Tuesday, April 19, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

சிதம்பரத்திலே அம்மையையும், அப்பனையும் கண்டு மகிழ்ந்த வள்ளலார் சிவகாமி அம்மையின் மேல் பத்துப் பதிகங்கள் கொண்ட, “அம்மை திருப்பதிகம்” பாடி அருளினார். அங்கேயே ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து அனைவரும் ஓய்வு எடுத்துக்கொண்ட வேளையில் பண்ணையார் போன்ற தோற்றமளிக்கும் ஒருவர் அவர்களிடம் வந்தார். வள்ளலாரைக் கண்டதும் பணிவோடு வணங்கி நின்றார். அவரிடம் வள்ளலார் அவர் வந்த காரியம் என்ன என வினவ, அவரும், தாம், அருகிலுள்ள வடலூர் என்னும் ஊருக்கருகே உள்ள கருங்குழி என்னும் கிராமத்து மணியக்காரர் என்றும், தம் பெயர், வேங்கட ரெட்டியார் என்றும் தெரிவித்தார். மேலும், வள்ளலாரைப் பற்றி நிறையக் கேட்டிருப்பதாகவும், அவரைத் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்லவே அங்கே வந்திருப்பதாகவும், வள்ளலார் வர இசைவு தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு நின்றார். அப்போது வள்ளலார், தாமும் அங்கே அருகில் உள்ள கிராமங்கள் எதிலாவது தங்கிக்கொண்டு அடிக்கடி சிதம்பரம் வந்து ஆடல்வல்லானைத் தரிசிக்க நினைத்ததாகவும், கருங்குழிக்கு வேங்கட ரெட்டியாரோடு வர ஆக்ஷேபணை எதுவும் இல்லை என்றாலும் தம்முடன் கூட நான்கைந்து சீடர்களும் வந்திருப்பதால் அவர்களைத் தனியே விட்டுத் தாம் மட்டும் வரமுடியாது எனத் தெரிவித்தார். ஆனால் வேங்கட ரெட்டியாரோ அனைவருமே வரலாம் எனக் கூறி, அனைவருக்குமே அழைப்பும் விடுத்தார்.
ஆனால் அவர்களோடு வந்திருந்த வேலாயுத முதலியாருக்குத் தாம் இங்கே வந்து பலநாட்கள் ஆகிவிட்டபடியால், இன்னமும் இங்கே இருக்க முடியாது என்றும், மேலும் தாம் வள்ளலாரோடு தங்கினால் அவருடைய ஞான வாழ்க்கைக்குத் தனிமை கிட்டாது என்றும் கூறினார். வள்ளலாரும் யோசித்து அவர்கள் விருப்பத்துக்கு உடன்பட, சென்னையிலிருந்து வந்த அன்பர்களும், வழியில் அவர்களோடு சேர்ந்து கொண்டவர்களும் வள்ளலாரை விட்டுப் பிரிந்தனர். அவர்களுக்கு அன்போடு விடை கொடுத்து அனுப்பிய வள்ளலார், வேங்கட ரெட்டியாரைப் பார்த்துத் தாம் கிளம்பும் முன்னர் தமக்குத் தனி அறை கிடைக்குமா என நிச்சயம் செய்துகொள்ள விரும்புவதாய்க் கூற, அவ்வாறே தனி அறை ஏற்பாடு செய்து தருவதாய் வேங்கட ரெட்டியார் உறுதி அளித்தார். இருவரும் சிதம்பரத்திலிருந்து கிளம்பி கருங்குழியை வந்தடைந்தார்கள். கருங்குழியில் தமது பரம்பரை நடத்தி வந்த விநாயகர் கோயிலுக்கு முதலில் வள்ளலாரை அழைத்துச் சென்றார் வேங்கட ரெட்டியார். அங்கே குருக்கள் வள்ளலாரைக் கண்டதும் அவர் யார் எனத் தெரிந்து கொண்டு மனமகிழ்வோடு வழிபாடுகள் நடத்திக் கொடுத்தார். வள்ளலார் அந்த விநாயகர் மேல் “கணேசத் திரு அருள் மாலை” என்னும் பத்துப் பதிகம் பாடி அருளினார். பின்னர் இருவரும் வேங்கட ரெட்டியாரின் வீடு நோக்கிச் சென்றனர். ரெட்டியாரின் மனைவியின் பெயர் முத்தியாலு என்பதாகும். அந்த அம்மையார் வள்ளலாரின் வரவால் மகிழ்ச்சி அடைந்தாள்.அறையை முத்தியாலு அம்மையார் தயார் செய்து வைத்திருந்தார். அங்கே அவர் தங்குவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் அம்மையார் செய்து வைத்திருந்தார். அன்றிலிருந்து வள்ளலாரின் கருங்குழி வாசம் தொடங்கியது. இங்கே இருக்கும்போதே “திரு அருட்பா” எழுதப் பட்டது. மேலும் தல தரிசனங்களும் தொடர்ந்தன. திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருவதிகை வீரட்டானம், திருவண்ணாமலை ஆகிய இடங்களைத் தரிசித்துக்கொண்டு மீண்டும் கருங்குழிக்கு வந்த வள்ளலாரைக் காண அவர் அண்ணாவான சபாபதிப்பிள்ளை வந்திருந்தார். அவரிடம் வீட்டில் அனைவரின் க்ஷேமலாபங்களைக் கேட்டறிந்த வள்ளலார் தம் அண்ணியார் தேக அசெளக்கியத்தைக் குறித்தும், வள்ளலாரைப் பிரிந்ததால் அவருக்கு ஏற்பட்ட மனவருத்தத்தைக் குறித்தும் அண்ணன் சொல்லக் கேட்டு வருந்தினார். தமையனைத் தேற்றினார். பின்னர் அண்ணனோடு அருகே இருந்த குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் சிங்கபுரி கந்தர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். அங்கே சுப்பராய சுவாமிகள், கோல சுவாமிகள் இருவரையும் கண்டு தரிசித்தார். அவர்கள் இருவரிடமும் தன் அண்ணன் குடும்பத்தின் நலனுக்காகப் பிரார்த்தித்து ஆசிகளை வேண்டினார். அண்ணன் திரும்ப ஊருக்குச் சென்றார். வள்ளலாரோ தமக்காக ஒரு சீடர் காத்திருப்பதை ஞான திருஷ்டியால் உணர்ந்து அவரைத் தேடிச் சென்றார்.

No comments:

Post a Comment