Saturday, December 25, 2010

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி! 2

இவை திருவண்ணாமலையில் பாடப்பெற்றவை. தன்னுள்ளே ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியைக் கண்டு கொண்ட மாணிக்க வாசகர், அப்படிக் கண்டு கொள்ளாமல் மாயையில் மூழ்கி அறியாமை என்னும் இருளில் ஆழ்ந்து, தூங்கிக்கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்புகிறார். மார்கழி மாதத்தில் பராசக்தியை நோக்கி வழிபாடுகள் செய்து நல்ல கணவனுக்காகவும்,நாட்டில் மழை பொழிந்து வளம் சிறக்கவும் பெண்கள் பிரார்த்தனைகள் செய்வார்கள். ஆகவே அந்தப்பாவை நோன்பின் போது ஒரு பெண் மற்றவளைப் பார்த்துக் கூறுவது போல் அமைந்த பாடல்களே இவை எல்லாமே. அனைத்துப்பாடல்களும் நாடு வளம் பெறவும், நாட்டு மக்கள் மனம் வளம் பெறவுமே பாடப்பெற்றதாகும்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க்கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேஎந் தோழி பரிசேலோர் எம்பாவாய்!"

வாள் தடங்கண் மாதே,= வாளைப் போல் ஒளி வீசும் அழகிய அகன்ற கண்களை உடைய பெண்ணே,

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும்சோதியை யாம்பாடக் கேட்டேயும் வளருதியோ= அடியும் முடியும் காணமுடியாத பெரும் சோதி வடிவான ஈசனைக் குறித்துப் போற்றி நாங்கள் பாடிய பாடல்களைக் கேட்டும் இன்னமும் தூங்குகிறாயா?? என்ன அழகான சொல் வளருதியோ? வளருதியோ என்றால் தூங்குவது! இப்போ இத்தகைய சொற்பிரயோகங்களையே காணமுடிவதில்லை.

வன்செவியோ நின்செவிதான்= உன்னுடைய காது என்ன செவிட்டுக் காதா? உனக்குக் கேட்கவே இல்லையே?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய்க்கேட்டலுமே= அந்த மஹாதேவனின் சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் வாழ்த்திப் பாடிய வாழ்த்தொலியைக் கேட்டதுமே அந்த மற்றொருத்தி என்ன செய்தாள் தெரியுமா?? அவள் மனம் ஈசனின் நினைவால் நெக்குருகியது. பக்தி மிகுதியால் கண்கள் கண்ணீரைப் பெருக்கியது.

விம்மி விம்மி மெய்ம்மறந்து= விம்மி விம்மி தன்னை மறந்து ஈசன் திருவடி ஒன்றையே நினைத்த வண்ணம் இருந்தாள்.

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள்= போதார் அமளி இங்கே படுக்கையைக் குறிக்கும். படுக்கையிலிருந்து புரண்டு எழுந்து, நின்று, கிடந்து என என்ன செய்வது எனப் புரியாமல் அவன் திருவடி ஒன்றையே நினைத்து நினைத்து மனம் உருகிக்கொண்டிருக்கிறாள். நீயானால் நாங்கள் இவ்வளவு எழுப்பியும் இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாயே?
********************************************

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல்நாம்
பேசும்போதெப்போதிப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசீ இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பு ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய்.

நேரிழையாய் நேரிழையீர்= உனக்கேற்ற அழகான ஆபரணங்களைப் பூண்ட பெண்ணே,

பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் பேசும்போதெப்போபோதிப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ = நாம் பேசும்போதெல்லாம் இரவும் பகலும் எல்லா நேரமும் என் அன்பு, பக்தி அனைத்தும் அந்தப் பரஞ்சோதியான ஈசனுக்கே என்பாயே? இப்போ என்னவென்றால் படுக்கையை விட்டே எழுந்திராமல் இந்தப் படுக்கையின் மேல் பாசமும், நேசமும் வைத்தாயோ?" துயிலெழுப்ப வந்த பெண்கள் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணைக் கேட்க அவள் பதில் கூறுகிறாள்.

சீசீ இவையும் சிலவோ விளையாடி=பெண்களே, இது என்ன விளையாட்டு??
ஏசும் இடம் ஈதோ=இப்படி என்னை ஏசிக்கொண்டு இத்தைய சொற்களைப் பேசும் இடம் இதுவல்லவே என்று அவர்களைக் கடிந்து கொள்கிறாள். வந்த பெண்களும் மனம் மகிழ்ந்தார்கள். மேலும் சொல்கின்றனர்.

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்= விண்ணோர்களான தேவாதி தேவர்களே புகழ்ந்து பாராட்டக் கூசுகின்ற அழகான மலர்ப்பாதங்களை உடைய ஈசனின் திருவடிகளை நமக்குப் பற்றெனப் பிடிப்பதற்காகத் தந்தருள இவ்வுலகில் எழுந்தருளிய ஞானகுருவான

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு =சிவலோகத்துக்கு அதிபதியும், தில்லைச் சிற்றம்பலத்தில் நித்தியம் நடனம் ஆடிக்கொண்டிருப்பவும் ஆன ஈசனுக்கு

அன்பு ஆர்யாம் ஆரேலோர் எம்பாவாய்= நாம் செய்யும் அன்பு எவ்வளவு உயர்ந்தது?? அன்பு செய்யும் அடிமைகளாகிய நாம் மேலும் மேலும் ஈசனிடம் அன்பு செய்யும் வண்ணம் எழுந்து வா என்றார்கள்.

No comments:

Post a Comment