Tuesday, June 30, 2009

பிகாபூ!!! ஐ ஸீ யூ!!!!!

தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான் கணவன். சிறு வயதில் இருந்தே குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம் அவனுக்கு. தனக்குக் குறைந்த பட்சமாய் ஆறு குழந்தைகளாவது வேண்டும் என நினைப்பான். அதே போல் அவன் எண்ணத்துக்கு ஒத்த மனைவியும் கிடைத்தாள். வேலையும் அவன் குழந்தைகளைச் சந்தோஷப் படுத்தும் கார்ட்டூன் சித்திரங்களை உருவாக்கும் பணியாகவே தேர்ந்தெடுத்திருந்தான். மனைவியின் பூரண ஒத்துழைப்பும் இருந்தது அதற்கு. திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகளில் இருவருக்கும் ஒரு சின்னக் கருத்து வேறுபாடு கூட இருந்ததில்லை. அவள் மனதை அவனும், அவன் மனதை அவளும் படித்தாற்போல், சொல்லி வைத்தாற்போல் எல்லாம் நடக்கும். மணி, மணியாய் நாலு குழந்தைகள். ம்ம்ம்ம்ம்ம் அதிலே மூன்று போய்விட்டது. மூன்றும் ஆண் குழந்தைகள். ஒருவேளை, ஒரு வேளை, அந்தப் பிசாசுப் பெண்ணிற்கு ஆண் வர்க்கம் என்றால் பிடிக்காதோ???

தலையில் வைத்த கையை எடுக்கவில்லை அவன். நேற்றுத் தான் வரைந்த சித்திரங்களைப் பார்க்கலாம் என்று அவற்றின் திரையை விலக்கினால்!! ஆஹா!! என்ன இது?? தன்னை அறியாமல் தன் இறந்த குழந்தைகளையே வரைந்திருந்தான் அவன். கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றாய்ப் பெருகி ஓட ஆரம்பித்தது. ஸ்டுடியோவின் கதவை யாரோ திறக்கும் சத்தம். ஆம், வீட்டிலேயே அருகேயே ஸ்டுடியோ வைத்திருந்தான் அவன். வீட்டை ஒட்டியே அலுவலகமும் அமைந்திருந்தது வசதியாகவே இருந்தது. யார் வருகின்றார்கள் எனத் திரும்பிப் பார்த்தான். அவன் மனைவியே தான். கையில் அந்தக் குழந்தையும். யாரோ பெற்ற குழந்தை! அதன் முகத்தைப் பார்த்தால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல் இருந்தது.

தாயைக்கட்டி அணைத்துக் கொண்டிருந்தது. அவன் மனைவி கையில் காலை ஆகாரத்துடன் காஃபியும் இருந்தது. மெல்ல வந்து அவனருகில் அமர்ந்தாள் அவள். அவன் பார்த்துக் கொண்டிருந்த சித்திரங்களை அவளும் பார்த்தாள். கண்களில் கண்ணீர் பெருகியது. என்ன இருந்தாலும் பெற்ற தாயல்லவா?? கணவனைப் பார்த்தாள். அவள் நினைத்தது, என்னமோ தவறு செய்துவிட்டார், இந்தக் குழந்தையை வளர்ப்பதால். இன்று பூராவும் இவரோடு கழித்து விட்டால்?? கொஞ்சம் சமாதானம் அடைவார். அப்போது மெல்ல இந்தக் கண்ணான கண்மணியைப் பற்றி எடுத்துக் கூறிச் சொன்னால் சமாதானம் அடைவார். கணவனிடம் சமாதானமாகவே பேசத் தொடங்கினாள். இந்தக் குழந்தை வந்ததில் இருந்து இல்லாத அன்பை மனைவியிடம் கண்டான் கணவன். திடீர்னு என்ன என்று தோன்றியது. அடுத்த கணம் தன் மேலேயே கோபம் வந்தது. எவ்வளவு அந்நியோனியமாய் வாழ்க்கையைக் கழித்தோம்??இப்போ என் அன்பு மனைவியை நான் சந்தேகப் படும்படியான சூழ்நிலையா??? பெருமூச்சு விட்டான்.

கணவன் தோள்களில் தன் கைகளை வைத்தாள் மனைவி. அவளை, அவனும், அவனை அவளும் நீண்ட நேரம் இமைக்காமல் பார்த்தார்கள் அவன் மனதில் திடீரென ஓர் எண்ணம். என்ன இருந்தாலும் நமக்கென ஓர் ஆண்குழந்தை கூட இல்லையே?? இன்றிரவு, இன்றிரவு மட்டும் இவள் சம்மதித்தால், ஆஹா, ஓர் ஆண்குழந்தைக்கு முயலலாமே?? நாம் பெற்றெடுத்திருக்கும் ஒரே பெண்குழந்தை தனியாகப் போகக் கூடாது என்றால் சம்மதிப்பாளோ?? மெல்லப் பேச்சைத் தொடங்கினான். கணவனின் எண்ணம் புரிந்தது அவளுக்கு. கணவனின் ஆசையை மறுக்கும் எண்ணம் அவளிடமும் இல்லை என்றாலும் அடுத்து ஓர் குழந்தைக்காக என்பதை நினைத்தால், கொஞ்சம் யோசனையாக இருக்கிறது. ஏற்கெனவே மூன்று குழந்தைகளைப் பறி கொடுத்தாச்சு. இன்னும் இருப்பது ஒரு பெண் குழந்தைதான். இந்தக் குழந்தைதான் அவளுக்குத் துணையாக இருப்பாளே??

என்றாலும் உடனேயே கணவனிடம் சொல்லிவிடக் கூடாது. சற்றே பொறுத்து அவன் மனம், உடல் அமைதி அடைந்திருக்கும்போது சொல்லவேண்டும். அவ்வளவில் அவள் கணவனுக்குச் சம்மதம் என்பதை மட்டும் அவனுக்குப் புரியும் வகையில் தெரிவித்துவிட்டுக் குழந்தையுடன் சென்றாள். கணவனுக்கோ தலை கால் புரியவில்லை. இன்றிரவு அவள் நம்மிடம் மயக்கத்தில் இருக்கும்போது அந்தக் குழந்தையைப் பற்றி அவள் மனதில் பதியும் வண்ணம் நன்கு எடுத்துச் சொல்லி அதை அவளிடமிருந்து பிரிக்க வேண்டும். சாத்தான் குழந்தை! எங்கிருந்து வந்தது??? அன்று பூராவும் இந்தக் கனவுடனேயே அவன் பொழுது போயிற்று. கேட்டிருந்த இரு தியேட்டர்காரர்களுக்குத் தேவையான கேலிச் சித்திரங்களை வரைய ஆரம்பித்தான். மதிய உணவும் முடிந்தது. மாலை அவன் காலாற நடந்துவிட்டு வரலாம் என்று சென்றான். மனைவி வராதது இப்போது அவனைப் பாதிக்கவில்லை. இரவு பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தான். திரும்பி வந்தவன் இரவு உணவுக்காகக் காத்திருக்கும்போது மனைவி வந்தாள் முகத்தில் அப்பிய ஏராளமான கவலையுடன். அவனை அழைத்தாள்.

அந்தப் புதிய குழந்தையின் பெயரைச் சொல்லி அதை வந்து பார்க்கும்படிக் கூப்பிட்டாள். என்ன இது? சாதாரணமாக நம்மை அழைக்க மாட்டாளே?? கணவன் அவளோடு சென்றான். குழந்தையின் தொட்டிலைப் பார்த்தான். குழந்தை சுருண்டு படுத்திருந்தது. இந்தக் குழந்தையாவது சுருண்டு படுக்கிறதாவது?? அவனுக்கு ஏதோ சந்தேகம். குழந்தையின் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னாள் மனைவி. அரை மனதோடேயே தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் அனலாய்த் தகித்தது. மருத்துவரை வரவழைக்கட்டுமா எனக் கேட்டான் மனைவியிடம். அவள் ஆமோதிக்க மருத்துவர் வந்து குழந்தையைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டுக் குழந்தைக்குப் பொன்னுக்கு வீங்கி(mumps) என்றும், சரியாகிவிடும் இரண்டு, மூன்று நாட்களில் என்றும் சொன்னார். கூடவே இதே ஆண் குழந்தை என்றால் அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என்றும் சொல்லிவிட்டு அவளையும், அவனையும் பார்த்து விளையாட்டாய்ச் சிரித்துக் கொண்டே மேலும் சொன்னார். உன் கணவனை நெருங்க விடாதே. இது ஒட்டுவாரொட்டி போல. இந்தப் பொன்னுக்கு வீங்கி உன் கணவனுக்கு வந்தால், அப்புறமாய் அவனுக்குச் சந்ததிகளை உண்டாக்கும் ஆற்றலே போய்விடும் என்று சொன்னார். மனைவி வெட்கத்துடன் மையமாய்ச் சிரிக்கக் கணவனுக்குச் சுருக்கென்றது.

அன்றிரவு அவன் வழக்கம்போல், அதாவது இந்தக் குழந்தை வந்து சேர்ந்ததும் நடப்பது போன்ற வழக்கத்துடன் தனியாகவே படுத்துக் கொண்டிருந்தான். ஏற்கெனவே அவன் மனைவி இந்தக் குழந்தையை அவனுக்குப் பிடிக்காது என்பதால் அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முன்வருவதில்லை. இப்போது எல்லாம் கூடி வரும் சமயம் இந்தச் சனியன் உடம்பை வரவழைத்துக் கொண்டுவிட்டதே! இதான் சாக்குனு அவள் இங்கே எட்டிக் கூடப் பார்க்கலையே?? என்ன செய்வது? திடீரென ஓர் யோசனை, கணவனுக்குள்ளாக. ஆஹா, அந்த மருத்துவர் சொன்னது!! அந்தக் குழந்தை பக்கம் போகக் கூடாது என்று சொன்னாரே??? நல்லவேளை! சனியன் வராது இங்கே! படுக்கை அறைக் கதவைச் சும்மாச் சாத்திவிட்டு நிம்மதியாகத் தூங்கினான் அவன். காலை எழுந்திருக்கும்போதே சின்னக் கால்களும், கைகளும் அவனைச் சுற்றி அணைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவனாகத் தன்னோட பெண்தான் என நினைத்த வண்ணம் அந்தக் கால்களையும், கைகளையும் சிறு உடலையும் சேர்த்துத் தூக்கி நெஞ்சோடு அணைத்த வண்ணம் எழுந்து உட்கார்ந்தான். அவன் கையில் இருந்ததைப் பார்த்த அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அது, அந்தக் குழந்தை, யாரோ பெற்றெடுத்துப்போட்டுவிட்டுப் போன அந்தப் பெண் குழந்தை! தூங்கிக் கொண்டிருக்கோ? அவன் நினப்புப் புரிந்தாற்போல சற்றே கண் திறந்து அவனைப் பார்த்தது அது. பார்த்த பார்வை! ஏளனமாய்க் கண்களாலேயே சிரிக்கிறதோ அது???? பதினையாயிரம் தேள்கள் ஒரே சமயத்தில் கொட்டினாற்போல் துடித்தான் அவன்.

5 comments:

  1. Hi nice one...

    Read tamil kavithaigal from http://kaviulagam.com

    ReplyDelete
  2. Cool flow in the story line. Thrilling.. when i get next part of the story?

    ReplyDelete
  3. வாங்க பச்சை, முதல் வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  4. வாங்க மணிவண்ணன், தமிழில் எழுத முடியலையா??? :( முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  5. டாப் கியரில் போறீங்களே! கலக்குங்க.. இம்புட்டு நான் இந்த திறமையை எங்க பதுக்கி வச்சு இருந்தீங்க..

    ReplyDelete