Tuesday, August 18, 2009

அண்ணனும், தம்பியும் படுத்தற பாடு தாங்கலை!

இந்தக் கூத்தெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அண்ணனும், தம்பியும் துரத்தோ துரத்துனு துரத்தறாங்க தெரியுமா??? போன வருஷத்தில் ஒருநாள் கோடை காலம் என்பதால் கணினியில் உட்காரும்போது மின் விளக்கைப் போட்டுக்கலை. சூடு தாங்காது என்பதால் விளக்கில்லாமல் உட்கார்ந்திருந்தேன் கணினியிலே. அப்போ ரொம்ப ஆழ்ந்து கவனிச்சு ஏதோ எழுதிட்டோ, படிச்சுட்டோ இருக்கையிலே காலில் சுரீர்னு ஒரு கடி. வீல் என்று ஒரு அலறல். ஹிஹிஹி, கத்தியது நான் தான். கூடவே கீச் கீச் கீச் என்றும் சப்தம். என்னனு பார்த்தால் ஒரு மூஞ்சுறு ஒண்ணு ஓடிட்டு இருந்தது. மும்முரமாய்த் தொலைக்காட்சியில் கதாநாயக, நாயகியரோடு சேர்ந்து அழுது, சிரிச்சுட்டு இருந்த என்னோட ம.பா.வுக்கு நிஜமாவே த்ரில்லிங்காய் இருந்திருக்கு. வந்து என்னனு கேட்டார். மூஞ்சுறு தான் கடிச்சது என்று நான் சொல்ல, அதுக்குக் கடிக்கவெல்லாம் தெரியாது, நாக்காலே நக்கிக் கொடுத்திருக்கும் செல்லமாய் அதுஅப்பாவி, நீ தான் அதைக் காலால் மிதிச்சிருக்கே, அது பயந்து போயிருக்கும் னு என்னோட ம.பா. சொல்ல(அநுகூல சத்ரும்பாங்களே, இதானா அது?) இரண்டு பேருக்கும் துவந்த யுத்தம் ஆரம்பிக்கிறதைப் பார்த்துட்டு அந்த மூஞ்சுறு எங்கேயோ போய் ஒளிஞ்சுண்டது. அது என்னைக் கடிச்சுட்டதுங்கறதுக்காக அதோட குழந்தைங்களை எல்லாம் நான் காப்பாத்திக் கொடுக்கலையா? அந்த நன்றியே இல்லையே இந்த மூஞ்சுறுக்கு? விடலை என்னை. பழிவாங்கியே தீருவேன்னு பழி வாங்கிடுச்சு மெகாசீரியல் வில்லி மாதிரி.

போன மாசம் பாருங்க, சாப்பிட்டுட்டுக் கொல்லையிலே பாத்திரங்கள் கழுவும் இடத்தில் பாத்திரங்களைப் போடப் போயிட்டிருந்தேன். என்னோட ம.பா.வுக்கு ஒரு குணம் என்னன்னா, நான் போவேன்னு தெரிஞ்சும், அவர் விளக்கை அணைச்சுட்டு வந்துடுவார். திருப்பிப் போட்டுக்கோயேன்னு அவர் சொல்லுவார். வேலை முடிஞ்சதும் நானே அணைச்சுட்டு வருவேனே என்பது என்னோட பதில். இது வருஷக் கணக்கா சுப்ரீம் கோர்ட் அப்பீலுக்குப் போயும் இன்னும் தீர்ப்பு வராத ஒரு கேஸ். அன்னிக்கும் வழக்கம்போல் அவர் அணைச்சு வச்சிருக்கார். அந்த நினைப்பே இல்லாமல் நான் ஜாலியாகப் பாட்டுப் பாடிக் கொண்டு, கவனிக்கவும், பாட்டுப் பாடிக் கொண்டு போய்ப் பாத்திரங்களைப் போட்டேன். பாத்திரங்களை நான் போட்டேனா, பாத்திரங்கள் அதுவா விழுந்ததா என்பது இன்னி வரைக்கும் தெரியலை. ஆனால் என்னோட காலை எதுவோ கப் னு கெட்டியாப் பிடிச்சுண்டது மட்டும் தெரிஞ்சது.

வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!!!! பாத்திரம் எது மேலே விழுந்ததுனு தெரியாது. நான் கீழே விழுந்தேன், கூடவே குய்யோ, முறையோனு நான் கத்த, கூடவே கீச் மூச், கீச் மூச், கீச் மூச் என்று கோபமாய்ப் பதில்கள் வர, பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்த என்னோட ம.பா. எனக்குத் தான் ஏதோ ஆயிடுத்துனு பதறி அடிச்சுட்டு ஓடி வர, வரும்போதே விளக்கையும் போட என் காலைக் கவ்விக் கொண்டிருந்த மூஞ்சுறார் விளக்கைக் கண்டதும் ஓடினார். இப்போவும் மூஞ்சுறார் தான் கடிச்சார்னு நான் சத்தியம் பண்ண, அதுக்குப் பல்லே கிடையாதுனு, கடிக்கவெல்லாம் தெரியாதுனு ம.பா. சொல்ல எங்க ரெண்டு பேருக்கும் மறுபடியும் சண்டை ஆரம்பம் ஆனது. கடிச்சது தம்பியாக இருக்கப் போறதுனு அவருக்குக் கவலை. தம்பி இங்கே வரவே இல்லை, அண்ணன் தான் வாகனத்தை அனுப்பிப் பயமுறுத்தி இருக்கார்னு நான் திட்டவட்டமாய்த் தெரிவித்தேன். இந்த அமர்க்களத்திலே அவர் சாப்பாட்டையே மறந்து போக நினைவு படுத்திச் சாப்பிடச் சொன்ன நான் கால் வலி இருக்குனு சொல்லிட்டே காலைக் கவனித்தால், மயக்கமே வரும்போல் ஆயிடுச்சு. ரத்தம் வந்துடுச்சு காலில் இருந்து. சும்மாவே எறும்புக்கடிக்கும், அரிப்புக்கும், கொசுக்கடிக்கும் சொறிஞ்சாலே ரத்தம் வரும் எனக்கு இந்த ரத்தத்தைப் பார்த்ததும் கேட்கணுமா???

வீராவேசமாய் வந்து சாப்பிட்டுட்டு இருந்தவர் கிட்டே காட்டினேன். ஏதோ கீறி இருக்கும்னு அப்போவும் என்னை விட்டுட்டு மூஞ்சுறுக்கே சப்போர்ட் பண்ணறார். டாக்டர் கிட்டேபோகணும்னு நான் சொல்ல, இதுக்கெல்லாம் டாக்டர் வேண்டாம், ஊசி போடுவார், மூஞ்சுறு கடியை விட எனக்கு ஊசி அலர்ஜினு அவருக்கு நல்லாவே தெரியும். சுண்ணாம்பைப் போடு காயத்திலே, எதுவானாலும் சரியாகும்னு சொன்னார். அதுக்குள்ளே ஒரு ஏழு, எட்டு மிளகை எடுத்துக் கடிச்சுத் தின்னேன். துளசியை ராத்திரி பறிக்க முடியாது. அதனால் அந்தத் திட்டம் கைவிடப் பட்டது. உயிர் எவ்வளவு அரிதுனு புரியுது இல்லை??? அவர் சாப்பிட்டுட்டு இருந்தார். அதனால் அதுக்குள்ளே நான் இணையத்திலே யாரையானும் கேட்கிறேன் என்று கணினிக்கு வர, சுண்ணாம்பைப் போட்டுக்கோ, விஷமாய் இருந்தாலும் ஒண்ணும் பண்ணாது. நான் சாப்பிட்டு வரேன், டாக்டர் கிட்டே போகலாம் என்று அவர் சொல்ல இணையத்தில் திரு நடராஜன் அவர்களுக்கும், திரு தி.வா அவர்களுக்கும் மெயில் கொடுத்தேன்.

திருநடராஜன் பிராணிகளோடும், பறவைகளோடுமே வாழ்க்கை நடத்தி வருகிறார். மேனகா காந்திக்குப் பதிலா நடராஜன் இந்தப் பிராணிகள் நலவாரியத் தலைவராய் இருக்கலாம் அந்த அளவுக்கு இதுங்களை உன்னிப்பாய்க் கவனிச்சிருக்கார். தி.வா மருத்துவர், மருத்துவரீதியாகச் சொல்லுவாரே. அதனால் அவரையும் கேட்டேன். ஆனால் அவர் ரொம்ப பிசி போல. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்துக் கடைசியில் திருநடராஜன் இது விஷம் தான் என்றும் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கோனும் பதில் கொடுத்தார். தி.வா. பிசியாய் இருந்தார் போல. பதில் வரலை, நானும் உடனே மருத்துவர் கிட்டேப் போயிட்டேன். எப்போவும் போல நாங்க வண்டியிலே ஏறும் வரைக்கும் சும்மா இருந்த வண்டி ஏறிக் கிளம்பும்போது நிற்க, அப்போப் பார்த்து அதிசயமா மழை கொட்ட ஆரம்பிச்சது. லேசாத் தானே பெய்யுது, போயிடலாம்னு நினைச்சா தாரையாக் கொட்டுது மழை. ஒதுங்க இடம் இல்லை. எல்லா வீடுகளும் மூடிக் கிடக்கு. இரவு நேரம் சும்மாவே எங்க ஏரியாவிலே நடமாட்டம் இருக்காது. ஒன்பது மணிக்கு மேலே ஆயிடுச்சு. எல்லா வீடுகளும் மூடிக் கிடக்க ஒதுங்க இடமில்லாமல் மழையில் சொட்டச் சொட்ட நனைஞ்சுட்டே போனோம். எல்லாம் கிடக்க மழையில் நனைஞ்சு உனக்கு ஆஸ்த்மா அதிகமாகப் போகுதேனு அவருக்குக் கவலை.

அங்கே போய் டாக்டர் கிட்டே மூஞ்சுறு கடிச்சதுனு சொன்னால் அவருக்குச் சிரிப்பு வராத குறைதான். தேள்கடி, பாம்பு கடி, நாய்க்கடினா ஒத்துப்பார் போல. எனக்குக் குதிரை கடிச்சதைப் பத்தி சுஜாதா கல்கி தீபாவளி மலர்??? எழுதி இருந்தது தான் நினைவில் வந்தது. எவ்வளவு உண்மை? அனுபவிச்சுத் தான் மனுஷன் எழுதி இருக்கார்! அப்புறம் கடிச்ச இடத்தைக் காட்டி ரத்தம் வந்ததையும் உறுதி செய்ததும் விஷம் இல்லை, ஆனாலும் இன்பெக்ஷன் ஆகாமல் இருக்க ஊசி குத்தறேன்னு சொல்லிட்டு ஊசி குத்திட்டார். அது என்னமோ தெரியலை, என்னைப் பார்த்தாலே இந்த மருத்துவர்களுக்கு ஊசி குத்த ஆசை வந்துடும்போல. அப்புறமாய் வலி இல்லாமல் இருக்க மாத்திரைகளும் கொடுத்தார். மொத்த ஆஸ்பத்திரியும் என்னை விசித்திரமாய்ப் பார்க்க, இது பழகிப் போன நானும் மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தேன். ஒரு இரண்டு நாளிலே எல்லாம் சரியாப் போச்சு. என்றாலும் அண்ணன் தம்பியை அனுப்பியும் துரத்தறாரே?
அருமை நண்பரோட பிறந்த நாள் வருது. வழக்கம்போல் இந்த வருஷமும் தூம், தாம்னு கொண்டாட வேண்டியது தான். அதுக்கு முன்னாலே இப்போக் கொஞ்ச நாட்களா நண்பருக்கும் எனக்கும் நடக்கும் பனிப்போர் பத்திச் சொல்லியே ஆகணும். தன்னோட வாகனத்தை அனுப்பி என்னைக் கடிக்க வச்சார்னா, தம்பியோட சொரூபத்தின் மூலமும் என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறார். தம்பியார் ஏற்கெனவே பலமுறை வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். போன மாசம் வந்ததைத் தான் இங்கே எழுதினேன். அப்படியும் அவர் ஒருநாள் காலையில் வாசல் தெளிக்கும்போது தண்ணீர்க் குழாய்க்குள் இருந்து கொண்டு எட்டிப் பார்த்துட்டு இருந்தார். இப்போவும் வழக்கம்போல் போகும்போது கவனிக்காத நான், திரும்பிவரும்போதே அவர் எட்டிப் பார்ப்பதைக் கவனித்தேன். நல்லவேளையாய் அவரும் என்னைக் கண்டு தலையை உள்ளே இழுத்துக் கொண்டு மறையவும், நானும் ஓடி வந்துட்டேன். ஆனால் இந்த விளையாட்டு எத்தனை நாளைக்கு என்றும் தோன்றுகிறது. நண்பர் கிட்டே அதான் சொல்லி வச்சுட்டேன், பார்த்துக்குங்கனு. இனி அவர் பாடு, தம்பி பாடு. தம்பியை அடக்கி வைக்கவேண்டியது அண்ணன் பொறுப்பு. நமக்கு அண்ணனே கதி!

அப்பாவையே போருக்குப் புறப்படாமல் தன்னைக் கும்பிட்டுட்டுத் தான் போகணும்னு நிற்கவச்சவர், தம்பி கல்யாணத்துக்கு உதவினவர், மாமாவின் சக்கரத்தை முழுங்கியவர் நம்மைக் கவனிக்காமலா இருப்பார்? எல்லாம் அவர் செயல். இதுக்காக எல்லாம் கோவிச்சுண்டு நண்பரோட பிறந்த நாளைக் கொண்டாடாமல் விடமுடியுமா?? நண்பர்களுக்குள் ஆயிரம் இருக்கும், கோபம், தாபம் எல்லாம். அப்புறம் தானே சரியாப்போயிடும் இல்லையா? அது போல் இப்போ பிள்ளையாரோட நானும் “டூ” விட்டிருக்கேன், அவரும் “டூ” விட்டிருக்கார்போல. பிறந்தநாளைக்குள்ளே எல்லாம் சரியாயிடும் பாருங்க! இப்போக் கொஞ்ச நாட்களாய் அண்ணன், தம்பி இரண்டு பேரும் கண்ணில் படறதில்லை. கொஞ்சம் சமாதானம் ஆயிருக்கும்னு நினைக்கிறேன். பிள்ளையார், பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.

12 comments:

  1. தம்பியாருடன், தாம்-தூம்ன்னு கொண்டாட வாழ்த்துக்கள் :-).

    ReplyDelete
  2. என்ன அம்மா, இப்படில்லாம் பயமுறுத்தறீங்க. கவனமா இருங்க. பார்த்துக்க சொல்லி நானும் புள்ளையார்கிட்ட விண்ணப்பம் போட்டு வைக்கிறேன்.

    ReplyDelete
  3. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete
  4. அன்புள்ள மூஞ்சூருக்கு,

    இன்னமும் நீ நலமாகத் தான் இருப்பாய் என நம்புகிறேன். கீதா மேடத்தை கடித்ததால் உனக்கு ஒன்னும் ஆகலையே? :))

    உனக்கு எதுக்கு இந்த வீபரீத ஆசை? :))

    பிள்ளையார் சதுர்த்தி வேற வருது. நாலு இடத்துக்கு போனோமா, ரெண்டு கொழுகட்டையை சாப்டோமான்னு இருக்கறதை விட்டுட்டு...

    உனக்கு உடம்புக்கு வந்தா பாக்க யாரு இருக்கா? ஜாக்ரதையா இரு. :))

    இப்படிக்கு
    உன் நலத்தை என்றும் விரும்பும்
    அம்பி

    ReplyDelete
  5. //ஏதோ கீறி இருக்கும்னு அப்போவும் என்னை விட்டுட்டு மூஞ்சுறுக்கே சப்போர்ட் பண்ணறார். //

    கீரியா கீறியா? கீரி இருந்தா சுப்புக்குட்டி பிரச்சினை இருக்காதே?

    /இந்த அமர்க்களத்திலே அவர் சாப்பாட்டையே மறந்து போக நினைவு படுத்திச் சாப்பிடச் சொன்ன நான் கால் வலி இருக்குனு சொல்லிட்டே காலைக் கவனித்தால்,/
    அப்ப முக்கால் வலி போயிடுத்தா?
    //தி.வா. பிசியாய் இருந்தார் போல. பதில் வரலை, //
    அதானே! எஸ்எம்எஸ் ன்னு ஒண்ணு இருக்குன்னு தெரியுமா?

    //எனக்குக் குதிரை கடிச்சதைப் பத்தி சுஜாதா கல்கி தீபாவளி மலர்??? எழுதி இருந்தது தான் நினைவில் வந்தது.//
    உங்களை அது வேற கடிச்சு இருக்கா?
    :-))

    //இதுக்காக எல்லாம் கோவிச்சுண்டு நண்பரோட பிறந்த நாளைக் கொண்டாடாமல் விடமுடியுமா?? நண்பர்களுக்குள் ஆயிரம் இருக்கும், கோபம், தாபம் எல்லாம். அப்புறம் தானே சரியாப்போயிடும் இல்லையா?//

    ஹௌ ட்ரூ!

    ReplyDelete
  6. மெளலி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அக்கிரமமாய் இருக்கே?:P:P:P:P

    ReplyDelete
  7. வாங்க கவிநயா, வேலைகளுக்கு நடுவிலும் எப்படியோ வந்துடறீங்க, எனக்குத் தான் இன்னமும் நீங்க கொடுத்த விருது போஸ்ட் போடமுடியலை, நன்னிங்கோ, புள்ளையார்கிட்டே சிபாரிசு பண்ணினதுக்கு! :)))))))))

    ReplyDelete
  8. அட, செய்திவளையம், மறுபடியும்??? நன்றிங்க.

    ReplyDelete
  9. அம்பி, இதுக்கு மெளலியே பரவாயில்லை போல! :P:P:P:P:P:P:P

    :))))))))))))))))))))))))))
    நல்ல ரசனை தான். என்னோட ம.பா.வும் இதான் கவலைப்பட்டார், மூஞ்சுறு அப்புறம் கண்ணிலேயே படலியே என்ன ஆச்சோனு! :D

    ReplyDelete
  10. @தி.வா.
    //சுப்புக்குட்டி பிரச்சினை இருக்காதே?//

    சுப்புக்குட்டி தான் குடியும், குடித்தனமுமா இருக்காரே, அப்புறம் கீரி எங்கே இருந்து வரும்?

    //அதானே! எஸ்எம்எஸ் ன்னு ஒண்ணு இருக்குன்னு தெரியுமா?//

    எஸ் எம் எஸ் எல்லாம் இன்னும் கொடுக்க ஆரம்பிக்கவே இல்லை, அதோட அதெல்லாம் அப்போ நினைவிலே வரலை. ரெண்டாவது உங்களுக்கு எத்தனையோ வேலைகள். தொந்திரவு பண்ணவேண்டாமேனு தான். உங்களுக்குத் தொலைபேசிக் கேட்கத்தான் சொன்னார். நான் தான் கூப்பிடலை! :))))))))))))))))))

    ReplyDelete
  11. பல வலிகளை தாங்கி கொண்டு தொண்டர்களுக்காக தினமும் அயராது உழைக்கும் உங்கள் நினைத்து மனம் நெகிழ்க்கிறது தலைவி.!

    உங்க நண்பர்க்கு எப்போ பிறந்த நாளுன்னு தெரியல...எப்படியும் பதிவை பார்த்து தான் தெரிஞ்சிக்க போறேன். அவருக்கு ஒரு வாழ்த்து இப்போவே சொல்லிடுங்க ;)

    ReplyDelete
  12. வாங்க கோபி, உங்களோட பரிவுக்கு ரொம்ப நன்றிப்பா. இது தானே ரிலாக்ஸேஷன், இத்தனை சிரமங்களுக்கு நடுவேயும், அதனால் இதை எப்படி விடமுடியும்? அரைமணி நேரமாவது உட்கார மாட்டோமா என்ன?? :))))))))))))

    ReplyDelete