Thursday, November 17, 2011

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! தாயுமானவர்

தஞ்சை மாவட்டத்தின் வேதாரண்யத்தில் கேடிலியப்ப பிள்ளை என்னும் சைவ வேளாளர் வாழ்ந்து வந்தார். வேளாண்மை குலத்தொழில் என்றாலும் எல்லையற்ற சிவபக்தியால் அவ்வூரின் சிவஸ்தலத்தின் நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார். ஆலயம் புதிய ஒழுங்குக்கு வந்தது. அப்போது நாயக்கர் ஆட்சிக் காலம். திருச்சியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சி புரிந்து வந்தார். அவர் கடல் நீராடி வேதாரண்யேஸ்வரரை தரிசிக்க எண்ணி அங்கே வருகை புரிந்தார். கேடிலியப்ப பிள்ளை மன்னரை முறைப்படி வரவேற்று மரியாதைகள் எல்லாம் செய்து தரிசனமும் செய்து வைத்தார். கோவில் வழிபாட்டில் இருந்த நியமங்களையும், கோயிலின் சுத்தத்தையும், ஒழுங்கான முறையான நிர்வாகத்தையும் கவனித்த அரசர் நிர்வாகியான கேடிலியப்ப பிள்ளையின் கல்வித்தேர்ச்சியையும் கவனித்துக்கொண்டார். இத்தனை திறமை வாய்ந்த அவர் இருக்குமிடம் இதுவல்ல என முடிவு செய்த அரசர் அவரைத் திருச்சி அழைத்தார்.
கேடிலியப்ப பிள்ளையைத் திருச்சிக்கு வந்து அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளில் ஒன்றை ஏற்றுக்கொள்ள ஆணையிட்டார். கோயிலின் நிர்வாகத்தைத் தக்க நபரிடம் ஒப்படைத்துவிட்டுத் திருச்சிக்கு வரும்படி கேட்டுக் கொண்டார். கேடிலியப்ப பிள்ளைக்கு வேறு வழியில்லாமல் போயிற்று. கோயிலைத் தக்க மனிதர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் திருச்சிக்குச் செல்லத் தீர்மானித்தார். கேடிலியப்ப பிள்ளைக்கும் அவர் மனைவியான கெஜவல்லி அம்மைக்கும் ஒரு மகன் பிறந்திருந்தான். ஆனால் கேடிலியப்ப பிள்ளையவர்களின் அண்ணாவான வேதாரண்யம் பிள்ளைக்கு மகப்பேறு வாய்க்காததால் சிவசிதம்பரம் என்னும் பெயர் கொண்ட தம் மகனைத் தம் அண்ணனுக்கே முழு மனதோடு சுவீகாரம் செய்து கொடுத்திருந்தார் கேடிலியப்ப பிள்ளை. பின்னரே திருச்சிக்கு மனைவியோடு வந்தார்.


அங்கே மலைக்கோட்டையில் வீற்றிருந்த தாயுமானவரைத் தினம் தினம் தரிசனம் செய்து வந்தார். அவர் மனைவியும் அவருடன் செல்வார். ஈசன் தாயுமானவராகச் செட்டிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்துத் தாயும் ஆன கதையை நினைந்து நினைந்து மனம் நெகிழ்வார். ஏற்கெனவே பிறந்த பிள்ளையை அண்ணனுக்குக்கொடுத்துவிட்டதால் தனக்கு இன்னொரு மகன் பிறக்க வேண்டும் என ஈசனிடம் முழு மனதோடு வேண்டினார். சிறிது காலத்தில் அவர்களுக்கு ஓர் ஆண் மகன் பிறந்தான். தாயுமானவர் அருளால் பிறந்த அந்தப்பிள்ளைக்குத் தாயுமானவர் என்ற பெயரையே பெற்றோர் சூட்டினார்கள். குழந்தை பிறந்த உடனேயே அதன் அங்க அடையாளங்களில் நிறைநிலைகள் பல தென்பட்டன. அதோடு குழந்தை ஒரு ஞானியாக, யோகியாக பர நாட்டத்தில் மேன்மை அடைவான் என ஜோதிடரும் கணித்துச் சொல்லவே பெற்றோர் மனம் மகிழ்ந்தனர். குழந்தைக்கு வயது ஐந்து ஆயிற்று. பெற்றோர்கள் குழந்தைக்கு வித்யாரம்பம் பண்ணி வைத்தார்கள்.


திருச்சியில் சிறப்பான பாடசாலை ஒன்றில் கல்வி கற்றார் தாயுமானவர். தமிழ், வடமொழி, கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் தாயுமானவர் நிபுணராக விளங்கினார். சைவத்தில் அதிகம் ஈடுபாடுடன் தேவாரம், திருவாசகம், சைவ ஆகமங்கள், அருணகிரியாருடைய திருப்புகழ் போன்றவற்றையும் நன்கு கற்று வந்தார். தினம் மலைக்கோட்டையில் மலை ஏறித் தாயுமானவன் ஆன சிவனைத் தரிசனம் செய்துவிட்டுப் பின்னர் திருவானைக்கா சென்று அகிலாண்ட நாயகியை வழிபடுவதைத் தன் நித்திய கர்மமாக வைத்திருந்தார் தாயுமானவர். ஒருநாள் மலைக்கோட்டை தரிசனம் முடிந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தவரை வழியில் ஒரு முனிவர் கண்டார். அவரைப் பாரத்ததுமே உடலும், உள்ளமும் அவர் பால் ஈர்த்தது தாயுமானவருக்கு. அவருடைய கால்களில் விழுந்து வணங்கினார். அதிகம் பேசாமல் மெளனமாக இருந்ததால் மெளன குரு என அழைக்கப்பட்டு வந்தார் அந்த முனிவர். அவருடைய வாயினின்று எப்போதேனும் அபூர்வமாகவே சொற்கள் வெளிவரும். மேலும் அவர் திருமூலர் மரபில் வந்தவராகவும் கூறுகின்றனர். அதை ஒட்டியே தாயுமானவர் தம் பாடல்களில் "மூலன் மரபில் வரு மெளனகுருவே" என்று போற்றி இருப்பதாகவும் தெரிய வருகிறது. தாயுமானவர் அவரைத் தம் குருவாக ஏற்றுக்கொண்டு அவருக்கு ஆட்பட்டார்.

2 comments:

  1. தாயுமானவர் பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் தற்பொழுது தங்களால் நிறைவடைந்தது.

    பதிவுக்கு நன்றி கீதாம்மா!

    ReplyDelete
  2. நல்வரவு ப்ரியா

    ReplyDelete