Wednesday, July 8, 2009

பிகாபூ!!! ஐ ஸீ யூ!!!!!

லூசிக்குப் பிடித்த விளையாட்டு இந்த ஒளிந்து விளையாடுவதுதான். குழந்தை எங்கே ஒளிஞ்சுண்டாலும் அவன் கண்டு பிடித்துவிடுவான். அது கொஞ்சம் ஏமாற்றமாய் இருக்கும் அவளுக்கு. அதனால் கொஞ்ச நேரம் தேடுவது போல அப்படியும், இப்படியுமாய் அலைந்துட்டுக் கண்டு பிடிச்சேன் என்று சொல்லிக் கண்டு பிடித்ததைக் காட்டிக் கொள்வான். மலர்ந்து சிரிப்பாள் குழந்தை. பூ ஒன்று மலருவதைப் போலவே சிரிப்பும் இருக்கும் அவளுக்கு. பூவிலே மொய்க்கும் வண்டுகள் போன்ற இரு கண்களால் அவனைப் பார்த்துச் சிரிக்கும்போது சொர்க்கமே கையில் வந்துவிட்டது போல் தோன்றும். பெருமூச்சு விட்டான் அவன். இந்தக் குழந்தையாவது நிலைத்து இருக்கவேண்டுமே. என்ன செய்யறது?? குழந்தையை ஒரு கணமும் பிரியாமல் தன்னுடனேயே வைத்துக் கொள்ள முடிவு செய்தான்.

தாயிடம் போகாதே என எவ்வாறு சொல்லுவது? அங்கே தான் தர்மசங்கடம். என்ன இருந்தாலும் இன்னும் அவ்வளவு தூரம் மனைவியிடம் கோபம் இல்லை அவனுக்கு. அவள் புரிந்து கொள்ளவில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். ஆகவே குழந்தை தாயைத் தேடிச் செல்லுவதைத் தடுக்கவில்லை. அன்று மாலையில் தோட்டத்தில் நீச்சல் குளத்தினருகே அமர்ந்திருந்தான். குழந்தைகளின் உற்சாகக் கூக்குரல் கேட்டது. சற்று நேரம் ஒன்றும் புரியாமல் பார்த்துவிட்டுப் பின்னர் புரிந்து கொண்டான் தன் பெண் தான் அந்தப் பிசாசோடு விளையாடுகிறது என. எப்படியாவது பிரிச்சுக் கூட்டி வரவேண்டுமே?? எங்கே விளையாடுகின்றாள்?? சுற்றும் முற்றும் பார்த்தான். குரல் மட்டும் கேட்டது. உற்றுக் கவனித்த போது மேலே இருந்து கேட்டது குரல்கள். அவன் ஸ்டுடியோவில் பழைய சாமான்கள் போட்டு வைக்கும் பரண் ஒன்று இருந்தது. அங்கே இருந்தா குரல் கேட்கின்றது??

அட, ஆமாம், அடக் கடவுளே, அந்தப் பரணில் எப்படி ஏறினார்கள்?? சற்று நேரத்திற்கெல்லாம் விடையும் கிடைத்தது அவனுக்கு. குழந்தைகள் படுக்கும் அறை ஜன்னலில் இருந்து வரும் குறுகலான படிகளில் இறங்கி, இங்கே வந்து ஏறி இருக்கின்றனர். ஆனால் அந்த ஜன்னல் இப்போ அடைத்திருக்கிறதே? எப்படி??? யார் உள் தாழ்ப்பாள் போட்டார்கள்? குழந்தை மீண்டும் இறங்கி ஜன்னல் வழியாகச் செல்வது என்றால் அவளால் முடியாதே? பயத்தில் கீழே விழுந்துவிட்டால்?? படிகள் வேறே ஒழுங்கில்லை. கொஞ்சம் வழுக்கினாலும் அவ்வளவுதான். ஓட்டமாய் ஓடினான் வீட்டுக்குள்ளே. உள்ளே சென்று அந்தப் பிசாசுக் குழந்தையின் உண்மை சொரூபத்தைப் புகைப்படம் எடுத்துக் காட்டவேண்டிக் கையில் காமிராவும் எடுத்துக் கொண்டு ஓடினான் ஸ்டுடியோவை நோக்கி. விளையாட்டு முழுவீச்சில் ஆடப் பட்டுக் கொண்டிருந்தது.

லூசியை அந்தக் குட்டிப் பிசாசு ஒளிந்து கொண்டு தேடச் சொல்லி இருக்கிறது போல. அது எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறதோ தெரியலை. நிமிர்ந்து பார்த்தான் ஒரு கணம் லூசியின் முகம் தெரிந்தது. அப்பாடா! ஒரு நிம்மதியும் பிறந்தது அவன் மனதில். ஆனால் இது என்ன லூசி ஏன் பயத்தில் கத்துகிறாள்??அப்பா, அப்பா, என்னைக் காபபாத்து என்கிறாளோ?இந்தச் சமயம் பார்த்து மனைவியும் இல்லை. எங்கே போனாள்?? இன்னும் வேகமாய் ஓடினான். இப்போது அவனுக்கு அந்தக் குட்டிப் பிசாசின் பின் பக்கம் தெரிந்தது. அது மெதுவாய்ப் பின்னால் வந்து அவன் பெண்ணை, அவனின் கண்ணின் கருமணியை, ஒரே குழந்தையை வேகமாய்க் கீழே தள்ளியது. அவன் ஓடிப் போய்த் தடுப்பதற்குள்..........

முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்து விட்டது. வாழ்க்கையே முடிந்து விட்டது. அவனின் ஒரே பற்றுக் கோடையும் இழந்துவிட்டான். இனி என்ன?? மனைவி துணை வருவாளா?

8 comments:

 1. மிரட்டல் தொடர்கிறது. அடுத்த பகுதியோடு முடியும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. ஆகா..தலைவி என்ன இப்படி போகுது கதை...அய்யோ இத்தோட முடிவு தான் என்ன...!?

  ReplyDelete
 3. கதை வெறும் கண்ணீரில் முடியுமா? அல்லது ஆனந்தக் கண்ணீரில் முடியுமா?

  ReplyDelete
 4. வாங்க புலி, ஊகம் சரியாத் தான் இருக்கும்! :D

  ReplyDelete
 5. @கோபி, முடிவை நெருங்கிட்டோமில்ல!

  ReplyDelete
 6. நானானி, கண்ணீர்க் கடல் தான்! :(((((படிக்கிறதை அறிந்து சந்தோஷம்! நன்றி.

  ReplyDelete
 7. அடப்போங்க, பேய்ன்னு தெரிஞ்ச பிறகு கழுத்தை நெரிக்கிறதை விட்டுட்டு இப்படி ஒவ்வொண்ணா பறி கொடுத்துகிட்டு...ம்ம்ம் கடைசிலே இருக்கபோறது பேயா? பாயா?

  ReplyDelete
 8. வாங்க திவா, கடைசியிலே இருக்கப் போறது பேய் தான், பாய் இல்லை! :((((( போராட்டமே அதுக்குத் தானே???

  ReplyDelete