Tuesday, June 23, 2009

பிகாபூ!!! ஐ ஸீ யூ!!! தொடர்ச்சி!

கணவன் எவ்வளவு தடுத்தும் கேளாமல் மனைவி அந்தக் குழந்தையின் அழுகை பொறுக்க முடியாமல் கையில் எடுக்கிறாள். அந்தக் குழந்தையை மனைவி எடுக்கும்போதே அந்தக் குழந்தை தன்னைக் கோபத்தோடும், கரை காணா வெறுப்போடும் பார்ப்பதாய் ஓர் உணர்வு கணவனுக்குள் ஏற்படுகின்றது. அந்தப் பார்வை அவன் எலும்பினுள் ஊடுருவி அவனை உள்ளூர நடுங்கச் செய்கின்றது. எனினும் சற்று முன்னே பிறந்த குழந்தை தன்னை இவ்வாறு பார்த்தது என்பது நம் பிரமை எனத் தேறுகின்றான். மனைவி யாரோ பெற்றெடுத்த அந்தக் குழந்தைக்கும் அமுதூட்டுகின்றாள் சற்றேனும் கிலேசம் இல்லாமல். தான் பெற்றெடுத்த நாலாவது குழந்தை(பையர்)க்கு அருகேயே தொட்டிலில் இடுகின்றாள் அந்தக் குழந்தையையும்.

சிறிது நேரம் கழித்துக் குழந்தைகள் படுத்திருக்கும் தொட்டிலைக் கவனிக்கும் கணவனுக்கு அதிர்ச்சி மேலிடுகிறது. அவன் பெற்ற குழந்தை சுருட்டிக் கொண்டு தொட்டிலின் ஓர் மூலையில் ஒடுங்கிப் படுத்திருக்கிறது. நாலு மாதம் கூட ஆகவில்லை, ஆனால் அந்தக் குழந்தை எவ்வாறு அப்படிப் போய்ப் படுத்தது??? கணவனுக்கு அவனையும் அறியாமல் குயிலின் நினைவு வந்தது. தன்னோட முட்டையைக் காக்கைகளின் முட்டைகளோடு இடுவதற்குள்ளாகக் குயில் காக்கையின் முட்டையைக் கீழே தள்ளுமாம். முட்டாள் காக்கை எண்ணிக்கை எங்கே தெரியும்? குயில் முட்டையைத் தன் முட்டை என நினைத்து அடை காக்கும். அந்த நினைப்பே மேலோங்கியது கணவனுக்கு. தொட்டிலின் அருகே வந்தான். மீண்டும் அந்தக் குழந்தையின் பார்வை! சில்லிட்டது கணவனுக்கு. எனினும் சமாளித்துக் கொண்டு, தன் குழந்தையை நன்றாய்ப் படுக்க வைத்தான். மீண்டும் ஓர் முறை அந்தப்புதிய யாரோ பெற்றெடுத்துப் போட்டுவிட்டு ஓடிச் சென்றவளின் குழந்தையைப் பார்த்தான். அது தன்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பது போலவும், இன்னும் ஏதோ நடக்கப் போகிறது எனவும் தோன்றியது கணவனுக்கு.

முதல்முறையாக இந்தப் பத்து வருஷ இல்வாழ்க்கையில் மனைவியிடம் கோபம் வந்தது அவனுக்கு. நேரே சமையலறையில் வேலையாக இருக்கும் அவளிடம் சென்று அந்தப் புதிய குழந்தையை அநாதை ஆசிரமத்தில் விடுவது பற்றிப் பேச, மனைவிக்குக் கோபம் வருகிறது. பதிலே சொல்லவில்லை. உன்னால் அந்தக் குழந்தைக்காகச் செலவு செய்ய முடியாவிட்டால் நானும் சம்பாதித்துச் செலவு செய்கின்றேன். கொடுக்கப் போவது என்னிடம் இருக்கும் பால் தானே? அதைக் கொடுக்க என்னிடம் மனசும் இருக்கு. உடலில் ஆரோக்கியமும் இருக்கு. என்று வாதிடுகின்றாள். கடைசி அஸ்திரத்தைப் பிரயோகிக்கிறான் கணவன். இந்தக் குழந்தை நம் குழந்தைகளை எல்லாம் நம்மை விட்டுப் பிரித்துவிடும் என்று சொல்லிப் பார்க்கிறான். ஒரு சின்னக் குழந்தை உன்னை இவ்வாறு பேசச் சொல்லுகின்றதா? உன்னுடைய வேலைதான் பத்திரிகை அலுவலகம் என நினைத்தால் வாழ்க்கையிலும் நீ கற்பனை வளத்தைக் காட்டுகின்றாயே என கணவனைக் கேலி செய்கின்றாள் மனைவி.

அடுத்த நாள், நாலாவது குழந்தை தொட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து விடுகின்றது.

4 comments:

  1. என்ன தலைவி இது திகில் கதை மாதிரி இருக்கு...தொடருங்கள் ;)

    ReplyDelete
  2. திகிலா?? மனசே உறைஞ்சு போச்சு, கொஞ்ச நாட்கள்! இன்னிக்கு முடிக்கப் பார்க்கிறேன். :((((

    ReplyDelete
  3. படிக்கும்போது மனசு திக் திக் திக் னு அடிச்சுட்டுது, படிச்சு முடிச்சு ஒரு வாரம் மனசே சரியில்லாமல் போச்சு, அதை விடவா????

    ReplyDelete