Tuesday, April 5, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை! 7

ஒருநாள் காலையில் கோயில் மண்டபத்தில் அனைவரும் கூடி இருந்த வேளையில் தம் எண்ணத்தைச் சொல்ல விழைந்தார் அடிகளார். நண்பர்கள் அனைவருக்கும் அரசல் புரசலாக எற்கெனவே விஷயம் ஒருவாறு புரிந்திருந்தது. என்றாலும் இது உண்மையாய் இருக்கக் கூடாது என்றே அவர்கள் நினைத்தனர். அடிகளார் வந்தார். அனைவரையும் பார்த்தார். தம் அணுக்கத் தொண்டர்களான வீராசாமி முதலியார், சபாபதி முதலியார், திருவாவடுதுறை ஆதீன வித்வான், சோமு செட்டியார் போன்றவர்களை எல்லாம் பிரிந்து செல்லப் போவதாய் அறிவித்தார். அனைவருக்கும் தூக்கிவாரிப்போட்டது. வேலாயுத முதலியாரால் தாங்க முடியவில்லை. “எங்களால் முடியாதே ஸ்வாமி, துயரம் மேலிடுகிறதே? உம்மைப் பிரிந்து எவ்வாறு இருப்போம்? முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்.” என்று அனைவரின் சார்பாகவும் வேண்டினார். அடிகளார் சிலகாலமாகவே தமக்குச் சென்னையின் ஆரவார வாழ்க்கை வெறுத்துவிட்டதாகவும், அலங்கோலமாயும் ஆடம்பரமாயும் இருக்கும் இந்த வாழ்வை விட்டு விலகித் தொலைதூரம் செல்ல விரும்புவதாயும் கூறினார். அப்போவே அப்படி இருந்தால் இப்போ பார்த்தால் என்ன சொல்லுவாரோ? மேலும் குடும்பத்தாரோடும் தமக்குத் தங்கி இருக்கப் பிடிக்கவில்லை என்றும் தமிழ்ப் பண்டிதனாகவும் இருக்க விருப்பமில்லை என்றும் ஞான வாழ்க்கையைத் தேடிச் செல்லப் போவதாயும் அறிவித்தார்.செல்லுமிடமானும் கூறும்படி அனைவரும் வற்புறுத்தவே அதன் பேரில் தாம் பிறந்த ஊரான மருதூருக்கு முதலில் செல்லப் போவதாயும், அங்கிருந்து அடுத்தடுத்த தலங்களில் வழிபாடுகள் செய்யப் போவதாயும் பின்னர் முடிவாய்த் தங்குமிடத்தைச் சிந்திக்கவேண்டுமென்றும் கூறினார். இந்தத் தல யாத்திரையில் தம்முடன் சிதம்பர சுவாமிகள், சடைச்சுவாமிகள், வீராசாமி நாயக்கர், வேலாயுத முதலியார் ஆகியோரை மட்டுமே அழைத்துச் செல்லப் போவதாயும் கூறினார். ரத்தின முதலியார், முடிந்தபோதெல்லாம் சென்னைக்கு வந்து போகும்படிக் கேட்டுக் கொள்ள முடிந்தால் வருவேன் என்று சுவாமிகள் சொன்னார். ஈசன் சித்தம் எப்படியோ அப்படி முடிந்தவரை முயற்சிப்பதாயும் கூறினார். பின்னர் நண்பர்கள் அனைவருக்கும் ஆசிகளை வழங்கி விடைபெற்று உடன் வருபவர்களை அழைத்துக் கொண்டு சென்னையை விட்டுப் புறப்பட்டார். வண்டிப்பாதையிலேயே சென்ற அடிகளார் இடை இடையே இருந்த தலங்களைத் தரிசித்துக் கொண்டு பாண்டிச்சேரிக்கு வந்து சில நாட்கள் தங்கிவிட்டுப் பின்னர் தான் பிறந்த ஊரான மருதூருக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ஈசன் சிவயோகியாக வந்து நடந்து ஆரூடம் சொன்ன அந்தத் திருவீதியில் நடக்கும்போதே மெய் சிலிர்த்தது அடிகளாருக்கு. அங்கே இருந்த ஊர் மக்களிடம் தாம் பிறந்த வீட்டை விசாரித்தறிந்தார். வீடு இப்போது வேறொருவருக்குச் சொந்தமாகி இருந்தது. என்றாலும் உள்ளே அனுமதிக்கப் பட்டு தாம் பிறந்த வீட்டைக் கண்டு களித்து மெய்ம்மறந்து பின்னர் அங்கிருந்து கிளம்பி தற்போது வைத்தீசுவரன் கோயில் என்று அழைக்கப் படும் புள்ளிருக்குவேளூரை அடைந்து, அங்கேயும் தரிசனம் செய்து கொண்டார். தலத்தில் முருகனுக்கு உள்ள தனிச்சிறப்பை எடுத்துரைத்த அடிகளார் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கும் முறையையும் விளக்கிச் சொல்லி இருக்கிறார்.செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கும் முறை:திங்கள் அன்று இரவில் பலகாரம் செய்து, செவ்வாயன்று சூரியன் உதிக்கும் முன்னேயே எழுந்து, இறை உணர்வோடு அங்க சுத்தி,, தந்த சுத்தி செய்து, திருநீறு அணிந்து கொண்டு, நல்ல நீரில் குளித்து, விபூதியை நீரில் குழைத்து அவரவர் வழக்கப்படி தரித்துக் கொள்ளவேண்டும். கணபதியை நினைத்து முதலில் வணங்கிவிட்டுப் பின்னர் ஐந்தெழுத்தான சிவ பஞ்சாக்ஷரத்தை நூற்றெட்டு முறை ஜபிக்கவேண்டும். சிவனையே நினைத்து தியானம் செய்யவேண்டும். எழுந்து வாயிலுக்கு வந்து உதயமாகி இருக்கும் சூரியனைப் பார்த்து “ஓம் சிவ சூரியாய நம” என்று சொல்லி சூரிய நமஸ்காரம் செய்து பின்னர் அங்கேயே நின்றுகொண்டு, கோரிக்கைகளை மனதில் நினைத்து முடித்துக் கொடுக்கவேண்டுமென ஸ்ரீவைத்திய நாதரையும், தையல் நாயகியையும் வேண்டிக்கொள்ளவேண்டும். பின்னர் “ஓம் வைத்தியநாதாய நம” என்று நூற்றெட்டு அல்லது ஆயிரத்தெட்டு முறை ஜபித்துவிட்டுப் பின்னர் ஒரு பலம் மிளகு எடுத்துக் கொண்டு துண்டிலோ, அல்லது ஒரு துணியிலோ முடிந்து கொண்டு வைத்தியலிங்கார்ப்பணம் என்று சொல்லி அதைத் தனியாக ஓர் இடத்தில் வைக்கவேண்டும். சிவனடியார் எவரேனும் வருகின்றாரா எனப் பார்த்து அவரை அழைத்து சகலவிதமான உபசாரங்களோடு அமுது செய்வித்து அனுப்பவேண்டும். பின்னர் தாம் பச்சரிப்பொங்கல் மட்டும் அரையாகாரம் செய்யவேண்டும். அன்று மாலையில் சிவ தரிசனம் செய்யவேண்டும். இரவு படுக்கும்போது பாயிலோ அல்லது சயனக்கொட்டையிலோ படுக்காமல் மெழுகிய தரையில் கம்பளம் விரித்துப் படுக்க வேண்டும். சிவ சரித்திரம் கேட்கவேண்டும். வாசனாதித் திரவியங்கள், சந்தனம், புஷ்பம், தாம்பூலம், சுகம், பெருந்தூக்கம் போன்றவையை விட்டுவிடவேண்டும். இதுதான் செவ்வாய்க்கிழமை விரதமுறை என்று அனைவருக்கும் விரதம் இருக்கும் முறையைக் கற்றுத் தந்தார் அடிகளார்.பின்னர் அங்கிருந்து செல்லக் கிளம்பியவரை வைத்தீசுவரன் கோயிலின் கட்டளைத் தம்பிரான் எதிர்கொண்டு அழைத்துச் சென்று சுவாமிகளை வைத்தியநாதரை மீண்டும் தரிசனம் செய்ய வைத்து வைத்தியநாதர் மீது பதிகங்கள் பாடி அருளவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.“இளவேனில் மாலையாய்க் குளிர்சோலை யாய்மலர்

இலஞ்சிபூம் பொய்கையருகாய்

ஏற்றசந் திரகாந்த மேடையா யதன்மேல்

இலங்குமர மியவணையுமாய்த்

தளவேயு மல்லிகைப் பந்தராய்ப் பால்போற்

றழைத்திடு நிலாக்காலமாய்த்

தனியிளந் தென்ரலாய் நிறை நரம் புளவீணை

தன்னிசைப் பாடலிடமாய்

களவேக லந்தகற் புடையமட வரல்புடை

கலந்த நய வார்த்தையுடனாய்க்

களிகொள இருந்தவர்கள் கண்டசுக நின்னடி

கழனிழற் சுகநிகருமே

வளவேலை சூழுலகு புகழ்கின்ற தவசிககா

மணியுலக நாதவள்ளல்

மகிழவரு வேளூரி லன்பர்பவ ரோகமற

வளர் வைத்தியநாதனே.”இதன் பின்னர் சுவாமிகள் அங்கிருந்து திருவாரூருக்குச் சென்றார். அங்கே பத்துப் பாடல்களைக் கொண்ட திரு ஆரூர்ப்பதிகமும் பாடினார். அங்கிருந்து வைணவத் தலமான திருக்கண்ணமங்கை வந்தடைந்து, அபிஷேகவல்லியையும், பெருமாளையும் சேவித்துவிட்டு அங்கே இருக்கும் சிற்ப அற்புதங்களையும் கண்டு மகிழ்ந்துவிட்டுச் சிதம்பரம் நோக்கிச் சென்றார். சிதம்பரத்தின் அனைத்துச் சிறப்புக்களையும் பட்டியலிட்டு நண்பர்களுக்கு விளக்கிய அடிகள் நடராஜர் சந்நிதிக்கு வந்து தீப ஆராதனையைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார். தம் சிறு வயதிலேயே, பால் உண்ணும் பருவத்திலேயே சிதம்பர ரகசியம் இதுவெனத் தமக்குக் காட்டித் தந்த இறைவன் இவனே எனப் போற்றிப் பாடினார் அடிகளார்.“தாய்முதலோரொடு சிறிய பருவமதில் தில்லைத்

தலத்திடையே திரைதூக்கத் தரிசித்தபோது

வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்

வெளியாகக் காட்டிய என் மெய் உறவாம் பொருளே

காய்வகை இல்லாதுளத்தே கனிந்த நறுங்கனியே

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியா களிப்பே

தூய்வகையோர் போற்றமணி மன்றில் நடம்புரியும்

சோதி நடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே!”

4 comments:

 1. "அப்பா !நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
  ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
  எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
  எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
  செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
  திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
  தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
  தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே"
  இந்த பாட்டு மனச தொட்டமாதிரி வேற எந்த பாட்டும் என் மனதை தொட்டதில்லை !!

  ReplyDelete
 2. எனக்குப் பிடிச்சது, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியது தான். மனம் எவ்வளவு மென்மையாக இருந்தால் அவ்விதம் தோன்றும் இல்லையா??

  பி.கு. இரண்டு நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன்.

  ReplyDelete
 3. நன்றி கீதாம்மா

  இந்த பதிவுகளை எல்லாம் படிக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும்

  ஜெயஸ்ரீ மேடம் குறிப்பிட்டதும் மனதை நெகிழ வைக்கிறது .,

  பதிவுக்கு நன்றி கீதாம்மா

  ReplyDelete
 4. நன்றி ப்ரியா. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete