Monday, August 23, 2010

மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! வித்யாரண்யர்!

நடந்தது நடந்துவிட்டது. தேவி முதலிலேயே கூறினாள். இப்போது இந்தப் பிறவியில் என் எண்ணம் ஈடேறாது என. ஆனால் அடுத்த பிறவி வரையிலும் காத்திருக்க எனக்குப் பொறுமையில்லை. இந்த சாம்ராஜ்யத்திற்குக் குறைந்த பக்ஷமாக முந்நூறு ஆண்டுகள் கிடைக்கும் என தேவியின் ஆசிகள். நீங்கள் இந்த நகரத்திற்கு "விஜயநகரம்" என்று பெயர் வையுங்கள். மேன்மேலும் வெற்றிகள் குவியட்டும். ஹிந்துக்களுக்கும், மற்ற மதத்தவர்களுக்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லாமல் அனைவரையும் சமமாக எண்ணி நல்லாட்சி புரிந்து வாருங்கள்.

அந்நிய மதத்தினரால் இடிக்கப் பட்ட கோயில்களைப் புனர் உத்தாரணம் செய்து கொடுங்கள். இந்த விஷயத்தில் எந்தவிதமான தடைகள் வந்தாலும் பொருட்படுத்தாமல் அனைத்துக் கோயில்களையும் செப்பனிடுங்கள். பொதுமக்களையும் இந்தப் பணிகளில் ஈடுபடுத்துங்கள். நான் இந்த சாம்ராஜ்யம் நிலைத்து நிற்கவேண்டியே தாது வருஷத்தின் இந்த குருவாரத்தையும், வைசாக மாதத்தையும் , சப்தமி திதியையும் தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் ஒரு சின்னத் தவறினால், ஒரு சங்கோசையினால் அது மாறிவிட்டது. எனினும் முந்நூறு ஆண்டுகளுக்கு இந்த ராஜ்யம் நிலைபெற்றிருக்கும். " என்று ஆசி வழங்கினார்.

ஹரிஹரனும், புக்கனும் தங்கள் குருவின் பெயரான வித்யாரண்யர் என்ற பெயரின் முதல் மூன்றெழுத்தான வித்யாவில் இருந்து வித்யாநகரம் என்ற பெயரிட ஆசை கொண்டனர். ஆனாலும் குருவின் கட்டளையை மறுக்கத் துணிவில்லாமல் தங்கள் சாம்ராஜ்யத்தையே அவர் காலடியில் சமர்ப்பித்து அவர் கட்டளைப்படியே விஜயநகரம் என்ற பெயரிட்டனர்.

இதுதான் ஆரம்பம், பின்னர் ஹரிஹரனோ, புக்கனோ திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. சநாதன தர்மம் இன்று வரையிலும் கொஞ்சமாவது நிலைத்திருப்பதற்குக் காரணமே வித்யாரண்யர் தான் என்று அறுதிபடச் சொல்லமுடியும். ஆரம்பத்தில் ஒரு ஏழை பிராமணனுக்குப் பிள்ளையாகப் பிறந்து பின்னர் தனது ஆன்மீகத் தேடலின் விளைவாக அப்போது சிருங்கேரியின் குருமஹா சந்நிதானமாக இருந்த வித்யாசங்கர தீர்த்தரிடம் சந்நியாச தீக்ஷைபெற்றுக் காசிக்குச் சென்றார் வித்யாரண்யர். கடும் தவத்தின் விளைவாக அவருக்கு வேத வியாசரே தரிசனம் கொடுத்து பதரிகாசிரமத்துக்கு வரச் சொன்னதாகவும் அங்கேதான் ஸ்ரீவித்யா மந்திரம் அவருக்கு உபதேசிக்கப் பட்டதாயும் சிருங்கேரி மடம் மற்றும் சில தளங்களின் தகவல்கள் சொல்கின்றன. வித்யாரண்யரின் பூர்வாசிரமத் தம்பியாக இருந்தவர் பாரதி கிருஷ்ண தீர்த்தர் என்ற பெயரில் வித்யாசங்கரருக்கு அடுத்த பட்டத்துக்கு நியமிக்கப் பட்டதாயும், அவரும் சமாதி அடைந்த பின்னர் வித்யாரண்யர் சிருங்கேரி பீடத்தின் 12-வது தலைமை மஹா சந்நிதானமாக நியமிக்கப் பட்டதாயும் அறிகிறோம். 1331-ம் ஆண்டு சிருங்கேரி பீடத்தில் பட்டம் எறிய வித்யாரண்யர் 1386 வரையிலும் அந்தப் பீடத்தின் குருவாகவும், விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைமை ஆலோசகராகவும் இருந்து சநாதன தர்மத்தையும் கட்டிக் காத்ததோடு அத்வைதத்தைப் பரப்பவும், வேதங்கள், உபநிஷதங்கள் பற்றியும் பல நூல்கள் எழுதியும் சேவை செய்து வந்திருக்கிறார்.


இவர் சிருங்கேரி பீடத்தில் ஏறிய காலம் பற்றியும் முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லப் படுகிறது. சிருங்கேரி மடத்தின் அதிகார பூர்வத் தளத்தில் இவர் பீடம் ஏறிய ஆண்டு 1381 என்றும் 1386 வரை ஐந்தாண்டுகளே பீடத்தில் இருந்ததாயும் குறிப்பிட்டிருந்தாலும், பல தளங்களிலும் இவர் நூறாண்டுகளுக்கும் மேல் வாழ்ந்ததையும், பல வருடங்கள் சிருங்கேரி பீடத்தின் தலைமை மடாதிபதியாக இருந்ததையும் குறிப்பிடுகின்றன. இவரின் குரு வித்யாசங்கரர் யோக முறையில் சமாதி அடைய பாதாளத்தில் தவம் இருந்ததாயும் அப்போது பீடத்தில் இருந்த இவரின் பூர்வாசிரமத் தம்பியான பாரதிகிருஷ்ண தீர்த்தரால் அந்த இடத்தின் மேலே வித்யாசங்கரருக்கு ஒரு கோயில் கட்டப் பட்டதாயும் தெரிய வருகிறது. பாரதி கிருஷ்ண தீர்த்தரும் சீக்கிரமே சமாதி அடைய இவர் பட்டம் ஏறியதாயும் சொல்லப் படுகிறது. இன்னும் சில தகவல்கள், விஜயநகரத்திலேயே வித்யாரண்யர் தமக்கென ஒரு மடம் அமைத்துக்கொண்டதாய்க் கூறுகிறது.

6 comments:

 1. http://www.virutcham.com/?p=3571
  எனக்குப் பிடித்த பதிவுகளைச் சொல்லி இருக்கிறேன். அதில் உங்களது இந்தப் பதிவும் இருக்கிறது.

  ReplyDelete
 2. சிறந்த பதிவுகளை கொடுக்கும் கீதாம்மா அவர்களை வாழ்த்துகிறோம்

  விஜய நகரம் பற்றி நிறைய தகவல்கள் ;கொடுத்தமைக்கு நன்றி

  ReplyDelete
 3. வாங்க விருட்சம், நன்றிங்க. அப்புறமா எழுதவே முடியாமல் ஏதேதோ தடங்கல்கள். :(

  ReplyDelete
 4. வாங்க ப்ரியா, முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.

  ReplyDelete
 5. எல்கே, அதான் தெரியுமே?? ஆகஸ்டிலே இருந்து வரிசையா பிரச்னைகள், பிரச்னைகள், இனிமேலாவது தொடரணும். எழுதி வச்ச மத்ததையே இன்னும் சரியாப் போட முடியலை! :(

  ReplyDelete