Monday, July 6, 2009

பிகாபூ!! ஐ ஸீ யூ!! தொடர்ச்சி!

எவ்வளவோ சொன்னான் கணவன் மனைவியிடம். இப்போது உயிருடன் இருக்கும் தங்கள் சொந்த ரத்தமான ஒரே பெண்குழந்தைக்கும் ஆபத்து நேரிடக் கூடாது எனத் தான் அஞ்சுவதாயும் சொன்னான். தனக்கும் பொன்னுக்கு வீங்கி வந்தால் தன்னுடைய உடல் நலம் குன்றிக்குறைபாடு உண்டாக்குவதற்காகவே அந்தக் குழந்தை அந்தச் சமயம் அவனை நெருங்கி வந்ததை எடுத்துக் காட்டினான். அதன் பின்னர் அந்தக் குழந்தை அவனிடம் வரவே இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினான். திட்டமிட்டே தான் இந்தப் பெண்ணின் சாமர்த்தியமான, தந்திரமான நடவடிக்கையாலேயே ஸ்டெரிலைஸ் செய்யப் பட்டிருப்பதாகவும், இனி தனக்குக் குழந்தை பிறக்காது என்பதையும் உள்ளம் உருகச் சொன்னான். ஆனால் அவன் மனைவியோ??

என்ன இருந்தாலும் ஒரு பெண் அதிலும் நான்கு குழந்தைகளின் தாய், தன் கண்ணெதிரே தன் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போவதைப் பார்த்துக் கொண்டு எங்கனம் சும்மா இருப்பாள்/ இல்லை, அவள் சும்மா இருக்கவில்லை. இந்தப் பெண் குழந்தையின் திடீர் வரவு அவள் கணவனுக்கு எக்காரணத்தினாலோ பிடிக்கவில்லை. இல்லை, இல்லை அவளுக்குக் கணவனின் நடத்தையின் மேல் துளிக் கூடச் சந்தேகம் இல்லை. ஆனாலும் ஏனோ இவனுக்கு இந்தக் குழந்தையைப் பிடிக்காமல் போயிற்று. காரணம் எல்லாம் ஆய்ந்தறியும் மனப் பக்குவம் அவளிடம் இல்லை. அது மட்டும் இருந்திருந்தால்???? ஆனால் இந்தக் குழந்தை பாவம், ஏதுமறியாச் சிசு. இதைப் போய் சந்தேகப்படுகின்றானே?? முதலில் தங்கள் நாலு மாசக் குழந்தையைத் தொட்டிலில் இருந்து கீழே தள்ளினது இந்தக் குழந்தைதான் என்றான். பின்னர் தங்கள் இரண்டாம் மகன் தவறான மாத்திரைகளை எடுத்துக் கொண்டது இந்தப் பெண்ணினால் தான் என்றான். இப்போது மூத்த மகனைக் குளியல் தொட்டியில் தன் தலையில் கட்டி இருந்த நாடாவினால் கொன்றது இந்தக் குழந்தைதான் என்றும் அதற்குச் சாட்சி அவள் பையன் கையில் இருந்த அந்த நாடாவே என்கின்றான்.

ம்ம்ம் ஒன்று இவனுக்கு மூளை குழம்பி இருக்கவேண்டும். இல்லை எனில் வேறு ஏதோ காரணம் இருக்கவேண்டும். தன் குழந்தைகளைத் தானே கொன்றிருப்பானோ?? அவள் சந்தேகம் அதிகமானது. தான் பெற்றெடுத்தவற்றில் மிஞ்சி இருக்கும் ஒரே பெண் குழந்தையின் மேல் தன் கணவனுக்கு அதீதப் பாசம் என்பதையும் அவள் அறிவாள். பார்க்கலாம் என்ன நடக்கின்றது என. மனம் வெறுத்து ஸ்டுடியோவின் உள்ளே அமர்ந்திருந்தான் கணவன். வெளியே தோட்டத்தில் ஊஞ்சலின் ஆட்டமும், குழந்தைகளின் குதூகலக் கும்மாளக்குரலும் கேட்டது அவன் மனதில் உறைக்கவில்லை. மெல்ல எழுந்து செய்வதறியாது ஜன்னலுக்கு அருகே வந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பெண், ஒரே பெண் லூசி வெள்ளை நிற ஆடை ஒன்றை அணிந்த வண்ணம் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தாள். லூசியிடம் அவனுக்கு மிகவும் பாசம், அன்பு அதிகம். மூன்று ஆண் குழந்தைகளின் நடுவே ஒரே பெண் மட்டுமல்ல. சமயங்களில் அவனிடம் ஒரு தாயைப் போல் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்ளும். பொன்னிறக் கூந்தல் அலை பாய, ஒரே ரோஜாப்பூவுக்கே கையும், காலும் முளைத்து எழுந்து வந்தாற்போன்ற நிறத்துடன் வெண்ணிற ஆடையில் ஒரு குட்டித் தேவதை போல் ஆடிக் கொண்டிருந்தாள். ஊஞ்சலை யாரோ ஆட்டிக் கொண்ட்ட்ட்ட்ட்....... என்னது// யார் ஆட்டுவது ஊஞ்சலை?? கடவுளே! அந்தக் குட்டிப் பிசாசு அல்லவோ ஆட்டுகின்றது. என் லூசி, லூசி, லூசிக் கண்ணே, உனக்கு எதுவும் ஆகக் கூடாதே?? சட்டென உண்மை உள்ளத்தில் உறைக்க அவன் வெளியே பாய்ந்தான்.

ஊஞ்சல் வேகமாய் ஆடியது. அந்தப் பெண் ஊஞ்சலை வேகமாய் ஆட்டி லூசியை எவ்வாறேனும் கீழே தள்ள முயன்று கொண்டிருந்தது அவனுக்குப் புரிந்தது. லூசி பயத்தில் அலற ஆரம்பித்திருந்தாள். தன்னை அறியாமல் அவளுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லிக் கொண்டே ஊஞ்சலின் அருகே சென்ற அவன் அந்தப் பெண் பிசாசை வேகமாய்த் தள்ளிவிட்டான். அது கீழே விழவில்லை. ஆனால் அவனை பார்த்த பார்வை இருக்கிறதே!! அவனால் ஆயுளுக்கும் அந்தப் பார்வையை மறக்க முடியாது. உலகத்து வெறுப்பை எல்லாம் ஒன்று திரட்டிக் கண்களின் வழியாகக் கொண்டு வந்து அவனைப் பார்த்தது. இன்னும் ஒரு நிமிஷம் தாமதித்து வந்திருந்தாயானால் என் வேலை முடிந்திருக்கும். இப்போ நான் இன்னும் ஓர் நாள் பார்க்கவேண்டும். இந்த முறையிலும் கொல்ல முடியாது. வேறு வழி யோசிக்க வேண்டும். என் எதிரியே நீதான் என இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே எனக்குப் புரிந்துவிட்டது. உன்னையும் உன் மனைவியையும் பிரிக்கிறேன் பார்!

இத்தனையையும் அந்த ஒன்றரை வயதுக் குழந்தை வாயினால் பேசவில்லை. ஆனால் அவனுக்கு ஒவ்வொரு எழுத்தாகப் புரிந்தது. அவனுக்குப் புரிந்தது என்பதை அந்தக் குழந்தையும் புரிந்து கொண்டது. அதே சமயம் தான் புரிந்து கொண்டதை அந்தக் குழந்தை உணர்ந்துவிட்டது என்பதை அவனும் உணர்ந்தான். அவன் உடல் சில்லிட்டது. மரம்போல் நின்றான். லூசி மெல்லக் கீழே இறங்கி அவனைத் தொட்டாள்.

"அப்பா, அப்பா!!!!" லூசி அழைத்தாள். அவன் கைகள் தன்னை அறியாமல் லூசியைக் கட்டிக் கொண்டன. வாய் விட்டு விம்மி அழுதான் அவன். அந்தப் பிசாசுக் குழந்தையோ அவனைப் பல மடங்கு வெறுப்போடு திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றது. இனி லூசியை ஒரு கணமும் பிரியாமல் இருக்கவேண்டும் என அவன் மனதில் உறுதி பிறந்தது. அது புரிந்தாற்போல் அந்தக் குழந்தை திடீரெனத் திரும்பிப் பார்த்து அவனை நோக்கி ஏளனமாய்ச் சிரித்தது. அவன் உடல் நடுங்கியது.

4 comments:

 1. :) அடிச்சு ஆடுறீங்க :) கலக்குங்க

  ReplyDelete
 2. ஆகா...அந்த பெண் குழந்தைக்கும் பிரச்சனையா!!..அய்யோ!!

  ReplyDelete
 3. அட, இது என்ன புலி, உங்க கமெண்ட் இத்தனை நேரம் எங்கே ஒளிஞ்சுட்டு இருந்தது???

  கோபியோட கமெண்ட் வெளியிட்டப்போ காணோம்?? வந்ததுக்கு நன்னிங்கோ!

  ReplyDelete
 4. கோபி, ஆமாம், அந்தக் குழந்தைக்கும் பிரச்னை தான், என்ன செய்ய?? அது ஒண்ணு மட்டும் இருந்தாலும் இந்தக் குழந்தைக்குக் கஷ்டம்னு நினைக்குது போல! :)))

  ReplyDelete