Thursday, July 2, 2009

பிகாபூ!! ஐ ஸீ யூ!! தொடர்ச்சி!

குழந்தை அவனை விட்டு அந்தண்டை இந்தண்டை நகரவில்லை. எப்படியாவது தன்னிலிருந்து பிரித்துத் தாயிடம் விட நினைத்தால் அது அவனை அட்டை போல் ஒட்டிக் கொண்டது. அவன் மனைவி வேறே உடல் நலம் சரியில்லாத குழந்தை, அதிசயமா அவன் கிட்டே வந்து ஒட்டிக்கிறது. அதுக்கு இப்போ தந்தையின் அரவணைப்புத் தேவை போல. விரட்டாதீங்க என்று கண்டிப்போடு கட்டளை போடவே வேறே ஒன்றும் செய்ய முடியவில்லை. மெல்ல மெல்லக் குழந்தைக்கு உடல் நலம் சரியாப் போச்சு. ஆனால் அவனுக்கு வந்துவிட்டது இந்தப் பொன்னுக்கு வீங்கி. நல்ல ஜுரம் வேறே. அந்தப் பிசாசுக் குழந்தையோ, வந்த காரியம் முடிஞ்சாப்பல அவனுக்கு ஜுரம் வந்ததுமே அது அம்மாவிடம், அதான் அவன் மனைவிதானே தாய்க்குத் தாயாக் கவனிக்கிறா?? அவளிடம் சென்றுவிட்டது. இந்தக் குழந்தை வெகு தந்திரக் காரக் குழந்தையாக இருக்கிறதே?? கவலைப்பட்டான் கணவன். மருத்துவரைக் கலந்தாலோசித்தான். நூற்றில் ஒருவருக்கு எந்தக் குறையும் ஏற்படாது எனவும், அந்த ஒருவராக அவன் இருக்கப் பிரார்த்திக்கலாம் எனவும் மருத்துவர் சொன்னார்.

உடல்நலம் சீரானது அவனுக்கும். அவனுக்கு உடனேயே மனைவியைப் போய்ப் பார்க்கவேண்டும். அவளுடன் ஓர் முழு இரவைக் கழிக்கவேண்டும் என்ற ஆவல் தீரவில்லை. மேலும் அவன் ரத்தம், அவன் ஊன், அவன் உயிர் எல்லாவற்றிலும் அவனும், அவளும் இணைந்த ஒரு குழந்தை வேண்டும் அவனுக்கு. அவனுடைய ஒரே பெண்ணிற்குத் துணை வேண்டும். அது ரத்த சம்பந்தமாக இருக்கவேண்டும். அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டோ, புரிந்து கொள்ளாமலோ அல்லது பல மாதங்களுக்கு மேல் கிட்டத் தட்ட ஒரு வருஷம் ஆகிவிட்டதோ? பிரிந்து இருந்ததாலேயே என்னமோ அவன் மனைவியும் அவனுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்தாள். ஆயிற்று, ஒரு மாதம், இரு மாதம் மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆறுமாதத்துக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் அவன் மனைவி கருவுறவில்லை. அவள் அது பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்தாள். ஒருவேளை கர்ப்பத் தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்கின்றாளோ?

அவளறியாமல் அவள் அறையையும், அலமாரியையும் உடை வைக்கும் இடங்களையும் மற்ற அந்தரங்க இடங்களையும், அவனுக்கும், அவளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசிய இடங்களையும் சோதனை போட்டான். ம்ஹூம். எதுவும் இல்லை. கவலையில் ஆழ்ந்தான் கணவன். மருத்துவரைப் பார்க்கவேண்டியது தான். இங்கே வேண்டாம். உள்ளூர் என்பதாலும் மருத்துவர் குடும்ப மருத்துவர் என்பதாலும் வெளியே தெரியும். ஆகவே லண்டன் சென்று இந்தக் குழந்தை பிறக்கச் செய்வதில் கை தேர்ந்த மருத்துவர்களில் ஒருவரிடம் சென்றான். எல்லாவிதமான சோதனைகளும் செய்யப் பட்டன. அவனுடன் பேசினார் மருத்துவர். அவன் மனைவியிடமும் பேசவேண்டும் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் விஷயத்தை எடுத்துச் சொல்லி மனைவிக்குத் தெரிய வேண்டாம் என்றும் சொல்ல, மருத்துவர் அவனை விசித்திரமாய்ப் பார்த்தார். கடைசியில் ஒரு முக்கியப் பரிசோதனை நடத்தப்பட்டு முடிவும் வந்தது. அவனுக்குக் குழந்தையே இனிமேல் பிறக்காது. வந்து போன பொன்னுக்கு வீங்கியால் அவனுக்கு இந்தக் குறை ஏற்பட்டுவிட்டது. He is sterilised!

2 comments:

 1. ஆகா....தலைவி நான் கதை முடிஞ்சிடுச்சுன்னு நினைச்சேன்...இப்பதான் மீதி பகுதி எல்லாத்தையும் படிச்சேன்...கலக்கலாக போகுது ;)

  ReplyDelete
 2. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

  நட்புடன்
  செய்திவளையம் குழுவிநர்

  ReplyDelete