ஆத்தங்குடி மாளிகைச் சித்திரங்களில் காணப்பட்டவை பத்ராசல ராமதாஸர் கதை எனச் சொல்ல, ராஜம் அம்மாவும் அதை உறுதிப்படுத்தினார். உடனே நம் காளைராஜன் அவர்கள் அந்தக் கதையைக் கூறுமாறு கேட்டிருந்தார். இரண்டு நாட்களாக இந்தக் கதையைப் படித்துக் கொண்டிருந்தேன். இப்போது தான் எழுதலாம் எனக் கொஞ்சம் தைரியம் வந்தது.
சங்கீத மும்மூர்த்திகளுள் முதன்மையானவரான சத்குரு தியாகப் பிரம்மம் அவர்களால் போற்றப் பட்ட பெரியார் பத்ராசலம் ராமதாஸர். தம்மை "ராமதாஸ தாஸன்" எனச் சொல்லிக் கொண்டவர் தியாகப் பிரம்மம். ராமதாஸருக்கு அருள் புரிந்து அவரது துன்பங்களைப் போக்கி அருளியது போல் எனக்கும் அருள் செய்வாய் எனப் பாடி இருக்கிறார். அத்தகைய பெருமை வாய்ந்த பத்ராசலம் ராமதாஸர் காலம் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலம் ஆகும். கிருஷ்ண தேவராயர் ஆண்டு வந்த காலத்தில் கொல்ல கொண்ட பல்லம் என்னும் ஊரில் லிங்கன்னா என்னும் அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி காமாம்பாள் என்பவர். இவர்கள் இருவருக்கும் பிறந்தவரே கோபன்னா என்னும் பெயர் கொண்ட பின்னால் ராமதாஸர் என அழைக்கப்படப் போகும் பக்தர் ஆவார்.
கோபன்னா இளவயதிலேயே புராணப்ரவசனம் நடக்கும் இடங்களிலே முன் வரிசையிலே அமர்ந்து ராமாயணக் கதையை ஆவலுடன் கேட்பார். ராமரிடம் எல்லையற்ற அன்பு கொண்டார். ராமரை வழிபடுவதே தம் வாழ்க்கையின் முக்கிய லக்ஷியமாய்க் கொண்டார். தாயும், தந்தையும் ஒருவர் பின் ஒருவராக மறைய குடும்பத்தில் பெரியோர் வழிபட்டு வந்த ஶ்ரீராமரின் விக்ரஹம் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த விக்ரஹத்தை வைத்து வழிபட்டு வந்த சமயம் ஒரு நாள் முதியவர் ஒருவர் அங்கே வந்தார். இவரது பக்தியைக் கண்டு வியந்தார் அவர். ஶ்ரீராமரின் விக்ரஹத்தின் மேல் கோபன்னா வைத்திருக்கும் பாசத்தைக் கண்டு உள்ளூர ஆனந்தம் அடைந்த அந்தப் பெரியவர் அவரைச் சோதிக்க எண்ணி அந்த விக்ரஹம் இருந்த பெட்டியை விக்ரஹங்களோடு குளத்தில் தூக்கி எறிந்துவிட்டார். இதை அறியாத கோபன்னா விக்ரஹங்களைக் காணாமல் தவித்தார்; துடித்தார்.
அப்போது முதியவர் அவரிடம் என்ன விஷயம் எனக் கேட்க, தான் வழிபட்டு வந்த ஶ்ரீராமர் விக்ரஹத்தைக் காணவில்லை என கோபன்னா கூற, தாம் வேறு விக்ரஹம் தருவதாய்ச் சொல்லிச் சமாதானம் செய்து பார்க்கிறார். கோபன்னா, தாம் வழிபட்டு வந்த விக்ரஹம் தான் தனக்கு வேண்டும் என உறுதியாக இருக்கிறார். அதன் பின்னர் இவருக்கும் முதியவருக்கும் வாக்குவாதம் நடக்க முடிவில் பெரியவர் ஶ்ரீராமநாமத்தைச் சொல்லிப் பேழையைக் குளத்திலிருந்து மீட்டுக் கொடுத்துத் தாம் கபீர்தாசர் என்பதையும் அவருக்குத் தெரிவித்து, கோபன்னாவின் தலை மீது கைவைத்து ஸ்பரிச தீக்ஷையும் கொடுத்து அருளிச் சென்றார்.
பின்னரும் தெய்வ வழிபாட்டைச் செய்து கொண்டு அடியார்களுக்கு அன்னமும் இட்டு வந்தார் ராமதாஸர். ஊர் மக்கள் இவை எல்லாம் இல்லறத்திலிருந்து கொண்டு செய்வதே மேன்மை தரும் என வற்புறுத்திச் சொல்ல, கோபன்னா ஒருவழியாகத் திருமணத்துக்குச் சம்மதம் கொடுத்தார். திருமணமும் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். ஒரு முறை ஶ்ரீராமநவமி சமயம். பஜனையும், சமாராதனையும் பெரிய அளவில் செய்வதற்கான ஏற்பாடுகளை கோபன்னாவும், அவர் மனைவியும் செய்து கொண்டிருந்தனர். சமையல் பெரிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்னம் வடிக்கப் பட்டுக் கஞ்சி ஓடி, ஓடி, ஒரு குழியிலே வந்து தேங்கி இருந்தது. ஶ்ரீராமனது திவ்ய மங்கள விக்ரஹம் சகல அலங்காரங்களுடன் பூஜை முடிந்து கற்பூர ஆரத்தியை ஏற்றுக் கொண்டிருந்த நேரம். நாமாவளிகளின் கோஷம் ஊரையே நிறைத்தது. ஆயிற்று; சிறிது நேரத்தில் இலை போட்டுப் பரிமாற வேண்டியதுதான்.
அப்போது ஏதோ வேலையாக வீட்டின் பின்புறம் சமையல் நடக்கும் இடத்துக்குச் சென்றாள் கோபன்னாவின் மனைவி. கையில் குழந்தை. குழந்தை துள்ளி விளையாடும் பருவம். அவளே எதிர்பாராமல் கஞ்சி நிரம்பியிருந்த குழியில் குழந்தை விழுந்துவிட்டது. துடித்துப் போன கோபன்னாவின் மனைவி குழந்தையை உடனே தூக்கினாள். ஆனாலும் குழந்தையின் உடல் துவண்டது. உயிரில்லை என்பதைப் புரிந்து கொண்டாள். செய்ய வேண்டியது என்ன? சற்றே நிதானித்தாள் அவள்.
No comments:
Post a Comment