Wednesday, January 18, 2012

தமிழ் வளர்த்த சிவனடியார்கள்! கோபாலகிருஷ்ண பாரதியார்--1

அடுத்து நாம் பார்க்கப்போவது கோபாலகிருஷ்ண பாரதியார். இவரையும் இவர் இயற்றிய நந்தனார் சரித்திரம் குறித்த ஒரு முக்கியமான செய்தியையும் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டோம். இப்போது இவரின் சரித்திரம் குறித்துப் பார்க்கலாம். இவர் சத்குரு எனவும் கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவர் என்றும் சொல்லப்படும் ஶ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் சமகாலத்தவர் ஆவார். இவரின் ஞானத்தை அவரும், தியாகராஜ ஸ்வாமிகளின் ஞானத்தை இவரும் பாராட்டி இருப்பதாய்க் கேள்விப்படுகிறோம்.

தன் தமிழிசையால் இறை உணர்வை வளர்த்த பல பெரியோர்களில் கோபாலகிருஷ்ண பாரதி குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர். இவர் சிவன் மேல் அளவில்லாத பக்தியும், ஈடுபாடும் கொண்டு பரவசம் அடைந்தவர். எண்ணற்ற பாடல்களை சிவன் மேல் எழுதியுள்ளார். கடைசிவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே வாழ்ந்தார். நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம் என்னும் ஊரில் அந்தண குலத்தில் ராமசாமி பாரதி என்பவருக்கு மகனாய்ப் பிறந்தார். ராமசாமி பாரதி குடும்பம் பாரம்பரியம் மிக்க இசைக்குடும்பம் ஆகும். முதலில் முடிகொண்டான் என்னும் ஊரிலும் பின்னர் ஆனைதாண்டவபுரம் என்னும் ஊரிலும் வசித்த இவர்கள் பின்னால் நரிமணம் வந்து வசித்தார்கள். பலகாலம் ஆனைதாண்டவபுரம் பாரதி எனவும் முடிகொண்டான் பாரதி எனவும் அழைக்கப்பட்டனர்.

பிறப்பு மட்டுமில்லாமல் குடும்பச் சூழ்நிலையும் சேர்ந்து கோபாலகிருஷ்ண பாரதிக்கு இசையில் நாட்டம் மிகவும் அதிகமாகவே இருந்தது. தமிழில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்த இவர் அக்கால வழக்கப்படி தமிழ் கற்கையிலேயே தமிழ்ப் பாடல்களை இசையோடு பாடிப் பழகும் வழக்கம் கொண்டிருந்தார். நாளாவட்டத்தில் தாமே சுயமாகத் தமிழ்ப்பாடல்களை இயற்றவும் ஆரம்பித்தார். இவர் காலத்தில் அரசாண்ட மராத்தி மன்னரான அமரசிம்ம ராஜாவின் சபையில் இருந்த இந்துஸ்தானி இசை மேதை ராமதாஸ் என்பவரிடம் இந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு அதன் நுணுக்கங்களைக் கர்நாடக இசைக்கு ஏற்ப தமது கீர்த்தனைகளில் புகுத்தினார். ராமதாஸைத் தவிர அந்நாட்களில் பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான் கனம் கிருஷ்ணையரிடமும், வைணவ இசைக்கலைஞரான அனந்த பாரதியாரிடமும், சிதம்பரம் சிவசங்கர தீக்ஷிதர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆகியோரிடமும், இசைமேதைகள் ராமசாமி சிவன், மஹாவைத்தியநாத ஐயர் ஆகியோரிடமும் நெருங்கிப் பழகித் தன் இசையறிவை மேம்படுத்திக்கொண்டார். ஒரு சமயம் இவர் தியாகராஜ ஸ்வாமிகளைக்காணச் சென்றபோது அவர் ஶ்ரீராமர் மேல் ஆபோகி ராகத்தில், “ஶ்ரீராமஸீதா” எனத் தொடங்கும் கீர்த்தனையைத் தன் சீடர்களுக்குக்கற்பித்துக் கொண்டிருந்தார். அதைக் கேட்டவுடன், பாரதியார் சிதம்பரம் நடராஜர் மீது ஆபோகி ராகத்தில் கீழ்க்கண்ட கீர்த்தனையை இயற்றிப் பாடினார்.

அந்தப்பாடல் தான் பிரபலமான
சபாபதிக்கு வேறு தெய்வம்
சமானம் ஆகுமா - தில்லை

அநுபல்லவி

கிருபா நிதி இவரைப் போலக்
கிடைக்குமோ இத்தரணி தன்னிலே
என்னும் பாடல் ஆகும்.

இதே போல தியாகராஜர் பாடிய பஞ்சரத்னக் கீர்த்தனைகள் போலவே ஈசன் மேல் கோபாலகிருஷ்ண பாரதியாரும் அதே ராகங்களில் பஞ்சரத்னக் கீர்த்தனங்களைப் பாடியுள்ளார். அவை வருமாறு:

அரஹரசிவசங்கர என்னும் பாடல் நாட்டை ராகம், ரூபக தாளம்
சரணாகதியென்று என்னும் பாடல் கெளளை ராகம் ஆதி தாளம்
பிறவா வரம்தாரும் என்னும் பாடல் ஆரபி ராகம் ஆதி தாளம்
ஆடிய பாதமே கதி என்னும் பாடல் வராளி ராகம் ஆதி தாளம்
மறவாமல் எப்படியும் என்னும் பாடல் ஶ்ரீராகம் ஆதி தாளம்

இவை அனைத்தும் ஈசனைப் போற்றும் சிவபக்தி நிறைந்த பாடல்களாகும். இவை தவிர கோபால கிருஷ்ண பாரதியார் கல்யாணங்களில் பாடக்கூடிய நலுங்குப் பாடல்கள், ஊஞ்சல் பாடல்கள், லாலி, கும்மி, கோலாட்டம் போன்ற பாடல்களையும் பாடியுள்ளார். நாயன்மார்களான சிவனடியார்களின் வாழ்க்கையை இசையுடன் கூடிய பாடல்களாகப் பாடி எல்லாருக்கும் பரப்பினார். அவற்றில் இயற்பகை நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம், திருநீலகண்ட நாயனார் சரித்திரம் ஆகியவையோடு நந்தனார் சரித்திரமும் இடம் பெற்றது.

அந்நாட்களில் பெரிய பண்ணைகளை வைத்து விவசாயம் பண்ணிக்கொண்டிருக்கும் பண்ணையார்கள் தங்களிடம் வேலை செய்யும் குடியானவர்களை நடத்தும் முறையில் கோபாலகிருஷ்ண பாரதியார் மனம் கசந்து போயிருந்தார். அதைச் சுட்டும் வகையில் நந்தனார் சரித்திரத்தின் கதையைச் சற்று மாற்றியமைத்தார். பிறப்பால் புலையரான நந்தனார் புலைப்பாடியில் வாழ்ந்து வந்ததோடு சிவபெருமான் மேல் மாறாக் காதல் கொண்டு எந்நேரமும் இறைவன் புகழைப் பாடுவதே தம் கடமை என வாழ்ந்து வந்தார். நந்தனார் என்று அழைக்கப் படும் திருநாளைப் போவார் என்னும் அடியார் சொந்த நிலத்திலே தான் பயிரிட்டுக் கொண்டு, சிவன் கோயில்களுக்கு வேண்டிய தோல், வார், தந்தி, மற்றும் கோரோசனை போன்றவற்றைத் தம் குலத்தைச் சேர்ந்த மற்றவரைப் போல் பணத்துக்காகக் கொடுக்காமல் இலவசமாய்க் கொடுத்து வந்தார். இப்படித் தான் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment