Monday, January 10, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறுகமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே!

பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்= இங்கே பப்பற வீட்டிருந்து என்பதற்குப் பொருள் பலவிதமாய்க் கொள்ளப் படுகிறது. பரபரப்பும், அவசரமும் மிகுந்த இவ்வுலக வாழ்க்கையைக் குறிக்கும் என்பர் சிலர். இன்னும் சிலர் குறிப்பிட்ட பரப்பளவைக்குறிக்கும் இடத்தில் இருந்து எல்லையற்ற பெருவெளிக்கு வந்து இறைத்தத்துவத்தை உணர்ந்ததைக் குறிக்கும் என்பர் சிலர். மேலும் சிலர் பல்வேறு பிறவிகள் எடுத்துப் பல்வேறு விதமான இன்பங்களையும், துன்பங்களையும் அநுபவித்து மனம் நொந்து அலுத்துப் போய் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெறுவதைக் குறிக்கும் என்பார். இப்படியானதொரு துன்ப வாழ்க்கையிலிருந்து மீட்டு எம்மை உம்முடைய எல்லை இல்லாப் பெருங்கருணையால் ஆட்கொள்ளவேண்டும் என்று மாணிக்கவாசகர் கூறியதாய்க் கொள்ளலாம். இறைத் தத்துவத்தை அறிந்த உம் அடியார்கள் பந்த, பாசங்களையும் அறுத்தவர்கள் என இங்கே குறிப்பிடுகிறார்.

மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா= எமை ஆட்கொண்ட உமையின் மணவாளனாகிய ஈசனே, அத்தகைய அடியார்கள் மானுடத்து மனிதர்களின் இயல்பை ஒட்டி உம்மைக் காதலனைப் பிரிந்த காதலி போல் நினைந்து நினைந்து உருகிக் கனிந்து கசிந்து வணங்குகின்றனர்.

செப்புறுகமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருள்வாயே!= அழகிய சிறந்த தாமரை மலர்கள் மலர்ந்துள்ள குளங்கள் நிரம்பிய குளிர்ச்சி பொருந்திய வயல்கள் உடைய திருப்பெருந்துறை உறையும் ஈசனே, சிவகாமி நேசனே, மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு என்று ஏற்பட்டு தொல்லைப்படாமல் எம்மைத் தடுத்து ஆட்கொண்டு இந்தப் பிறவியிலேயே இறவாமை பெற்று எம்மைச் சுத்தமான அருள் ஒளி பெற்று நிலைத்து இருக்க ஆட்கொண்டு அருள்வாய். எம்பெருமானே , என்னுள்ளே குடிகொண்டிருக்கும் உள்ளக் கோயிலில் பள்ளி எழுந்தருள்வாயாக.

No comments:

Post a Comment