Sunday, August 15, 2010

மறைந்த சாம்ராஜ்யத்தின் கண்ணீர்க்கதை! விஜயநகரம்!

தன்னெதிரே வந்து நின்றவனைப்பார்த்த வித்யாரண்யர் தாம் அவனுக்குப் போர்ப்பயிற்சி அளிக்கப் போவதாய்ச் சொல்கிறார். மிரண்ட அவனைச் சமாதானம் செய்து போர்ப்பயிற்சி அளிக்கிறார். இன்னும் சில புத்தகங்களில் சந்திர வம்சத்தவர் ஆன திம்ம தேவர் நாடிழந்து மாதவாசாரியாரைத் தஞ்சம் அடைந்ததாயும் கூறுகின்றனர். திம்ம தேவருக்குப் பிறந்தவர்களே ஹரிஹரனும், புக்கனும் என்றும் கூறுவார்கள். ஆனாலும் ஒரு சில ஆதாரங்களின்படி ஹரிஹரனும், புக்கனும் திம்மதேவரின் மகன்களே ஆனாலும் அவர்கள் முகமதியர்களால் அடிமைகளாகப் பிடித்துச் செல்லப் பட்டதும், பின்னர் அவர்கள் தங்கள் சொந்த நாட்டையே முகமதியர் அதிகாரத்திற்கேற்ப மாற்றி அமைக்க அனுப்பப் பட்டதும், அப்போது மாதவரைச் சந்தித்ததும் சொல்கின்றன. ஆகவே நாம் இங்கே புக்கணனையே தயார் செய்தார் என எடுத்துக் கொள்வோம். இப்படித் தயார் செய்யப் பட்ட புக்கணன் தான் பின்னர் சாம்ராஜ்யத்தையும் ஆண்டான்.

தனக்கு உணவளித்த திம்மதேவனின் வம்சம் என்றும் தழைத்துச் சிறப்போடு விளங்கும் எனவும் வித்யாரண்யர் ஆசீர்வதிக்கிறார். தெய்வீக அம்சங்களோடு விளங்கும் எனவும் சொல்கிறார். ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வாரிசில்லாமல் இறக்க, பட்டத்து யானையின் கழுத்தில் மாலையைக் கொடுத்து அனுப்புகின்றனர் மந்திரி பிரதானிகள். மாலையை எடுத்துக்கொண்டு யானை நேரே காட்டுக்குள் வந்து தவம் செய்து கொண்டிருந்த மாதவாசாரியாரின் கழுத்தில் போட அவர் திகைக்கிறார். ஏற்கெனவே மஹாலக்ஷ்மியின் கடாட்சம் வேண்டுமென்பதற்காக அவர் துறவறம் மேற்கொண்டார். அரண்மனையும் சிம்மாதனமும் எப்படிச் சரிவரும்?

யோசித்த அவர் புக்கணனையும், ஹரிஹரனையும் அழைத்து அவர்களை ஆசீர்வதித்துப் பட்டம் கட்டினார். வராஹச் சின்னம் பதித்த தேவியின் மோதிரத்தை அவர்களுக்கு அளித்து அவர்கள் எடுக்கும் எந்தப் புதிய காரியமும் வெற்றியடையும் எனவும், அவர்களால் ஸ்தாபிக்கப் படும் சாம்ராஜ்யம் மிகவும் பிரபலமாகவும், புகழோடும் விளங்கும் எனவும் ஆசீர்வதிக்கிறார். சாம்ராஜ்யத் தலைநகராக ஒரு இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்கிறார். முறைப்படி இருவரின் ஜாதகத்தையும் பார்த்து ஒரு நல்ல நாளையும் தேர்ந்தெடுக்கிறார். அந்த நாளில் புதிய தலைநகருக்கான அஸ்திவாரம் கட்ட வேண்டும் என்பது வித்யாரண்யரின் ஆணை.

குருவின் ஆணையை மறுக்காமல் ஹரிஹரனும், புக்கனும் தலைநகருக்கான கட்டுமானங்களை ஆரம்பிக்க அஸ்திவாரம் எடுக்க ஆயத்தம் செய்கின்றனர். வித்யாரண்யர் அஸ்திவாரம் தோண்டிவிட்டு, கட்டட வேலை ஆரம்பிக்கும் முன்னர் தாம் தேவியை வழிபட்டுவிட்டு வருவதாகவும், தேவியின் ஆக்ஞையைப் பெற்று வருவதாகவும் கூறுகிறார். தேவியின் வழிபாடு முடிந்ததுமே கட்டட வேலை ஆரம்பிக்கவேண்டும் எனவும், தாம் வழிபாடு செய்யுமிடத்தில் இருந்து இங்கே வந்து சொல்வதற்குள் நேரம் ஆகிவிடும் என்பதால் தாம் வழிபாடு முடிந்து தேவியின் ஆக்ஞை கிடைத்ததும், சங்கை எடுத்து ஊதுவதாகவும், சங்கோசை கேட்டதும் கட்டட வேலையை ஆரம்பிக்கலாம் எனவும் கூறுகிறார்.

அப்படியே செய்ய ஆரம்பிக்கின்றனர் இருவரும். அஸ்திவாரம் தோண்டிக் கட்டட வேலை ஆரம்பிக்க எல்லா ஏற்பாடுகளும் செய்து, இங்கேயும் தேவி வழிபாடும் நடந்து முடிகிறது. இனி குருநாதரின் ஆக்ஞை வரவேண்டியது தான் பாக்கி. சங்கோசை கேட்கவேண்டுமே! இதோ சங்கோசை!

பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
மகிழ்வோடு இருவரும் கட்டட வேலையை ஆரம்பிக்கின்றனர். ஒரு நாழிகை ஆனதும் மீண்டும் சங்கோசை.
பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இந்தச் சங்கோசை சற்றே வித்தியாசமாய் ஏதோ செய்தியைத் தெரிவிக்கிறதே? பதறிப் போனார்கள் இருவரும். உடனே குதிரைகளில் ஏறி குருநாதர் வழிபாடு செய்யும் இடம் செல்ல, அங்கே இவர்களைக் கண்ட குரு திகைக்கிறார். கட்டட வேலையை ஆரம்பிக்காமல் ஏன் இங்கே வந்தீர்கள் எனக் கேட்க, கட்டடவேலையை ஆரம்பித்துவிட்டோமே? திரும்பவும் இரண்டாம் முறையாகவும் சங்கோசை கேட்கிறதே எனப் பார்க்க வந்தோம் என இருவரும் சொல்கின்றனர்.

என்ன இது? இரண்டாம் முறையா? நான் ஒரு முறைதான் சங்கை ஊதினேன் என குரு சொல்ல, ஆஹா, குருநாதர் எவ்வாறு பொய் சொல்லுவார்? எங்கோ தவறு நடந்துள்ளது? இருவரும் விசாரிக்க ஆணையிட, நகர் நிர்மாணத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த இடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் மாடுகளையும், ஆடுகளையும் மேய்த்துக்கொண்டிருந்த ஒரு இடையன் அவைகளை ஒன்று சேர்க்க சங்கை எடுத்து ஊதியதாக ஒத்துக்கொண்டதைக் கேட்டனர். குருவிடம் வந்து நடந்ததைச் சொல்ல மீண்டும் தியானத்தில் ஆழ்ந்த குரு, பின்னர் மீண்டு வந்து. இந்த சாம்ராஜ்யம் ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கவேண்டும் என தேவியைப் பிரார்த்தித்துக் கொண்டேன். என்னுடைய கடும் தவத்தால் அடுத்த பிறவியில் நடக்கவேண்டிய ஒன்றுக்கு தேவி இப்போதே சம்மதம் சொன்னாள். ஆனால் அது ஆரம்பிக்க வேண்டிய நேரத்தையும் தேவி குறிப்பிட்டிருந்தாள். ஆனால் அந்த நேரத்திற்கு முன்னரே நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள். தேவி சொல்கிறாள், விதி வலியது, மாதவா, விதியை எவராலும் வெல்ல முடியாது. இந்த சாம்ராஜ்யத்திற்கு முந்நூறு ஆண்டுகளே உயிர் இருக்கும். பின்னர் அழிந்து போய்விடும். அதுவும் ஆரம்பித்த நேரம் சரியில்லாமையால், பல இடிபாடுகளுக்கும் உள்ளாகும். அந்நிய சக்திகளால் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்த இடமே தெரியாமல் மறைந்து போகும் என்று சொல்லிவிட்டாள் என்றார் வித்யாரண்யர்.

5 comments:

  1. இதன் முந்தைய பதிவுகளையும் படித்தேன். ஆன்மிகம், வீரம், துரோகம், வரலாறு என்று ரொம்ப சுவாரஸ்யமா, விறுவிறுப்பா போய்கிட்டு இருக்கு. ஆனா இது கதை அல்ல நிஜம் என்று ஞாபகம் வரும் போது மனதை பிசைகிறது.
    தொடர்ந்து எழுதுங்க. வாசிக்க நானும் இருக்கேன்.

    ReplyDelete
  2. வாங்க விருட்சம், எங்கெங்கும் காண்கிறேன். ஆனால் வேரைக் கண்டுபிடிக்க முடியலையே?? என்ன ரகசியம்??? :)))))))))

    முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  3. முதல் வருகை இல்லை. நீங்க மறந்து ட்டேள் போல இருக்கு. வேர் கண்டுபிடிக்க என்ன கஷ்டம். நீங்க தான் விஷுக்கு கனி பார்க்க விருட்சத்துக்கு வந்தேளே.

    ReplyDelete
  4. ஹிஹிஹி, ஆமாம் இல்லை?? இந்த வலைப்பக்கத்துக்கு முதல் வருகைனு சொன்னேன்! யப்பாடி, எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்குப்பா! :))))))))))))))

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு கீதாம்மா

    ஹி ஹி நாங்களும் படிக்க வந்துட்டோம் இல்லே !

    ReplyDelete