Wednesday, April 15, 2009

ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல!

முன்னொரு காலத்தில் இது தண்டிரவனம் என்ற பெயரில் அழைக்கப் பட்டு வந்தது. இங்கே முக்தாபாய், சானதேவன் என்ற இரு வயது முதிர்ந்த தம்பதிகள் வசித்தனர். அவர்களின் ஒரே மகன் புண்டரீகன் என்ற பெயரில் வளர்ந்து வந்தான். அப்போது விருத்தாசுரனை வதம் செய்த இந்திரன், அதன் காரணமாய் சாபம் பெற்று ஒரு செங்கல்லாய் மாறி, அங்கே இருந்து வந்தான். அவன் ஸ்ரீகிருஷ்ணன் பண்டரிநாதனாய் வரும் நாளில் தனக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

புண்டரீகன் இயல்பாகவே அவன் தாய், தந்தையரிடம் அதிக அபிமானமும் பற்றும் கொண்டவனாய் இருந்தான். தாய், தந்தையருக்குச் சேவை செய்வதே தன் கடமை எனக் கருதி வந்தான். ஒரு நாள் அவ்வாறு தாய், தந்தையரின் சேவையின் அவன் மிகவும் மும்முரமாய் இருந்த சமயம், வாசலில் ஒரு குரல் கேட்டது. "புண்டரீகா, புண்டரீகா, உடனே வா!" என்றது அந்தக் குரல்.

புண்டரீகன், "ஐயா, சற்றே மெதுவாய்ப் பேசுங்கள். என் தாயும், தந்தையும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் இப்போது சப்தம் போட்டுப் பேசினால் அவர்களின் ஓய்வு நேரத்திற்கு ஊறு நேரிடும்." என்று சொல்கின்றான். "புண்டரீகா, நான் யார் தெரியுமா?நான் சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே வந்திருக்கிறேன் அப்பா. உன்னைக் கடைத்தேற்றி உனக்கு முக்தி கொடுக்கவே வந்துள்ளேன். சற்றே வந்து நான் சொல்வதைக் கேட்பாய்." இது வந்தவரின் குரல்.

"நீர் யாராக வேண்டுமானாலும் இரும். எனக்குக் கவலையில்லை ஐயா. காத்திருக்க முடியுமானால் காத்திரும். நான் சற்றுப் பொறுத்து வந்து உம்மைக் காண்கின்றேன்." புண்டரீகன் பதில் கொடுத்தான். "ஆஹா, இந்தக் குடிசைக்கு முன்னால் ஒரே சேறாய் இருக்கிறதே. நான் எங்கே காத்திருப்பது? உட்காரக் கூட இடம் இல்லையே?" வந்தவரின் அங்கலாய்ப்பு. புண்டரீகன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் கண்ணில் பட்டது ஒரு செங்கல். அந்தச் செங்கல்லைக் கையில் எடுத்துத் தூக்கி எறிந்தான். "இதோ, இந்தக் கல் மீது நீர் நின்று கொள்ளும். நான் இதோ வருகிறேன்."

கல்லைத் தூக்கி எறிந்தான் புண்டரீகன். பகவானின் பாதம் பட்டதோ இல்லையோ, இந்திரனுக்குச் சுய உருவம் வந்துவிட்டது. புண்டரீகனுக்கும், பகவானுக்கும் தன் நன்றிகளைச் சொன்னான் இந்திரன். சற்றுப் பொறுத்து வெளியே வந்து பார்த்த புண்டரீகன், கல்லில் நிற்கும் சாட்சாத் மஹாவிஷ்ணுவையும், அவரை வணங்கிய வண்ணம் நிற்கும் இந்திரனையும் கண்டு அதிசயித்தான். புண்டரீகன் மனம் வருந்தினான் பகவானையே தான் காக்க வைத்ததை எண்ணி, எண்ணி. பகவானோ அவனைத் தேற்றுகின்றார். "புண்டரீகா, நீ பெற்றோரிடம் கொண்டிருக்கும் பக்தியை வெளி உலகுக்குக் காட்டவேண்டியே நாம் இவ்வாறு ஒரு சோதனை செய்தோம். உனக்காக நாமே இங்கே காத்திருந்தோம். இதேபோல் எம்மைத் தேடி வரும் அடியாருக்காக நாம் இங்கேயே இருந்து காத்திருக்கவும் முடிவு செய்துள்ளோம்." என்றார். அது முதல் புண்டரீகன் தூக்கி எறிந்த அந்தச் செங்கல் மீது நின்ற வண்ணமே பண்டரிநாதன் பக்தர்களுக்காகக் காத்திருக்கின்றான். அன்று முதல் இறைவன் அங்கேயே கோயிலிலும் குடி கொண்டான் விட்டலன் என்ற பெயரிலேயே.

அனைத்துக் கோயில்களிலும் குடி கொண்டிருக்கும் பகவானுக்காகப் பக்தர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இங்கோ பகவானே பக்தர்களுக்காகக் காத்திருக்கின்றான், நின்ற வண்ணமே. சந்திரபாஹா நதியில் குளித்து, முடித்துப் பின்னர் தரிசனத்துக்குச் சென்றோம். எல்லா வட இந்தியக் கோயில்களிலும் இருப்பது போல் இங்கேயும் சோதனை, சோதனை, சோதனைமேல் சோதனை. முடிந்து, காமிரா, செல்போன் எல்லாவற்றையும் வாங்கி வைத்துக் கொண்டு தரிசனத்துக்கு உள்ளே விட்டனர். கூட்டம் அமைதியாகவும், நிதானமாகவும், ஒழுங்காகவும், கட்டுப்பாட்டுடனும் சென்று கொண்டிருந்தது. இலவச தரிசனம் தான். எல்லாருக்குமே. ஆகவே எந்தவிதமான முட்டல், மோதல் இல்லை. ஒரு மணி நேரத்தில் சந்நிதிக்குச் சென்று விட்டோம்.

அதி அற்புத தரிசனம். நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றான் விட்டோபா. அவன் சந்நிதியைக் கண்டதும், நம்மையும் அறியாமல் கண்கள் மழையை வர்ஷிக்கின்றன. நெருங்க, நெருங்க மனம் சொல்லவொண்ணா ஆனந்தத்தில் ஆழ்கின்றது. இன்று காலையில் விட்டோபாவுக்கு அலங்காரம் செய்வதைக் காட்டினார்கள். அந்த அலங்காரத்திலேயே தலையில் தலைப்பாகையுடன், இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு நிற்கின்றான். உச்சியில் இருந்து, பாதம் வரைக்கும் அவனைத் தொட்டு அனுபவிக்கலாம். அவ்வாறே தொட்டுப் பார்த்துப் பாதங்களில் நம் சிரத்தை வைத்து நமஸ்கரித்துவிட்டுப் பின்னரும் திருப்தி அடையாமல் நிமிர்ந்தால் பிடித்து இழுத்துப் போகச் சொல்லி விடுகின்றனர். என்ன செய்யறது?? நம்மைப் போல் பின்னால் கூட்டம் கூட்டமாய் மக்கள் வருகின்றனரே. வேண்டுமானால் நாம் திரும்பவும் நின்று பார்த்துவிட்டு வரலாம். இந்த அளவுக்கு இங்கே நம்ம ஊரில் எல்லாம் முடியாது அல்லவா? ஆகவே அரை மனசோடு அங்கிருந்து ருக்மாயி, இங்கே தமிழ்நாட்டில் ரெகுமாயி என்றாகி விட்டது. ருக்மாயியைக் காணச் சென்றோம்.

ரெகுமாயியிடம் நம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துவிட்டுச் சற்று நேரம் நின்றோம். கொஞ்சம் நிதானமாய்த் தரிசிக்கலாம் ரெகுமாயியை, எனினும், கூட்டம் இங்கேயும் வந்துவிடுகின்றது. பின்னர் ஒருமுறை வரலாம் எனக் கிளம்பினோம். அதற்குள் பயண அமைப்பாளர்கள் அழைப்பு வேறே. பின் தங்குமிடம் வந்து சாப்பிட்டுவிட்டு ஒரு முறை செல்லலாம் என நினைத்துக் கொண்டு வந்தால், சாப்பிட்டதும் சற்று ஓய்வுக்குப் பின்னர் மாலை நாலுமணிக்கெல்லாம் ரயில் நிலையம் சென்றுவிடுவோம் எனச் சொல்லிவிட்டனர். இன்னொருமுறை பண்டரிபுரம் பயணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன். எப்போது கிடைக்குமோ???

No comments:

Post a Comment