Friday, June 13, 2008

சித்திரம் பேசுதடி!! எல்லோரா குகைகள்- தொடர் 4

புத்தர் தன் கைவிரல்களை இவ்வாறு வைத்திருப்பது தான் அவர் போதனை செய்யும் வடிவமாய்க் கருதப் படுகின்றது. இப்போ மெதுவா அடுத்த குகைக்கு வந்துட்டோமே??? அட, இது என்ன இங்கே ஒரு பெரிய வராந்தா மாதிரி இருக்கோ? அதோ, அது தான் குபேரன் சிற்பம் என வழிகாட்டி சொல்லுகின்றாரே??? செல்வத்துக்கு அதிபதியான குபேரனை, "பஞ்சிகா" என்ற பெயரால் அழைத்துள்ளனர். அருகே அவர் மனைவி, "ஹரிதி" என்று அழைக்கப் படுகின்றாள். உள்ளே நுழையும்போது வாயிற்காவலர்கள் போன்ற உருவச் சிலைகளின் அமைப்புடன் விளங்குகின்றது. சுவர்களின் ஒவ்வொரு பக்கமும் புத்தர்களே ஆக்கிரமித்திருப்பதையும் காண முடிகின்றது. விண்ணில் இருந்து தேவர்களும், தேவதைகளும் வந்து புத்தரை ஆசீர்வதிப்பதும், போதிசத்துவர் என்று அழைக்கப் படும் புத்தரின் உருவமும், இன்னும் புத்தர் ஆகக் காத்திருக்கும் துறவிகளும் காணக் கிடைக்கின்றனர்.
புத்தரின் மகா பெரிய உருவம் உட்கார்ந்த நிலையில் காண்கின்றோம். அதை அடுத்து நாம் செல்லும் குகையில் முற்றுப் பெறாத புத்தரின் உருவம் உள்ள சிலையுடன் கூடிய குகையைக் காண்கின்றோம். அதை அடுத்த நான்காவது குகை, இரண்டு தளம் கொண்ட அமைப்புடன் விளங்குகின்றது. ஏற்கெனவேயே முதல் தளத்துக்கே பல படிகள் மேலே ஏறி வந்திருக்கின்றோம். வந்து பார்த்தால் இந்தக் குகை சற்று, இல்லை, இல்லை, நன்றாகவே சிதிலமடைந்த நிலையில் உள்ளது எனப் புரிகின்றது. கடவுளே??? எதை நாம் உருவாக்க முடியும் இது போல்?? என்றாவது நினைத்துப் பார்த்தோமா??? குறைந்த பட்சம் காப்பாற்றிப் பாதுகாத்து வைக்கவாவது தெரியுதா நமக்கு??? எத்தனை அரிய பொக்கிஷங்கள்??? வருத்தம் மேலிடுகின்றது. பார்க்கும்போதே. கீழத்தளத்தில் ஒரு பெரிய விசாலமான கூடமும், உட்கார்ந்த நிலையில் உள்ள பெரிய புத்தர் சிலையும், சிலையின் இரு மருங்கிலும், புத்தருக்கு உதவி செய்யும் துறவிகளும் காணப் படுகின்றனர். மேல் தளத்தில் அதே போல் இருந்தாலும் சற்றே சிறியதான சிற்பங்கள் காணப் படுகின்றன.
ஐந்தாவது குகையில், இன்னும் மேலே ஏற வேண்டி உள்ளது. ஒரு கல்லால் ஆன தளத்தை குடைந்து உருவாக்கப் பட்ட படிகளில் மேலே ஏறிச் செல்கின்றோம். அப்பா, எவ்வளவு பெரிய குகைக் கோயில்??? வியப்பை அடக்கவே முடியவில்லை, அதுக்குள் நமக்குக் களைத்து விடுகின்றது. ஆனால் இம்மாதிரித் தினமும் மேலே ஏறி வந்து வெறும் உளியையும், சுத்தியலையும் மட்டும் வைத்துக் கொண்டு, இந்த குகைக் கோயில்களையும் சிற்பங்களையும் செதுக்கி இருக்கின்றார்களே, எத்தகைய உழைப்பு இது???? நாம் இருந்து அனுபவிக்கப் போகின்றோமா என்று அவர்கள் சிறிதாவது நினைத்திருந்தால் இம்மாதிரியான அற்புதங்கள் தோன்றி இருக்காது.

மூன்று பாகமாய்ப் பிரிக்கப் பட்ட இந்தக் குகையின் நடுவே இரு பக்கமும் சிறிய சிறிய அறைகள் இருக்கின்றன. மேலே "காலம்" என அழைக்கப் படும் உத்திரங்கள் எல்லாம் நன்கு அலங்கரிக்கப் பட்டு விளங்குகின்றது. வித, விதமான அழகுணர்ச்சியோடு கூடிய குறிப்புகளால் வரையப் பட்ட வித விதமான இலைத் தொகுதிகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. தரையில் இருந்து சிறு சிறு கல்லால் ஆன பெஞ்சுகள் எழுப்பப்பட்டுள்ளது. நடுவில் புத்தரை வணங்குமிடம் உள்ளது. உள்ளே பெரிய புத்தரின் திருவுருவச் சிலை உள்ளது. அடுத்து வரும் ஆறாவது குகை செவ்வக வடிவில் உள்ளது. இதிலும் பானைகள், இலைகள், பூக்களால் ஏற்படுத்தப்பட்ட வடிவங்கள் காணக் கிடைக்கின்றது. எத்தனை நுண்ணிய வேலைப்பாடுகள் என மனம் வியப்பதோடு அல்லாமல், இத்தகைய நாகரீக வளர்ச்சி எப்போவோ நம் நாடு அடைந்துவிட்டதை எண்ணும்போது பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருந்தாலும், இப்போதைய நிலைமையை நினைத்து வருத்தமாயும் இருந்தது.

இந்தக் குகையின் சுவர்களில் போதி சத்துவர் தவிர, மற்றக் கடவுளர்களும் இடம் பெறுகின்றனர். கல்விக்கு அதிபதியாகச் சொல்லப் படும் "மஹா மயூரி" என்னும் தேவதையும், "தாரா" என்னும் தேவதையும் காணப்படுகின்றனர். இன்னொரு பக்கம் மஹா மயூரி தன் மயில் வாகனத்தில் காணப்படுகின்றாள். அருகிலேயே "அவலோகேதேஷ்வர்" கையில் வைத்திருக்கும் தாமரைப் புஷ்பத்துடன் காணப் படுகின்றார். புத்தருக்கான ஒரு சிறிய வழிபாட்டுக் கூடமும் இருக்கின்றது. இங்கே பெரிய புத்தரை, பல சிறிய புத்தர்கள் சூழ்ந்துள்ளனர். அடுத்துள்ள ஏழாம் குகை சாதாரணமாய்க் காணப் படுகின்றது. ஆகவே இதில் எல்லாம் அதிகம் காட்டுவதில்லை. இனி அடுத்த குகைக்குப் போவோம்.

1 comment:

  1. எல்லோரா அஜந்தா ஓவியங்களை பார்க்க வேண்டுமென்கிற என் ஆசையை ஊக்குவிக்கும் வகையிலும் விரிவான பயண கட்டுரையாகவும் உங்களது வலைப்பதிவு அமைந்திருக்கிறது.

    இன்னும் எவ்வளவு இடங்களை சுற்றி காட்ட போகிறீர்களோ என ஆவலுடன் காத்திருக்கிறோம்.

    ReplyDelete