Monday, January 10, 2011

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி!

அதுபழச் சுவைஎன அமுதுஎன அறிதற்கு
அரிதுஎன எளிதுஎன அமரரும் அறியார்
இதுஅவன் திரூஉரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்குஎழுந்து அருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கை உள்ளாய்திருப் பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறுஅது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

இத்தனை பாடல்களிலும் திருப்பெருந்துறையைப் பற்றி மட்டுமே பேசிய மாணிக்கவாசகர் இந்தப்பாடலில் திரு உத்தரகோசமங்கை உள்ளாய், எனவும் அழைத்துள்ளார். இது புராணப் படி ராமநாதபுரம் மாவட்டத்தின் ஊரான உத்தரகோசமங்கை ஈசனைக் குறிக்கிறது. இந்தக் கோயிலில் தான் ஐயன் உமை அன்னைக்கு வேதாகம ரகசியங்களில் இருந்து அனைத்தையும் கூறினார் என்றும் அன்னைக்கு உபதேசம் செய்தமையால் உத்தரகோசமங்கை எனப் பெயர் பெற்றதாயும் கூறுவார்கள். மேலும் இந்தக் கோயிலிலேயே ஐயன் ஆடிய ஆநந்தத் தாண்டம் முதல் முதல் அன்னை மட்டுமே காணும்படி ஆடப் பட்டது என்றும் கூறுவார்கள். மேலும் இதை ஆதி சிதம்பரம் எனவும் அழைப்பார்கள்.

மிகவும் பழமையான இந்தத் தலம் ஒரு காலத்தில் இலவந்திகைப் பள்ளி என அழைக்கப்பட்டதாயும் தெரியவருகிறது. மேலும் மண் தோன்றும்போதே தோன்றிய மங்கை என்றும் இந்த ஊரைக் குறிப்பிடுவதாயும் தெரியவருகிறது. ராவணனின் மனைவியான மண்டோதரியின் பெயரை இந்தக் கோயிலின் வரலாற்றில் கூறப்பட்டிருக்கிறது. அவளுக்குக் காக்ஷி கொடுக்கவேண்டி, தென்னிலங்கை சென்றாராம் ஈசன் உமை அன்னையுடன். அது தனியாப் பார்ப்போம். அறையில் ஆடினால் அம்பலத்துக்கு வராமல் இருக்குமா என்ற வழக்குச் சொல்லும் இந்தக் கோயிலில் ஈசன் ஆடிய ஆட்டத்தைக் குறிக்கும் விதமாகவே ஏற்பட்டது என்பார்கள். இங்கே அன்னை காண அறையில் ஆடிய ஈசன், அதன் பின்னரே சிதம்பரம் வந்து அம்பலத்தில் ஆடியதாய் ஐதீகம்.

இவை பொதுவான கருத்தாக இருந்தாலும் இதன் உட்கருத்து. நம்முள்ளே குடி கொண்டிருக்கும் அருட்பெரும் சோதியானது நம் மனமாகிய கோயிலில் எழுந்தருளி நம்மை அதனோடு ஒன்று படுத்தி நம்மை ஐக்கியப் படுத்திக்கொள்வதையே குறிக்கும் என்று ஆன்றோர் வாக்கு. நம் உடல் ஐந்து கோசங்களால் ஆனது என்பதை அறிவோம் அல்லவா? அவை அன்னமய கோசம், பிராணமய கோசம், மநோமய கோசம், விக்ஞானமய கோசம், ஆநந்தமய கோசம் ஆகிய ஐந்து கோசங்கள் நம் உடலில் இருப்பதாக யோகிகள், ஞாநிகள் கூறுவார்கள். இவற்றில் ஆநந்த மயகோசத்தில் இருக்கும் இறைவனைக் கண்டறிவதே, கண்டறிந்து அவனுடன் ஒன்றிணைவதே நம் ஜீவனின் முக்கியக் குறிக்கோள். இந்த ஆநந்தமயகோசமே உத்தரகோசம், நம் உடலில் தலைப்பகுதியில் இருப்பதால் கூறப்படுகிறது. அதனால் தன்னை ஒரு மங்கையாகப் பாவித்துக்கொண்டு மாணிக்கவாசகர் ஈசனோடு, அதாவது இறை உணர்வோடு ஒன்றுபட வேண்டியதே இந்தப் பள்ளி எழுச்சிப் பாடலின் முக்கியப்பொருள் ஆகும்.

அதுபழச் சுவைஎன அமுதுஎன அறிதற்கு
அரிதுஎன எளிதுஎன அமரரும் அறியார்= இறைவனைக் கண்டவர் இலர், அவன் எப்படிப்பட்டவன் என அறிந்தவர் இல்லை. ஆகவே இறைவனின் அருள் சுவையானது இன்னமாதிரி, இன்ன சுவையில் இருக்கும், இந்தப் பழத்தைச் சாப்பிடு இதுதான் இறைத்தன்மை என்று கூற முடியுமா? முடியாதன்றோ. அவ்வாறு இதுதான் அமிர்தம் சாப்பிடு, கருத்தைச் சொல் எனக் கூற முடியுமா? இறைத் தன்மை எங்கனம் என்பதை உணர்தலே முடியும். அதற்கு அவனடியார்களாக இருத்தல் வேண்டும். மற்றவர்களால் இயலாத ஒன்று.

அதே போல் அவனை அறிதலும் கடினம். இறைவனை அறிவதற்கு ஞானக்கண் தேவை. அவனுடைய அருளாலேயே ஞானம் சித்திக்கும். அந்த அருளைப் பெற்ற அடியார்களாலேயே ஈசனைக் கண்டு களிக்க முடியும். தேவாதிதேவரானாலும் ஈசனின் அருள் இல்லை எனில் அவரும் அறியமாட்டாரன்றோ.

இதுஅவன் திரூஉரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்குஎழுந்து அருளும்= அவன் திருவுருவம் இப்படி இருக்கும், இத்தனை உயரம் ஈசன், இத்தனை பருமன் ஈசன், கை இப்படி இருக்கும், கால் இப்படி இருக்கும் கண்கள் இவ்வாறு இருக்கும் என்றெல்லாம் எவரால் கூறமுடியும்? எவரும் கண்டு, விண்டு,அறுதியிட்டுக் கூற முடியாதே. உம்மைக் காண விரும்பி நாங்கள் தவிக்கிறோம். ஆகவே எங்களை நீர் ஆட்கொள்ள இங்கே வந்து எழுந்து அருளும்,


மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கை உள்ளாய்திருப் பெருந்துறை மன்னா= திரு உத்தரகோசமங்கை மன்னா, நம் உடலில் உள்ள ஐந்து கோசங்களிலும் உச்சியில் உள்ள கோசம் உத்தரகோசம், அங்கேதான் ஈசனோடு ஐக்கியம் ஆதல் நடக்கும் என்பது யோகியர் கூற்று. ஆகவே இந்த ஐந்து கோசங்களையும் கடந்து உத்தரகோசத்தில் இணையத் துடிக்கும் மங்கையாகிய என்னை , திருப்பெருந்துறை மன்னனாகிய நீர்

எது எமைப் பணிகொளும் ஆறுஅது கேட்போம்= உமக்கு எவ்விதம் நாங்கள் தொண்டாற்றினால் எங்கள் குறிக்கோள் நிறைவேறுமோ, அதை அந்த வழியை ஞானத்துக்கு இட்டுச் செல்லும் வழியை நாங்கள் கேட்கிறோம். எங்களுக்கு உன் அருளாகிய சுவையைக் கொடுத்து எங்களுக்கு ஞானமாகிய கண்களைத் திறந்துவிட்டு, எங்களை ஆட்கொள்ளவேண்டி, எங்கள் உள்ளமாகிய பள்ளிஅறையில் இருந்து
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.= பள்ளி எழுந்து வந்து எங்களுக்கு அருள் புரிவாய்.

3 comments:

 1. தலம்பற்றி அறிந்து கொண்டேன்.

  எனது அம்மா தனது சிறு வயதிலிருந்தே 'உத்தரகோசமங்கை' தலத்தைப் பார்க்க விரும்பி பின்னாளில் வந்து தர்சித்திருந்தார்.

  தினந்தோறும் தேவாரங்கள் பாடும் வழக்கமுடையவர் உத்தரகோசமங்கைக்கழகே... எனப்பாடுவார். எனக்குப்பாடல் தெரியாது.:(

  ReplyDelete
 2. வாங்க மாதேவி, முதல் வருகைக்கு நன்றி. கருத்துக்கும் நன்றி. நாங்க இன்னும் திரு உத்தரகோசமங்கை போகவில்லை! :( எப்போ வாய்க்கும்னும் தெரியலை!

  ReplyDelete
 3. திருவாசகத்தில் நீத்தல் விண்ணப்பம் தான் திரு உத்தரகோசமங்கையில் மாணிக்கவாசகர் பாடியவை. மற்றத் தேவாரங்களில் ஞானசம்பந்தர் தேவாரத்தில் பார்த்த நினைவு இல்லை. நாவுக்கரசர் தேவாரத்தில் தேடிப் பார்க்கணும்! :(

  ReplyDelete