Sunday, October 25, 2009

என் பயணங்களில் - காஞ்சிபுரம் காமாக்ஷி! 1

சுருக்கம்னு சொன்னதும் கொத்தனார் பயந்துட்டார். நிஜமாவே சுருக்கிடுவேனோன்னு. நமக்குத் தான் அது வழக்கமே இல்லையே. இந்த ட்ராவல்ஸ்காரர் இருக்காரே, இவர் தான் இதுவரைக்கும் நாங்க போனதிலேயே சிறந்த சுற்றுலா நடத்துநர். ரொம்ப நல்லாக் கவனிச்சுக்கிட்டார் எல்லாரையும். முக்கியமாச் சாப்பாடு விஷயத்திலே ஏமாத்தலை. மந்திராலயம், நவ பிருந்தாவனம் முதல் முறை போனப்போ ட்ராவல்ஸ்காரர் மூன்று நாட்களும் கிட்டத் தட்ட எங்களை விரதமிருக்கச் சொல்லலை. சாப்பாடே சரியாக் கொடுக்கலை. பலரும் திண்டாடினாங்க. இங்கே அதுமாதிரி நடக்கலை. ட்ராவல்ஸ் விலாசம். கடைசியிலே கொடுக்கிறேன். இப்போ காமாக்ஷி அம்மன் பற்றிய ஒரு குறிப்பு.

சக்தி பீடங்களில் ஆகாயத் தலமாகவும், பஞ்ச பூதத் தலங்களில் பிருத்வி எனப்படும் மண் தலமாகவும் விளங்குவது காஞ்சிபுரம். “நகரேஷு காஞ்சி” என்று பாரவி /( சிலர் காளிதாஸன் என்று சொல்கிறார்களே?? நான் படிச்சது பாரவினு தான்.) என்னும் மஹாகவியாலும், “கல்வியிற் சிறந்த காஞ்சி” என்று தமிழ்நாட்டுக் கவிஞர்களாலும், (யாருங்க சொன்னது??) புகழப்பட்ட காஞ்சி எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாத காலத்திலேயே தோன்றியது. காஞ்சி புராணமே எழுதலாம். சிதம்பர ரகசியத்துக்குப் போட்டியா அமையும். செண்பகவனம் என ஒரு காலத்தில் செண்பகக்காடாக இருந்த இடமான காஞ்சிக்குப் பல பெயர்கள் உண்டு. அதை எழுதினா மத்தது எழுத முடியாது. சுருக்கமா அம்பிகையின் நாபி விழுந்த இடம் காஞ்சி என்று சொல்லுவார்கள். மோக்ஷபுரிகளில் ஒன்றாகவும் காஞ்சி மட்டுமே தென்னிந்தியத் தலங்களில் இடம் பெற்றுள்ளது.

பாலாற்றங்கரையில் அமைந்த காஞ்சி நான்கு கோட்டங்களைக் கொண்டது. புண்ணியகோட்டம் என்னும் விஷ்ணு காஞ்சி, ருத்ர கோட்டம் என்னும் சிவகாஞ்சி, குமரகோட்டம் என்னும் சுப்ரமண்யரின் திருக்கோயில் இருக்குமிடம், காமகோட்டம் என்னும் ஸ்ரீகாமாக்ஷியின் கடைக்கண் பார்வை கிடைக்குமிடம் ஆக நான்கு கோட்டங்கள். மற்ற ஊர்க்கோயில்கள் அனைத்தும் கிழக்கோ, மேற்கோ பார்த்து அல்லது வடக்குப் பார்த்து அமைந்தால் காஞ்சியின் கோயில்கள் அனைத்துமே அன்னையின் கடைக்கண் பார்வைக்காக காமாக்ஷி அம்மன் கோயிலையே பார்த்த வண்ணம் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களின் உற்சவங்களின் போது வீதி உலா வரும் மூர்த்தங்கள் காமாக்ஷி அம்மன் கோயிலைச் சுற்றியே செல்லும் எனக் கேள்விப் படுகிறோம். மேற்குறிப்பிட்ட நான்கு கோட்டங்கள் தவிர, ஜைனகாஞ்சி, புத்த காஞ்சி என்றும் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இதில் புத்த காஞ்சியானது தற்போதைய பெரிய காஞ்சிபுரத்திலே அடங்கிவிட்டது எனவும், ஜைனகாஞ்சி அருகில் உள்ள திருப்பருத்திக்குன்றதைச் சொல்லப் படுகிறது என்றும் சொல்கின்றனர். ஜைனர்களின் கோயில்கள், ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்குமிடங்கள் என இன்றும் அங்கே ஜைனர்கள் இருப்பதாயும் சொல்லுகின்றனர்.

காமாக்ஷி அம்மன் பிலத்துவாரத்தில் இருந்து தோன்றியவள் . பண்டாசுரனை அழிக்கத் தோன்றிய அன்னை, பண்டாசுரனை வதைத்ததும், அம்பாளின் கட்டளைப்படி காயத்ரி மண்டபம் அமைக்கப் பட்டு, கன்னியான அம்பிகை அங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டாள். பின்னர் அந்த மண்டபம் மூடப் பட்டு, இரவு முழுதும் அம்பிகையை துதித்தவண்ணம் அனைவரும் வெளியிலேயே நின்றார்கள். அருணோதய காலத்தில் கதவு திறக்கப் பட்டது. உள்ளே பார்த்தால் கன்யா ரூபமாய் உள்ளே சென்ற அம்பிகை, சர்வாலங்கார பூஷிதையாக, நான்கு புஜங்களுடன், பத்மாசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டனர். இப்படித் தோன்றிய காமாக்ஷியைத் தான் இன்றும் நாம் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

ஈசனைத் திருமணம் செய்து கொள்ளுவதற்காகத் தன்னைச் சுற்றிப் பஞ்சாக்கினி வளர்த்து தவத்தில் ஈடுபட்டிருந்த அம்பிகை மணலால் சிவலிங்கம் பிடித்துப் பூஜை செய்ய, இறைவன் அம்பிகையின் பக்தியைச் சோதிக்க எண்ணிக் கம்பாநதியில் வெள்ளப் பெருக்கை உண்டாக்க, சிவலிங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும் போல் ஆகிவிட்டது. அம்பிகை மாசி மாதமும், பங்குனி மாதம் கூடும் சமயம் இருக்கும் விரதமான காரடையான் நோன்பு இருந்து, மணல் லிங்கத்தை அணைத்தவண்ணமே வழிபாடுகள் செய்ய, இறைவன் அருள் கிடைத்தது. அடுத்து நாம் பார்க்கப் போகும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில், லிங்கத்தை அணைத்த வண்ணமே அம்பாள் இருக்கும் மூலஸ்தானத்தைத் தான் பார்க்கப் போகிறோம்.

ஆதிசக்தியை ராஜராஜேஸ்வரியாக வழிபட்ட பிரம்மன் பூஜித்த தாமரை மலர் ஒன்று மானுடனாக மாறி விண்ணில் இருந்து பூமிக்கு வர, அவனுக்கு ஆகாச பூபதி என்ற பெயருடன் காஞ்சியை ஆண்டுவரச் செய்தனர். அவன் குழந்தைப்பேறுக்காகத் தவம் இருக்க விநாயகரை அவனுக்கு மகவாகப் பிறக்கும்படி அருளுகின்றாள் அம்பிகை. குழந்தைக்குத் துண்டீரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்த வேளையில், அரசன் நடத்திய சுமங்கலி போஜனத்தில் அவன் அறியாமல் காமாக்ஷியும் கலந்து கொள்ள, குழந்தையாய் வந்த விநாயகரை தாயைக் கண்டு தவழ்ந்து அவளிடம் செல்ல, அன்னை மறைந்தாள். அன்னை அருந்திய உணவில், அரசியின் மாலையின் முத்து ஒன்று பருப்போடு கலந்து அன்னையின் வயிற்றில் போக, தான் எடுத்துக் கொண்ட ஒரு தங்க முத்துக்காக, நகரம் பூராவும் தங்கமாய் வருஷிக்கச் செய்தாள் அன்னை. துண்டீரன் ஆண்டதாலேயே இந்தப் பகுதி தொண்டை நாடு என்ற பெயரும் பெற்றது.

படங்கள் கூகிளார் தயவுதான். படம் எடுப்பது கடுமையாகத் தடை செய்யப் பட்டிருக்கிறது. சில கோயில்களில் வெளியே உள்ள ராஜகோபுரம் மட்டுமே எடுக்க முடிந்தது.

4 comments:

  1. //காஞ்சியின் கோயில்கள் அனைத்துமே அன்னையின் கடைக்கண் பார்வைக்காக காமாக்ஷி அம்மன் கோயிலையே பார்த்த வண்ணம் அமைந்திருக்கின்றன//

    அட! இது ஒரு புதுச் செய்தி எனக்கு.

    நன்றி

    ReplyDelete
  2. டாக்டர் ருத்ரன்,
    மிக்க நன்றி. இறை அருள் இல்லாமல் எழுதவும் முடியாதே. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  3. வாங்க துளசி, இது எப்போவோ தெரிஞ்சிருக்கணுமே! ஆனாலும் சில சமயம் இம்மாதிரி விஷயங்களைக் கவனிக்கவோ, கேட்டுக்கவோ மறந்துடறோம்.

    ReplyDelete