Monday, February 23, 2009

ரத்தம் குடிக்கும் தேசீயப் பறவைகள் இல்லாத மாநிலமும் ஒரு மாநிலமா?

நாங்க ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதெல்லாம் செல்லங்களை விட்டுட்டுப் போறோமேனு கவலையா இருக்கும். அவை யுனிவர்சல் தான் சொந்தமா வச்சுண்டு, அவங்களோட பட்ட கஷ்டம், வேதனை நிறையப் பட்டாச்சு, அதெல்லாம் இப்போ வேண்டாம்னு சொந்தமாவே வச்சுக்கலை என்றாலும், மனசு என்னமோ அடிச்சுக்கும். ஆனால் நம்ம ரத்தத்தின் ரத்தம் ஆன தேசீயப் பறவைகள் தான் என்ன பண்ணுமோனும் கவலை இந்தத் தரம். எப்போவும் வீட்டைப் பார்த்துக்கும் கேர்டேக்கரும் இம்முறை இல்லை. அவரோட ரத்தம் கிடைக்காதே அதுக்கு. இதுங்க எல்லாம் நம்ம வீட்டிலே ஒரு சிட்டுக் குருவி சைஸுக்கு இருக்கும்னா பார்த்துக்குங்களேன். எவ்வளவு ரத்தம் குடிக்குதுனு. நம்ம ரத்தத்தை அதுங்க குடிக்கிறதாலே அதுங்க கிட்டே இப்போ ஒரு பாசமே வந்துடுத்து. உடன்பிறவா சகோதர பாசம் ஏற்பட்டு விட்டது. அதிலேயும் நம்ம ம.பா. அவங்களை வீட்டை விட்டு வெளியேற்ற புகை போடவோ, வத்தி ஏத்தி வைக்கவோ, மருந்து அடிக்கவோ ஒத்துக்கவே மாட்டார்னா பாருங்க. சரியான காந்தீயவாதி அவர். புத்தர், ஏசு, காந்திக்கு அடுத்த இடம் தனக்குத் தான்னு நம்பிக்கையோட இருக்கார். அதனாலே அவங்களை, கதவைத் திறந்து, "போங்க எல்லாம்" னு சொல்லி, பேசி, அன்போடத் தான் வழி அனுப்பி வைப்பார்.

அதுங்களும் அவர் கதவைத் திறக்கும்போது போயிடறாப்போல் பாவலா காட்டும். திரும்ப அவர் கதவைச் சாத்திட்டு உள்ளே வரும்போது பார்த்தால், அவரோட தலைக்கு மேலே திருமாலோட சக்கராயுதம் போலச் சுழலும் பாருங்க, எல்லாம் கூட்டமாய். ஒரு நிமிஷம், திருமாலோட சக்கராயுதம் தானோன்னு நமக்கே தோணும். அதுங்க எல்லாம் நாங்க இல்லாம ரத்தம் குடிக்க என்ன கஷ்டப் படும்னு நினைச்சுக் கவலைப் பட்டு உருகி, அழுகையே வந்துடுச்சு எங்களுக்கு. ஆனால் குஜராத்தில் என்ன அநியாயம் பாருங்க, ஒரு கொசு கூட இல்லை. தேசிய உணர்வே இல்லாதவங்க போல அவங்க எல்லாம். நகரத்தைச் சுத்தமா வச்சுக்கறாங்களாமே! ஒரு நகரம் என்றால் குப்பை மலை குவிந்திருப்பது தானே அழகு! துப்புரவுப் பணியாளர்கள் வேலை செய்யற நகரமும் ஒரு நகரமா? அங்கே பாருங்க, தினமும் காலையில் ஏழு மணிக்கே வேலையை ஆரம்பிக்கிறாங்க. அவங்களைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வேலை செய்யாமல் இருப்பது எப்படினு சொல்லிக் கொடுக்கணும்னு நினைச்சேன்.

அப்புறம் பாருங்க மின் தடையே கிடையாதாம். தனியார் மின்சாரம் தயாரிச்சுத் தராங்களாம். அது தவிர குஜராத் மாநில அரசின் மின்வாரியமும் மின்சாரம் தருதாம். தனியார் மின்சாரம் கட்டணம் கூடுதலாம் என்றாலும் தடையில்லாமல் மின்சாரம் என்பதால் பரவாயில்லை என்று மக்கள் சொல்கிறாங்களாம். மின்வாரியமும் தடையில்லாத மின்சாரம் தருதாம் ஏழைங்க இருக்கும் ஏரியாவில் எல்லாம். குறைந்த கட்டணமாம் அவங்களுக்கு. பராமரிப்புக்காக மட்டுமே மின்சாரம் தடை செய்வாங்களாம் முன் அறிவிப்போட. இவங்க எல்லாம் நம்ம ஆற்காட்டார் கிட்டே கத்துக்கணும் இல்லை! முன் அறிவிப்போட இரண்டு மனி நேரம்னால், முன் அறிவிப்பு இல்லாமல் 4, 5 மணி நேரம்னு இருக்கவேண்டாம்! என்ன போங்க! ஒண்ணுமே பிடிக்கலை. தொலைக்காட்சியா எப்போப் பார்த்தாலும் தெரியுது. மின் விசிறி எப்போப் பார்த்தாலும் சுத்துது. ரிலயன்ஸ் கொடுக்கும் எரிவாயுன்னால் பைப் மூலம் கொடுக்கிறதாலே அதுவும் தடையே இல்லையாம். 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஆறு மாசத்துக்கு எரிவாயுக்கான கட்டணம் 800 ரூபாயைத் தாண்ட மாட்டேங்குதாம். எனக்கா எரிச்சலான எரிச்சல். எரிவாயுக்குத் தொலைபேசிச் சொல்லிட்டு, பத்து நாள், பதினைந்து நாள் ஆனாலும் வராமல் அங்கே போய்த் தொங்க வேண்டாமோ மனுஷங்க?

என்ன மாநிலம் இது? இப்படி எல்லாவிதத்திலேயும் மக்களைக் கொஞ்சம் கூடக் கஷ்டப் படுத்தாமல்? சாலைப் போக்குவரத்திலாவது கஷ்டப் படுத்துதா? நாளைக்குப் பார்க்கலாமே? இன்னிக்குத் தான் வந்தேனா? ரொம்ப அலுப்பா இருக்கு! நாளைக்கு வந்து மிச்சம் சொல்றேன்.

3 comments:

 1. வெல்கம் பேக்!

  பயணம் எல்லாம் நல்லப்படியா அமைந்ததா?

  வந்த உடனே பதிவா, உங்க கடமை உணர்ச்சியை கண்டால் மெய் சிலிர்க்குது.

  குஜராத் தை பாராட்டி இம்புட்டு பேசுறீங்க, உங்களுக்கு என்னாச்சு. நீங்க தமிழகத்தில் இருக்கீங்க என்பது மறந்து போச்சா?

  ஆனாலும் நீங்க சொல்வதை கேட்க ரொம்பவே நல்லா தான் இருக்கு. இது எல்லாம் நம் தமிழகத்திலும் நடக்கும் நாளுக்காக வெயிட்ங் :)

  ReplyDelete
 2. அதெல்லாம் நகரம் இல்லைங்க. நரகம். அதான் இவ்வளோ சீக்கிரம் திரும்பிட்டீங்களா?

  ReplyDelete
 3. பூனைக்குட்டி வெளிவந்துடுச்சு....நீங்க ஒரு பாஜக வெறியர் அப்படின்னு தெரிஞ்சு போச்சு :-)

  ReplyDelete