Sunday, November 27, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! தாயுமானவர் 2


குருவால் ஆட்கொள்ளப்பட்ட தாயுமானவர் ஆன்ம சாதனங்களில் வெகு விரைவில் முன்னேற்றம் அடைந்தார். ஆச்சாரியருக்கு பக்திபூர்வமாகப் பணிவிடைகள் புரிந்தார். குருவிடம் மாறாத பக்தியும், பாசமும் வைத்திருந்த தாயுமானவருக்குச் சில காலம் குருவைப் பிரிய நேரிட்டது. பிரிந்திருக்கும் காலத்தில் மனம்குழம்பித் தவித்தார் தாயுமானவர். குருவோ இதற்கெனக்கவலைப்பட வேண்டாம் எனவும், சீடன் தனது கர்மாக்களின் பெரும்பகுதியைப் பூர்த்தி பண்ண வேண்டியே இப்பிரிவு எனவும், அதன் பின்னர் அமையப்போகும் குரு-சீடன் உறவு மிக மிகச் சிறப்பாக அமையும் எனவும் உறுதிமொழி கூறியதோடு அல்லாமல் சீடனுக்குப் பிரியும் வேளையி, "சும்மா இரு" எனும் மந்திர உபதேசம் செய்துவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து அதையே பீஜ மந்திரமாய்க் கொண்ட தாயுமானவ சுவாமிகள் தன் அனைத்துப் பாடல்களிலும் இந்த உபதேச மொழியை முக்கியக் கருத்தாக அமைத்திருப்பது தாயுமானவரின் பாடல்களைப் பொருளுணர்ந்து பாடுவோர்க்கு நன்கு விளங்கும்.


இவ்வுலகத்தின் பந்த பாசங்களில் அகப்பாடமல் இருக்க வேண்டி எந்நாளும் இறைவனைப் பிரார்த்தித்துப் பற்றற்ற வாழ்க்கை வாழ விரும்பிய தாயுமானவரை அவரின் பெற்றோர்கள் திருமணக் கோலத்தில் காண விரும்பினார்கள். தாய், தந்தையரின் விருப்பத்தைத் தட்ட முடியாத தாயுமானவர் மட்டுவார் குழலில் என்னும் பெயருடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இல்லறம் மேற்கொண்ட பிறகு அதற்குரிய கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றுவதே தர்மம் எனப் புரிந்த தாயுமானவர் மனைவியோடு அறவழியில் இல்லறத்தை நடத்தி கனகசபாபதி என்னும் பெயருடைய ஆண் மகவு ஒன்றையும் பெற்றெடுத்தார். ஆனால் குழந்தை பிறந்த சில காலத்திலேயே தாயுமானவரின் மனைவி மட்டுவார் குழலி அம்மை காலமானார். தாயுமானவர் வேறொரு திருமணம் செய்து கொள்ளாத நிலையில் அவரின் மகனை வளர்க்கும் பொறுப்பைத் தாயுமானவரின் தமையனார் சிவசிதம்பரமும், அவரின் மனைவியும் ஏற்றுக் கொண்டனர். அத்தோடு ஆத்மசாதனைக்குத் தடை என நினைத்த தாயுமானவரின் இல்லற வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்தது.இதனிடையே தாயுமானவரின் தந்தையார் கேடிலியப்ப பிள்ளையும் மரணமடையவே திருச்சி அரசு மீகாமன் இல்லாத கப்பல் போலத் திண்டாடியது. அரசர் தாயுமானவரே இந்த மாபெரும் பொறுப்பை ஏற்க வல்லவர் என்றுணர்ந்து அவரை அழைத்துத் தகப்பனாரின் பதவியில் தாயுமானவர் அமர்ந்து அரசருக்கும், அரசாட்சிக்கும் உதவும்படி கேட்டுக்கொண்டார். தந்தை மூலம் இந்த விஷயங்களில் ஓரளவு பயிற்சியும் பெற்றிருந்த தாயுமானவர் அரசரின் சொல்லைத் தட்ட முடியாமல் பொறுப்பை ஏற்றார். வெகு விரைவில் இதில் திறமை பெற்றவராகித் தன் கடமையைத் திறம்பட நிறைவேற்ற ஆரம்பித்தார். நாளடைவில் மன்னனும் மடிய அவன் மனைவியான ராணி மீனாக்ஷி பட்டத்தை ஏற்றாள். ராணி மீனாக்ஷிக்குத் தாயுமானவரின் இளமையும், தேஜஸும் கண்டு மனம் பேதலித்தது. ஆனாலும் வெளிப்படையாகச் சொல்லாமல் தக்க தருணத்திற்குக் காத்திருந்தாள். ஒருநாள் அரசாங்க வேலைகளைப் பனை ஓலைகளில் குறிப்பெடுத்து வைத்துச் சரிபார்த்துக்கொண்டிருந்த தாயுமானவர் திடீரென முக்கியமான குறிப்புகளுள்ள ஒரு ஓலையைக் கையில் வைத்திருந்தவர் அதைக் கசக்கித் தூர எறிந்தார். இதைக் கவனித்த ராணி மீனாக்ஷி காரணம் கேட்க, அப்போதே தான் செய்த தவறைப் புரிந்து கொண்ட தாயுமானவர் , திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் சேலையில் தீப்பற்றிக் கொண்டதாகவும், அதைத் தாம் அணைத்ததாகவும் கூறினார். இதை நம்பாத ராணி மீனாக்ஷி கோயிலுக்குச் சென்று உண்மையை அறிந்துவரச் செய்தாள்.

உண்மையில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பது குறித்துத் தெரிந்ததும் ராணிக்கு இவர் எவ்வளவு பெரிய மஹான் என்பது புரிந்தது. தாயுமானவருக்கும் அரசல் புரசலாக ராணியின் தகாத ஆசை தெரிந்திருந்ததால் தான் பதவியை விட்டு விலகுவதே சரி என்றும், தீர்மானித்து விட்டார். உடனே அரசியிடம் தன் மனம் இவ்வுலக வாழ்வை நாடவில்லை என்றும், தன் போக்கில் செல்லத் தன்னை அனுமதிக்குமாறும் கூறி அரசுப் பதவியை விட்டு விலகிவிட்டார். வெளியேறி வந்த தாயுமானவருக்கு மீண்டும் தம் குருவின் தரிசனமும் கிட்டி அவர் மூலம் சந்நியாச ஆசிரமமும், உபதேசமும் கிடைக்கப் பெற்றது. அன்று முதல் கோவணாண்டியாகவே இருந்து கொண்டு அதே திருச்சியில் வசித்து வந்தார். அவர் இருந்த உத்தியோகத்தின் மேன்மையையும் செல்வாக்கையும், செல்வநிலைமையையும், இப்போது இருக்கும் நிலையையும் பார்த்த அன்பர் ஒருவர் அவருக்குக் குளிர்காலத்திற்குப் போர்த்திக்கொள்ளவென ஒரு அழகான காஷ்மீரப் பட்டுச் சால்வையைப் பரிசளிக்க அவரோ அதை உடுத்த உடை இல்லாதிருந்த ஒரு பிச்சைக்காரிக்குக் கொடுத்துவிட்டார். தாம் கொடுத்த சால்வை எங்கே எனக் கேட்ட அன்பரிடம், அகிலாண்டேஸ்வரிக்கே கொடுத்துவிட்டதாய்ப் பதிலளித்தார். இப்படிப் பார்க்கும் பெண்களிடத்தில் எல்லாம் இறையைப் பார்த்த தாயுமானவர், யாத்திரையாகக் கிளம்பி ராமேஸ்வரம் சென்று திரும்பி வரும் காலையில் ராமநாதபுரத்திற்கு வெளியே லக்ஷ்மிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார். இவரின் காலம் பதினெட்டாம் நூற்றாண்டாகும்.

2 comments:

 1. // தாயுமானவர் திடீரென முக்கியமான குறிப்புகளுள்ள ஒரு ஓலையைக் கையில் வைத்திருந்தவர் அதைக் கசக்கித் தூர எறிந்தார். இதைக் கவனித்த ராணி மீனாக்ஷி காரணம் கேட்க, அப்போதே தான் செய்த தவறைப் புரிந்து கொண்ட தாயுமானவர் , திருவானைக்காவில் அகிலாண்டேஸ்வரியின் சேலையில் தீப்பற்றிக் கொண்டதாகவும், அதைத் தாம் அணைத்ததாகவும் கூறினார். இதை நம்பாத ராணி மீனாக்ஷி கோயிலுக்குச் சென்று உண்மையை அறிந்துவரச் செய்தாள்.//

  இந்த இடம் தான் சரியாக புரியவில்லை கீதாமா
  தான் செய்த தவறைப் புரிந்து கொண்ட தாயுமானவர் //
  அவர் செய்த தவறு என்ன ?
  மற்றபடி தாயுமானவர் பற்றிய தகவல்களுக்கு குறிப்புகளுக்கு நன்றி

  ReplyDelete
 2. முக்கியமான குறிப்புகளுள்ள ஒரு ஓலையைக் கையில் வைத்திருந்தவர் அதைக் கசக்கித் தூர எறிந்தார். //

  தாயுமானவர் முக்கியப் பொறுப்பில் இருந்ததோடு அரச நிர்வாகத்தின் முக்கிய ஓலைகளையும் கையாண்டு வந்திருக்கிறார் அல்லவா? அப்படிப்பட்ட முக்கியமான ஓலையைக் கசக்கித் தூர எறிந்தால் முக்கியமான விஷயங்கள் அழிந்துவிடலாம் அல்லவா? அதன் முக்கியத்துவம் குறிந்து உணர்ந்து கொண்டார் தாயுமானவர். அதுவரையிலும் தன்னை மறந்து, தன் நிலையை மறந்து மெய்ப்பொருளில் திளைத்திருந்தார்; இவ்வுலக வாழ்க்கை நினைவில் வரவும் தான் கசக்கித் தூர எறிந்தது அரசாட்சிக்குத்தேவையான ஒன்று எனப் புரிந்தது.

  ReplyDelete