Monday, February 2, 2009

குருவாயூர் எக்ஸ்பிரசில் மியூசிகல் சேர் விளையாடினோம்!


இந்த முறை கும்பகோணம் பயணத்தை மூன்று மாதங்கள் முன்னாலேயே தீர்மானம் செய்தாச்சு. எப்படியும் தை பிறந்தால் ஒரு வெள்ளியன்று குலதெய்வம் கோயிலுக்குப் போவோம். இம்முறையும் அவ்வாறே போகணும்னு முன்கூட்டியே தெரிந்ததால் ம.பா. என்னை ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணுனு சொல்ல, நானும் ஆன்லைனில் பண்ணிடலாம்னு உட்கார்ந்தேன். அது என்னமோ தெரியலை, அவர் வந்து பக்கத்திலே உட்கார்ந்தாலே எந்தத் தளமும் திறக்காது. திறந்தாலும் வேலை செய்யாது. அவர் அலுத்துப் போய் உனக்கு கணினியை இயக்கவே தெரியவில்லை, கட்டின ஃபீஸெல்லாம் வேஸ்ட். இதைக் கத்துக்கவா க்ளாசுக்கெல்லாம் போனே?னு சொல்லிட்டுப் போயிடுவார். அப்புறமா அது பாட்டுக்குச் சமத்தா ஒழுங்கா சொன்னபடி கேட்கும். அன்னிக்கும் டிக்கெட் புக் பண்ண உட்கார்ந்ததுமே இந்தியன் ரயில்வே தளம் இயங்கவில்லை. தாற்காலிக எரர் தான் என்றாலும் அவர் என்னைப் பார்த்த பார்வை இருக்கே, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் செண்டரலுக்கே போய்ப் பண்ணிடறேன் என்று சொல்லிட்டுக் கிளம்பிட்டார். அப்புறமா ஆவடியிலே ஏதோ வேலை இருந்ததுனு அங்கே போய்ப் பண்ணிட்டு அந்த வேலையையும் முடிச்சுக்கறேன்னு போயிட்டார். அடுத்த நிமிஷமே தளம் வேலை செய்ய ஆரம்பிச்சு, கேட்ட செய்திகளுக்கெல்லாம் சரியான பதிலும் கிடைக்க ஆரம்பிச்சது. அவர் போய் ஆவடியிலே டிக்கெட் புக் பண்ணிட்டார். ஜனவரி 31-ம் தேதி குருவாயூர் எக்ஸ்பிரஸில் போகவும், திரும்பி வர பெர்த் கிடைக்காததால், (மூணு மாசம் முன்னாலேயே) திரும்பி பஸ்ஸில் வந்துக்கலாம்னும் முடிவு பண்ணிட்டு டிக்கெட் வாங்கிண்டு வந்தாச்சு.

31-ம் தேதியும் வந்தது. கிளம்பணும். காலம்பர 7-50க்குக் கிளம்பறது வண்டி எழும்பூரில் இருந்து. நாங்க அம்பத்தூரில் இருந்து காலம்பர 5-30க்காவது கிளம்பணும். நேரே ஆட்டோவிலேயோ, கால் டாக்சியிலேயோ போகலாம் தான். ஆனால் அதுக்கு விற்க சொத்து ஒண்ணும் இல்லை. அதோடு இப்போக் கொஞ்ச நாட்களாய் நடை, படி ஏறுதல், இறங்குதல்னு எல்லாமும் ஆரம்பிச்சிருக்கேனே. அதுக்கு வேலை வேண்டாமா? மின்சார வண்டியிலேயே போகலாம்னு முடிவு எடுத்தாச்சு. எனக்குக் காலம்பர 2 மணிக்கே முழிப்பு வந்துடுச்சு. காலங்கார்த்தாலே போகணும்னா, அதுவும் சாப்பாடு பண்ணி எடுத்துண்டு போகணும்னா முதநாள் ராத்திரி தூக்கமே வரதில்லை. ஒரு வழியா 3-30-க்கு எழுந்து, குளித்து, சமைத்துக் கிளம்பும்போது 5-15 மணி. அம்பத்தூர் ஸ்டேஷன் போக குடும்ப ஆட்டோக்காரர் வந்துட்டார். அவருக்கு செண்டரல் வரைக்கும் ஏன் இப்போல்லாம் போகறதில்லைனு ஆச்சரியம்.

செண்டரல் போய் அங்கிருந்து ஒரு ஆட்டோ வைத்துக் கொண்டு எழும்பூர் போனால் ரெயில் தயாராய் நின்னுட்டு இருந்தது. B1 எஞ்சின் பக்கம் நின்னுட்டு இருந்தது. அவருக்கு மிடில் பெர்த், எனக்கு அப்பர் பெர்த் கொடுத்திருக்காங்க. அதுவும் அவர் நம்பர் 21 என் நம்பர் 16. சைட் அப்பர். இந்த அழகிலே சைட் மிடில் பெர்த் வேறே உண்டு. பகவானே! இது என்ன ஏசியா? இல்லை கொத்தவால் சாவடியானு நினைச்சேன். 2 ஏசியிலே எல்லா டிக்கெட்டும் புல்லாகி வெயிட்டிங் லிஸ்ட் வந்திருந்தது நாங்க வாங்கறப்போவே. இதிலே எப்படி திருச்சி வரை போகிறதுனு பார்த்தால், குறைந்த பட்சம் நாங்களாவது உட்கார்ந்தோம். பலர் நின்னுட்டே இருந்தாங்க. ஒரே குழப்பம்.

டிடிஆருக்கே என்ன செய்யறதுனு புரியலை. ஆனால் முதல்லே அவர் வந்ததுமே சைட் மிடில் பெர்த் யாருக்கும் இல்லைனு சொல்லி எல்லார் வயித்திலேயும் லிட்டர் கணக்கில் பாலை வார்த்தார். அப்புறம் நாங்க, இன்னும் ஜோடியாய் வந்த 2,3 கணவன் மனைவிகள் அனைவருக்கும் சேர்ந்து உட்காருகிறாப்போல் அட்ஜஸ்ட் செய்து கொடுத்தார். என் கணவருக்குக் கொடுத்த சீட் வேறே ஒரு பெரியவரோடது. அவர் பெருந்தன்மையோடு என் கணவருக்கு அந்த சீட்டைக் கொடுத்துட்டு அவரோட சீட் இருந்த பக்கம் போய் அங்கே இருந்த அப்பர் பெர்த்தில் ஏறிப் படுத்துக் கொண்டார். கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் என்னோட கணவர் போய் மேலே படுக்க அவர் கீழே இறங்கி வந்து சீட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொண்டார். அதுக்கு அப்புறம் ஒரு வயதான பெண்மணி வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்தாங்க. இப்படி ஒருத்தர் உட்காருகிறதும், அவங்க எழுந்ததும் மத்தவங்க உட்காருகிறதுமாய் சரியான ம்யூசிகல் சேர் தான் போங்க! அதே போல் எங்கள் பக்கம் ஒரு நிறை கர்பிணிப் பெண். அவளுக்காக மத்தவங்க அட்ஜஸ்ட் செய்து மேல் பெர்த்தில் போய்ப் படுத்தனர். கீழே உட்கார இடம் இல்லாமல் நின்னவங்களுக்காக உட்கார்ந்திருந்த ஆண்கள் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் அட்ஜஸ்ட் செய்து கொண்டு அவங்க நின்னுட்டு, மத்தவங்களைக் கொஞ்ச நேரம் உட்கார வைத்தனர்.

காசையும் கொடுத்துட்டு தேளையும் கொட்டிக் கொண்ட கதைன்னா எப்படினு அன்னிக்குப் புரிஞ்சது. ரயில்வேக்குக் கோடிக்கணக்கில் லாபம் எப்படிக் கிடைக்கிறதுனு இப்போப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். என்னோட ஒரே ஆசை லாலுவை ஒரு நாளாவாது இந்த மாதிரிப் பயணம் பண்ண வைக்கணும்னுதான். அவருக்கென்ன? தனி SALOON கொடுத்துடறாங்க, அதனால் சாமானியர்கள் படும் கஷ்டம் புரியறதில்லை, பொதுமக்களின் குறைகளைக் களைய முடியாமல் ரயில்வே நிர்வாகம் அமைச்சர்களின் உத்தரவுகளால் படும் கஷ்டம் சொல்ல முடியலை. ஒரு வழியா இப்போவாவது சைட் மிடில் பெர்த்களில் பயணிகளை அனுமதிக்க வேண்டாம்னு முடிவு எடுத்திருக்கே, அதுக்கே பாராட்டணும். இன்னும் பரோடா போகும்போது என்ன அனுபவம் காத்திருக்கோ தெரியலை.

1 comment:

  1. நீங்க விளையாடிய மாதிரி தெரியலையே! ;)))

    ReplyDelete