Wednesday, December 17, 2008

இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே??

இங்கே கூடத் தேடிப் பிடிச்சுட்டு வந்து பின்னூட்டம் போட்டிருக்கும் துளசிக்கும், அம்பிக்கும் நன்னியோ நன்னி! எனக்குத் தான் கொஞ்ச நாட்களாய் யாரோட பதிவுக்கும் போக முடியாமல் இருக்கு. கொஞ்ச நாட்களில் சரியாகும்னு நம்பறேன். எல்லாருமே நிறைய எழுதி இருக்காங்க, அதனால் படிக்கவும் நிறைய இருக்கு. நேரம் தான் கிடைக்கலை. போகட்டும். இப்போ கும்பகோணம் பயணம் தொடர்ச்சி.

அடுத்த வண்டி வந்ததும் ஏறிக் கொண்டு போகிறதுக்குள்ளே இரண்டு முறை தொலைபேசி அழைப்பு வந்துடுச்சு. ஒரு வழியா செண்டரலில் இருந்து ஆட்டோ பிடிச்சுட்டு எழும்பூர் போய்ச் சேர்ந்தால் வாசலில் அனுமார் வால் போல வரிசை நிக்குது, செக்யூரிடி செக்கப்புக்கு. ஏர்போர்டில் எல்லாம் பார்க்கிறது இவ்வளவு இருக்காது. இங்கே பல வண்டிகளின் பிரயாணிகளும் சேர்ந்து ஒரே நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாய் வரிசை. அதிலே போய் நின்னால் நல்லவேளையா பைரவர் வரலை எங்களுக்கு. ஸ்கானிங் மட்டும் பண்ணிட்டு அனுப்பிட்டாங்க. வண்டி சரியான நேரத்துக்கு வந்துட்டு, கும்பகோணம் போய்ச் சேரும்போது வழக்கம்போல் தாமதமான நேரத்துக்குப் போனது. அங்கே இருந்து சத்திரம் போய், குளிச்சு, காலை ஆகாரம் சாப்பிட்டு, கல்யாண விசேஷங்கள் ஆரம்பிக்க நேரம் இருந்ததால் மறுநாளே திரும்பவேண்டிய நிர்பந்தம் காரணமாய் நாங்க திரும்பறதுக்கு வண்டி இருந்தால் முன்பதிவு செய்துடலாம்னு போனோம். ஏற்கெனவே பெண்ணோட அப்பா கும்பகோணத்துக்கு வரணும்னால் திருச்சி வந்து தான் வரணும்னு சொல்லி இருந்தார். அதையே என்னுடைய தம்பியும், தான் காரில் வந்தப்போ சுத்தி வந்ததாய்ச் சொல்லவே, அஸ்தியில் ஜுரம் கண்டது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நினைச்சுட்டுப் பேருந்து நிலையம் போனோம்.

அங்கே இரண்டு முன்பதிவு கவுண்டர்கள். எதிலே பண்ணறதுனு தெரியாமல் குழம்பிப் போய் ஏசி பேருந்து எனக் கேட்க பக்கத்திலே போங்கனு சொல்ல, அங்கே போனால் ஏசி பேருந்து 4 மணிக்குத் தான் என்று சொல்ல, அதுக்கு முன்னாலே பார்த்தால் 1-40 மணிக்குக் கிளம்பும் பேருந்து தான் சரியா இருக்கும்னு தோணவே, அதிலே செய்து கொண்டோம். பஸ் சூப்பர் டீலக்ஸ் பஸ் என்பதால் கட்டணமும் அதிகமாய் வாங்கினாங்க. சரினு வாங்கிட்டோம். அப்புறம் திரும்ப சத்திரம் வந்து விசேஷங்களில் கலந்து கொண்டு மதியம் சாப்பாடு ஆனதும், நாங்கள் ஏற்கெனவேயே பெரியகடைத் தெருவில் முன்பதிவு செய்து வைத்திருந்த வழக்கமான லாட்ஜுக்குப் போய் விட்டோம். அங்கே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு மாலை 4 மணி அளவில் பக்கத்தில் இருக்கும் கோவிந்தபுரமும், திருவிசை நல்லூரும் பார்த்துட்டு வந்துடலாம்னு கிளம்பினோம். இரண்டும் கும்பகோணத்தில் இருந்து ரொம்பக் கிட்ட இருந்தது. ஆறு மணிக்குள்ளே வந்துடலாம். ஆகவே ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு கிளம்பினோம். கோவிந்தபுரம் போகும் வழியில் தான் தட்சிண பண்டரிபுரம் என்னும் கோயில் புதியதாய்க் கட்டப் பட்டு வருகின்றது.

ஜெயா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும், ஞாயிறு அன்றும் ஸ்ரீவிட்டல்ஜி மகராஜ் என்பவரின் பஜனைகளைக் காண்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும். கீத கோவிந்தம் பாடல்களையும் பண்டரிநாதனின் புகழையும் பரப்பி வரும் ஸ்ரீவிட்டல்ஜி மகராஜ் அவர்கள் திரு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் வம்சத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்கின்றனர். ஒவ்வொரு வருஷமும் பூரி ஜகந்நாதர் கோயிலுக்கு யாத்திரையும் சென்று வருகின்றார். இந்த வருடமும் செல்கின்றனர். இவர் ஸ்வாமி ஹரிதாஸ்கிரி அவர்களின் சீடர். அவரைப் போலவே நல்ல வளமான குரலும் இருக்கின்றது. ஞாயிறு அன்று காலை 6-30 மணி அளவில் பக்த விஜயம் என்னும் பண்டரிநாதரின் பக்தர்களின் கதைகள் பற்றியும் சிறு சொற்பொழிவு செய்து வருகின்றார். பண்டரி நாதன் பற்றியும், பண்டரிபுரம் பற்றியும் ஏற்கெனவே எழுதணும்னு பலமுறைகள் நினைச்சும் எழுத முடியலை. இனி பண்டரிநாதன் பற்றி, நாளை.

2 comments:

  1. ஜெயா தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும், ஞாயிறு அன்றும் ஸ்ரீவிட்டல்ஜி மகராஜ் என்பவரின் பஜனைகளைக் காண்பவர்களுக்கு இது தெரிந்திருக்கும். கீத கோவிந்தம் பாடல்களையும் பண்டரிநாதனின் புகழையும் பரப்பி வரும் ஸ்ரீவிட்டல்ஜி மகராஜ் அவர்கள் திரு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் வம்சத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்கின்றனர்.

    வேணுகோபாலன் எழுதிய” திருவரங்கன் உலா”புத்தகம் படித்து இருக்கிறீர்களா?

    நல்லா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  2. அட, திருவரங்கன் உலா பள்ளி நாட்களில் தினமணி கதிர் புத்தகத்தில் வந்தது, போட்டி போட்டுக் கொண்டு படிச்சேன் என்றாலும் மீண்டும் இப்போப் படிக்க ஆசை. அது சரி, இதுக்கும் விட்டல்ஜிக்கும் ஏதேனும் சம்பந்தம்?? புரியலையே?

    ReplyDelete