Tuesday, December 9, 2008

யாருக்கும் தெரியாதது!

நாங்க ஒவ்வொரு முறை கும்பகோணம் போறப்போவும் அநேகமாய்ப் பேருந்திலேயே போவோம். எனக்கு ரெயில் பிடிக்கும் என்பதாலேயே ம.பா.வுக்குப் பிடிக்காது. ஆனால் இப்போ எல்லாம் இந்த ரெயில் மார்க்கம் அடைபட்டதில் இருந்து வேறே வழி இல்லாமல் போச்சு. இல்லைனா, ஒரு வண்டியை ஏற்பாடு செய்துட்டுப் போவோம். அதுக்கு முடியாதப்போப் பேருந்து தான். அதிலேயும் இப்போப் பேருந்து கொஞ்சம் வசதிகளோடு இருக்கிறாப்போல் ஒரு எண்ணம் மனசில் அதனாலேயும். எந்தவித வசதிகளும் இல்லைங்கறது போய் அனுபவிச்சால் தான் புரியும். இந்த டிசம்பர் ஆறாம் தேதி கும்பகோணம் போகப் போறோம்னு ஆகஸ்டிலேயே தெரியும். அண்ணா பையர் கல்யாணம் கும்பகோணத்தில். பெரியம்மா பையர் தான் என்றாலும் உறவுமுறை இன்னும் நெருக்கமாய்க் கடைப்பிடித்து வருகிறதாலே கிட்டத் தட்ட 50 பேருக்கு மேலே போக ஏற்பாடு செய்யப் பட்டு மொத்த ஓட்டும் (என்னோட ம.பா. தவிர, அவர் வழி எப்பவும் தனி வழி!) ரெயிலுக்கே விழுந்ததால் ரெயிலில் ஒரு இரண்டு போகியை எங்க குடும்பத்துக்கு ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தம் தென்னக ரயில்வேக்கு.

ஆக மொத்தம் டிசம்பரில் கும்பகோணம் பயணம் உறுதி செய்யப் பட்டது. ஆனால் நானோ அக்டோபரிலேயே விழுந்து, எழுந்து, வீட்டை விட்டு நகராமல், (எல்லாம் ம.பா.வோட பயம் தான் காரணம், நடக்கும்போதே விழுந்து வைப்பேனோனு பயம் அவருக்கு) படிதாண்டாப் பத்தினியாக இருந்து வந்ததால் எல்லாருக்கும் கொஞ்சம் சந்தேகம். ஆனால் நான் லேசில் விடுவேனா? அதிலும் ரெயில் பயணத்தை, எல்லாரோடயும் சேர்ந்து போய் எத்தனை வருஷங்கள் ஆகிவிட்டன? ஆகவே கிளம்பிட்டோம் ஆறாம் தேதி கும்பகோணத்திற்கு. அன்னைக்குனு பார்த்து ஒரு வேளை மட்டுமே பிடிவாதமாய் வரும் வீட்டு வேலைகளில் உதவும் அம்மாவும் சொல்லாமல், கொள்ளாமல் விடுமுறை எடுக்க, ஏற்கெனவே நெஞ்சாக்கூட்டுக்குள்ளே இருந்து பட்சி கூவின கூவலில், நான் பாத்திரங்களை எல்லாம் தேய்த்து, வீடு எல்லாம் சுத்தம் செய்து, ஆயுசிலேயே முதல்முறையாக பாக்கிங்கையும் முன்னாலேயே செய்துவிட்டுத் தயார் ஆக, ஆச்சரியப் பட்டுப் போன ம.பா. உடம்பு ஒண்ணும் இல்லையேனு அக்கறையோடு விசாரித்தார்.

ராத்திரி 10-30-க்குத் தான் ரெயில். ஆனால் ரெயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம் இருப்பதாலும், ஒவ்வொருத்தரையும் தனித்தனியாகச் சோதனை போடுவதாலும் சீக்கிரமே வரும்படிக்கு அண்ணா தொலைபேசியில் ஒலிபரப்புச் செய்திருந்தார். ஆகவே 6---30 மணிக்கெல்லாம் வேலை செய்யும் அம்மாவின் சதித்திட்டத்தையும் முறியடித்துவிட்டு வெற்றிகரமாய்க் கிளம்பினோம். ஆட்டோ கொண்டு வரவும் ஆள் அனுப்பியாச்சு. என்னோட ம.பா.வுக்கு எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு பஸ்ஸில் போகணும் என்று ஆசை வர, எனக்கு அதுக்கு நேர்மாறாக செண்ட்ரல் வரை ரயில், அங்கிருந்து எழும்பூருக்கு ஆட்டோ என்று ஆசைவர, அந்த விவாதம் முற்றுப்பெறாமல் இருக்கும்போதே ஆட்டோ வந்துவிட்டது. எல்லாக் கதவையும் பூட்டியாச்சு. பெட்டிகளையும் ஆட்டோவில் ஏற்றியாச்சு. திடீரென வாசல் வராந்தாவில் இருந்து அலை ஓசை போன்ற சத்தம். பெரியதாய்க் கேட்டது. என்னனு புரியலை. ஒரே குழப்பம். ஒவ்வொரு இடமாய், ஒவ்வொரு மின்சாரம் விநியோகம் இருக்கும் இடங்களாய்ப் பார்த்தோம். எதுவும் இல்லை. சமையல் அறையை அப்போதுதான் எரிவாயு அடுப்பை மூடிவிட்டுப் பூட்டி இருந்தோம். ஆகையால் அங்கே இல்லை. மீண்டும், சோதனை, சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி என்றாக, நான் இன்வெர்டரை செக் பண்ணுங்கனு சொல்ல, அவர் அரை மனதோடு பூட்டிய கதவை எல்லாம் திறந்து இன்வெர்டர் இருக்கும் வாசல் அறையிலும் போய்ப் பார்க்க அங்கேயும் எதுவும் இல்லை.

அலை ஓசை நிற்கவே இல்லை. அப்போ வாசலில் இருந்த சோபா நாற்காலியில் இருந்து தான் அந்த சத்தம் வருதுனு என் மண்டையில் பல்பு பிரகாசமாய் எரிய அங்கே போய்ப் பார்த்தால் வீட்டைப் பாதுகாக்கும் நபரின் பை வைத்திருந்தது. அதிலிருந்து தான் சத்தம் விடாமல் வருது. உடனடியாக அட, ட்ரான்சிஸ்டர் ரேடியோ, வச்சிருப்பாரே, அதுதான் சத்தம் போடுது எனப் புரிய அவரிடம் கேட்டால் அசடு வழிந்து கொண்டு அட, ஆமாம் என்றார். அதுக்கப்புறம் நிம்மதியாய் மறுபடியும் கதவை எல்லாம் பூட்டிக் கொண்டு, சாவியையும் எடுத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து, இதுதான் சமயம் என்று நான் அம்பத்தூர் ஸ்டேஷனுக்குப் போங்கனு சொல்லி விட்டு உட்கார ஆட்டோவும் நகர்ந்தது.

ஆட்டோ டிரைவர் என்னைத் திட்ட ஆரம்பித்தார். நான் அம்பத்தூர் ஸ்டேஷன் போக இவர் ஏன் திட்டணும்னு பார்த்தால் ரோடு சரியாய் இல்லையாம். ஆகையால் ஆட்டோ விலையில் பாதியோ, அல்லது ஒருவாரத்துக்கான பெட்ரோல் பணமோ கொடுத்தால் தான் மேற்கொண்டு நகருவாராம். இல்லைனா இறங்குங்க என்று கறாராய்ச் சொல்ல, இந்த இடத்துக்கு ஆட்டோ வரதே பெரிய விஷயம், இந்த மழை நாளில், இவரைப் போய் விரோதித்துக் கொள்ள முடியுமா? சரினு ஒத்துக் கொண்டு போனோம். போகிற வழி எல்லாம் எங்களுக்கு முதலில் சாலையைப் போடும் வழியைப் பாருங்க என்று வித விதமாய் ஆலோசனை. விட்டால் அப்போவே உடனேயே கையில் பாண்டும், கொல்லுருவும் கொடுத்து ஜல்லிக்கும் ஆர்டர் கொடுக்கச் சொல்லிடுவார் போல் இருந்தது. ஆனால் கல்யாணத்துக்கு வரதாய் ஒத்துக் கொண்டு இருக்கோமே? ஆகவே அவரை மெதுவாய் சமாதானம் செய்து சரி, இனிமேல் ஒழுங்காய் இருக்கோம், அம்பத்தூரில் எங்கே சாலை போயிருந்தாலும் நாங்களே உடனே போய் சாலையை மராமத்துப் பண்ணறோம் என்றெல்லாம் ஒத்துக் கொண்டு அம்பத்தூர் ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தோம். போய் இறங்கி சாமானை எடுத்துக் கொண்டு டிக்கெட் வாங்கிக் கொண்டு வரதுக்குள்ளே, ஏதோ அவசர காரியம் இருக்கிறாப்போல் அடுத்தடுத்து இரண்டு ரெயில்கள் போய்விட்டன.

செல்லில் அண்ணாவிடமிருந்து, அழைப்பு. என்னம்மா, மணி ஏழுக்கு மேலே ஆயிடுச்சு? நீ எப்போவும் முதல்லே வருவியே? இன்னிக்கு என்ன ஆச்சுனு கேட்டார். செல்லை மறக்காமல் எடுத்து வச்சுண்டதே பெரிய விஷயம். அவருக்கு பதில் சொல்லாமல் அசடு வழிந்துட்டு, வந்துட்டே இருக்கோம்னு சொல்லிட்டு அடுத்த வண்டிக்குக் காத்திருந்தோம்.

4 comments:

  1. //விட்டால் அப்போவே உடனேயே கையில் பாண்டும், கொல்லுருவும் கொடுத்து ஜல்லிக்கும் ஆர்டர் கொடுக்கச் சொல்லிடுவார் போல் இருந்தது. ஆனால் கல்யாணத்துக்கு வரதாய் ஒத்துக் கொண்டு இருக்கோமே?//

    அதானே......

    நல்லாச் சிரிச்சேன் கீதா.

    வாசப்பக்கம் சத்தம் பாம்பா இருக்குமோன்னு சம்சயம் வந்தது:-))))

    ReplyDelete
  2. //செல்லை மறக்காமல் எடுத்து வச்சுண்டதே பெரிய விஷயம். //

    :)))

    அதானே! கல்யாணம்னா முதல் ஆளா நீங்க தான் டிபன் போடற இடத்துல நிப்பீங்க? :p

    ReplyDelete
  3. வாங்க துளசி, இந்த விலாசம் கண்டு பிடிச்சு வந்திருக்கீங்களே?? அதுவே பெரிசு, கொஞ்சம் முடியலை, அதான் உடனே பதில் போடலை, அடுத்த பதிவும் ரெடி பண்ணியாச்சு, போடணும். அதுக்குள்ளே கை மறுபடி தகராறு செய்யுது! :((((((

    //வாசப்பக்கம் சத்தம் பாம்பா இருக்குமோன்னு சம்சயம் வந்தது:-))))//

    அட, அதெல்லாம் குழந்தைங்க மாதிரி, எப்போ வேணா வரும், எப்போ வேணா போகும், அதெல்லாம் சத்தம் போட்டுக்கிட்டே வராதே, அதான் கஷ்டம்! :P:P:P:P வேணும்னா சொல்லுங்க, வித விதமாய் வருது, 2 பிடிச்சு அனுப்பி வைக்கிறேன்! :))))))))

    ReplyDelete
  4. @வம்பி, ஹிஹிஹி, அம்பி, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வந்ததுக்கு! ஆனா ஒரு விஷயம் கல்யாணத்திலே இண்ட்ரஸ்டிங்க் ஆன விஷயமே டிபன் தான், தெரியுமில்ல??? :P:P:P:P

    ReplyDelete