குழந்தை போனது என்னமோ போனதுதான். ஆனால் பக்தர்களோ இன்னும் சாப்பிடவே இல்லை. இப்போது போய்க் குழந்தை போனதைச் சொன்னால் அத்தனை பக்தர்களும் பட்டினி கிடக்க நேரிடும். எல்லாம் வீணாவதோடு குழந்தை ஒன்றும் திரும்பக் கிடைக்கப் போவதில்லை.” ஒரு முடிவுக்கு வந்த ராமதாஸரின் பத்தினி குழந்தையை, அதாவது குழந்தையின் உடலை வீட்டின் பின்புறம் ஓர் அறையிலே கொண்டு வைத்துப் போர்வையால் மூடிவிட்டு எதுவுமே நடவாதது போல் தன் காரியங்களைக் கவனிக்கலானாள். சமாராதனை முடிந்தது. அனைவரும் தாம்பூலம் பெற்றுச் சென்றனர். மெல்லக் கணவனிடம் வந்த ராமதாஸரின் பத்தினி தன் கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள். பின்னர் அழைத்துச் சென்று குழந்தையைக் காட்டினாள். அந்தக் குழந்தையின் உடலை எடுத்து வந்த பத்ராசல ராமதாஸர் குழந்தையைச் சந்நிதியில் கிடத்தினார். “ஏ, ராமா, இதுவும் உன் சோதனையா? அடியவரைக் காப்பது, இடர் தீர்ப்பது என்பது உன் கடமையன்றோ! நின் கடன் அடியேனைத் தாங்குதலும் சேர்ந்தன்றோ! இதெல்லாம் பொய்யா? இப்படியும் நடக்குமா? இந்தச் செல்வம் நீயன்றோ எங்களுக்குத் தந்தாய்! நீயே இப்படித் திரும்பப் பிடுங்கலாமா?” என்றெல்லாம் கதறி அழுதார்கள். பல மணி நேரம் கதறி அழுத அவர்களைக் குழந்தையின் குரல் அப்பா, அம்மா என அழைப்பது கேட்டது. திடுக்கிட்ட அவர்கள் பார்த்தபோது இறந்த குழந்தை உயிருடன் வந்திருப்பதைக் கண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி சொல்லில் அடங்காத ஒன்று. இதன் மூலம் ஸ்ரீராமன் மேல் அவர்கள் வைத்த பக்தி மேலும் பெருகிற்று.
ஸ்ரீராமனை நேரில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆவல் ராமதாஸரின் நெஞ்சில் இருந்து வந்தது. தன் குருவான கபீர்தாஸரின் நினைவு வந்தது. “எப்போது நீ நினைத்தாலும் அப்ப்போது நான் வருவேன்.” என்று தன்னிடம் கூறிச் சென்றிருந்த குருநாதரஇ நினைத்தார் கோபன்னா. நினைத்த மாத்திரத்தில் வந்து நின்றார் கபீர்தாஸர். ஸ்ரீராமனைத் தரிசிக்கவேண்டும்; நேரிலே தரிசனம் கிடைக்கும்படி என்ன வழி எனக் கேட்ட கோபன்னாவிடம் கபீர்தாசர் அது அதற்கென்று உரிய காலத்திலே தான் கிடைக்கும் எனவும், அதுவரை ராமதாஸர் தனக்கென விதித்துள்ள செயல்களைச் செய்து வரவேண்டும் எனவும் கூறினார். ஆனால் இந்த பதில் கோபன்னாவுக்குத் திருப்தி அளிக்கவில்லை. கபீரோ,” புலன்களை அடக்கித் தவம் செய்து வரும் மாமுனிவர்களுக்கெல்லாம் கூட எளிதில் கிட்டாத பொருள் ஸ்ரீராம தரிசனம். அதை இப்போதே பார்க்க வேண்டும் என்றால் இயலுமா? முதலில் உன் பக்தியை மேம்படுத்திக்கொள்ளும் வழியைப் பார்.” என்றார். ராமதாஸருக்கோக் காத்திருக்க விருப்பம் இல்லை; பொறுமையும் இல்லை. இப்போதே, இங்கேயே உடனே பார்க்க வேண்டும் எனக் கபீர்தாசரை வற்புறுத்த, “நாளைப் பகல் ஒருமணிக்குக் காட்சி கொடுப்பார்.” என்று சொல்லிவிடுகிறார். இந்தச் செய்தி எப்படியோ ஊரெல்லாம் பரவ ராமதாஸரின் இல்லத்தில் ஊர் மக்கள் கூட்டம் தாங்கவில்லை.
கபீரின் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது. ஸ்ரீராமரிடம் தன் சீடனான கோபன்னாவின் ஆசையைப் பூர்த்தி செய்யும்படியும் அவனுக்கு ஶ்ரீராமர் மறுநாள் உச்சி வேளையில் தரிசனம் கொடுப்பார் எனத் தான் வாக்களித்திருப்பதையும் கூறித் தன் வாக்கைக் காப்பாற்றும்படி ஸ்ரீராமனை வேண்டினார். ஸ்ரீராமரோ கோபன்னாவுக்கு இன்னமும் தெளிவோ, மனம் பண்படுதலோ ஏற்படவே இல்லை எனக் கூறிப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என மறுக்கக் கபீரோ ஒரு பக்தனாகிய தன் வாக்கை எவ்வாறேனும் காக்கவேண்டியது ஸ்ரீராமரின் கடமை எனக் கெஞ்சினார். கோபன்னாவின் வீடு திமிலோகப் பட்டது. பஜனை, பூஜைகள், என அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே மக்கள் மிருதங்கம், ஜால்ரா முதலியனவற்றை ஒலிக்கச் செய்து ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர். உச்சி வேளை நெருங்க நெருங்க, அங்கே சூழ்நிலையில் பரபரப்புக் கூடலாயிற்று. நடுக் கூடத்திலே இறைவனுக்கெனத் தனியானதொரு ஆசனம் அமைக்கப் பட்டிருந்தது. இறைவனின் சேவைக்கு வேண்டிய மலர்கள், பழங்கள், நிவேதனங்கள், அதோடு ஷோடச உபசாரங்களுக்கு ஏற்பட்ட சாமக்ரியைகள் முதலியனவும் தயாராகக் காத்திருந்தது. அப்போது பார்த்து ஒரு எருமை மாடு அங்கே வந்தது. அதன் உடல் முழுக்கச் சேறு. கொம்பெல்லாம் சேற்று மண் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த்அ மாடு நேரே நடந்து இறைவனுக்கு அமைக்கப் பட்டிருந்த ஆசனத்துக்கு அருகே சென்றட்து. செல்லும்போதே கீழே இருந்த நிவேதனங்கள், மலர்கள், பழங்கள், ஷோடச உபசார சாமக்ரியைகள் என அனைத்தையும் உருட்டிக் கொண்டே சென்றது. கூடி இருந்த அனைவருக்கும் பொறுமை போயிற்று. கோபம் பொங்கியது. ஒரு தடியை எடுத்து மாட்டை நன்றாக அடித்து விரட்டினார்கள். மாடும் “அம்மா” எனக் கத்திக் கொண்டே ஓடிப் போய்விட்டது.
கபீரிடம் சென்ற ஸ்ரீராமர், “கபீர், உன் சீடன் என்னை நன்றாக அடித்துவிட்டான்; இதோ பார்! அடித்த அடையாளங்கள். அவன் என்னைப் புரிந்துகொள்ளவே இல்லை.” எனக் கூற, கபீர் கோபத்துடன், “ராமா, நீ எருமையாகப் போவாய் என அவனுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்க, “அவனுக்கு இன்னும் உரிய பக்குவ நிலை வரவில்லை கபீர். அது வந்ததும் அவனுக்கு நான் காட்சி தருவேன்.” எனக் கூறி மறைந்தான்.
இந்தக் கதை எனக்குப் புதிது.ஆனானப் பட்ட ராம்தாசருக்கே இவ்வளவு நாட்கள் பிடித்ததா.
ReplyDeleteஸ்வாமி எங்கள் கதி என்ன!