Wednesday, September 16, 2009

என்ன தவம் செய்தேன்!

பார்க்கிறவங்க எல்லாம் கேட்கிறாங்களே! என்னத்தைச் சொல்றது? ரேவதியோட பிரண்டை ரேவதி குண்டா இருக்கிறதைக் கேட்டுத் தொந்திரவு பண்ணினதை எழுதினப்போ இருந்தே இதையும் சொல்லணும்னு. இன்னிக்குத் தான் நேரம் வந்துது. எங்கே? மொக்கை போடக் கூட நேரம் இல்லாம என்ன வெட்டி முறிக்கிறேனு கேட்கிறீங்களா? எல்லாம் நம்ம வழக்கமான கதைதான். 4-வது நாளாக வேலை செய்யற பொண்ணு வரலை. தெருவுக்கு அந்தப் பக்கம் வேலைக்குப் போறாளாம். பார்த்தவங்க சொல்றாங்க, நமக்கு வரலை, நேரம், முகராசி, எதுவேணா வச்சுப்போமே, காசா, பணமா! அதைவிடுங்க, இப்போ நம்ம கதைக்கு வருவோம்.

பார்க்கிறவங்க எல்லாம் கேட்கும் கேள்வி, என்ன உன்னோட கணவர் இப்படி இளைச்சுத் துரும்பா ஆயிட்டாரேனு தான். கூடவே என்னைப் பார்த்து, "நீ இன்னும் இளைக்கணும், சாப்பாட்டைக் குறை! ஆமா, அது என்ன மூக்கிலே கறுப்பா ஒட்டிண்டு? நெத்தியிலே என்ன கருநீலமா பட்டை மாதிரி? கரும்புள்ளி, செம்புள்ளி குத்தினாப்போல " அப்படினு விதவிதமாக் கேள்விகள். என்னமோ நான் வேண்டிண்டு குண்டாய் இருக்கிறாப்போலவும், சாப்பாட்டை வெளுத்துக் கட்டறாப்போலயும் நினைப்பு அவங்களுக்கு. அதோட நிறம் பத்தியும் நிற நிறமாய் விமரிசனம் வரும். ரொம்பவே ஆசைப்பட்டு இந்த மாதிரி ஆயிருக்கேன்னு நினைக்கறாங்களோனு தோணும் சில சமயம். அதுக்கு மட்டும் வேணும்னு தான் இப்படி வேஷம் போட்டிருக்கேன்னு சொல்லலாமானு தோணும். அதுக்குள்ளே நம்ம ம.பா. விடமாட்டார். "அதெல்லாம் அவ ஒண்ணும் சாப்பிடறதில்லை. டாக்டர் 2 இட்லி சாப்பிடச் சொன்னா ஒண்ணு தான் சாப்பிடறா. சாதமும் கம்மிதான் சாப்பிடறா. அது என்னமோ உடம்பு இளைக்க மாட்டேங்குது. சரும வைத்தியர் கிட்டே போனோம், தோலுக்குனு, கடைசியிலே அந்தப் பெண் டாக்டர் தலையிலே கையை வச்சுண்டு உட்கார்ந்துட்டா! ஒண்ணும் பண்ண முடியாதுனு, நான் என்ன மருந்து கொடுத்தாலும் உங்களுக்கு ஒத்துக்க மாட்டேங்குதே! " என்று சொல்லுவார். இதைக் கேட்டதுமே உற்றமும், சுற்றமும் என்னைப் பார்த்து உடனே, "வீட்டிலே நல்லா வேலை செய்யணும், நடக்கணும், தினமும் எக்ஸர்சைஸ் பண்ணணும், யோகா கத்துக்கறது தானே" னு அடுத்த ஆலோசனை. வேலைக்கு ஆளை வச்சுட்டு வாரம் ஏழுநாட்கள் நான் தான் செய்யறேன்னு சொன்னா நம்பவா போறாங்க?? அப்போப் பார்த்து எங்க வீட்டு வேலை செய்யும் பொண்ணு வேலைக்கு வந்து நிக்கும் அதிசயமா! அப்புறம் தோலுக்கு விதவிதமான மருந்துகள், களிம்புகள். எல்லாம் அக்கறையிலே தான் சொல்றாங்கனு தெரியும். என்றாலும் சில சமயங்களில் ரேவதி சொல்றாப்போல் அலுப்பாய் ஆயிடுது.

தினம் தினம் அவருக்கும் சேர்த்து நான் நடக்கிறது அவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? யோகா கத்துட்டு ஏழு வருஷமாச் செய்யறேன்னு சொன்னா உடனே ஒரு தேர்வு வைப்பாங்க, என்ன என்ன யோகா தெரியும் அப்படினு! அதோட பேரெல்லாம் கேட்பாங்க. அவங்க யோகா செய்யறேன்னு சொன்னப்போ நான் பேசாமத் தான் கேட்டுப்பேன் இப்படி எல்லாம் கேட்டதில்லை, கேட்கத் தோணவும் இல்லை, ஆனால் நம்ம மூஞ்சியிலே ஏமாளினு எழுதி ஒட்டி இருக்கோனு தோணுது. நம்மளை இல்லாத கேள்வி கேட்பாங்க. போகிற போக்கிலே உன் உடம்பு இப்படி இருக்கிறது தான் அவருக்குக் கவலை! அப்படினு வேறே சொல்லிடுவாங்க. எனக்குக் கவலை பிச்சுக்கும். அவரைத் தொந்திரவு செய்வேன், நல்லாச் சாப்பிடுங்க, நல்லா நடங்கனு. உடனேயே கோபம் வந்துடும் அவருக்கு. "இதுக்கு மேலே சாப்பிட நான் என்ன பகாசுரனா? அதான் நினைச்ச உடனே நீ அதை வாங்கிண்டு வா, இதை வாங்கிண்டு வானு சொல்றே. நடந்து தானே போய் வாங்கிண்டு வரேன்." அப்படினு சந்தடி சாக்கிலே நான் அடிக்கடி கடைக்கு அனுப்பறேன்னு ஓங்கி ஒரு குட்டுக் குட்டுவார்.

நான் நடக்கிறதுக்கும், சாப்பாடை அளவாச் சாப்பிடறதுக்கும் சேர்த்து வச்சு அவர் இளைச்சுட்டே இருக்கார். இது என்ன அதிசயம்னு தோணிச்சு எனக்கு. இப்படி ஈருடலும், ஓருயிருமா நாங்க இருக்கோமானு நினைச்சுப் பூரிச்ச பூரிப்பிலே இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டேன். கடைசியில் உண்மையாவே அவருக்குக் கவலைதான் தாங்கலைனு புரிஞ்சது. என்ன கவலைங்கறீங்களா? கஸ்தூரியின் நிலைமை பற்றிக் கவலை. அடுத்துக் கண்ணன் பற்றிக் கவலை. இந்த சகுந்தலா இப்படிப் புகுந்த வீட்டுக்காரங்க கிட்டே நடந்துக்கறாளேனு வருத்தம். நந்தினி கதி என்ன ஆகப் போறதோ, சகுந்தலா அவ வாழ்க்கையைக் கெடுத்துடப் போறாளே அம்மா பேச்சைக் கேட்டுண்டு. அடுத்து அர்ச்சனாவின் தங்கை கல்யாணத்துக்குச் சேமிச்சு வச்ச 4 லக்ஷம் ரூபாய் திருடு போயிடுச்சே, கல்யாணம் எப்படி நடக்குமோனு ஒரே குழப்பம். ரேவதி, (இது வேறே ரேவதி) யோட அம்மாவுக்கு இருதய சிகிச்சை நல்ல படியா நடக்கணுமேனு வேண்டாத தெய்வம் இல்லை. எல்லாத்துக்கும் மேலே சந்தியாவின் அப்பாவுக்கு இரண்டாம் திருமணமே நடக்காதப்போ ஏன் அவர் பொய் சொல்லணும்னு ஆத்திரம். கடைசி, கடைசியா இத்தனை வருஷம் ஆகியும் அபி இன்னமும் ஆதியாலே இப்படிக் கஷ்டப் படறாளேனு இது எதிலே போய் முடியும்? அவ தங்கைங்க இரண்டு பேரும் கூடக் கஷ்டப் படறாங்களேனு கவலை, வருத்தம். சாயந்திரம் ஆறரை மணிக்கு ஆரம்பிச்சா ராத்திரி எல்லாம் தூங்காம முழிச்சுட்டு யோசிக்கிறார். அதுவும் ஒரு வருஷம், இரண்டு வருஷமாவா?? கிட்டத் தட்ட ஆறு வருஷமா இப்படிக் கவலைப் படறாரா? உடம்பு இளைச்சே போச்சு. தொந்தியாவது ஒண்ணாவது, எல்லாம் கரைஞ்சு போச்சு! அதிசயம் தான். ஆனால் பாருங்க நான் குண்டாகிட்டே இருக்கேனே,அவருக்காகக் கவலைப்பட்டுக் கவலைப்பட்டு. இந்த அநியாயத்தைக் கேட்பாரில்லையா??? ஒருவேளை அவ்ருக்காகக் கவலைப்படாமல் நானும், சாயந்திரம் ஆறு மணியிலே இருந்து மேலே சொன்னவங்களுக்குக் கவலைப்பட்டால் இளைப்பேனோ??? :P

13 comments:

 1. ரெண்டு மூணு நாளா நீங்க இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டுட்டீங்கன்னு யாராவது சொன்னால்.......

  'அரசி' முடிஞ்ச சந்தோஷத்துலே ன்னு சொல்லிக்கலாம்:-)

  ஆளாளுக்கு ஒவ்வொரு பிரச்சனை. நம்ம ரங்கமணிக்கு இளமை திரும்புது. அதே வேகத்தில் தங்கஸ்க்கு முதுமை வேகமா வருது. பார்க்கிறவக்க எல்லாம் அவருக்கு இளமைத் தோற்றம்னு சொல்லும்போது.......

  ஆமாமாம். கவலை இல்லாம வச்சுக் காப்பாத்தறேன்னு சொல்றென்.

  ReplyDelete
 2. //வீட்டிலே நல்லா வேலை செய்யணும், நடக்கணும், தினமும் எக்ஸர்சைஸ் பண்ணணும், //
  எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு பதிவின் தலைப்பை வெச்சு இருக்கலாம். :))

  பதிவின் மூலம் புலப்படுவது என்னவென்றால்:

  1)சாம்பு மாமா தான் 6 வருஷமா வீட்டு வேலை முழுக்க செய்கிறார். எனவே உடல் இளைத்து இருக்கிறார். :))

  மீதி பாயிண்டை மத்தவங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. :p

  ReplyDelete
 3. நல்லா இருக்கு கூத்து:))
  கவலை வேண்டாம். நடந்தும் இளைக்கவில்லை நான்:)
  கீதா,
  நீங்களும் பர்த்தாவுக்கு ஏத்த பத்தினியா சீரியல் பார்க்க ஆரம்பிச்சுடுங்கப்பா.

  ReplyDelete
 4. \\"என்ன தவம் செய்தேன்!"\\

  தலைப்பே தப்பு தலைவி...இதுல நீங்க எங்க தவம் செய்திங்க!? அப்படி செய்துயிருந்தா இப்போ இளைச்சிருப்பிங்கல்ல ;)))

  ReplyDelete
 5. Yaru ivallam? Unga kuzhanthela illai avar(ma pa ??)Akka tangela? Periya joint family ippovum adhisayam than. AAna appreciate pannathan venum ungalai.Paavum panam tholanjathu kedachchatha?Nagai pannapatta pattil vikkanumna evvalavu kashtamayirukkum.Nallapadi kidaikkatum.
  Weight ilaikka nama evvalavu nadhanthaalum, cardionu sollara heart rate i koottara excercises thaan illaikkum Mrs Shivam. Athu Mudiyallaina, keep up the walking, yoga and eating healthy - I mean (vaay, chevi, kann ella moolama um)

  ReplyDelete
 6. சிலருக்கு பரிந்துரைச்சு வொர்க் அவுட் ஆன சில ஆலோசனைகள்
  1. தயிர் சேத்துக்கிறவங்க அதை விட்டுடுங்க. (ஒரு கரண்டி தயிர்லே 3 கரண்டி தண்ணி சேத்து இது மோர் ன்னா நான் ஒத்துக்க மாட்டேன். வெண்ணையை எடுக்கணும்.)
  2. தினசரி நடை - ஒரு 20 நிமிஷமாவது. லேசா வியர்க்கலேன்னா போதாதுன்னு அர்த்தம்.
  3. டென்ஷன்தான் உடல் பருக்க முக்கிய காரணம். நோ டென்ஷன் நோ வெய்ட். மனசை சமமாக்கப்பாருங்க. ஆன்மீகம்4 டம்மீஸ் படிங்க! :-))
  4. டென்ஷன் அட்ரினலின் ஐ சுரக்க வைக்குது. இது வெயிட் போடறதோட இல்லாம டயாபெடிஸ் உம் கண்ட்ரோல் ஆகாம தடுக்கும்.
  ஆர்காட் வந்துட்டார். நான் போறேண்

  ReplyDelete
 7. வாங்க துளசி, அரசி முடிஞ்சுடுச்சா, நிஜமாவா?? அப்போ நிஜமாவே வெயிட் போட்டிருக்கேன்னு நினைக்கிறேன். என்ன இருந்தாலும் உங்க சுறுசுறுப்பு உங்க ரங்கமணிக்கு வருமா?? ஏதோ நம்மாலானது, உதவி! :))))))))))))))))

  ReplyDelete
 8. //1)சாம்பு மாமா தான் 6 வருஷமா வீட்டு வேலை முழுக்க செய்கிறார். எனவே உடல் இளைத்து இருக்கிறார். :))//

  @வ(அ)ம்பி, தும்பி, என்ன நீங்க செய்யறாப்போலனு நினைச்சுட்டீங்க போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கொஞ்ச நாட்களா தங்கமணி ஊரிலே இல்லையோ??? அதான்! :D

  ReplyDelete
 9. வாங்க வல்லி, நானும் சீரியல் பார்க்க உட்காருவேன், ஆனால் அதிலே வர சந்தேகங்களை எல்லாம் கேட்க ஆரம்பிச்சா அப்புறமா அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போகுது. நீ போய் உன்னோட கணினியிலேயே உட்காருனு துரத்திடறாரே! என்ன செய்யறது? :P :P :)))))))))))))

  ReplyDelete
 10. ஹிஹிஹி, கோபிநாத், அப்படிங்கறீங்க, சரியாத் தான் இருக்குமோ?

  ReplyDelete
 11. வாங்க ஜெயஸ்ரீ, ரொம்பவே விஷயம் தெரியாம இருக்கீங்க? தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்து எத்தனை வருஷம் ஆச்சு? தமிழ்நாடே இப்போ சீரியல் மோகத்திலே மூழ்கிக் கிடக்கே! :((( இவங்க எல்லாம் சீரியல்களில் வர கதாநாயகிகளும், வில்லிகளும், விளையாட்டாக நாங்க இரண்டு பேரும் இப்படிப் பேசிப்போம். நான் அவரை ரொம்பவே உணர்ச்சி வசப் பட்டு அழுதுடாதீங்கனு சொல்லிக் கிண்டல் பண்ணிட்டிருப்பேன். :)))))))))))

  ReplyDelete
 12. //1. தயிர் சேத்துக்கிறவங்க அதை விட்டுடுங்க. (ஒரு கரண்டி தயிர்லே 3 கரண்டி தண்ணி சேத்து இது மோர் ன்னா நான் ஒத்துக்க மாட்டேன். வெண்ணையை எடுக்கணும்.)//

  தயிரெல்லாம் கிடையாது. மோர் தான். மோர்னு சொன்னால் எலுமிச்சம்பழம் பிழிஞ்சு உப்பு, கருகப்பிலை சேர்த்துத் தான் தினமும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வெண்ணையை எடுத்து நெய்யாக்கிடுவேன். வாங்கற பாலிலே வெண்ணெயும் எடுக்கலாம்.

  //2. தினசரி நடை - ஒரு 20 நிமிஷமாவது. லேசா வியர்க்கலேன்னா போதாதுன்னு அர்த்தம்.//

  வலை உலகே அறிந்த செய்தி, நான் நடக்கிறது. ஹிஹிஹி, வியர்க்கலையா? ஆறே ஓடுமே! :P:P:P:P அதுவும் சென்னையில்!


  //3. டென்ஷன்தான் உடல் பருக்க முக்கிய காரணம். நோ டென்ஷன் நோ வெய்ட். மனசை சமமாக்கப்பாருங்க. ஆன்மீகம்4 டம்மீஸ் படிங்க! :-))//

  ஹிஹிஹி, ஆன்மீகம்4டம்மீஸ் படிச்சுட்டுத் தான் டென்ஷனோ?? :P :P :P க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இலவச விளம்பரம்??? சரி, சரி, சரி, கொடுத்துக்குங்க! நானும் வந்து விளம்பரம் கொடுத்துக் கணக்கை நேராக்கிக்கறேன். :))))))))

  //4. டென்ஷன் அட்ரினலின் ஐ சுரக்க வைக்குது. இது வெயிட் போடறதோட இல்லாம டயாபெடிஸ் உம் கண்ட்ரோல் ஆகாம தடுக்கும்.
  ஆர்காட் வந்துட்டார். நான் போறேண்//

  டயபடீஸே கிடையாது. ஸோ நோ பிரச்னை டயபடீஸ் இருக்குமோனு! டென்ஷனிலே வெயிட் போடுமோ என்னமோ, சிலருக்குக் கவலை, டென்ஷனிலே இளைக்கவும் செய்யுதே, ம்ம்ம்ம்ம் நான் அந்த ராசி இல்லை போலிருக்கு! அதிர்ஷ்டம் அவ்வளவு தான்! :))))))))))))))

  ReplyDelete
 13. தாமதமான பதிலுக்கு அனைவரும் மன்னிக்கவும்.

  ReplyDelete