Monday, June 9, 2008

சித்திரம் பேசுதடி - எல்லோரா தொடர் 1

"சித்திரம் பேசுதடி,எந்தன் சிந்தை மயங்குதடி" என்று சித்திரங்களைக் கண்டு மயங்காதவர்கள் யார்? சிற்பங்களைக் கண்டு ரசிக்காதவர்கள் யார்? அதிலும் பழைய தொன்மையான சிற்பங்களும், சித்திரங்களும் இன்றும் மக்களைப் பலவிதங்களிலும் வசீகரிக்கின்றது. முன்னே எல்லாம் யாராவது அழகாக இருக்கின்றார்கள் என்று சொல்வது என்றால், "அஜந்தாச் சித்திரம்" போல அழகு என்று சொல்லுவதாய்க் கேள்விப்பட்டிருக்கின்றோம். அத்தனை அழகா என வியந்திருக்கின்றோம். திரு கல்கி அவர்களின் எழுத்தில் "சிவகாமியின் சபதம்" நாவலில், அஜந்தா ரகசியத்தை அறிய ஆயனச் சிற்பி துடித்த துடிப்பைப் பார்த்துப் படித்து ரசித்திருக்கின்றோம், நம்மில் அனைவரும். அந்த அஜந்தாவை நாம் பார்த்து ரசிக்க நினைத்திருப்போம், ஆனால் அனைவருக்கும் கை கூடாது. அப்படி என்ன அழகு அந்தச் சித்திரங்களில்? என்ன விதமான வண்ணக்கலவையினால் இவ்விதம் நூற்றாண்டுகள் கடந்து இவை நிலைத்து நிற்கின்றன. (பல சித்திரங்கள் அழிந்து விட்டன என்பதே உண்மை, பராமரிப்பு போதாது என்பதும் ஒரு வருத்தமான விஷயம்) இத்தனை அபூர்வமான ஒரு விஷயத்தை ஏன் இன்றளவும், உலக அதிசயங்களில் ஒன்றாய்ச் சேர்க்கவில்லை என்பது, அங்கே போய்ப் பார்த்ததும் எங்களுக்குள் எழுந்த ஒரு தவிர்க்க முடியாத கேள்வி. அவை அமைக்கப் பட்டிருக்கும் மலைத் தொடர்களின் அமைப்பும், அதில் எப்படி இத்தனை ஓவியங்களை குகைகளைச் செதுக்கி வரைந்தார்கள் என்பதும், நேரில் பார்த்தால் மட்டுமே அதிசயம் என்பது புரியும், அவ்வளவு கடினமான மலைப்பாதையில், கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் முயன்று, ஒவ்வொரு குகையாகச் செதுக்கி, அவற்றில் ஓவியங்களையும் வரைந்து, பின்னர் ஒரு கால கட்டத்தில் அவை முழுதும் மறைந்து இருக்க, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தற்செயலாக வேட்டை ஆட வந்த ஒருவரால் கண்டுபிடிக்கப் பட்டு உலகுக்கு இவை பற்றித் தெரிய வந்தது. அப்போதும் போகக் கொஞ்சம் கடினமான மலைப்பாதைகளின் வழியாகவே போய் வந்திருக்கின்றனர். இப்போதும் போகக் கொ ஞ்சம் கடினம் தான் என்றாலும் சறுக்குப் பாதையில் ஏறுவதால் சிரமம் தெரிவதில்லை. எனினும் மேலே போய் ஒவ்வொரு குகையாக ஏறி, இறங்கும்போது, இவற்றைப் பார்க்கவே நம்மால் முடியவில்லையே, முன்னோர்கள் தினமும் இவற்றில் ஏறி, இறங்கி, இங்கேயே, படுத்து, தூங்கி, சாப்பிட்டு, குளித்து, வாழ்நாளைக் கழித்து, ஆஹா, நாம் என்ன செய்திருக்கின்றோம்? அவர்களின் இந்த அற்புத வேலைகளைக் குறைந்த பட்சம் அழியாமலாவது காப்பாற்றி இருக்கின்றோமா? இல்லையே? சித்திரங்களில் பென்சிலாலும், கத்தியாலும் கீறுவதும், சித்திரம் வரைந்த ஓவியனின் பெயர் கூட அங்கே காண முடியாது, ஆனால் நம் பெயரைப் பொறிப்பதும், இந்தக் கொடுமையைக் குற்றாலம் சித்திரசபையின் நடராஜர் கூட ஆடக் கூட முடியாமல் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். இப்போவும் அப்படியே இருக்கின்றது என்று சமீபத்தில் வந்த "குமுதம் பக்தி" இதழின் தலையங்கமும் குறிப்பிடுகின்றது. ஆடிய பாதத்தை நிறுத்திவிட்டு நடராஜர் எங்கேயாவது ஓடினால் தான் உண்டு. அப்போவும் துரத்திப் போய் அழிப்போமே??அப்படித் தான் இருக்கின்றன அஜந்தாவின் சித்திர, விசித்திரமும், எல்லோராவின் சிற்ப அதிசயங்களும், உலகிலேயே ஒரே கல்லில் கட்டப் பட்ட குடைவரைக் கோயில் எல்லோராவில் தானாம்.. சொல்கின்றனர், ஆனால், நாம் அதை எவ்வாறேனும், காப்பாற்ற உறுதி எடுக்க வேண்டும், இல்லையா? அழிய ஆரம்பித்திருக்கின்றன இவை எல்லாம், இனியாவது நாம் விழித்துக் கொள்ளவேண்டும், அஜந்தாவின் ஓவியங்கள் பற்றியும், எல்லோராவின் குடைவரைக் கோயில்கள் பற்றியும் சிறிது பார்ப்போமா? முதலில் அதன் சரித்திர காலம் பற்றிய சிறு குறிப்பு நாளை கொடுத்துவிட்டுப் பின்னர் தேவகிரிக்கோட்டை என்று அழைக்கப் பட்ட, இப்போதைய தெளலதாபாத் கோட்டை பற்றியும், அட, இது என்ன?? தாஜ்மஹால் இங்கே? இங்கே இருக்கின்றதே அதன் அப்பட்டமான காப்பி, சிறிய வடிவில்??ஆச்சரியமாய் இருக்கின்றதா? ஆச்சரியமே இல்லை. ஒளரங்கசீபின் மகன் ஒருவன், தன் தாயின் நினைவுக்காகக் கட்டியது, "பீபி கா மக்பரா" என்னும் மினி தாஜ்மகால். வங்காளத்தின் பொறி இயல் நிபுணர் ஒருவர் பல மாதங்கள் தாஜ்மகாலைப் பார்த்து ஆராய்ந்து அதன் வடிவத்தையும், அதன் கட்டிட அமைப்பையும் மட்டுமின்றி, அதன் முகப்பு, பக்கத்து இரு சிவப்பு மண்டபங்கள் என அப்படியே ஒரு தாஜ்மகாலின் மாதிரி வடிவை இங்கேயும் கொடுத்திருக்கின்றார். இவை பற்றிய குறிப்புகள் நாளை!

2 comments:

  1. அருமையான பதிவு. தகவல் நிறைத்த விறுவிறுப்பான பெரிய பதிவு. கொஞ்சம் கொஞ்சமாக முழுவதும் படித்துவிடுகிறேன். சிவகாமயின் சபதம் படித்து இருக்கிறேன் . அதனால் இதன் மீதான ஆர்வம் இன்னும் அதிகரிக்கிறது

    ReplyDelete
  2. 'அழகி'யின் 'இல்லம்' குழு மூலமாக இந்த வலைப்பூவை அடைந்தேன். எல்லோரா பற்றி எழுதியிருப்பது நல்லது. எல்லோராவில் குகை எண் 10ல் உள்ள கைலாசநாதர் கோவில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஒரே கல்லாலான குடைவரைக் கோவில் என்ற பெருமையைப் பெற்றது. 'உலகிலேயே ஒரே' என்பது சரியல்ல, இந்தியாவிலேயே பல ஒரே கல் குடைவரைக் கோவில்கள் உள்ளன.
    சரி, தங்கள் மற்ற மடல்களைப் பார்க்கிறேன்.

    ReplyDelete