1815-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம் நாள் பிறந்த பிள்ளையவர்கள் 61 வயது வரை வாழ்ந்தார். தம் வாழ்நாளில் பாதிக்காலத்துக்கும் மேல் திருவாவடுதுறை ஆதீனத்துடன் உள்ள தொடர்புகளுடனேயே கழித்தார். மூன்று பட்டத்து குருமகாசந்நிதானங்களுடன் நெருங்கிப் பழகிய பிள்ளையவர்களுக்குப் பல சீடப்பிள்ளைகள் உண்டு. அவர்களில் முக்கியமானவரும், முதன்மையானவரும் நாம் அனைவரும் அறிந்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் ஆவார். தெய்வங்களில் மும்மூர்த்திகள் என பிரம்மா, விஷ்ணு, சிவனைச் சொல்வது போல இசைக்கலைக்கு மும்மூர்த்திகளாக கர்நாடக இசைக்கு முத்துசாமி தீக்ஷிதரையும், தியாராஜரையும், சியாமா சாஸ்திரியையும் சொல்லுவதுண்டு. அதுபோல் தமிழிசைக்கு மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவர், அருணாசலக் கவிராயர் ஆகியோரைச் சொல்வார்கள். அதுபோலத் தமிழ் உலகில் பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழின் மும்மூர்த்திகளாகச் சொல்லப்படும் மூவரில் பிள்ளையவர்கள், ஆறுமுக நாவலர், வள்ளலார் ஆகியோரை ஆன்றோர் கூறுகின்றனர். தமிழ்ப் பதிப்புலகிலும் அவ்வாறு பெருமை பெற்றிருக்கும் மூவரில் நாவலரோடு சி.வை. தாமோதரம் பிள்ளையும், தமிழ்த்தாத்தாவையும் சொல்வார்கள். இத்தனை பெருமைகளைப் பெற்றிருக்கும் பிள்ளையவர்கள் தங்கள் ஆதீனத்தில் இருப்பதும் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்வதும் ஆதீனகர்த்தர்கள் தங்களுக்குக் கிடைத்தற்கரிய கெளரவமாகக் கருதினார்கள்.
பிள்ளையவர்கள் எப்போது வேண்டுமானாலும் பாடம் சொல்லுவார் எனத் தமிழ்த்தாத்தா சொல்கின்றார். கொஞ்சம் கூடச் சலிப்பில்லாமல் உண்ணும்போதும், பயணங்களிலும், உறங்கப் போகையிலும் கூடப் பாடம் சொல்லுவாராம். பாடங்களுக்குக் குறிப்புப் புத்தகங்களோ, ஏடுகளோ இல்லாமல் மனதில் மனப்பாடமாக இருந்தவற்றில் இருந்தே பாடம் சொல்லுவாராம். மாணாக்கர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியன கிடைக்கிறதா என்பதில் மிகவும் அக்கறை காட்டுவாராம். ஒரு சமயம் மாணாக்கர்களுக்குத் தங்கிப் பாடம் சொல்லவென்றே மாயவரத்தில் வீடு ஒன்றை வாங்கி மாணாக்கர்கள் அங்கேயே தங்கி உண்டு, உறங்கிப் பாடம் கேட்குமாறு ஏற்பாடுகள் செய்தார். பாடம் சொல்வதில் இனபேதமோ, மதபேதமோ இல்லாமல் அனைத்து இனத்தவருக்கும், மதத்தவருக்கும் பாடம் சொல்லி இருக்கிறார் பிள்ளையவர்கள். சில மாணாக்கர்களின் திருமணத்தையும் தம் சொந்தப் பொறுப்பில் நடத்திக் கொடுத்திருக்கிறார். சவேரிநாதர் என்ற கிறித்துவரும், நாகூர் குலாம்காதர் நாவலர் என்னும் இஸ்லாமியரும் அதில் குறிப்பிடத் தக்கவர்கள். சவேரிநாதர் பிள்ளையவர்களுக்கு அருகேயே எப்போதும் இருந்து சேவைகள் செய்தும் வந்திருக்கிறார். பிள்ளையவர்களின் மாயவரம் வீடு கிட்டத்தட்ட ஒரு குருகுலமாகவே திகழ்ந்து வந்திருக்கிறது. தமக்குக் கிடைக்கும் சொற்பப் பணத்தையும் மாணாக்கர்களின் நலனுக்கெனச் செலவிட்டு விடுவார் பிள்ளையவர்கள். திருவாவடுதுறை ஆதீனம் தவிர, குன்றக்குடி ஆதீனமும், தருமை, திருப்பனந்தாள் ஆதீனங்களும் பிள்ளையவர்களின் வித்தையை மதித்துக் கெளரவித்தார்கள்.
திருவாவடுதுறை ஆதீனத்திலோ ஒரு படி மேலே போய்ப் பிள்ளையவர்களிடம் தங்களுக்குள்ள அன்பையும், மரியாதையையும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டனர். மதிய உணவு அளிக்கும்போது போடும் பந்திக்குப் பந்திக்கட்டு எனப் பெயர். அதில் துறவறத்தார் வரிசையில் எப்போதுமே ஆதீனகர்த்தர்களே முதலிடம் பெறுவார்கள். அதே போல் இல்லறத்தார் வரிசையில் எப்போதுமே பிள்ளையவர்களுக்கே முதலிடம் அளித்து மரியாதை செய்து வந்தார்கள். இம்மாதிரி ஆதீனங்களில் மதிய உணவு உண்ணும்போதே நல்ல சத்தான சிறப்பான உணவு பிள்ளையவர்களுக்குக் கிடைத்து வந்திருக்கிறது. மற்றபடி தம் வீட்டில் அவருக்கு அவ்வளவு சிறப்பாக உண்ணமுடியாமல் உணவில் நெய் கூடச் சேர்த்துக்கொள்ள முடியாமல் நெய்யில்லாமலே உண்டிருக்கிறார் என்பதைப் பிள்ளையவர்களின் சரித்திரத்தை எழுதிய தமிழ்த்தாத்தா மூலம் அறிகிறோம். அந்நிகழ்ச்சி வருமாறு:
ஒருமுறை ஆதீனத்தில் கண்ணப்ப நாயனார் சரித்திரம் படிக்கப்பட்டது. பிற்பகலில் ஆரம்பிக்கப்பட்ட அந்தச் சரித்திரம் முடிக்கையில் இரவு பதினைந்து நாழிகைக்கு மேல்(பனிரண்டு மணி) ஆயிற்று. அதன் மேல் வீட்டிற்குச் சென்று உணவு உண்ண வேண்டாம் எனப் பிள்ளையவர்களை ஆதீனத்திலே உணவு உண்டுச் செல்லும்படி சொல்லவே பிள்ளையவர்களும் அதற்கு இசைந்து உணவு அங்கேயே உட்கொண்டார். பின்னர் தம்முடைய மாணாக்கர் விடுதியில் உணவை முடித்துக்கொண்டு தம்மைத் தம் வீட்டிற்குக் கொண்டு விட வந்த தம் அருமைச் சீடர் ஆன உ.வே.சாமிநாதையரிடம் பிள்ளையவர்கள், “இன்று மடத்தில் உணவு உட்கொண்டதால் நெய் கிடைத்தது.” எனச் சிறு குழந்தையைப்போன்ற சந்தோஷத்துடன் கூறினாராம். இதைக் கேட்ட ஐயரவர்களின் மனம் வருந்தியது என எழுதியுள்ளார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் இல்லாமல் நெய் இல்லாமலேயே உணவு அருந்தி வந்தாராம் பிள்ளையவர்கள். குறிப்பறிந்து எவரும் கொடுத்தாலொழியத் தாமாக இது வேண்டும்; அது வேண்டும் எனக் கேட்டுப் பெறும் வழக்கம் பிள்ளையவர்களிடம் இல்லை. விடாமல் பாடம் சொல்லும் ஆசிரியருக்கு நெய் சேர்த்து உணவு அருந்துவது எவ்வளவு முக்கியம் எனப் புரிந்து கொண்டிருந்த ஐயரவர்கள், தம் ஆசிரியரின் வறுமை நினைந்து வருந்தினார்.
பெரிய கவிஞராகவும், பெரிய பெரிய பிரபுக்களால் கொண்டாடப்பட்டவரும், பெரியதொரு ஆதீனத்தின் வித்துவானுமான பிள்ளையவர்களின் நிலை இருந்தால் விருந்து; இல்லையேல் மருந்து என்னும்படித்தான் இருந்து வந்திருக்கிறது. இதேபோல் ஒரு நாள் காலை பிள்ளையவர்கள் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணிப் பலகை போட்டு அமர்ந்திருந்தார். அவருக்கு எண்ணெய் தேய்க்கும் ஆள் சமையலறையில் சென்று எண்ணெய் கேட்க எண்ணெயோ இல்லை; ஆகையால் வரவே இல்லை. ஆனால் பிள்ளையவர்களுக்கோ இதில் கவனம் இல்லை; நேரத்தைச் சிறிதும் வீணாக்காமல் எண்ணெய் தேய்த்துக்கொள்ளும் நேரமும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். பாடம் சொல்லும் கவனத்தில் தாம் எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டி அமர்ந்திருந்ததையே மறந்துவிட்டார். இதைக் கவனித்த ஐயரவர்கள் வேறு வேலையாகப் போவது போல் எழுந்து வெளியே போய்க் காவிரிக்கரையிலுள்ள ஒரு கடையில் தன்னிடமுள்ள பணத்தைக் கொடுத்து எண்ணெய் வாங்கிக் கொண்டு வந்து சமையலறைத் தவசிப்பிள்ளையிடம் கொடுத்துக் காய்ச்சித் தர வேண்ட, அவரும் அவ்விதமே கொடுத்தார். அதன் பின்னர் காய்ச்சிய எண்ணெய் வந்து பிள்ளையவர்களுக்கு எந்த விஷயமும் தெரியாமலேயே எண்ணெய்க் குளியலும் நடந்தது.
ஆனால் பிள்ளையவர்களின் இந்த வறுமைக்கு முக்கியக் காரணம் அவரின் வள்ளல் தன்மையே ஆகும். தம்மிடம் வரும் அனைத்து மாணாக்கர்களுக்கும் தம் சக்திக்கு மீறிச்செலவு செய்து அவர்களின் தேவையை நிறைவேற்றி வந்தார். அதனாலே அவருக்கு வறுமை ஏற்பட்டது என்பது சிலரின் கூற்று. அந்நாட்களில் சைவத் திருமடங்களில் தமிழ் கற்றுக் கொடுத்தாலும் அவற்றில் சங்கப்பாடல்கள் இடம்பெறாது. ஏனெனில் சங்கப் பாடல்களில் காதலும், வீரமுமே முதன்மை பெற்றிருந்தது. பெரும்பாலான புலவர்கள் சங்கப் பாடல்களை அறிந்திருந்ததில்லை. காப்பியங்கள், புராணங்கள், சமய இலக்கியங்கள், பிரபந்தங்களே கற்பிக்கப்பட்டன. சங்கப் பாடல்களுக்கு அசைவ நூல்கள் என மறைமுகப் பெயரால் அழைத்தனர். ஆகவே பிள்ளையவர்களும் அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில் சங்க இலக்கிய ஏடுகள் பல இருந்தாலும் அவற்றில் ஒன்றைக்கூடக் கற்பித்ததில்லை. ஐயரவர்களுக்கும் பிள்ளையவர்கள் சங்கப் பாடல்களைக் கற்பித்ததில்லை. 1871-ஆம் ஆண்டு முதல் பிள்ளையவர்களின் இறுதிக்காலமான 1876-ஆம் ஆண்டு வரை அவரிடம் பாடம் கேட்ட சாமிநாத ஐயரவர்களுக்கு இந்தப் பெயரைச் சூட்டியதும் பிள்ளையவர்களே ஆகும். உ.வே.சாமிநாத ஐயர் என இன்று அறியப் படும் தமிழ்த்தாத்தாவின் உண்மைப் பெயர் வேங்கடராமன் ஆகும். அந்தப் பெயராலே அவர் அறியப் பட்டிருந்தார். ஆனால் ஐயரவர்களின் வீட்டில் சாமா என்னும் பெயரால் அழைப்பதை அறிந்த பிள்ளையவர்கள் கிட்டத்தட்ட தீக்ஷா நாமம் என்று சொல்லும்படி ஐயரவர்களின் பெயரை "சாமிநாதன்" என மாற்றினார்.
Wednesday, January 25, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment