Tuesday, June 2, 2009

காயத்ரி மந்திரத்தை!

உண்மையில் எண்ணங்கள் பதிவில் எழுதி இருக்கணும், இதை எப்போவோ. ஆனால் எழுத முடியலை. இப்போ தி.வா. காயத்ரி மஹா யக்ஞம் பற்றி எழுதி இருக்கவும் நினைவில் வந்தது.
**************************************************************************************

அக்காவும், தம்பியும் எப்போவுமே ஏழாம்பொருத்தம் தான். அக்காவுக்குப் பதினோரு வயசு. தம்பிக்கு ஏழு வயசு. ஒருத்தருக்கொருத்தர் உதவியா இருக்கணும்னே அப்பாவும், அம்மாவும் நினைச்சு இருவரையும் ஒரே பள்ளியில் சேர்த்திருந்தார்கள். பள்ளி நேரம் காலை சீக்கிரமாய் ஆரம்பிக்கும். வீட்டில் இருந்து பதினைந்து கிமீ தள்ளி அப்பாவின் அலுவலகத்துக்கு எதிரே பள்ளி. மின்சார ரயிலில் தான் செல்லவேண்டும். காலை 6-45-க்கு மின் வண்டியை விட்டால் பின்னர் காலை 7-25-க்குத் தான் இந்தப் பள்ளி வரை செல்லும் அடுத்த மின் வண்டி. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் காத்து இருக்கணும். பள்ளிக்கு நேரம் கழித்துச் செல்ல முடியாது. வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. பெற்றோர் தகுந்த காரணம் காட்டி மறுநாள் பள்ளிக்குக் கடிதம் கொடுக்கணும். இந்த மாதிரி மூன்று நாள் பள்ளிக்குத் தாமதம் ஆனால் உடனேயே பள்ளியை விட்டு ஏன் விலக்கக் கூடாதுனு கேட்டுக் கடிதமும், உடனடியாக மறுசேர்க்கைக்கான படிவமும் வரும். ஆகவே தாமதம் ஆகாமல் அனுப்பணும்.

காலை நேரம் எப்போவும் வேலை அதிகம் தான் அம்மாவுக்கு. நேரம் கழிச்சு எழுந்திருக்கும் சித்தப்பா, தாத்தாவுக்குக் காஃபி. அப்பாவுக்குக் காலை டிபன், காரியரில் சாப்பாடு. இவங்க இருவருக்கும், காலை டிபன், பள்ளியில் இடைவேளையில் சாப்பிட உணவுனு தயார் செய்யணும். இதில் ஒருத்தருக்குப் பிடிச்சது இன்னொருத்தருக்குப் பிடிக்காது. இரண்டு பேருக்கும் பிடிச்சது சப்பாத்தி மட்டுமே. அன்னிக்கும் சப்பாத்திதான் சாப்பிட, கையில் எடுத்துச் செல்ல இரண்டுக்குமே. சாப்பிடும்போதே இரண்டு பேருக்கும் சண்டை வந்தாச்சு. யார் பக்கமும் அம்மா பேச முடியாது. அப்பாவோ கண்டிக்கும் டைப் இல்லை. இது எல்லாம் ஒரு விஷயமே இல்லைனு போயிடுவார். ஒருத்தரை ஒருத்தர் முறைச்சுட்டு இரண்டு பேரும் பள்ளிக்குக் கிளம்பிப் போனாங்க.

சண்டை ரயில்வே ஸ்டேஷன் போனதும் உச்சத்துக்குப் போயிருக்கு. அம்மாவுக்கோ அப்பாவுக்கோ அது தெரியாது. அவங்க சொல்லி இருப்பது இரண்டு பேரும் கூடியவரையிலும் சேர்ந்தே வரணும்னு. ஆனால் அவங்க அன்னிக்கு வேறே வேறே பெட்டியிலே ஏறிப் போயிருக்காங்க. மத்தியானம் சாப்பிடும்போதும் அக்காவும், தம்பியும் சேர்ந்து சாப்பிடலை. அக்கா தனியாத் தன் சிநேகிதர்களோடும், தம்பி தனியாவும் சாப்பிட்டிருக்காங்க. மாலை பள்ளிவிட்டதும், அக்கா பள்ளிக்கு எதிரே இருக்கும் ரயில் நிலையத்துக்கு வந்தாள். அங்கே தம்பி இருக்கானானு பார்த்தாள். தம்பி இல்லை. ரயில் அங்கே இருந்தே கிளம்பும் என்பதால் தயாராய் நின்னுட்டு இருந்த ரயிலில் சில மாணாக்கர்கள் ஏறி இருந்தனர். தம்பி அதில் இருப்பான் என நினைத்துக் கொண்டு அக்கா ஏறி விட்டாள். ரயிலும் சரியான நேரத்துக்குக் கிளம்பியது. ராணுவப் பகுதிக்குச் செல்லுவதால் ரயில் நேரம் தப்பாமல் வந்து, நேரம் தப்பாமல் கிளம்பியும் விடும்.

வீடு இருக்கும் ரயில் நிலையப் பகுதிக்கு வந்ததும் அக்கா இறங்கினாள். மனதில் கொஞ்சம் நெருடல். தம்பி என்ன இருந்தாலும் சின்னப் பையன். நாலுவயசு சின்னவன். மூணாம் வகுப்புத் தான் படிக்கிறான். விட்டுட்டு வந்துட்டோமே? சரி, போனால் போகிறது. இப்போ இறங்கவும் கூடவே கூட்டிண்டு போயிடலாம். அக்கா ரயில் நடை மேடையில் சுற்றும் முற்றும் பார்த்தாள். அங்கே அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் இவர்கள் இருவரையும் சேர்த்து இன்னும் மூன்றே பேர்தான் அதில் மூன்று பேர் முந்தைய நிலையத்தில் இறங்கி இருக்க, இவங்க இரண்டு பேர் மட்டுமே இந்த நிலையத்தில் இறங்குவது வழக்கம். அங்கே அந்தப் பள்ளி மாணாக்கர்களில் அவள் மட்டுமே இருந்தாள். தம்பியைக் காணோம். ரயில் ஊதியது. கிளம்பியும் விட்டது. அக்காவுக்கு என்ன செய்யறதுனு புரியலை. ஒருவேளை முன் வண்டியில் வந்துட்டு வீட்டுக்குப் போயிட்டானோ? தம்பிக்கு அடிக்கடி உடம்புக்கு வரும். அப்படி ஏதாவது வந்து, பள்ளியில் இருந்து முன்னாலே அனுமதி பெற்றுப் போயிருப்பானோ? சரி, வீட்டுக்குப் போகலாம்.

வீட்டுக்குச் சென்றாள். உள்ளே நுழையும்போதே தெரிந்துவிட்டது தம்பி வரலைனு. அவன் வீட்டில் இருந்தால் இத்தனை நாழி ஒரே சத்தமாய் இருக்குமே. அம்மா உள்ளே ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள். தாத்தா வாசலில் உட்கார்ந்திருந்தார். "என்னடி, தம்பி எங்கே? பின்னால் வரானா?" என்று வேறே கேட்டுவிட்டார். பாட்டி கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். சித்தப்பா வீட்டிலேயே இல்லை, வெளியே போயிருந்தார் போல. அப்பா இன்னும் அலுவலகத்தில் இருந்து வரவில்லை. அக்கா ஒரே கத்தாய்க் கத்தினாள். "அம்மா, பையா வந்துட்டானா? தம்பியை வீட்டில் அழைக்கும் பெயர் பையா என்று. உள்ளே வேலையாயிருந்த அம்மா வெளியே வந்தாள்." என்னைக் கேட்டால்? உன்னோடத் தானே வரணும்?" அம்மா கேட்டாள். அக்கா அழ ஆரம்பித்தாள்.

"அம்மா, அம்மா, பையா ரயிலில் தூங்கிப் போயிட்டான் போலிருக்கு. கீழே இறங்கலைனு நினைக்கிறேன்."

"உன்னோடத் தானே உட்கார்ந்துப்பான், நீ எழுப்பலையா?"

அக்கா தயக்கத்துடனேயே, "இல்லை, காலம்பர வீட்டிலே பார்த்தது தான் அவனை. மத்தியானம் என்னோட சாப்பிடக் கூட வரலை. தனியாச் சாப்பிட்டான் போல." அம்மாவுக்குக் கோபம் வந்தது. ஆனால் இப்போ கோபிச்சுண்டா வேலை ஆகாது.

"அப்போ அவன் தூங்கிட்டான்னு சொன்னியே?"

"வேறே பெட்டியிலே ஏறி இருக்கான். அங்கே இருந்து இறங்கலை." அக்கா நிச்சயமாய்ச் சொன்னாள்.

தாத்தா பதறினார். "இப்போ என்ன செய்யறது?" அம்மா யோசித்தாள். உள்ளே போய் அடுப்பை அணைத்தாள். ரயில் நிலையம் நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பித்தாள். கூடவே பெண்ணும். எதிரே பால்காரி பார்த்துட்டு என்னம்மானு கேட்க விஷயத்தைச் சொல்லிக் கொண்டே அம்மா வேகமாய் நடந்தாள். அதுக்குள்ளே வீட்டிலே வேலை செய்யும் பெண் மூலம் கோயிலுக்குப் போயிட்டு இருந்த பாட்டிக்கும்,பக்கத்துத் தெருவில் இருக்கும் அம்மாவின் அப்பா வீட்டிற்கும் தகவல் போய் அங்கே இருந்தும் தாத்தா, பாட்டி, மாமிகள் வந்துவிட்டனர். இரண்டு தெரு தள்ளி இருக்கும் அத்தையையும் தாத்தா போய்க் கூட்டி வந்துட்டார். எல்லாருமாய் வேலை செய்யும் பெண்ணையும், வீட்டில் குடி இருந்தவங்களையும் காவல் வைச்சுட்டு ரயில் நிலையம் வந்துட்டாங்க. அம்மா அதுக்குள்ளே ஸ்டேஷன் மாஸ்டரைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொல்லவும், அந்த ரயில் நிலையத்தில் இருந்து வரும் ஒரே வண்டி அது மட்டும் தான் என்பதாலும் குறிப்பிட்ட பள்ளி மாணவன் என்பதாலும் கண்டு பிடிக்கலாம், கவலைப்பட வேண்டாம் என்று சொன்ன ஸ்டேஷன் மாஸ்டர் தொலைபேசி மூலம் அடுத்த ரயில் நிலையங்களுக்குத் தகவல் கொடுக்க ஆரம்பித்தார்.

அதுக்குள்ளே அடுத்த ரயிலும் வந்துவிட்டது. அதில் இருந்து அப்பா இறங்கினார். வீட்டு உறுப்பினர்கள் மொத்தமும் ரயில் நிலையத்தில் பார்த்த அவருக்கு அதிர்ச்சி. என்ன விஷயம்னு கேட்கவே அவருக்கும் தகவல் சொல்லப் பட்டது. இதுக்குள்ளே குடித்தனம் இருந்தவர் வெளியே போயிருந்தவர் வீட்டுக்கு வந்ததும் தகவல் தெரிந்து ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார். சென்னை செல்லும் வழியில் தான் போய்ப் பார்ப்பதாய்ச் சொல்லிவிட்டு அவர் சென்னை செல்லும் ரயிலில் ஏற, அப்பாவோ வந்த வழியிலேயே போய்ப் பார்க்கலாம்னு திரும்பி வரும் ரயிலில் ஏறினார்.

4 comments:

  1. தலைவி என்ன கதையிது!!? நல்லாயிருக்கு!

    பட் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்ன்னு தான் புரியல!

    ReplyDelete
  2. வாங்க கோபி, தேடிப்பிடிச்சு வந்ததுக்கு நன்னிங்கோ. கதையின் மூலக் கருவே தலைப்புத் தான். இது ஓர் உண்மைச் சம்பவமும் கூட. :D

    ReplyDelete
  3. @திவா,
    என்னத்தை ஜமாய்க்கிறது? அந்த டென்ஷனில் செருப்புக் கூடப் போட்டுக்காம ஓட்டமாய் ஓடின அம்மாவுக்கு இல்லை தெரியும் அப்புறம் பட்ட உடல் வேதனை???? :)))))))))))))))))))))

    ReplyDelete