Sunday, October 18, 2009

என் பயணங்களில் சில இடங்கள்!

சென்ற வாரம் ஞாயிறன்று ஒரு சிறு சுற்றுலா சென்றோம். அநேகமாய் நாங்க போன சுற்றுலாக்களில் எல்லாம் கசப்பான அனுபவங்களே நிறைய. ட்ராவல் டைம்ஸ், இந்திய ரயில்வேயின் சுற்றுலாவில் சென்றது தவிர. அதிலே கூட்டம் நிறைய. ஐந்நூறு பேர்கள் சென்றோம். ஆனாலும் ஒவ்வொரு பெட்டிக்கும் தனியான ஆட்கள் கவனிப்பு இருந்ததால் சமாளித்தார்கள். திறமையான நிர்வாகமும் சேர்ந்து கொண்டு சுற்றுலா பரிமளித்தது. தனியார் நடத்தும் சுற்றுலாவில் பெரும்பாலும் ஏமாற்றங்களே. கைலை யாத்திரையின் போதும் ஒருசில நடந்தாலும், மந்திராலயம், நவபிருந்தாவன் சென்ற சுற்றுலாவில் தான் அதிகமாய் ஏமாந்தோம். அந்தப் பிரயாணத்தில் பங்கு பெற்ற அனைவருக்குமே பிரயாணம் ரசிக்கவில்லை, என்பதோடு, யாருக்கும் சொன்னபடி சாப்பாடும் விநியோகிக்கப் படவில்லை. பலரும் பசியில் கஷ்டப்பட்டனர். அதனாலேயே நாங்க அநேகமாய்த் தனியாகவே போவோம். ஆனால் இப்போ சில நாட்களுக்கு முன்னர் வேலூர் ஸ்ரீபுரம் செல்லவேண்டும் என்ற ஆவலில் என்னோட கணவர் அம்பத்தூரில் இருந்தே கிளம்பும் ஒரு ட்ராவல்ஸிடம் முன் பதிவு செய்துவிட்டார்.

எனக்கு அரை இல்லை இல்லை கால் மனசு தான். உடனேயே தீபாவளி வருகிறது. ஏற்கெனவே வேறுவிதங்களில் அலைச்சல் அதிகம். இப்போ வேறே அலையணுமானு. ஆனாலும் அவருக்கு இது பணமும் மிகவும் குறைவு. நிறைய இடங்கள் கூட்டிச் செல்கிறார்கள் என்றும், அம்பத்தூரில் இருந்தே கிளம்புவதால் நமக்கும் வசதி என்றும் சமாதானம் செய்தார். கிட்டத் தட்ட இதை மறந்தே விட்டேன். திடீர்னு பார்த்தா போகும் நாள் நெருங்கிவிட்டது. அப்போ பார்த்து வலைப்பதிவர் ஒருவர் ஸ்ரீபுரம் போயிட்டு வந்து எழுதி இருந்தார். தற்செயலாக அது கண்ணில் பட, அங்கே போய்ப் படிச்சால் ஸ்ரீபுரம் கோயிலுக்குச் செல்லும் வழிமுறைகளைப் பார்த்தால் பல மைல்கள் நடக்கணும்னு தெரிஞ்சது. நம்மால் முடியுமா? வழக்கமான கேள்வி எழுந்தது எனக்குள்ளே. உடனேயே செய்தியை அஞ்சல் செய்தேன். அவரும் உடனேயே ட்ராவல்ஸ்காரர் கிட்டே கேட்டார். ட்ராவல்ஸ்காரரோ அதெல்லாம் ஒண்ணுமே இல்லை, தாராளமாய் நடக்கலாமென்று பச்சைக் கொடி காட்டிட்டார். இவரும் சரினு கிட்டத் தட்ட என்னை இழுத்துக் கொண்டு கிளம்பினார்.

முதல்நாளில் இருந்தே எல்லாவற்றுக்கும் மனசைத் தயார் செய்து கொண்டேன். கிளம்பும் அன்று காலை எழுந்து குளித்துமுடித்துக் காலை உணவுக்குத் தயார் செய்து வைத்துக் கொண்டு கிளம்பினோம். அவங்க எப்போ டிபன் கொடுப்பாங்கனு தெரியாதே? எதுக்கும் இருக்கட்டும்னு சாப்பாடு கையில். ஐந்து மணிக்கு வீட்டுக்கு அருகே உள்ள ஒரு கடை வாசலில் காத்திருக்கச் சொன்னாங்க. நடந்தே போய் அங்கே காத்திருந்தோம். சில நிமிஷங்களில் பேருந்தும் இல்லாமல், சிற்றுந்தும் இல்லாமல் ஒரு மகிழுந்து வந்தது. அதில் ஏறிக் கொண்டோம். எங்களுக்கு முன்னால் இன்னும் சிலர் ஏறி உட்கார்ந்திருந்தனர். பின்னர் மற்றும் சிலரை அழைக்கப் பேருந்து சென்றது. அம்பத்தூர் முடிஞ்சதும், வழியில் ஆவடியில் சிலர் ஏறிக் கொண்டனர். மொத்தம் பஸ் ஓட்டுநரையும் , ட்ராவல்ஸ் நடத்துநரையும் சேர்த்து இருபது பேர் இருந்தோம். இதற்குள்ளாக மணியும் ஆறு ஆகிவிட்டது. முதலில் காஞ்சி காமாக்ஷி அம்மனைத் தரிசிப்பதாகத் திட்டம். காஞ்சியை நோக்கி வண்டி சென்றது. காமாக்ஷி அம்மனைப் பல முறைகள் தரிசித்திருக்கிறேன். என்றாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி காக்ஷி கிடைக்கும். சென்ற வருடம் ஆகஸ்டில் சென்றபோது தான் அரூபலக்ஷ்மியைத் தரிசனம் செய்ய முடிந்தது. பஸ் போகட்டும். இப்போ காமாக்ஷி பத்தின சில விபரங்கள் பார்ப்போமா? கோயில் வந்து சேர்வதற்குள் சுருக்கமாய்ப் பார்ப்போம்.

6 comments:

  1. ஸ்ரீபுரம்..மாஅ... எனக்கு ஏமாற்றம் தான் அங்கு.. பாக்கலாம் நீங்க என்ன சொல்லுறீங்கனு

    ReplyDelete
  2. //சுருக்கமாய்ப் பார்ப்போம்.//

    உங்க நகைச்சுவை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?! :)))

    ReplyDelete
  3. //சில நிமிஷங்களில் பேருந்தும் இல்லாமல், சிற்றுந்தும் இல்லாமல் ஒரு மகிழுந்து வந்தது. அதில் ஏறிக் கொண்டோம். .... பின்னர் மற்றும் சிலரை அழைக்கப் பேருந்து சென்றது.//

    என்னங்க இது? இல்லாத பேருந்து எப்படி எங்கே..... :P

    ReplyDelete
  4. புலி, எங்களுக்கும் ஏமாற்றமே. ஆனால் விபரமாய் எழுதலாமானு புரியலை, பார்க்கலாம். :(

    ReplyDelete
  5. க்ர்ர்ர்ர்ர்ர் கொத்தனாரே, :P :P

    ReplyDelete
  6. //என்னங்க இது? இல்லாத பேருந்து எப்படி எங்கே..... :P//

    சரி, சரி, மகிழுந்துனு படிச்சுக்குங்க! ஹிஹிஹி, அ.வ.சி.

    ReplyDelete