Saturday, June 6, 2009

காயத்ரி மந்திரத்தை!

தாத்தா மூணு வேளையும் காயத்ரி மந்திரம் சொல்லுவார். காலை எழுந்ததும் தன்னுடைய நியமங்களை முடித்துக் கொண்டு காயத்ரி 108 சொல்லிட்டுத் தான் காஃபியே. மதியமும் சாப்பாட்டுக்கு முன்னால். சாயந்திரம் தினமும் 1008 சொல்லிடுவார் உடல்நிலையைப் பொறுத்து. இதில் யாருக்காவது உடம்பு சரியில்லைனாலோ, அல்லது வீட்டிலே வேறே ஏதாவது கஷ்டம்னாலோ, மனவேதனைகள் இருந்தாலோ காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பார். இதுக்கு நேரமோ, காலமோ இருக்காது. உடம்பு சரியில்லாதவங்க பக்கத்திலே உட்கார்ந்து சொல்லிட்டு விபூதி நெற்றியில் இட்டுவிடுவார். ஆச்சரியப் படும் விதமாய் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாய்த் தேற ஆரம்பிக்கும். இப்போவும் பேரனைக் காணோம் என்றதும் ரயில் நிலையத்திலேயே உட்கார்ந்து காயத்ரியை ஆரம்பித்தார். 1008 சொல்லி முடிக்கும் முன்னால் குழந்தை வந்துடுவான் என்று சொல்லிட்டு, அங்கேயே ரயில் நடைமேடை பெஞ்சில் உட்கார்ந்தார்.

ஆரம்பிச்சுட்டார். இரண்டு பக்கமும் சென்றவர்கள் யாரும் இன்னும் திரும்பலை. அரை மணி ஆச்சு. சென்னைப் பக்கம் சென்றவர் திரும்பிவிட்டார். பேசின் பிரிட்ஜ் வரைக்கும் சென்று பார்த்து விசாரித்ததாகவும், செண்ட்ரலில் இருக்க வாய்ப்பு இல்லை என்பதால் திரும்பிவிட்டதாயும் சொன்னார். அப்பாவும் திரும்பிவிட்டார். பள்ளி இருக்கும் பக்கம் செல்லவேண்டிய ரயில் அப்போது இல்லை. ஆனால் அங்கே இருந்து ஒரு ரயில் 5-00 மணிக்கு மேல் கிளம்பி வரும். ஒருவேளை பையன் பள்ளியிலேயே இருந்து யாராவது பார்த்திருந்தாலோ, அல்லது அவனே எங்காவது விளையாடிக் கொண்டு இருந்துவிட்டு(அப்படி எல்லாம் சொல்லாமல் போகும் பையன் இல்லை, என்றாலும்) வந்தாலோ அந்த ரயிலைப் பிடித்துவரலாம்.

எல்லாருக்கும் நின்று பார்க்கணும்னு ஆசை. ஆனால் அதிலே வர வாய்ப்பே இல்லைனு சொந்தங்களில் சிலருக்குக் கருத்து. வீட்டிற்குப் போயிட்டுக் காவல்துறையிடம் சொல்லலாமா, அல்லது பள்ளிக்கே திரும்பிப் போய் பிரின்ஸிபாலை வீட்டில் பார்த்துச் சொல்லலாமா என யோசித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். பள்ளியிலிருந்து சென்னை செல்லும் ரயிலும் வந்தது. நடைமேடையில் நின்றது. கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொள்ளாத குறையாக அனைவரும் பார்த்தனர். ஆனால் யாருமே கண்ணில் படலையே?? என்ன இது?? அம்மாவுக்கு மயக்கம் வராத குறைதான். கால்கள் தள்ளாடின. அப்போது, தாத்தாவின் குரல், "ஏ, மொட்டைப்பையா!"(தாத்தா, பேரனை அப்படித் தான் கூப்பிடுவார், ரொம்பச் செல்லமாக) என்று கேட்டது. பையரின் குரலும், "ஹை, தாத்தா, என்ன இன்னிக்கு ஸ்டேஷனுக்கே வந்துட்டீங்க?" என்று கேட்கவே அனைவரும் திரும்பிப் பார்க்க, தாத்தா எஞ்சின் பக்கம் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தார். அங்கே இருந்து பையர் மட்டும் இறங்கி இருந்தார்.

மற்றப் பேர் அனைவரின் கண்களிலும் படாமல் தாத்தாவுக்கு மட்டும் படும்படியாகப் பையர் இறங்கியது ஆச்சரியம் தான். தாத்தாவின் காயத்ரி மந்திரத்தின் மஹிமையா? ஆமாம் என்றே தோன்றியது. அம்மாவுக்கும், அப்பாவுக்குமே அப்படித் தான் தோன்றியது. காயத்ரி மந்திரம் ஆயிரத்தெட்டு தாத்தா முடிக்கும் முன்னரே பையர் வந்துவிட்டார். கடைசியில் விஷயம் என்னன்னா, பள்ளியில் வகுப்பறையைச் சுத்தம் செய்ய வாரம் ஒரு குழு நியமிக்கப் படும். அந்த வாரம் பையரின் குழு வகுப்பறைச் சுத்தம் செய்யணும். அப்போக் கொஞ்சம் நேரம் ஆகி இருக்கு. ஆகையால் இரண்டு வண்டிகளைப் பையர் விட்டுவிட்டார். மூன்றாவது வண்டியில் தான் வர முடிஞ்சிருக்கு. ஆனால் இந்த விஷயத்தை அக்காவிடம் பையர் சொல்லலை, இரண்டுபேரும் காலம்பர போட்டுக் கொண்ட சண்டையில். அக்காவும் பையரின் வகுப்பில் போய்ப் பார்க்கலை. ஆகவே விஷயமே தெரியாமல், பையரைக் காணோமே என்று ஒரு கலக்கம் அனைவருக்கும் ஏற்பட்டாலும், மலை போல் வந்தது, பனி போல் நீங்கியது காயத்ரியின் மஹிமைதான் என்ற நிச்சயம் மட்டும் ஏற்பட்டது.

8 comments:

 1. காயத்திரி மந்திரம் மிகுந்த சக்தி வாய்ந்ததென்பதை நிரூபிக்கும் மற்றுமொரு நிகழ்ச்சி....

  பதிவிற்கு நன்றி...

  ReplyDelete
 2. நல்ல விஷயம்..மகிழ்ச்சி ;)

  ஆமா தலைவி இதுல நீங்க யாரு?? அதை சொல்லவேல்ல! ;))

  ReplyDelete
 3. வாங்க அடியார், இந்தப் பதிவுக்கு முதல்வரவுக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி.

  அது சரி, நீங்க சிவனடியாரா? விஷ்ணு அடியாரா??? உங்க பதிவிலே அது பத்தி ஒண்ணும் இல்லை! :)))))))))))))))

  ReplyDelete
 4. ஹிஹிஹி, கோபி, இதிலே நான் இருக்கேனா என்ன???? எனக்குத் தெரியலையே? உண்மைச் சம்பவம். அதுமட்டும் நிஜம்! :D

  ReplyDelete
 5. நெகிழ வைக்கும் பதிவு.

  ReplyDelete
 6. வாங்க வண்ணத்துப் பூச்சியாரே, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 7. வணக்கம். நல்ல பதிவு. காயத்ரி மந்திரம் பற்றி மேலும் எழுதலாமே...

  ReplyDelete
 8. வாங்க ராஜ், காயத்ரி மந்திரம் பத்தி நான் எழுதறதை விட அதைத் தினமும் சொல்றவங்க எழுதினால் நல்லா இருக்கும் இல்லையா???

  ReplyDelete