Tuesday, April 5, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!! 6

திருமண பந்தத்தில் இருந்து அத்தோடு விடுபட்ட அடிகளார் இதன் பின்னர் ஒழிவில் ஒடுக்கம் என்னும் நூலைப் பதிப்பித்தார் . திருப்போரூர் சிதம்பர சுவாமிகளால் உரை செய்யப் பட்ட அந்த நூலைப் பதிப்பித்து சமய உலகுக்கு அடிகள் அளிக்கும்போது அவரின் வயது இருபத்தி எட்டே ஆகும். அந்த வயதிலேயே சிறந்த ஞான நூல்களைப் படித்து ஆராய்ந்து அவற்றைப் பதிப்பிக்கும் ஆற்றலும் பெற்றிருந்தார். இதன் பின்னர் சென்னையிலிருந்து சாஸ்திர விளக்கச் சங்கத்தைச் சேர்ந்தவர்களால் மனுநீதிச் சோழன் வரலாற்றை விவரித்து சிறுவர்கள் படிக்கும் வண்ணம் ஓர் உரைநடை நூல் எழுதும் பணி அடிகளிடம் ஒப்படைக்கப் பட்டது. அதையும் சிறப்பாக எழுதித் தந்தார் அடிகளார். பெரிய புராணத்தில் சேக்கிழார் எழுதி இருக்கும் மனுநீதிச் சோழனின் வரலாற்றை விவரித்து ,”மனுமுறை கண்ட வாசகம்” என்ற பெயரில் வள்ளலார் எழுதிய உரைநடை நூல் அனைவர் மனதையும் கவர்ந்தது. அதிலும் முக்கியமாக அதிலே மனுநீதிச் சோழன் தன் மகனின் செயலால் செங்கோல் வளைந்தது எனப்புலம்பி அழும் இடத்திலே, மனுநீதிச் சோழன் இதற்கெல்லாம் காரணம் தான் செய்த பாவம் எதுவோ எனப் புலம்பிப் பட்டியல் இடும் இடத்தில் அனைவரும் உண்மையாகவே வாய் விட்டு மனம் விட்டு அழும் வண்ணம் அடிகளாரின் எழுத்து அமைந்தது. அடிகளார் பட்டியலிட்ட பாவங்களில் சில கீழே;



“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங்கெடுத்தேனோ!

தானங்கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சிநேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரியுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ்செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ்செய்தேனோ

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!

ஆசை காட்டி மோசஞ்செய்தேனோ!

வரவு போக்கொழிய வழியடைத்தேனோ!

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!

கோள் சொல்லிக் குடும்பங்குலைத்தேனோ!

நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!

கலங்கி யொளிதோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!

காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!

கணவன் வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!

கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!”



வள்ளலார் இவற்றை எல்லாம் பாவம் எனக் கூறி இருப்பதில் இருந்து அக்கால வாழ்வு முறையின் நெறிகள் வலுவான அடிப்படைகளில் இயங்கிக் கொண்டிருந்ததைப் புரிந்து கொள்ளமுடிகிறது. இதை அடுத்து படிக்காசுப்புலவர் பாடியுள்ள தொண்ட மண்டல சதகம் அடிகளாரால் பதிப்பிக்கப் பட்டது. அதில் தொண்ட மண்டலம் என்பது சிலரால் தொண்டை மண்டலம் என வழங்கப் படுவது சரியல்ல என ஆணித்தரமாக மறுத்திருப்பார் அடிகளார். ஆதொண்டன் என்னும் மன்னனால் ஆளப்பட்ட இருபது காத எல்லை வட்டமான நாட்டின் வளப்பத்தைக் குறித்த நூறு செய்யுட்பாக்களால் ஆன அந்தப் பாடல்களை தொண்ட மண்டல சதகம் என்றே சொல்ல வேண்டும் என்றும் ஆதொண்டன் தன் ஆட்சிக் காலத்தில் கட்டிய கோயில்களில் அவன் பெயரும் இலச்சினையும் இடம் பெற்றிருக்கும் கல்வெட்டுக்களும் காணப்படும் என்று உறுதியும் செய்தார். அந்தக் கோயில்கள் திருவலிதாயம், வடதிருமுல்லைவாயில் ஆகியன ஆகும். அந்தக் கோயில்களுக்கும் தம் அன்பர்களோடு சென்று தரிசனம் செய்து வரத் திருவுளம் கொண்டார் அடிகளார்.



திருவலிதாயம் கோயிலில் வலிதாயநாதரையும், தாயம்மையையும் வழிபடச் சென்றிருந்த போது வலிதாய நாதருக்குக் கந்தைத்துணி ஒன்றைச் சார்த்தி இருக்கவே அடிகளார் மனம் பதறித் துடித்தது. ஈசன் யாருமற்றவனாய்ப் போய்விட்டானோ? அவனுக்கே கந்தைத் துணியா எனக் கதறியவண்ணம் உருகிய அடிகளாரின் நாவில் அந்நிகழ்ச்சி ஒரு பாடலாக உருப்பெற்றது.



“மெல்லிதாயவிரைமலர்ப்பாதனே

வல்லி தாயமருவிய நாதனே

புல்லிதாய இக்கந்தையைப் போர்த்தினால்

கல்லிதாய நெஞ்சம் கரைகின்றதே!’

என்று உள்ளம் கரைந்து சுவாமிகள் பாடிய பாடலைக் கேட்ட அங்கு தரிசனம் செய்ய வந்த அன்பர்கள் கோயிலின் தலைமை குருக்களிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, வந்திருப்பது அடிகளார் என்பது தெரிந்த குருக்கள் புத்தம்புதிய வஸ்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடோடி வந்து, வலிதாய நாதருக்குப் புது வஸ்திரம் சார்த்தினார்.



இதன் பின்னர் அவரின் மனம் திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரரைத் தரிசிக்க ஆவல் கொண்டது. அதன்படியே சென்னையை விட்டுப் புறப்பட்டு திருமுல்லைவாயிலுக்கு வந்து சேர்ந்தார். முல்லைக்காடாக இருந்த இந்த இடத்தில் தொண்ட நாட்டு மன்னன் ஒருவனால் முல்லைக்கொடிகளுக்கு அடியில் இருந்த சிவலிங்கம் கண்டு பிடிக்கப் பட்டதையும், மன்னன் காட்டை அழித்துக் கோயில் கட்டியதையும் தம் கூட வந்த நண்பர்களுக்குச் சொல்லி அருளினார். முல்லைக்கொடிகளை வெட்டும்போது இறைவனுக்கு வெட்டுப்பட்டுக் குருதி வந்ததாகவும், அதனால் இறைவனுக்கு வெட்டுத் தாங்கி ஈஸ்வரர் என்னும் பெயரும் உண்டென்றும் கூறினார் அடிகளார். மேலும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் இந்தக்கோயில் மாசிலாமணீஸ்வரர் பேரில் ஒரு பதிகம் பாடி இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அடிகளாரும் பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் ஒன்றை அந்தத் தலம் மீது பாடி அருளினார்.

“தில்லை வாய்ந்த செழுங்கனியே திரு

முல்லை வாயில் முதல் சிவ மூர்த்தியே

தொல்லையேன் உன் தன் தூய்திருக்கோயிலின்

எல்லை சேர இன்றெத்தவம் செய்ததே”

என்று ஆரம்பித்துப் பத்துப் பாடல்கள் கொண்ட பதிகத்தைப் பாடினார் ஸ்வாமிகள்.



அங்கிருந்து அடுத்து அடிகள் சென்ற கோயில் “திரு எவ்வுள்” என்னும் திருவள்ளூர் ஆகும். அனைவருக்கும் ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். முருக உபாசகர், சிவநேசச் செல்வர், தம்மையே சிவனின் குழந்தை யாம் எனக் கூறிக்கொள்பவர் திருமால் எழுந்தருளியுள்ள கோயிலுக்கு வந்திருக்கின்றாரே? வியப்புத் தான் அனைவருக்குமே. அப்போது அடிகளார் அரியும் சிவனும் ஒண்ணு என்னும் சொலவடையைக் குறிப்பிட்டு, ரூபம் வேறாயினும் தான் வழிபடும் ஈசனே இங்கும் இருப்பதாய்க் குறிப்பிட்டுச் சொன்னார். ஆழ்வார்கள் அழகுத் தமிழில் பாசுரங்கள் பாடித் துதித்ததையும் எடுத்துச் சொல்லி வீரராகவப் பெருமாளையும் தரிசனம் செய்து கொண்டு அவர் மேல் ஒரு பாடலையும் பாடினார்.



“தண்ணமர் மதிபோற்சாந்தந்தழைத்தசத்துவனே போற்றி

வண்ணமாமணியே போர்றி மணிவண்னத்தேவா போற்றி

அண்ணலே யெவ்வுளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி

விண்ணவர் முதல்வா போற்றி வீர ராகவனே போற்றி.”



இதன் பின்னர் அடிகளார் பதிப்பித்த மற்றொரு புத்தகம் சின்மய தீபிகை. இது விருத்தாசலம் குமாரதேவ சுவாமிகள் ஆதீனம் முத்தைய சுவாமிகளால் அருளப் பெற்றது. இதற்குப் பின்னர் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் நீதி நூலுக்குச் சாற்றுக்கவியும் எழுதிக் கொடுத்தார். பின்னர் “குடும்பகோஷம்” என்னும் நூலை எழுதும்போது பத்தொன்பது படலங்களாக விவரித்து அடிகள் எழுதிய முறையைக் கவனித்த அவரது நண்பர் குழாம் தம் வரலாற்றையே வேறு பெயர்களை வைத்து அடிகள் எழுதுகின்றாரோ என்னும் ஐயம் கொண்டார்கள். அந்தக் கால கட்டத்தில் தான் சுவாமிகளுக்கு ஞான வாழ்க்கையைத் தேடிச் செல்லவேண்டுமானால் சென்னை வாசம் சரிப்பட்டு வராது என்னும் எண்ணம் ஏற்பட்டது. சென்னையை விட்டுவிட்டுத் தொலை தூரம் செல்லவேண்டும் என எண்ணினார்.

No comments:

Post a Comment