Wednesday, February 25, 2009

தாய் முகம் மாறாத இடமும் இருக்கே!

என்னோட அம்மா நான் நினைவு தெரிஞ்சு பார்க்கும்போதில் இருந்தே ஒன்பது கஜம் புடவை தான். எனக்குக் கல்யாணம் ஆகிப் பதினேழு வருடங்கள் வரையிலும் அம்மா ஒன்பது கஜத்தில் இருந்து மாறியதே இல்லை. அம்மாவுக்குப் பதினாறு அல்லது பதினேழு வயதிலோ என்னமோ, என் அண்ணா பிறந்த பின்னர் கட்ட ஆரம்பித்ததாய்ச் சொல்லுவார். அப்படிப் பட்ட அம்மாவுக்கு முடியாமல் போய் அறுவை சிகிச்சை நடந்து தன்னோட ஐம்பதாவது வயதில் ஒரு மார்பகத்தை எடுத்த பின்னர், ஒன்பது கஜம் கட்ட முடியாமல் ஆறு கஜம் கட்ட ஆரம்பித்தார். நானும் சரி, என்னோட தம்பியும் சரி, அதை ஏற்க முடியாமல் தவித்தோம். அம்மாவிடம் அத்தனை உடல் நலக்கேட்டிலும், "நீ மாறிட்டே அம்மா, உன்னைப் பார்க்கும்போது அம்மா மாதிரியே தெரியலையே? ஒன்பது கஜம் கட்டிக்கோ!" என்றே தொந்திரவு செய்வோம். இத்தனைக்கும் எங்க இரண்டு பேருக்குமே திருமணம் ஆகிக் குழந்தைகள் இருந்தன. எல்லாம் தெரிந்து கொண்டும் அம்மாவை இப்படிச் சொல்லும் நான் என் பிறந்த ஊரான மதுரையின் முகம் மாறியதன் அதிர்ச்சி இன்னும் விலகாமலேயே இருக்கும்போது குஜராத் செல்ல நேர்ந்தது. உள்ளூர பயம், கவலை. ஜாம்நகர் எப்படி இருக்குமோனு தான். அது என்னமோ தெரியலை. மாற்றம் என்பது என்ன என்று அதன் அடிப்படையே யாருக்குமே புரியலைனு என்னோட கருத்து. மாறணும், கட்டாயமாய் மாறணும், மாத்திக்கவும் செய்யணும். ஆனால் அடிப்படை, அஸ்திவாரம் அசையக் கூடாது இல்லையா? அடிப்படையே அழிந்து போகும் வண்ணம் மாறும் மாற்றம் எனக்குப் பிடிப்பதே இல்லை. Heritage என்பதன் உண்மையான அர்த்தம் வெறும் வியாபார நோக்கிலே கருதப் படாமல் உணர்வு பூர்வமாகவும், கலாசார பூர்வமாகவும் மதிக்கப்படவும், காக்கப் படவும் வேண்டும். மதுரை மீனாட்சி கோயில் பொற்றாமரையைச் சுற்றி இருந்த நாயக்கர் காலத்து ஓவியங்களை அழித்து விட்டு இப்போப் புதுசா யாரையோ விட்டு வரைய வச்சிருக்காங்க. நல்லா இருக்கலாம். அது வேறே விஷயம். ஆனால் நாயக்கர் காலத்துச் சரித்திர ஆதாரங்களை அழிப்பது எந்த விதத்தில் சரி? மனமே நொந்து போச்சு அதைப் பார்க்கும்போது. மீனாட்சி கோயிலின் முகமே மாறிட்டாப் போல ஓர் எண்ணம். :((((((((

மதுரையின் மேல் உள்ள அதே அளவு பற்றும், பாசமும் ராஜஸ்தானின் நசீராபாத்துக்கும், குஜராத்தின் ஜாம்நகருக்கும் எங்களுக்கு அனைவருக்குமே உண்டு. ஆகவே கிட்டத் தட்ட பதின்மூன்று வருடங்கள் சென்ற பின்னர் செல்கின்றோமே, இப்போ ரிலையன்ஸ் வந்தாச்சு. ஊர் ஒரேயடியாக மாறிப் போய் பழைய கட்டிடங்கள் இடிக்கப் பட்டு, புதிய அடுக்கு மாடிக் கட்டிடங்கள், கான்க்ரீட் காடுகள் என இருக்கும் என எண்ணிக் கொண்டே வந்தோம். முதல் இனிய அதிர்ச்சி, சோம்நாத்தின் அழகிய மாற்றம். தேவையான மாற்றம் என்பதோடு அல்லாமல், வசதியானதும் கூட. அது பற்றி விரிவாய் எழுதுகின்றேன். பின்னர் சோம்நாத்தில் இருந்து துவாரகைப் பயணம் சற்றும் மாறாமல் அதே தனியார் பேருந்துகள் மூலமே இன்னமும் நடக்கின்றது. ஒரே மாற்றம் என்னவென்றால் போகும் வழியில் போர்பந்தரில் குசேலர் வீடு, கோயில், காந்தியின் பிறந்த இல்லம் காட்டிவிட்டுக் கூட்டிச் செல்லுவார்கள். இப்போ சமீபத்திய குண்டு வெடிப்புக்குப் பின்னர் நகருக்குள் இம்மாதிரிப் பேருந்துகள் வர அனுமதி கடுமையாக மறுக்கப் படுகின்றது. ஆகவே பேருந்து நகருக்குள் செல்லாமல் நகரைத் தொட்டுக் கொண்டு செல்கின்றது. அதே பழைய இனிமையான இயற்கை அனுபவங்கள். பாண்டி நாட்டின் பாலைவனங்களே எனக்குப் பிடித்தம்னு பொன்னியின் செல்வனின் நந்தினி சொல்றாப்போல் எனக்கும் பாலைவனமே பிடிக்குமோனு எண்ணம் வந்தது.

துவாரகை வரும் வழியில் உள்ள ஹர்ஷித்தி மாதாவின் கோயிலும் மிகப் பழமையானது. ஸ்ரீகிருஷ்ணர் வணங்கிய அம்மன் அவள். துவாரகை வந்ததும், தங்க இடம் கிடைக்குமோ எனக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த என் கணவருக்கு அபயம் அளித்தனர் நாங்க வந்த பேருந்து அமைப்பாளர்கள். அவங்களுடைய லாட்ஜிலேயே தங்க இடம் கிடைத்தது. வாடகையும் கன்னா, பின்னா என்று இல்லாமல் நிதானமாகவே இருந்தது. தண்ணீர் கஷ்டம் இன்னமும் இருக்கின்றது துவாரகையில். ருக்மிணிக்குக் கிடைத்த சாபத்தின் விளைவு இன்னமும் தீரவில்லையோ என யோசிக்க வைத்தது. ஒரு நாள் விட்டு, ஒரு நாள் தண்ணீர் கொடுக்கின்றனர். ஆகவே இரவில், பனிரண்டு மணிக்கு மேல் காலை ஐந்து மணி வரையிலும் தண்ணீர் கொடுப்பதில்லை. இதை முழு மாநிலத்திலும் கடுமையாக அனுசரிக்கின்றனர், ஒரு சில இடங்களைத் தவிர. லாட்ஜ் அறையிலும் பனிரண்டு மணிக்கு மேல் தண்ணீர் வரவில்லை. இது தெரியாமல் காலை நாலு மணிக்கு எழுந்து விட்டுச் சிரமப் பட்டோம். பின்னர் வரவேற்பில் கேட்டதும் தண்ணீர் இணைப்புக் கிடைத்தது. ஒரு விதத்தில் பாராட்டுக்குரியது தான். அங்கங்கே செக் டாம்கள் என அழைக்கப் படும் தடுப்பணைகள் நிரம்பி வழிந்தாலும் தண்ணீரின் தேவையை நினைவில் வைத்துக் கொள்ள இம்மாதிரியான ஒரு ஏற்பாடும் தேவை தான் என்றே தோன்றியது. குளிக்கக் கொடுத்த தண்ணீரில் குளிக்கும்போது கடலில் குளிக்கவில்லையே என்ற எண்ணமே தோன்றவில்லை. தண்ணீர் அவ்வளவு உப்பு.

No comments:

Post a Comment