Monday, August 17, 2009

இந்த மாதிரிப் பிரச்னை பார்த்திருக்கீங்களா?

கொஞ்ச நாட்களாகவே வீட்டிலே ஏகப்பட்ட பிரச்னைங்க. அதுவும் ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டே இருக்கு. கொஞ்ச நாட்கள் முந்தி தென்னை மட்டை விழுந்து தண்ணீர்க் குழாய் உடைஞ்சு போனதிலே ப்ளம்பர் வந்து சரி பண்ணறேன் பேர்வழினு, எம் சீல் வைச்சுக் குழாயை ஒட்ட வைச்சார். அப்போ தண்ணீர் வராமல் இருக்க தொட்டியிலிருந்து நீர் வெளிச்செல்லும் குழாயை மூடிட்டு வேலை செய்திருக்கார். அப்புறமா வால்வைத் திறக்கச் சொன்ன அவர் அந்தக் குழாயை மூடின விஷயத்தை எங்க கிட்டேயும் சொல்லலை. அவரும் அதை அப்புறமா வந்து எடுக்கவும் இல்லை. ப்ளம்பர் அந்தப் பக்கம் போனாரோ இல்லையோ இந்தப் பக்கம் எனக்குத் தண்ணீர் குறைந்த அழுத்தத்தில் வருதுனு தெரிய, என்னோட ம.பா.வோ உனக்கு எப்போவும் எதிலும் குற்றம் தான் கண்டுபிடிக்கத் தெரியும். இப்போத் தானே வால்வைத் திறந்திருக்கேன். மெதுவாய்த் தான் வரும்னு சொல்லிட்டார். அது ஆச்சு, மூணு நாள், நாலு நாள், ஐந்து நாள்னு மெதுவாக் கொஞ்சம் வந்துட்டு இருந்த தண்ணீர் சுத்தமா ஒரு நாள் நின்னே போச்சு. போயே போச்சு, போயிந்தி, இட்ஸ் கான்!

நம்மவருக்கு இப்போத் தான் பிரச்னைனே புரிஞ்சது. மேலே போய்த் தொட்டியைப் பார்த்தால் தண்ணீர், தண்ணீர், தண்ணீர்தான். நிறையவே இருக்கு. ஆனால் ஒரு சொட்டுக் கூடக் கீழே வரவில்லை. தொட்டியிலிருந்து நீரைச் சுத்தம் செய்ய இணைக்கப் பட்ட குழாயைத் திறந்தாலோ தண்ணீர் கொட்டுது. ஆனால் வீட்டுக்கு வரலை. மாடியிலே இருந்து எத்தனை பக்கெட் தண்ணியைக் கீழே எடுத்துவரமுடியும்? ப்ளம்பரைக் கூப்பிட்டோம் மறுபடியும். அவரும் வந்து பார்த்தார். ஆமாங்க பார்த்தார்னா பார்த்தார் தான். தொட்டியைக் கவனிக்கலை. தண்ணீர் வெளியே வரும் இடத்தில் அடைப்பு இருக்கு, ஏதோ மண், கல், குப்பைகள் அடைச்சிருக்கும்னு சொல்லிட்டுத் தொட்டியைக் காலி பண்ணி வைங்க. சாயந்திரம் வரேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். சாயந்திரம் வழக்கம்போல் நம்ம வீட்டில் வேலை செய்யும் பெண்மணியும் வராமல் போக, சீக்கிரமாவே மாடிக்குப் போயாச்சு இரண்டு பேரும். அந்த அம்மா வந்தால் கொஞ்சம் நேரம் ஆகுமே அவங்க வேலையை முடிக்க. இப்போவோ அந்தக் கவலை இல்லை. நான் தானே செஞ்சுக்கணும். எப்போ வேணாலும் செஞ்சுக்கலாமே? நல்ல ஐடியாதான்னு மெச்சிக் கொண்டு 4 மணிசுமாருக்கு மேலே ஏறினோம். தொட்டிக் குழாயைத் திறந்து மொட்டை மாடி பூராவும் அலம்பிவிட்டும் தொட்டியில் பாதிக்கு மேல் தண்ணீர் இருந்தது. ஏணி போட்டு ஏறிக் கொண்டு தொட்டியிலிருந்து மொண்டு மொண்டு அவர் தண்ணீரைக் கொட்ட, குழாய் வழியாக நான் பிடிச்சுப் பிடிச்சுக் கொட்ட. அப்பு மட்டும் இருந்தது! ஹையா, ப்ளேயிங் வித் கமகம், பேபி வாண்ட் டு ப்ளேனு அதுவும் ஓடி வந்திருக்கும்.

அதை நினைச்சுட்டே ஒருவழியா ஒரு மணி நேரத்துக்குள்ளே தொட்டியைக் காலி செய்தோம். காலி செய்யும்போதே வெளியே போகும் குழாய் அடைச்சிருப்பது அவர்கண்களில் பட்டுவிட, இதான் காரணம் என்று கண்டு பிடித்துவிட்டார். தண்ணீர் காலியானதும் தொட்டிக்குள்ளே இறங்கி அந்தக் கம்பை மெதுவாக வெளியே எடுத்தார். ஒரு வாரத்திற்குள்ளாக மக்கிப் போயிருந்த அது பாதிக்கு மேல் உள்ளேயே இருந்துகொண்டு வம்பு பண்ண, கீழே இருந்து இரும்புக் கம்பியை எடுத்துவந்து எல்லாத்தையும் எடுத்துட்டுத் தொட்டியைச் சுத்தம் செய்து ப்ளீச்சிங் பவுடர் போட்டு மீண்டும் தண்ணீர் நிரப்பினோம். அதுக்குள்ளே மணி ஆறு ஆகிவிடவே கீழே விளக்கு ஏத்தணும், வேலை இருக்குனு நான் கீழே குளிக்க வந்துட்டேன். குழாயைத் திறந்தால் தண்ணீரே வரவில்லை. உடனேயே கிணற்றடிக்குப் போய் மாடியிலிருந்த ம.பா.விடம் செய்தியைக் கொடுக்க அவர் “உனக்கு ஏக அவசரம்!’ என்றார் ஒரே வரியில். சரினு நானும் நேரடியாய்த் தண்ணீர் வரும் குழாயிலிருந்து பிடிச்சுக் குளிச்சு முடிச்சேன். அவரும் மாடியிலிருந்து வந்து குழாயைத் திறந்தால் தண்ணீர் நூல் போல் வழிந்தது. என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?? அதான் எடுத்துட்டோமே அடைப்பை அப்புறமும் ஏன் தண்ணீர் வரலை? புரியவே இல்லை அவருக்கு. ப்ளம்பருக்குத் தொலைபேசினதில் அவர் எங்கேயோ வேலையில் மாட்டிக் கொண்டிருப்பதால் காலையில் எழுந்ததும் வரேன்னு சொல்லிட்டார்.. அவசரம் அவசரமாய் நூல் போல் வர தண்ணீரைப் பிடிச்சு வச்சுண்டோம்.

காலம்பர எழுந்ததும் பல்தேய்க்க, கை, கால் கழுவத் தண்ணீர் இருக்கு. குளிக்க?? ப்ளம்பர் எப்போ வருவாரோ? தண்ணீருக்கு என்ன செய்யறது?? 150 அடியில் போரில் தண்ணீர் கொட்டுது. மோட்டாரைப் போட்ட உடனேயே தொட்டி நிரம்பறது. அக்கம்பக்கம், இன்னும் சொல்லப் போனால் எங்க தெருவிலேயே இருக்கும் எங்க அக்கா(பெரியப்பா பெண்) வீட்டிலேயும், அடுத்த தெருவில் இருக்கும் அண்ணா வீட்டிலேயும் இரண்டடிக்குத் தான் தண்ணீரே இருக்கு. தண்ணீர் ஊற ஊற இறைச்சுக்கிறாங்க. மோட்டார் போடவே முடியலை. நமக்குத் தண்ணீர் கஷ்டமே கிடையாதுனு சொல்லிட்டு இருந்தோமே?? அது என்ன எப்படினு காட்டவா இது? பகவானே!

8 comments:

  1. இது மொக்கையா?
    அப்போ மொக்கையை என்ன சொல்வீங்க????
    பதிவு சூப்பர்...இதுக்குத்தான் நாமும் கொஞ்சம் பிளம்பர் வேலையையும் தெரிஞ்சு வச்சுக்கணும்னு சொல்றது.

    ReplyDelete
  2. என்னப்பா இது.
    இப்படிக்கூட பிரச்சினை வருமா. இந்தப் பதிவை நான் படிக்கும் நேரம் பிரச்சினை தீர்ந்திருக்கும்னு நம்பறேன்.
    ப்ளம்பிங் கோர்ஸ் ஒண்ணு படிக்கணுமோ.

    ReplyDelete
  3. ஒரு பிரச்சினையை எப்படியெல்லாம் அணுகக் கூடாது, எப்படி அணுகினால் தீர்வு கிடக்கும் என்கிற விஷயங்கள் ரொம்ப யதார்த்தமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. பெரிய விஷயங்களை எளிமையாகச் சொல்கிற உங்கள் திறனுக்கு இது மாதிரி வேறு பிரச்சினைகளைக் கூட எடுத்துக் கொண்டு எழுதலாம்.

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  4. சரி இப்ப சரியாச்சா இல்லையா?
    குச்சி மேலே ஏதாவது துணி சுத்திதான் ப்ளம்பர் குழாயை அடைச்சு இருப்பார். அது வெளியெ வரணுமே! எங்காவது லைனிலே மாட்டிகிட்டு இருக்கும்.
    கர்டன் வயர்- ஸ்பிரிங்க் மாதிரி இருக்குமே - அதை வாங்கி நுனியை ஹக் மாதி செஞ்சுட்டு அதை மேலேந்து குழாய் வழியா நுழைச்சா அது போய் இந்த துணியை பிடிச்சுகிட்டு வர சான்ஸ் இருக்கு. இல்லை tap ஐ கழட்டிட்டு கீழேந்தும் நுழைக்கலாம். இது கொஞ்சம் சுலபம்.

    ஆமா தொட்டியை காலி பண்ண ஏன் சேந்தி கொட்டினீங்க? தண்ணி வெளியே போக குழாய் இருக்கு, அது வழியா கொட்டோ கொட்டுன்னு கொட்டினதா எழுதின்னிங்களே!

    ReplyDelete
  5. வாங்க கோமா, முதல்வரவுக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்னியோ நன்னி!

    ReplyDelete
  6. வல்லி, ப்ளம்பிங் தெரியும், அடுத்த பதிவிலே பதிலைப் பார்த்துட்டீங்க தானே? :))))))

    ReplyDelete
  7. வாங்க ஜவார்லால், சரியான புரிதலுக்கு முதலில் நன்றி. முதல்வரவுக்கும், யோசனைக்கும் நன்றி. எனக்கும் இப்படி ஒரு எண்ணம் இருக்கு. அவ்வளவு பிரச்னைகளும் இருக்குனு வச்சுக்குங்களேன்! நன்றிப்பா! :)))))))))))))))

    ReplyDelete
  8. //ஆமா தொட்டியை காலி பண்ண ஏன் சேந்தி கொட்டினீங்க? தண்ணி வெளியே போக குழாய் இருக்கு, அது வழியா கொட்டோ கொட்டுன்னு கொட்டினதா எழுதின்னிங்களே!//

    ஹிஹிஹி திவா,தொட்டியின் கீழ் மட்டத்தில் அரை அடிக்கு மேலே குழாய் இருக்கு, அதுவரை தண்ணி கொட்டித் தீர்த்தாச்சு, மிச்சம் தண்ணியை எப்படி எடுக்கிறது? அதான் சேந்திக் கொட்டினார் உள்ளே இறங்கிட்டு! :))))))))))

    ReplyDelete