Saturday, December 12, 2009

தங்கக் கோயில் பார்க்க வாங்க!

பறவைப்பார்வையில் தங்கக் கோயில் அமைப்பு.


தங்கக் கோயிலை எழுப்பியதற்கு ஸ்ரீநாராயணி அம்மா சொல்லும் காரணம் என்னவெனில் பொதுவாக மக்களை ஆன்மீகம், பக்தி மார்க்கத்தில் திருப்ப இம்மாதிரியான பிரம்மாண்டமான தங்கக் கோயில் என்றால் உடனே வருவார்கள் என்பதாலும், அப்படி வரும் மக்கள் உள்ளே குடி கொண்டிருக்கும் அம்பிகையைத் தரிசிப்பதுடன், அங்கே எழுதப் பட்டிருக்கும் தத்துவார்த்தமான கருத்துக்களையும் படித்து மனதில் ஏற்றிக் கொள்வார்கள் என்பதாலேயே எழுப்பப் பட்டதாய்ச் சொல்லுகிறார். பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயில் தங்கத்தால் கட்டப்பட்டது என்பார்கள். மற்றபடி சிதம்பரம், மதுரை, திருப்பதி , பழநி போன்ற கோயிலின் மூலஸ்தான விமானங்கள் தங்கத்தகடுகள் வேய்ந்தவை. இதில் சிதம்பரம் மட்டும் கூரையே தங்கத்தால் ஆனது. ஆனால் இந்தக் கோயிலோ ஐந்தாயிரம் சதுர அடியில் முழுதும் தங்கத்தால் இழைக்கப் பட்டுள்ளது. 1,500 கிலோவுக்கு மேல் தங்கமும், 350 கோடி ரூபாய் செலவிலும் கட்டப் பட்டுள்ள இந்தக் கோயிலின் உள்ளே நுழைவோமா??

உள்ளே நுழையும்போதே இலவச தரிசனம் என்றால் வலப்பக்கம் உள்ள நட்சத்திரப் பாதையில் செல்லவேண்டும் என்றார்கள். நடக்க முடியாதவர்களுக்கு என சக்கர நாற்காலி இருப்பதாகவும் தேவையா என்றும் கேட்டனர். என் கணவர் வழக்கம்போல் என்னைப் பார்க்க, நான் அவருக்கு முன்னால் நடையைக் கட்டினேன். சரியாக மதியம் 3-15 ஆகி இருந்தது. நடக்க ஆரம்பித்தோம். பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம், கைப்பைகள் கூடத் தடை செய்யப் பட்டுள்ளது. ஆகையால் எல்லாவற்றையும் பத்திரமாய் வண்டியிலேயே வைத்துவிட்டுச் சென்றோம். தின்பண்டங்கள் வெளியே வாங்கிச் செல்லுபவை உள்ளே அநுமதி கிடையாது. உள்ளே நுழைந்து சிறிது தூரம் நடந்ததும் நாலு, ஐந்து கொட்டகை போட்ட அமருமிடங்கள் திருப்பதியில் ஏற்படுத்தி இருப்பது போன்ற கூண்டு போன்ற அமைப்புகள் வருகின்றன. அவற்றில் முதலாவதில் ஏற்கெனவே மக்கள் நிரம்பி இருந்தனர். காலியாய் இருக்கும் இடங்களில் சென்று அமர்ந்தோம். கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பெரிய கூடாரம் நிரம்பியது. திறக்க அரைமணி ஆகும் என்று சிலரும், ஒரு மணி நேரம் ஆகலாம் என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்க அறிவிப்புப் பலகை குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் காத்திருக்க நேரிடும் என்றும், கூட்டத்தைப் பொறுத்து பத்து நிமிஷங்களில் கூடத் திறக்கலாம் என்றும் சொல்லிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிகள் வைக்கப் பட்டு எங்கும், எதிலும் ஸ்ரீநாராயணி அம்மா தெரிந்தார். அங்கே ஒவ்வொரு கூடார அறைக்கும் வெளியே காபி, டீ விலைக்கு விற்றுக் கொண்டிருந்தனர். கோயில் நிர்வாகத்தால் அநுமதிக்கப் பட்டவர்களே அங்கு விற்க முடியும். கோயில் நிர்வாகமே வெளியே காண்டீன் ஒன்றையும் நடத்துவதாயும் சொன்னார்கள். காபி வாங்கிக் கொண்டோம். நன்றாகவே இருந்தது, சுவையும், விலையும். அரை மணி நேரம் சென்றதும் கதவு திறக்கப் பட்டது. நாங்கள் செல்ல முடியுமா என யோசிப்பதற்குள் அங்கே உள்ளே நுழைந்த பணியாளர் அனைவரையும் அநுமதித்தார். கிட்டத் தட்ட ஐநூறு பேர் இருந்தோம் அந்த அறையில். அனைவரும் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். நீண்ட தாழ்வாரங்கள். இருபக்கமும் கிரானைட் பதிக்கப் பட்ட அமரும் மேடைகள் நீளமாய்க் கூடவே வந்தன. கால் வலித்தால் அவற்றில் அமர்ந்து செல்லலாம். * குறியிள்ள பாதை அதே போல் வளைந்து சென்றது.

ஒவ்வொரு திருப்பத்திலும் கோயில் பணியாளர்கள் க்ளூகோஸ் பிஸ்கட், மாரி பிஸ்கட், பால் போன்றவை விற்றனர். தாழ்வாரங்களில் நடக்க ஆரம்பித்துவிட்டால் காபி, டீ அநுமதி இல்லை. அங்கேயே ஒவ்வொரு திருப்பங்களிலும் கழிப்பறைகளும் இருந்தன என்பதற்கான அடையாளக்குறிகளையும் காண முடிந்தது. பெரிய பெரிய புல் தரைகள். அவற்றில் சுதை வேலைப்பாடுகளுடன் கூடிய துர்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, மாரியம்மன் போன்ற கடவுளர் சிலைகள். ஆங்காங்கே பெரிய பெரிய கரும்பலகைகளில் புராணங்கள், இதிஹாசங்கள், ஸ்ரீநாராயணி அம்மாவின் பேச்சுக்களில் இருந்து எடுக்கப் பட்ட பொன்மொழிகள் எழுதப் பட்டிருந்தன. ஸ்வாமியைக் கிட்ட இருந்து தரிசிக்கவேண்டுமானால் ஐநூறு ரூபாய் கொடுத்துச் சீட்டு வாங்க வேண்டும். கொஞ்சம் தள்ளி இருந்து பார்க்க இருநூறு ரூபாய்க் கட்டணம். நாங்கள் இலவச தரிசனம் என்பதால் தள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளி இருந்தே பார்க்கவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.

செல்லும்போதே ஒவ்வொரு கோணத்திலும் கோயில் கோபுரத்தின் தரிசனம் கிடைக்கிறது. எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும்படியான அமைப்பில் கட்டப் பட்டிருப்பதும், கட்டட அமைப்பும், நிர்வாகத்தின் நேர்த்தியும் பிரமிக்க வைத்தது. செல்லும் வழியெல்லாம் சிவப்புக் கம்பளம் விரிக்கப் பட்டிருந்தது. மாலை நேரமாகையால் வெயில் அதிகம் இல்லை. ஐயாயிரத்துக்கும் குறையாத மரங்கள் பராமரிப்பில் இருக்குமென நினைக்கிறேன். காடு வளம் பாதுகாக்கப் படுவது மகிழ்ச்சியைத் தந்தாலும் இவ்வளவு பெரிய இடமா? இவ்வளவு செலவில் கோயிலா என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. ஒருவருக்கொருவர் வேண்டாத பேச்சுக்கள் பேசுவதும் தடை செய்யப் பட்டுள்ளது. ஆங்காங்கே நவீன விளக்குகள் பல இருந்தாலும் பழமையைப் போற்றும் விதமாகவா அல்லது அலங்காரத்துக்கா தெரியலை, மாட விளக்குகளும், கல்லினால் ஆனவை பொருத்தப் பட்டுள்ளன.

கோயில் சுற்றிலும் செயற்கையாக உருவாக்கப் பட்ட தாமரை மலர்கள் நிறைந்த அழகான பொய்கையால் சூழப் பட்டுள்ளது. மாலைக்கதிரவனின் கதிர்கள் கோயில் கோபுரத்தில் விழுந்து அவற்றின் பிரகாசம் ஏற்கெனவே கண்ணைக் கூச வைத்துக் கொண்டிருந்தது. அந்த நிழல் அப்படியே பொய்கையிலும் தெரிந்து இரண்டும் ஒன்றோ என்னும் மாயாஜாலத் தோற்றமும் ஏற்பட்டு மனதை மயங்க அடிக்கிறது. இரவு நேரத்தில் விளக்கு அலங்காரத்தில் இன்னும் பிரகாசமாய் இருக்கும் என்றும் தெரிய வந்தது. கூட்டம் அதிகம் இருக்கும் என்றனர். நடக்க முடியாது என்றும் சொன்னார்கள். கூட்டம் அதிகம் இல்லை. ஆயிரம் பேர் இருந்தால் அதிகம். அரைமணி நேரத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இன்னும் நடந்து கொண்டே இருந்தோம். ஆனால் நடப்பது கொஞ்சம் கஷ்டமாய்த் தான் இருந்தது. அதுவும் சிறு குழந்தைகள் தூக்கிக்கவும், முடியாது, நடக்கவும் முடியாது என்ற நிலையில் உள்ள குழந்தைகள் ரொம்பச் சிரமப் பட்டு அழுதனர். மற்றச் சின்னஞ்சிறு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு நடக்கும் பெண்களும், ஆண்களும் சிரமப்படவே செய்தனர். ஆனாலும் சிரமத்தையும் பொறுத்துக் கொண்டே அனைவரும் வந்தனர். ஆங்காங்கே தங்கி வந்தவர் பலர். நாங்கள் தங்கிட்டு எழுந்தால் மறுபடி நடக்கக் கஷ்டமாயிடும்னு நடந்துட்டே இருந்தோம். கிட்டத் தட்ட நாலு மணி ஆகும்போது சந்நிதிக்குக் கிட்டே வந்தோம்.

உள்ளே நுழையும்போதே நீர் வீழ்ச்சி போல் ஏற்படுத்தப் பட்ட அமைப்புகள், எதிரே ஒரு மண்டபம் காணப்படுகிறது. உள்ளே நுழைந்தால் முழுதும் தங்கச்சுவராலேயே கட்டப் பட்ட வேலைப்பாடுகள் நிறைந்த கோயிலும், எதிரே நாராயணி அம்மனின் சந்நிதியும். அலங்கார வளைவுகள், மண்டபங்கள் முகப்புகள் எல்லாவற்றிற்கும் தங்கப் பெயிண்ட். மனிதனின் பதினெட்டுக் குணங்களைச் சுட்டும் வகையில் பதினெட்டு வாயில்கள் என்கிறார்கள். மூலஸ்தானத்தில் தங்கத் தாமரையில், வைரம், வைடூரியம், முத்து, பவளம் ஆகியவற்றால் ஆன நகைகள் அணிந்தவண்ணம், தங்கக் கவசத்துடனும், தங்கக் கிரீடத்துடனும் ஸ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள். மகாமண்டபம் தங்கத்தால் ஜொலிக்கிறது. அங்கே நின்றுகொண்டு தான் இலவச தரிசனம் செய்ய முடியும். தரிசனம் செய்து கொண்டோம். சீட்டு வாங்கியவங்களுக்கு மட்டுமே குங்குமப் பிரசாதம் என்பது சற்றல்ல ரொம்பவே நெருடல். ஆனால் வெளியே சென்றதும் கோயில் மடப்பள்ளியில் செய்யப் பட்ட பிரசாதம் வழங்குவார்கள் என்றும் இது அனைவருக்கும் கிடைக்கும் என்றும் சொன்னார்கள். தினமும் சாம்பார் சாதமே கொடுப்பதாகவும் சொன்னார்கள். கோயிலைச் சுற்றி உள்ள பொய்கையின் அகலம் பத்து அடி, ஆழமும் பத்து அடிக்கு இருக்கலாம். அங்கே காசுகள் போடவேண்டாம் என்ற அறிவிப்புப் பலகை உள்ளது. நம் மக்கள் கையில் கிடைக்கும் காசுகளைத் தூக்கி வீசிக் கொண்டிருந்தனர். நாங்க தான் கைப்பையே கொண்டு போகலையே. ஜாலியாக் கை வீசி நடந்தோம், அவரோட சட்டைப் பாக்கெட்டில் கொஞ்சம் பணம் இருந்தாலும், அநுமதிப்பலகையில் எழுதப் பட்டிருப்பதை மீறிக் காசு எதையும் போடவில்லை. திரும்ப வெளியே செல்ல நடக்க ஆரம்பித்தோம்.

செல்லும் வழியில் கோயில் நிர்வாகம் நடத்தும் கடைகள் வருகின்றன. நம்ம மாநகரக் காவல் தடுப்பு ஆங்காங்கே ஏற்படுத்தி இருப்பது போல் கடைகள் இருக்குமிடங்களில் இவங்களும் தடுப்புகள் ஏற்படுத்திக் கடைக்கு உள்ளே நுழைந்தே வெளியே வரும்படிக்குச் செய்திருக்கின்றனர். அவங்க தட்டியிலே நுழைந்தால் நாம கோலத்திலே நுழைய மாட்டோமா? கடைக்குள்ளே நுழைந்துட்டு வெறும் கையை வீசிக் கொண்டு வந்துட்டோம். ஆங்காங்கே நன்கொடைகள் வசூலிக்கும் கவுண்டர்கள். எதுவும் கொடுக்கணும்னு தோணலை. வந்துட்டோம். ஐந்து முப்பதுக்கு வெளியே வந்தோம், சாம்பார் சாதம் வாங்க ஒரே அடிதடி. அடச்சீ, இந்தப் பழம் புளிக்கும்னு சொல்லிட்டு அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காமல் வந்து இன்னொரு காபி வாங்கிச் சாப்பிட்டுட்டு மத்தவங்களுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தோம். பக்தி???? ம்ஹும்! பிக்னிக் போய் வந்த உணர்வு! இது எங்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே.

ஆனால் தனி மனிதன் ஒருவரால் ஏற்படுத்தப் பட்ட இந்தக் கோயில் மனித சக்தியின் அசாதாரண ஆற்றலையும் வேலை வாங்கும் திறமையையும் எண்ணி வியக்க வைக்கிறது. முயன்றால் முடியாதது இல்லை என்பதும், வானம் கூட எல்லை இல்லை, அதையும் தாண்டி பயணிக்க முடியும் என்பதும் விளங்குகிறது. பொது நிர்வாகங்களில் இத்தகையதொரு ஆற்றல், திறமை, சுத்தம், கட்டுப்பாடு ஆகியவை பரிமளிக்க முடிந்தால் என்ற எண்ணமும், ஆசையும் ஏற்பட்டதையும் தவிர்க்கமுடியவில்லை. அப்படி ஒருநாள் வந்தால் அதுவே இந்நாட்டின் பொன்னாள். உண்மையான சுதந்திரம் கிட்டியது என்னலாம்.

18 comments:

  1. உண்மைதான் கீதா,. தனி மனித சாதனை என்று நினைக்கும்போது மலைக்க வைக்கிறது.
    இருந்தும்....ம்மனம் ஒட்டவில்லை

    ReplyDelete
  2. இன்னும் போகலை.

    போகலாமுன்னு ஒரு எண்ணம் மனசின் ஓரமா இருக்கு.

    இங்கே இருக்கு பாருங்க ஒரு காணொளி

    http://www.youtube.com/watch?v=72rBHeuofhc&feature=player_embedded

    ReplyDelete
  3. வாங்க அமுதா, முதல் வரவு??? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. வாங்க வல்லி, உடம்பு தேவலையா??? பாரதி பத்தின போஸ்ட் படிச்சேன், பின்னூட்டம் போடலைனு நினைக்கிறேன்,
    தங்கக் கோயில் சுற்றுலாவாகப்போய்ப் பார்க்கலாம், மனசில் ஒட்டலை எனக்கு.

    ReplyDelete
  5. போயிட்டு வாங்க துளசி, முக்கியமா வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலைப் பகல் நேரத்தில் போய்ப் பாருங்க. ரத்தினகிரி, வள்ளி மலை போயிட்டு வாங்க, நாங்க இன்னும் வள்ளிமலை போகமுடியலை, எப்போ அழைப்பு வருமோ???

    ReplyDelete
  6. ஸ்வாமி அழகா இருந்தது. ஆனா எதோ மிஸ்ஸிங்க். என் மனசுன்னு அதட்டிண்டேன் என்னையே! நீங்க சொல்லற மாதிரி பக்கத்துல பாக்க நிறைய கோவில்களை போல இங்கேயும் கட்டணம். இருக்கட்டும்!! தர்ம காரியத்துக்குத்தான் பயன்பட்டா சரி. நாங்க அப்படித்தான் நினைச்சுண்டோம். ஸ்வாமிக்கு யாரும் தூரத்திலியோ ரொம்ப பக்கத்திலியோ இல்லை எல்லாரும் ஒண்ணு தான்.இருந்தாலும் எல்லாருக்கும் எல்லாதடவையும் அந்த புரிதல் இருக்கணும்னு இல்லை இல்லையா? எனக்கு என்ன வருத்தமா இருந்த்ததுன்னா, கட்டணம் கட்டினதுக்காக நம்ப கைல நீட்டா ஒரு bag ல லட்டு, மணக்க மணக்க தாழம்பு , மஞ்சள் வாசனையோட குங்குமம் சஸ்வமி ஃபோட்டோ இன்னும் ஏதோ இத்யாதி தரா. ஆனா gateடுக்கு வெளில எத்தனை நம்பிக்கையோட வந்தாளோ பாவம் அவா முகத்துல தனக்கு கிடைக்காத ஏமாத்தம் தெரிஞ்சது . எல்லாரும் share பண்ணிண்டுடறதில்லை. மிஞ்சி போனா ப்ரசாதம் தானே . கோவில் நிர்வாகம் எல்லாருக்குமே தானம்னு கொஞ்சம் ப்ரசாதமும் தந்துட்டா நன்னா இருக்கும்னு தோனித்து. ஸ்வாமி நமக்கும் ஆசிர்வாதம் தந்ததுன்னு மனசமாதானத்தோட போவா இல்லையா.

    ReplyDelete
  7. வாங்க ஜெயஸ்ரீ, மறுபடியும் சென்னை விசிட்டிலே இருக்கீங்க?? தங்கக் கோயில் பார்த்தீங்களா?? தனிமனித உழைப்பு என்ற வகையில் சரியே. மற்றபடி பக்தி என்று பார்த்தால், ம்ஹும். ப்ரசாதம்னு தான் வெளியே தராங்களே, சாம்பார் சாதம், அதான். குங்குமம் எல்லாம் பணம் கொடுத்துப் பார்த்தால் தான். இல்லாட்டி அதுக்குக் கூட லாயக்கில்லை தான்:((((((

    ReplyDelete
  8. எனக்கு ரொம்ப தெரியாது மிஸஸ் சிவம். எல்லாரும் தனி மனிதன் செய்ததுனு சொல்லறது எனக்கு புரியறது இல்லை!!. ஒரு நல்ல தெய்வீக எண்ணத்துடன் ஒரு மனது சங்கல்ப்பித்தது.ஆனா நிதி பல நல்ல மனதுகளின் கொடையா இருக்கலாம். பொருள் உதவி முடியாதவாளா இருந்தா அவா உழைப்பா இருக்கும். not even a blade of grass moves by itself. உலகத்தின் வழியில் நாம எல்லாரும் INTERDEPENDANT அப்படினு எனக்கு தோனறது . ஆக தெய்வ அனுக்கிரஹம் பல வழிகளில் இல்லையா.

    இன்னும் வந்த பாடு இல்லை. கட்டாயம் வந்ததும் உங்களை கூப்பிடுவேன்:))

    ReplyDelete
  9. எங்க ஊருக்கு வந்திருக்கீங்க சொல்லவே இல்லையே.

    இந்த தங்க கோவில் பற்றி நிறைய கதை இருக்குங்க. அங்க இருக்க ஆட்டோகாரர்கள் கதை கதையா சொல்லுவாங்க.

    நாராயணி கோவில் ஒன்று எதிரில் இருக்கு(புகழ்பெறாத சமயம்) நிறைய முறை அமிர்த்தி செல்லும் போது கல்லூரி தோழர்கள் செல்வோம்.

    தங்க கோவில் நிறைய வியாபாரங்களை வேலூருக்கு கொடுத்துள்ளது. இது வேலூரை மேலும் உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது.

    இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருங்க..

    ReplyDelete
  10. வாங்க விழியன், என்னோட பதிவுகளுக்கு முதல் வருகைக்கு நல்வரவு சொல்லிக்கறேன். ஆமாம், எதிரே உள்ள சுயம்பு நாராயணி அம்மன் கோயிலுக்கும் போனோம். முதலில் அங்கே போயிட்டுத் தான் அப்புறம் இந்தத் தங்கக் கோயிலுக்கு வந்தோம்.இந்த ஸ்ரீநாராயணி அம்மா என்பவரே அந்தக் கோயிலில் அர்ச்சகராய் இருந்தவர்தான் என்றார்கள். அங்கே உள்ள சாந்நித்தியம் இந்தத் தங்கக் கோயிலில் இருக்கா என்பதும் கேள்விக்குரியதே! உங்கள் கருத்துகளைச் சொல்லுங்க, கேட்க காத்திருக்கோம். நாங்க சுற்றுலாக்குழுவோட வந்ததால் யாரிடம் தெரியப் படுத்தவில்லை. காஞ்சீபுரத்தில் கூட ஆகீராவீட்டுத் தெருவிலே இருந்தோம், அந்தத் தெரு வழியாவே போனோம் என்றாலும் அவருக்கும் தெரியப் படுத்தவில்லை. :))))))))))

    ReplyDelete
  11. நல்ல பதிவு அம்மா. நீங்கள் சொன்னது போல பிரமிப்புதான் மிஞ்சுகிறது.

    //செல்லும் வழியில் கோயில் நிர்வாகம் நடத்தும் கடைகள் வருகின்றன. நம்ம மாநகரக் காவல் தடுப்பு ஆங்காங்கே ஏற்படுத்தி இருப்பது போல் கடைகள் இருக்குமிடங்களில் இவங்களும் தடுப்புகள் ஏற்படுத்திக் கடைக்கு உள்ளே நுழைந்தே வெளியே வரும்படிக்குச் செய்திருக்கின்றனர்.//

    இங்கேல்லாம் எல்லா சுற்றுலாத் தலங்களிலும் அப்படித்தான் வச்சிருப்பாங்க. கடைக்குள் நுழையாம வர முடியாது.

    ReplyDelete
    Replies
    1. கவிநயா அக்காவோட கமெண்டையும், திவா அண்ணாவோட கமெண்டையும் இப்போத்தான் ரேவதி தயவிலே பார்க்கிறேன். நன்னி ஹை!

      Delete
  12. வீடியோ இணைப்புக்கு நன்றி துளசிம்மா.

    ReplyDelete
  13. mmm
    ஏதோ மிஸ் செய்யறோமோன்னு நினைச்சேன். அப்படி ஒண்னுமில்லைன்னு தோணுது. காசு கட்டினாதான் குங்குமம் என்கறது ரொம்பவே அநியாயம். எந்த கோவிலேயும் இப்படி கிடையாது.

    ஆமா ஜெ அக்கா ஏன் கீ அக்காவ மிஸஸ் சிவம்ன்னு கூப்பிடறாங்க? அன்னியமாவும் அன்னியாயமாவும் இருக்கு!
    :-))

    விழியன்: உள்ளூர் மாடு விலை போகாது.

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஜெ அக்கா ஏன் கீ அக்காவ மிஸஸ் சிவம்ன்னு கூப்பிடறாங்க? அன்னியமாவும் அன்னியாயமாவும் இருக்கு!
      :-))//

      ஹிஹிஹி, இன்னிக்குத்தான் பார்க்கிறேன். நன்னி ஹை.

      Delete
  14. அவங்க ஊர்ப் பழக்கம் தம்பி வாசுதேவன்:)

    ReplyDelete
    Replies
    1. நன்னி ரேவதி. இந்தப் பதிவுக்கு இத்தனை வருஷம் கழிச்சு வந்ததுக்கு நன்னி ஹை.

      Delete