Thursday, October 29, 2009

என் பயணங்களில் - கச்சி ஏகம்பர்! 1


திருக்கச்சி ஏகம்பம் என அழைக்கப் படும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. இப்போ காஞ்சி நகரைப் பற்றிய இன்னும் சில பெருமைகளைப் பார்ப்போமா?

முக்தி தரும் ஏழு தலங்களில் காஞ்சியும் ஒன்று என ஏற்கெனவே நாம் பார்த்தோம். அதோடு பஞ்ச பூதத் தலங்களில் பூமி அல்லது மண்ணுக்குரிய தலமாகவும் காஞ்சி சொல்லப் படுகிறது. இங்கே மூலஸ்தானத்தில் இருப்பவர் மணலால் பார்வதி பிடித்து வைத்த லிங்கமே எனவும் சொல்லப் படுகிறது. பிரளய காலத்திலும் அழியாத தலமாகச் சொல்லப் படுகிறது. ஆகையால் பிரளய சித்து எனவும் அழைக்கப் படுகிறது. அம்பிகை கம்பை நதியின் வெள்ளப்பருக்கைக் கண்டு அஞ்சி இறைவனைத் தழுவியதால் சிவபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. இங்கே பிரமனும் தவம் செய்திருக்கிறான். அந்தக் கதை வரதராஜர் கோயில் பத்திச் சொல்லும்போது வரும். ஆகக் கூடி பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் இங்கே வாசம் செய்ததாலும், இன்னமும் திரிமூர்த்திகளின் அருள் இங்கே நிறைந்து இருப்பதாலும் திரிமூர்த்தித் தலம் அல்லது திரிமூர்த்தி வாசம் எனவும் அழைக்கப் படுகிறது.

கி.மு. 2-ம் நூற்றாண்டிலேயே பழங்காலச் சோழர்களுக்கு இது தலைநகராய் இருந்ததாய்ச் சொல்லப் படுகிறது. அதன் பின்னரே பல்லவர்களும், அதற்குப் பின்னர் பிற்காலச் சோழர்களும் காஞ்சியைத் தலைநகராய்க்கொண்டு ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய,( நாம் இன்றும் படிக்கும்) பரிமேலழகர், சக்ரவர்த்தியாக வட நாட்டில் ஆட்சி புரிந்த ஹர்ஷவர்த்தனர் நிறுவிய நாளந்தா பல்கலைக் கழகத்துக்கும் முன்னோடி காஞ்சி பல்கலைக் கழகம் எனவும், ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் முதல் தலைவரான தர்மபாலர் இங்கே தான் கல்வியும், ஞானமும் பெற்றுச் சிறப்படைந்த தலம் இது. இத்தனை பெரியோர்களைச் சான்றோர்களாகக் கொண்ட காஞ்சிக்கு, “கல்வியிற்சிறந்த காஞ்சி” என்னும் பெயர் கிடைத்ததில் ஆச்சரியமே இல்லை அல்லவா?

இங்கே உள்ள சிவ காஞ்சியில் நாவுக்கரசர் காலத்துக்கு முன்பிருந்தே ஏகாம்பரேஸ்வரர் கோயில் கொண்டிருந்திருக்கிறார். அதற்குச் சான்றாக இந்தக் கோயில் வளாகத்திலேயே சில கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. இந்தக் கற்றளிக் கோயில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப் பட்ட கைலாசநாதர் கோயிலுக்குப் பின்னர் கற்றளியாக மாறி இருக்கக் கூடும் எனவும், அதற்கு முன் செங்கல்லால் கட்டப் பட்ட கோயில் ஒன்று இருந்திருக்கிறது என்றும் அந்தக் கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வருகிறது. எப்படி ஆனாலும் கிட்டத் தட்ட ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோயிலின் தல வரலாறு பின்வருமாறு சொல்லப் படுகிறது.

ஈசனின் கண்களை விளையாட்டாகப்பொத்திய அம்பிகை மீண்டும் ஈசனை அடைய வேண்டி பூவுலகுக்கு வர நேர்ந்தது. முதலில் மாங்காடு என்னும் இடத்தில் பஞ்சாக்னி வளர்த்து ஒற்றைக் காலில் நின்று தவம் செய்த அம்மை, பின்னர் ஈசனைப் பூஜிக்க வேண்டி, காஞ்சிபுரத்தில் வேகவதி ஆற்றுக்கு அருகே மணலால் சிவலிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டு வந்தாள். அங்கேயும் ஈசனின் சோதனை தொடர்ந்தது. அம்பிகை மாமரத்தின் நிழலில் இருந்து ஈசனை வழிபட்டு வந்தாள். அப்போது அங்கேயும் வெப்பம் அதிகரிக்கச் செய்தார் ஈசன். தன் சகோதரனின் உதவியை நாடிய அம்பிகைக்கு ஈசனின் சடாமுடியில் இருந்த சந்திரனின் அமுத கிரணங்களால் குளிர்ச்சி ஊட்டினார் விஷ்ணு. அப்போது கங்கையை ஏவ, கங்கை தன் சகோதரி என்பதால் அவளைச் சமாதானம் செய்து கொண்டாள் அம்பிகை. ஆனால் வேகவதியாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்குமாறு ஈசன் செய்ய தான் மணலால் கட்டிய லிங்கம் அடித்துச் சென்றுவிடுமோ என பயந்த அம்பிகை தன் இரு கைகளாலும் அந்த லிங்கத்தை அணைத்துக் கொண்டார். அம்பிகையின் ஸ்பரிசம் பட்டதுமே உள்ளம் குளிர்ந்த ஈசன், அவளுக்குக் காட்சி கொடுத்தார். அம்பிகை தழுவியதால் தழுவக் குழைந்த நாதர் என்ற பெயரும் பெற்றார் ஈசன்.

இந்தக் கோயிலின் தல விருஷம் மாமரம். நான்கு கிளைகள் கொண்ட இந்த மாமரத்தில் நான்கு பருவங்களில் நான்கு வித சுவையோடு கூடிய வித்தியாசமான மாங்கனிகள் பழுக்கும். நான்கு கிளைகளும் நான்கு வேதங்கள் எனச் சொல்லப் படுகிறது. இந்த மாமரம் மூவாயிரம் வருஷங்களுக்கும் முற்பட்டது என்று சொல்லுகின்றனர். நான் முதலில் பார்த்தபோது மாமரம் பரந்து விரிந்து இருந்தது. இப்போ அதன் கிளைகள் வெட்டப் பட்டுச் சுற்றிலும் கட்டடங்கள் எழுப்பப் பட்டு., நடுவில் அம்பிகையும், ஈசனும் இருக்குமிடம் ஒரு கோயில் போல் மாற்றப் பட்டு, அதற்குத் தனிச் சீட்டு என வைக்கப் பட்டு! கொடுமைடா சாமி! இத்தனையையும் பார்த்துண்டு இருக்கே, உனக்கே வேண்டி இருக்கோனு தோணுதே!

கோயிலுக்குள் நுழையும் இடம் முன்னாடி கடைகள் எதுவும் இல்லாமல் இருந்தது. இப்போக் கடைகளை அனுமதிச்சிருக்காங்க. :( படம் வெளிப் பிரகாரத்தில் மட்டுமே எடுக்க முடிஞ்சது. உள்ளே காமிராவைக் கொண்டு போக முடியலை!

4 comments:

 1. நெமிலி பாலா பத்தி எங்கே படிக்கலாம் mrs shivam? சைட் தெரிஞ்சா சொல்ல முடியுமா?

  ReplyDelete
 2. //http://sribalapeetam.com/sribalapeetam.html//

  Jeyasri, Nemibi Bala pathi mele kanda link le kidaikkum. தமிழிலும் புத்தகம் இருக்கிறது.

  ReplyDelete
 3. பரவசமூட்டும் பாலா பீடம்
  [பரவசமூட்டும் பாலா பீடம்] ஆசிரியர்: நெமிலி.பி. வெங்கட்கிரிதர்

  பகுதி: ஆன்மிகம்

  வெளியீடு: வானதி பதிப்பகம்

  விலை: ரூ. 30

  ReplyDelete
 4. THANKS A LOT MRS SHIVAM. I READ THE STORY AS WELL AS THE POEM. VERY GOOD
  THANKS INDEED

  ReplyDelete