Sunday, December 6, 2009

என் பயணங்களில் - திருப்புட்குழியும் தன்வந்திரி பீடமும்!

ராவணன் சீதையை அபகரித்துச் செல்லும் வழியில் ஜடாயு ராவணனுடன் போரிட்டு சீதையை மீட்கப் போராடியது நினைவிருக்கலாம். அப்போது ராவணன் ஜடாயுவின் சிறகுகளை வெட்டி அதைக் கீழே வீழ்த்திவிட்டுச் சென்றுவிடுகிறான். சிறகுகளை இழந்த ஜடாயு உயிருக்குப் போராடிக் கொண்டு மரணத் தருவாயில் இருக்கும்போது ஸ்ரீராமர் சீதையைத் தேடிக் கொண்டு அவ்வழியே வந்தார். அவரிடம் ராவணனைப் பற்றிய விஷயத்தைச் சொன்ன ஜடாயு, தான் இறக்கப் போவதாயும் தனக்கு ஈமக்கிரியைகளை ஸ்ரீராமரே செய்யவேண்டும் எனவும் சொல்லிவிட்டு உயிரை விட்டது. உயிரை விடும் முன்னர் பகவத் தரிசனம் கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்தித்த ஜடாயுவுக்கு முன்னால் மஹாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய்த் தோற்றம் தந்தார்.

ஜடாயுவைத் தன் வலப்பக்கம் வைத்தித் தீ மூட்டி ஈமக்கிரியைகளைச் செய்தார் பகவான். இதனால் ஏற்பட்ட வெப்பத்தை ஸ்ரீதேவியால் தாங்க முடியாமல் அவள் இடப்புறம் சென்றுவிட, பூமாதேவி பொறுமையின் சிகரமாய் இடப்புறம் இருந்து வலப்புறம் மாறிக் கொள்கின்றாள். இந்தக் கோயிலில் தாயார் சந்நிதியும் பெருமாள் சந்நிதிக்கு வலப்புறமாகவே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது. ஆண்டால் இடப்பக்கமாய்க் காட்சி தருகிறாள். ஜடாயுவின் வேண்டுகோளின்படி ஸ்ரீராமர் தன் அம்பினால் தீர்த்தம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்தத் தீர்த்தத்திலேயே ஈமக்கிரியைகள் செய்தார். தீர்த்தம் ஜடாயுவின் பெயராலேயே வழங்கப் படுகிறது. மரியாதைக்குரிய பறவையான ஜடாயுவிற்கு ஈமக்கிரியை செய்த தலம் என்பதால் திருப்புட்குழி என்னும் பெயரால் இந்தத் தலம் வழங்கப் படுகிறது. மூலவரின் மேல் உள்ள விமானம் விஜய வீரகோட்டி விமானம் என்று வழங்கப் படுகிறது.

தாயாருக்கு வறுத்த பயிறை முளைக்க வைக்கும் அற்புத சக்தி உண்டு எனச் சொல்லுகின்றனர். மரகதவல்லித் தாயார் என்ற திருநாமத்துடன் விளங்கும் தாயாருக்கு வேண்டிப் பிரார்த்தனை செய்து கொள்ளும் பெண்கள், ஜடாயு தீர்த்ததில் நீராடி, இங்குள்ள மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை வாங்கித் தங்கள் மடியில் கட்டிக் கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்த உடனே அந்தப் பயிறு முளைத்திருக்கவேண்டும். அப்போது கட்டாயம் குழந்தை பாக்கியம் உண்டு என்பது ஐதீகம், நம்பிக்கை. ஸ்ரீராமாநுஜரின் குருவான யாதவப்ரகாசர் இங்கு தான் வசித்தார் எனச் சொல்கின்றனர். இத்தலத்தில் இருக்கும் கல் குதிரை வாகனம் மிகவும் அதிசயமான ஒன்று. இதன் உறுப்புகள் உண்மையான உயிருள்ள குதிரைகளுக்கு அசைவது போலவே அசையும் என்கின்றனர். நாங்கள் போகும்போது மூடி இருந்தது. இதைச் செய்து கொடுத்த சிற்பி இது போல் இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்துவிட்டு உயிரை விட்டு விட்டாராம். இவரது உறுதியைப் பாராட்டும் விதமாய் பெருமாள் வருடா வருடம் நடக்கும் திருவிழாவின் எட்டாம் நாளன்று சிற்பியின் பெயரைக் கொண்ட வீதிக்கு எழுந்தருளுவதாய்ச் சொல்கின்றனர்.

அடுத்து நாங்கள் சென்றது வாலாஜாபேட்டையில் மேல்புதுப்பேட்டை என்னும் இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ முரளீதரஸ்வாமிகள் அமைத்துள்ள தன்வந்திரி ஆரோக்யபீடத்திற்கு. இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சமாய்க் கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் கட்டிடவேலைகள் நடந்தாலும் சந்நிதி இருப்பதால் போய்த் தரிசித்தோம். எல்லாச் சந்நிதிகளிலும் ஒருவரோ, இருவரோ அர்ச்சகர்கள் இருந்தனர். போகும் வழியில் நல்ல வெயில். ஓரமாய்ச் செல்லவேண்டி இருந்தது. உள்ளே போனால் ஒரு பெரிய கூடத்தில் தன்வந்திரி ஹோமம் தினசரி இருபத்து நாலுமணிநேரமும் நடக்கிறது எனச் சொன்னார்கள். அங்கே சென்றோம். பெரிய ஹோமகுண்டத்தில் மருந்து மூலிகைகள் மணக்க ஹோமம் நடந்து கொண்டிருந்தது. இஷ்டப் பட்டால் அங்கேயே விற்கும் மூலிகைகளை வாங்கி நாமும் நம் கையாலேயே ஹோமத்தில் இடலாம். மூலிகைகள் விலை யானைவிலைமட்டுமே. அதிகம் இல்லை. ஆகையால் நாங்க வாங்கலை.

இந்த ஆஸ்ரமம் அல்லது கோயில் அல்லது ஆரோக்ய பீடம் தன்வந்திரிக்காக தனி மனிதர் ஒருவரால் ஏற்படுத்தப் பட்டது. ஸ்ரீஸ்ரீமுரளீதர ஸ்வாமிகள் கோயில் ஒன்றின் குருக்கள்/அர்ச்சகராக இருந்துவந்தபோது அவரின் தாய் கடுமையான புற்று நோயால் அவதிப்பட, தந்தைக்கோ நீரிழிவு நோய். தாயை இழந்த ஸ்வாமிகள் தாயின் வேண்டுகோளுக்கு இணங்கியும், அவருக்குக் கொடுத்த வாக்குறுதியைக்காக்கவும் ஏற்படுத்தியதே இந்த ஆரோக்யபீடம் என்கின்றனர். தன்வந்திரி ஹோமம் நடக்கும் இடமெல்லாம் தன்வந்திரியின் சிலை எடுத்துச் செல்லப் படுகிறது என்கின்றனர். தன்வந்திரிக்கெனத் தனி சந்நிதியும் உள்ளது. மற்ற தெய்வங்கள் பரிவார தேவதைகளாய்ப் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. மூன்று அல்லது ஐந்து ஏக்கர் நிலத்தில் கட்டப் பட்டுவருவதாய்ச் சொல்கின்றனர். இதற்கடுத்து வேலூர் சென்று சாப்பாட்டுக்கு வண்டி நிறுத்தப்பட்டது. வேலூரில் சாப்பாட்டுக்குப் பின்னர் நாங்கள் சென்றது ஸ்ரீபுரம் என அழைக்கப் படும் பொற்கோயில்.

6 comments:

 1. அன்புள்ள கீதா,
  திருப்புட்குழி என்னும் தலம் பற்றியும்,
  தன்வந்திரி ஆரோக்கியப் பீடம் பற்றியும்
  விளக்கத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.
  படித்து மகிழ்ந்தேன்.தொடரட்டும் உங்கள் பணி!நன்றி!
  வாழ்த்துகள்!

  அன்புடன்,
  தங்கமணி.

  ReplyDelete
 2. வருஷ ஆரம்பத்திலோ எப்பவோ SOUL SEARCHER BLOG நு நினைக்கிறேன், இந்த கோவில் பத்தி படிச்ச ஞயாபகம். இங்கேயா 2 இன் 1 statue? பிள்ளையார் ஒருபக்கம் மறுபக்கம் தந்வந்த்ரி? பிணி தீர்ப்பவன் / வினைதீர்ப்பவன். நிறைய பேர் சமய வேற்றுமை இல்லாம TRUST க்கு CONTRIBUTE பண்ணி இருக்கறதா கேள்விப்பட்டேன். ஸ்வாமி ஸ்தாபகம் பண்ணியாச்சா?

  ReplyDelete
 3. Replies
  1. தமிழில் தன்வந்திரி பீடத்தைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த இணையதளத்தை சொடுக்கவும்.

   http://danvantripeedam.blogspot.in/

   Delete