ஏற்கெனவே சொன்னபடி வித்யாரண்யர் கதையைப் பல விதங்களிலும் சொல்கின்றனர். அவர் தமிழ்நாட்டின் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் பெயர் மாதவர் என்றும் கூறுகின்றனர். இப்படியும் ஒரு கூற்று உண்டு. துங்கபத்திரா நதிக்கரையில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார் என்றும், சிறு வயதில் இருந்தே வேத, வேதாந்தங்களின் மீது கொண்ட பற்றுக் காரணமாயும், மேலே படிக்கவும் காஞ்சிக்கு வந்தார் என்றும் சிலர் கூற்று. இல்லறத்தில் வறுமை பொறுக்க முடியாமல் காஞ்சி ஸ்ரீமடத்தில் படித்து வந்த மாதவர் ஸ்ரீவித்யா வழிபாட்டில் தேர்ந்து விளங்கினார். ஸ்ரீவித்யா வழிபாட்டில் தேவியிடம் பொன்னும், பொருளும் கிடைக்கும் வண்ணம் உள்ள வழிபாட்டைச் செய்து தேவியிடம் பொன்னும், பொருளும் வேண்டினார். ஆனால் இதற்குப் பலனே இல்லை என்றும், அதனால் கோபமுற்ற மாதவர் ஸ்ரீசக்கரத்தை எரிக்க ஆரம்பிக்க, அந்தத் தீயிலிருந்து அரைகுறையாக எரிந்த ஆடையோடு தேவி தோன்றி, "இப்பிறவியில் நீ செல்வத்தை அனுபவிக்க முடியாது. சென்ற பிறவியில் எவருக்கும் ஒரு அரிசிமணிகூடத் தானம் அளிக்கவில்லை. எந்தவிதமான நற்செயல்களும் செய்யாத நீ அடுத்த பிறவியில் தான் செல்வத்தை அநுபவிக்க முடியும்." என்கிறாள். (இது எல்லாருமே ஒரே மாதிரி சொல்கின்றனர்)
தான் நினைத்தபடி செல்வம் கிடைக்கவில்லை என்றதும் மாதவருக்கு வருத்தம் மேலோங்குகிறது. என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். பின்னர் சந்நியாச ஆசிரமம் மேற்கொண்டால் அது இன்னொரு ஜன்மத்திற்குச் சமம் என்பது நினைவில் வர சந்நியாசம் மேற்கொள்ளுகிறார். அப்போது தான் வித்யாரண்யரின் உதவி வேண்டி வந்த ஹரிஹர, புக்கர்களின் அறிமுகமும் கிடைத்ததாயும் புக்கன் தினமும் அளிக்கும் பாலை மட்டுமே அருந்தி அருந்தவம் இயற்றியதாயும் ஒரு கூற்று உண்டு. நீண்ட வருடங்கள் தவம் செய்த மாதவரை சந்நியாசம் வாங்கியதும் வித்யாரண்யர் என்று அழைக்க ஆரம்பித்திருந்தனர். தவத்தின் பலனாக அவர் முன் கலைமகளும், அலைமகளும் தோன்றி என்ன வேண்டும் எனக் கேட்க, சநாதன தர்மம் நிலைத்து நிற்கவும், அந்நியர்களை நாட்டை விட்டு ஓட்டவும் ஓர் இந்து சாம்ராஜ்யத்தை அமைக்க ஆசிவேண்டும் என்றும், அதற்குரிய பொருளுதவியும் வேண்டும் என்றும் கேட்கிறார் வித்யாரண்யர். பொருள் கொடுத்துவிடலாம். ஆனால் சநாதன தர்மத்தை நிலைநாட்ட மாபெரும் சாம்ராஜ்யத்தை நிலை நிறுத்தும் தருணம் இதுவல்ல. இப்போது ஏற்படுத்தும் சாம்ராஜ்யம் பல நூறாண்டுகள் நிலைத்து நிற்காது எனக் கலைமகளும், அலைமகளும் சொல்லியும் வற்புறுத்தித் தனக்கு வேறு வரம் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார் வித்யாரண்யர்.
அவ்வாறே வரம் கொடுத்தனர் தேவியர் இருவரும். அளவிடமுடியாத செல்வத்தைப் பார்த்துத் திகைத்த வித்யாரண்யருக்கு ஒரு கணம் வருத்தமும் மேலோங்கியது. இத்தனை செல்வத்தையும் தான் பயன்படுத்த முடியாது. அதற்குத் தனது சந்நியாச ஆசிரமம் இடம் கொடுக்காது என்பது புரியவர அவர் வருத்தம் மேலும் அதிகமானது. ஆனாலும் இந்தச் செல்வத்தை ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே கொண்டு தன் மனதிற்கு வலு சேர்த்துக்கொண்டார். அப்போது அந்தத் தேசத்தின் அரசன் வாரிசில்லாமல் இறக்க, மந்திரி பட்டத்து யானையை அலங்கரித்து அதன் கையில் மாலையைக் கொடுத்து நாட்டை வலம் வர வீரர்கள் பாதுகாப்போடு அனுப்பி வைக்கிறான். நாட்டை எல்லாம் விடுத்துக் காட்டில் நுழைந்த பட்டத்து யானை வித்யாரண்யர் கழுத்தில் மாலையைப் போட சந்நியாசியான அவர் தான் அரசாள முடியாது என்பதைத் தெளிவாக்கித் தனக்கு அத்தனை வருடங்களாக உணவு அளித்துப் பாதுகாத்த ஹரிஹர, புக்கர்களை அரசராக்கும்படி கூறுகிறார். அவரின் வித்யையினால் விளைந்த தேஜஸைக் கண்ட மந்திரி, பிரதானிகள் அவர் வார்த்தைக்கு மறுப்புச் சொல்லாமல் புக்கனை அரசனாக்குகின்றனர். ஹரிஹரன் சுற்று வட்டாரங்களில் போர் புரிந்து அந்நியர் படையை அழித்துத் தன் சகோதரனுக்கு உதவி புரிகிறான்.
வாராஹியின் சின்னம் கொண்ட மோதிரத்தை புக்கனுக்கு அளித்து ஆசீர்வதிக்கிறார் வித்யாரண்யர். பின்னர் புதியதாய்த் தலைநகரம் நிர்மாணிக்கச் சொல்கின்றார். தலைநகரம் நிர்மாணிக்கும் முன்னர் தேவியின் வழிபாட்டில் இறங்கிய வித்யாரண்யர் பின்னர் எழுந்து தன் சீடர்களான ஹரிஹர, புக்கர்களிடம், நகர் நிர்மாணத்திற்கான நாளைக் குறித்துத் தருகிறார். இந்த நாளில் ஒரு குறிப்பிட்ட நேரம் நிர்மாண வேலையை ஆரம்பிக்கும்படியும், அப்போது ஆரம்பிக்கும் வேலையால் நிர்மாணிக்கப் படும் நகரமும், அதைச் சார்ந்த சாம்ராஜ்யமும் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும் என்றும் சநாதன தர்மம் செழித்து ஓங்கும் என்றும் கூறுகிறார்.//
இப்படியும் ஒரு கதை விளங்கி வருகிறது. எது எப்படியோ ஹரிஹர, புக்கர்களை அரசனாக்கி அழகு பார்த்தவர் வித்யாரண்யரே என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
சென்ற அத்தியாயத்தில் கூறியபடி போர் வீரன் போல் வாட்டம் சாட்டமாய் இருந்த புக்கனைக் கூப்பிட்டுப்போர்ப் பயிற்சி அளித்து வீரனாக்கியதாயும், தன்னைத் தேடி வந்த சாம்ராஜ்யத்தை அவனை ஆளச் சொன்னதாகவும் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கும் நம் கலாசாரமும் சரி, சநாதன தர்மமும் சரி ஓரளவுக்காவது நீடித்திருக்கிறது என்றால் அது வித்யாரண்யராலேயே.
Sunday, July 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
விஜயநகர பேரரசர்களால்தான் தென் இந்தியாவில் இஸ்லாமிய அரசு ஊடுருவவில்லை. வித்யாரண்யர் சொன்னமாதிரியே 300வருஷம் இந்த பேரரசு இருந்தது. அப்புறம் யார் ஆளறதுன்னு அடிச்சிண்டு தூசியோட தூசியாயிடுத்து :(( . ROBERT SEWELL வந்து ஆராய்ந்து FORGOTTON EMPIRE புஸ்தகம் எழுதினப்புறம் தான் எல்லோருக்கும் அருமை தெரிய வந்தது. வித்யாரண்யருக்கு இணையா சொல்லணும்னா மேற்கே மராட்டா பேரரசு உண்டாக்க சிவாஜிக்கு துணையா இருந்த அவரோட குரு ராம்தாஸ் தான். வித்யாரண்யரோட BEST WORK சயன வேத பாஷ்யம்னு வேதத்துக்கு விளக்கம் எழுதினது. இதன் மூலம் தன் மதத்தின் உயர்வு மக்களுக்கு தெரிய வந்து , ஸநாதனம் எல்லாவற்றிற்கும் நாதனாகிய மதம், தன்னுடைய அக்ஸெப்டன்ஸ், டாலரென்ஸ்னாலனு மக்கள் உணர்ந்து தன் மதத்தில் நம்பிக்கை வைக்கவும் ஏதுவாகி, ஹிந்து மதத்தின் புத்துணர்வுக்கு அடிகோலும் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டதே இந்த வேத பாஷ்யம். ஆதி சங்கரரால் கூட செய்யப்படாதது. GREAT SOULS.
ReplyDeleteஅலுவலக அடிமாட்டு வேலை செய்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கையா? தொழிலில் நீங்கள் நினைத்த நிலையை
ReplyDeleteஅடைந்துவிட்டீர்களா? இல்லை உலகம் எப்போதும் ஒரு பொழுதுபோக்கு கூடமா?. வாழ்கையும் பணம் சம்பாதிக்கும்
வழியையும் நீங்கள் சமன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா?. உங்கள் பயணம் எங்கே செல்கிறது?. ஜீஜிக்ஸ்.காம் www.jeejix.com இல் எழுதுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.
நல்ல பதிவு நன்றி கீதா மேடம்
ReplyDeleteஜெயஸ்ரீ மேடம் சொன்ன தகவலுக்கும் நன்றி