந்த ரயிலில் மொத்தம் ஏழு பெட்டிகள் இருக்கின்றன. இங்கே சென்னையில் போட் க்ளப் சாலையில் அமைந்திருக்கும் ட்ராவல் டைம்ஸ் காரர்களால் ஒப்பந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப் பட்டு பயண ஏற்பாடுகள் அமைகின்றன. ரயில்வே அமைச்சகமும், சுற்றுலாத் துறையும் இணைந்து இதில் செயல்படுகின்றது. மிக மிக அருமையான ஏற்பாடுகள். கட்டணமும் ஏற்கும் அளவுக்கே, அதிகமான கட்டண வசூல் என்று குறை சொல்ல முடியாது. பயணிகளுக்கென ஆறு பெட்டிகளும், பயண ஏற்பாடுகளைக் கவனிக்கும் குழுவினருக்கென ஒரு பெட்டியும், சமையல் செய்ய, சமையல் சாமான்கள், சமையல்காரர்கள், மற்றும் உதவும் ஆட்கள் இவர்களுக்கென ஒரு பெட்டியும் ஒதுக்கப் படுகின்றது. ஒரே குறை இதிலே குளிர்சாதன வசதி கொண்ட தூங்கும் வசதிப் பெட்டி இல்லாமைதான். அனைவராலும் அந்தக் கட்டணம் ஏற்கமுடியாது என்பதால் தூங்கும் வசதி கொண்ட மூன்றடுக்குப் பெட்டிகளே அனைத்திலும். குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உட்பட மொத்தம் 500 பேருக்குக் குறையாமல் பயணிக்கின்றனர்.இதிலே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது அவர்கள் கொடுக்கும் உணவு சாத்வீக உணவு. என்றாலும், வெங்காயம், பூண்டு தவிர்க்கலாம் இது புனித யாத்திரைகள் என்பதால். அதையும் நாங்கள் ஒரு ஆலோசனையாகக் கொடுத்திருக்கின்றோம். பூண்டு, வெங்காயம் சேர்த்த உணவுகளை எங்களைப் போல் பலரும் தவிர்த்தனர். காலை ஒருவேளை காஃபிக்கு டோக்கன் கொடுத்துவிடுகின்றனர். அதைக் கொடுத்துவிட்டுக் காலை காஃபி பெற்றுக் கொள்ளலாம். பின்னர் தேவைப் பட்டால் காஃபி, டீ நம் சொந்த செலவில். காலை ஆகாரமும் எளிமையாக கேழ்வரகு சேர்த்தோ, கோதுமை சேர்த்தோ உப்புமா அல்லது இட்டிலி, பொங்கல் என்று எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலேயே தருகின்றனர். மதியமும் சாப்பாடு எளிமையாக இருக்கின்றது. பின்னர் இரவு சாப்பாடும் அதேபோல். ஒரு பெட்டிக்கு இரு பாதுகாவலர் அமைப்பாளர்களே ஏற்பாடு செய்கின்றனர். ரயிலில் இருந்து இறங்கி நாம் பார்க்கப் போகவேண்டிய இடத்தின் தூரத்திற்குத் தகுந்தாற்போல் பெரிய வோல்வோ பேருந்துகள் ஏற்பாடு செய்யப் பட்டு ஒவ்வொரு பெட்டியின் எண்ணும் அந்த அந்தப் பேருந்துக்குக் கொடுத்துவிடுகின்றனர்.

நம் பெட்டியின் எண் உள்ள பேருந்தில் ஏறிக் கொள்ளவேண்டும். ஆகவே அடிச்சுப் பிடிச்சு ஏறிக்கணும்னு எல்லாம் கிடையாது. மேலும் தங்கப்போவது ஒரு இரவோ அல்லது ஒரு பகலோ தான் என்பதால் பெட்டி, படுக்கையை எல்லாம் ரயிலிலேயே வைத்துவிட்டுப் போகலாம். பாதுகாவலர்கள் ரயிலிலேயே இருப்பார்கள் என்பதால் பயமும் இல்லை. நாம் தங்குமிடத்துக்குப் போகும் முன்னரே அங்கே சமைப்பவர்கள், உதவியாளர்கள் போய்விடுகின்றனர். ஆகவே நாம் தரிசனம் எல்லாம் முடித்துக் கொண்டு வரும்போது உணவும் தயாராகக் காத்திருக்கும். ரயிலில் போகவேண்டிய இடங்களுக்கு ரயிலிலேயே அழைத்துச் சென்று விடுகின்றனர். இதற்கென ரயில்வே நிர்வாகம் சிறப்பு அனுமதி கொடுத்திருக்கின்றது. மற்றப் பயணிகள் யாரும் இந்த ரயிலில் ஏறவோ, இறங்கவோ முடியாத அளவுக்குக் கடுமையான கண்காணிப்பு. தண்ணீர் பிடிக்கவும், மற்றத் தேவைகளுக்காகவுமே பெரிய ரயில் நிலையங்களில் நின்றாலும், சில சமயம் சிக்னல் கிடைக்காமலும் நிற்கவேண்டி வருகின்றது. ஆனால் பயணம் செல்லும் நேரங்களில் வேகமாய்ப் போய் விடுகின்றனர்.

தங்குமிடங்கள் தான் கல்யாண மண்டபம், ஏதேனும் சத்திரம் என்று ஏற்பாடு செய்கின்றனர். இது சிலரின் செளகரியத்தை உத்தேசித்து என்றாலும், சிலருக்கு அசெளகரியமாகவும் இருக்கின்றது. அத்தனை பேரும் குளித்துக் காலைக்கடன்கள் முடித்துத் தயாராகத் தேவையான வசதிகள் இருப்பதில்லை. எங்களில் சிலர் தனியாகப் பக்கத்திலேயே இருக்கும் லாட்ஜுகளில் அறைகள் எடுத்துக் கொண்டு தங்கினோம். அமைப்பாளர்கள் மூலமும் அறைகள் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றாலும் நாமாய்ப் போனால் 500ரூ 600 ரூ இருக்கும் அறைகள் அவங்க மூலமாய்ப் போகும்போது 1,200ரூ ஆக இருக்கின்றது. ஆகவே நாங்க மொழிப் பிரச்னை இல்லாத காரணத்தால் நாங்களாகவே அறை எடுத்துக் கொண்டோம். மத்தவங்க தங்குமிடத்துக்கு அருகேயே! "பாரத தரிசனம்" என்ற பெயரில் செல்லும் இந்த ரயிலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பார்க்கும்படி வசதி செய்து கொடுக்கின்றனர். இனி நாங்கள் போன விபரம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுகின்றேன். கும்பகோணம் போனதே இன்னும் முடிக்கலைனு பல்லைக் கடிக்கிறது காதிலே விழுதே, அதுவும் வரும்.

2 comments:

  1. எழுதுங்க எழுதுங்க. (வேண்டாமுன்னா கேட்கவா போறீங்க....)

    ReplyDelete
  2. கீதா சாம்பசிவம் மேடம்,
    நான் சின்ன வயசில் பரணீதரன்,மணியன் அவர்களின் பயண அனுபவம் மற்றும் பரமாச்சரியரின் திக் விஜய அனுபவம் படித்திருக்கிறேன்.பெரிய வயசிலும் படித்திருக்கிறேன். எல்லாம் ஒவ்வொறு விதம்.

    அடுத்து உங்கள் அனுபவ்ம். ஆரம்பமே நல்ல இருக்கு.

    //ரயிலில் மொத்தம் ஏழு பெட்டிகள் இருக்கின்றன. படுக்கையை எல்லாம் ரயிலிலேயே வைத்துவிட்டுப் போகலாம்//

    புதிய தகவல்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete