Thursday, September 29, 2011

அருட்பெரும்சோதி! தனிப்பெரும் கருணை!

வள்ளல் பெருமான் சித்திவளாகத் திருமாளிகையினுள் தாம் யோகத்தில் அமரும் திருவறைக்கதவைத் தாழிட்டுக்கொண்டு திருவிளக்கின் முன் அமர்ந்து கண்மூடி யோகத்திலாழ்ந்தார். பின்னர் தீபத்தை நோக்கிக் கண்ணீர் பெருக்கிய வண்ணம் இறைவனால் தமக்குக் கிட்டிய பலன்களை எல்லாம் நினைந்து நினைந்து உருகினார். தன் பிள்ளையாய்த் தம்மை ஏற்றுக்கொண்ட இறைவனின் பெருங்கருணையை நினைந்து மகிழ்ந்தார். அடிமுடி காட்டியும், சூட்டியும், இறைவனின் திருக்கரத்தைத் தம் தலைமீது வைத்து தீக்ஷை அருளியதையும், நயன, ஸ்பரிச, வாக் தீக்ஷைகள் அளித்ததையும் எண்ணி எண்ணி அதற்காகத் தாம் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்தாலும் போதாது என எண்ணினார். ஆனால் இறைவனோ சற்றும் தயங்காது தம் உடல் பொருள் ஆவியைத் தமக்குக் கொடுத்து சுத்த, பிரணவ, ஞான தேகங்களை அளித்ததை எண்ணி வியந்தார். கர்மசித்தி, யோகசித்தி, ஞானசித்தி போன்ற மூவகைச் சித்திகளோடு எல்லாம் வல்ல சித்தியையும் அருளிய பெருமான் தமக்கு ஐந்தொழில் ஆற்றலையும் கொடுத்ததையும் எண்ணி, மரணமில்லாப் பெருவாழ்வில் வைத்தருளியதை நினைந்து மனமுருகப் பாடினார்.“காற்றாலே புவியாலே ககனமதனாலே

கனலாலே புனலாலே கதிராதியாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவியாலே

கோளாலே பிற இயற்றும் கொடுஞ்செயல்களாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தை அருட்பெரும்சோதி இறைவனைச் சார்வீரே.”இதைப் பாடிய வண்ணமே மீண்டும் யோகநிலையில் ஆழ்ந்தார். சன்மார்க்கக் கொடி கட்டிய ஒருமாதத்தில் ஒரு நாள் முன்னிரவு. தம் திருவறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கைக் கூடத்தில் வைத்துவிட்டு கூடியிருந்தோரைப் பார்த்து, “இந்த விளக்கை அருட்பெரும்சோதி ஆண்டவரின் நினைவாக இங்கே வைத்துள்ளேன். இதைத் தடைபடாது வழிபட்டு வாருங்கள். ஆண்டவர் இப்போது தீபமுன்னிலையில் விளங்குகிறார். உங்கள் காலத்தை வீணாகக் கழிக்காதீர். “நினைந்து, நினைந்து” எனத் தொடங்கும் இருபத்தெட்டுப் பாடல்கள் அடங்கிய பதிகத்தில் கண்டபடி தெய்வ பாவனையை இந்த தீபத்தில் செய்துவாருங்கள். நான் இப்போது இந்த உடம்பில் உள்ளேன். இனி, எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன். இப்போது நான் எனது அறைக்குள்ளே சென்று கதவைச் சார்த்திக்கொள்வேன்.” என்று கூறிவிட்டு உள்ளே சென்று கதவைச் சார்த்தினார். கூடியிருந்தோர் அனைவரும் செய்வதறியாது திகைத்தாலும் வள்ளலார் கூறிச் சென்றபடி தீபத்தை ஆராதித்துப் பாடல்களைப் பாடி வந்தனர்.பெருமானோ ஈசனோடு இரண்டறக் கலப்பதற்கான சாதனைகளைச் செய்து வந்தார். பலநாட்கள் உள்ளே இருப்பார். நடுவில் சில நாட்கள் வெளியே வருவார். ஆயிரத்து எண்ணூற்று எழுபத்து நான்காம் ஆண்டு, ஜனவரி மாதம் முப்பதாம் நாள்; ஸ்ரீ முக ஆண்டு தைத்திங்கள் பத்தொன்பதாம் நாள், பூசமாக இருந்தது. முன்னிரவு நேரம். வள்ளல் பெருமான் சித்திவளாகக் கூடத்தில் இருந்த அனைவரையும் நோக்கிப் பேசலானார்.

“கார்த்திகை மாதம் தொடங்கி இரு மாதங்களாக இந்த தீப ஆராதனை செய்து வருகின்றீர்கள். இனியும் அவ்வாறே செய்து வரவும். இன்று தைப்பூசம். வடலூரில் ஜோதி தரிசனம் கண்டு களித்து, தீப ஆராதனை செய்து வருகிறீர்கள். நான் இப்போது என் தனி அறைக்குச் சென்று கதவை சார்த்திவிட்டு உடம்பை மறைத்துக்கொள்ளப்போகிறேன். யார் கண்களுக்கும் தோன்ற மாட்டேன். இந்தத் திருமாளிகையை வெறும் வீடாகவே காண்பீர்கள். என் ஆண்டவர் என்னைக் காட்டிக்கொடுக்கமாட்டார். இனி நீங்கள் எல்லோரும் நான் கூறியவாறு நடந்து அருட்பெரும்சோதி ஆண்டவரை வழிபட்டுப் பேரானந்தப் பெருவாழ்வு அடையுங்கள். நான் சென்று அறைக்கதவைச் சார்த்திக்கொள்கிறேன்.” பெருமான் உள்ளே சென்று கதவைச் சார்த்தினார்.அசரீரியாகப் பெருமான் குரலில் திருவருட்பா ஒலித்தது.“பெற்றேன் என்றும் இறவாமை

பேதம் தவிர்ந்தே இறைவன் எனை

உற்றே கலந்தான் நானவனை

உற்றே கலந்தேன் ஒன்றானோம்

எற்றே அடியேன் செய்ததவம்

யாரே புரிந்தார் இன்னமுதம்

துற்றே உலகீர் நீவீர் எலாம்

வாழ்க வாழ்க துனி அற்றே.”அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை

தனிப்பெரும் கருணை அருட்பெரும்சோதி.துணை நூற்கள்: திருவருட்பிரகாச வள்ளலார் வாழ்க்கை வரலாறு, எழுதியவர் குறிஞ்சி, ஞான. வைத்தியநாதன், ரவி ராமநாதன் தயாரிப்பில் பிரேமா பிரசுரம் வெளியீடு.


http://www.vallalar.org/


http://en.wikipedia.org/wiki/Ramalinga_Swamigalhttp://www.vallalar.net/

No comments:

Post a Comment