Friday, July 1, 2011

அருட்பெரும் சோதி! தனிப்பெரும் கருணை!

சமரச சன்மார்க்க சங்கம்!

மீண்டும் தில்லை சென்ற ராமலிங்க அடிகளுக்குத் தான் சிறு வயது முதல் தில்லைக்கு வந்ததும், நடனசபாபதியின் பேரருளும், அவரின் ஆநந்தத் தாண்டவத்தையும் , சிறு குழந்தையாய் இருந்தபோதே தனக்கு ஈசன் காட்டித் தந்து அருளியதும் நினைவில் மோதியது. பெருமான் நிகழ்த்திய செயல்கள் அனைத்தும் அவருக்குக் கண் முன்னால் தோன்றின. ஈசன் சிறு குழந்தையாய் இருந்த தனக்கு ஆநந்தத் தாண்டவத்தைக் காட்டி அருளியதோடு அல்லாமல், அம்பலவாயிலில் திருவருளை நினைந்து அழுது நின்ற தன்னை, அருள்மொழி கூறித் தேற்றிச் சிலம்பொலி கேட்கும் வண்ணம், வந்து ஞாநயோக அநுபவங்களை அருளியதும், ஸ்பரிச தீக்ஷை, வாசக தீக்ஷை, திருவடி தீக்ஷை ஆகிய தீக்ஷைகளைத் தமக்கு முறைப்படி அருளியதும் நினைவில் மோதின. மேலும் அம்பலத் திருவாயிலில் ஈசன் தம்மோடு கலந்து தன்னை இறவாநிலை பெற்று வாழப் பணித்ததையும், இனி பிரிய மாட்டோம் என வாக்கு அளித்ததையும் நினைவு கூர்ந்து கண்ணீர் சிந்தினார். அவற்றை எல்லாம் குறிக்கும் வண்ணம் ஓர் அற்புதப் பாடலையும் புனைந்தார்.

“கருவிற் கலந்த துணையே என்
கனிவில் கலந்த அமுதேஎன்
கண்ணிற் கலந்த ஒளியே என்
கருத்தில் கலந்த களிப்பேஎன்
உருவிற் கலந்த சுகமேஎன்
னுடைய ஒருமைப்பெருமானே
தெருவில் கலந்து விளையாடுஞ்
சிறியேன் தனக்கே மெய்ஞ்ஞான
சித்தி அளித்த பெருங்கருணைத்
தேவே உலகத் திரளெல்லாம்
மருவி கலந்து வாழ்வதற்கு
வாய்த்த தருணம் இது என்றே
வாயே பறையாய் அறைகின்றேன்.
எந்தாய் கருணை வலத்தாலே”

என்று பாடிக்கொண்டே, “திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம்” என உருகி தொழுதார். கருங்குழியில் வேங்கட ரெட்டியார் வீட்டில் அமர்ந்திருந்த அடிகளைத் தேடிக்கொண்டு ஸ்ரீநிவாச வரதாசாரியார் என்பவர் வந்தார். திருவஹீந்திரபுரம் சென்றதாயும் கோயில் வைபவங்கள் இப்போதெல்லாம் சிறப்பாக நடைபெறுவதில்லை எனவும் கோயில்களில் ஆரவாரம் அதிகமாகிவிட்டதாயும், அதிகாரிகளுக்கும், செல்வந்தர்களுக்குமே முன்னுரிமை கொடுப்பதாயும் வருந்தினார். அடிகளாரும் ஆமோதித்தார். திருத்தலங்களில் தங்குவதற்கு முன்னைவிட இப்போது வசதிகள் குறைவாகவும், மனநிம்மதியுடன் தரிசிக்க முடிவதில்லை எனவும் ஒத்துக்கொண்டார். அப்போது தங்கள் பிள்ளைகளுக்குப் படிப்பு வரவில்லை என எண்ணி வருந்தி ஏங்கிய பெற்றோர்களிடம் கலைமகல் வாழ்த்தைக் கொடுத்து அதைப் பாராயணம் செய்யும்படி சொன்னார்.

“கலைபயின்ற உளத்தினிக்கும்கரும்பினைமுக்
கனியை அருட்கடலை ஓங்கும்
நிலபயின்ர முனிவரரும் தொழுதேத்த
நான்முகனார் நீண்ட நாவின்
தலைபயின்ற மறை பயின்று மூவுலகும்
காக்கின்ற தாயை வாகைச்
சிலை பயின்ற நுதலாளைக் கலைவாணி
அம்மையை நாம் சிந்திப்போமே.”

இம்மாதிரி மூன்று பாடல்களை எழுதிக் கொடுத்து அனுப்பி வைத்தார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரீநிவாச வரதாசாரியார் ஸ்ரீராமன் மேலும் பதிகங்கள் பாடித் தரும்படி விண்ணப்பிக்க அவ்வாறே பத்துப் பாசுரங்கள் பாடிக் கொடுத்தார். அடிகளாரின் தகவல்கள் அவ்வப்போது கிடைக்கப் பெற்ற அவருடைய நண்பர்கள் வேலு முதலியார், வீராசாமி நாயக்கர், ரத்தினமுதலியார் போன்றவர்கள், சிதம்பரம் நடராஜரின் மேல் அடிகளார் தொத்திர மாலைகளும், சாத்திரமாலைகளுமாக சுமார் இருநூறு பாடி இருப்பதையும், தேவார நால்வர் ஆன ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோரின் பக்தியைப் போற்றி ஆளுடைய பிள்ளையார் அருள்மாலை, ஆளுடைய அரசுகள் அருள்மாலை, ஆளுடைய நம்பிகள் அருள் மாலை, ஆளுடைய அடிகள் அருள்மாலை போன்ற நான்கு பாமாலைகளும் பாடியதாகவும் மனமகிழ்வோடும், பெருமையோடும் பேசிக்கொண்டனர். நண்பர்களுக்கு அடிகளைக் காணவேண்டும் என்ற அவா உந்த, கருங்குழிக்குப் புறப்பட்டுச் செல்ல முடிவெடுத்தனர்.

கருங்குழியில் களத்து மேடு. வருடம் 1865. தொழுவூர் வேலாயுத முதலியார், கல்பட்டு ஐயா, வேங்கட ரெட்டியார் ஆகியோர் பணிவுடன் நின்றிருக்க ராமலிங்க அடிகளார் வீற்றிருந்தார். எப்போதும் இல்லாத மகிழ்வோடும், ஆநந்தத்தோடும் முகமும் உடலும் பிரகாசிக்க அடிகளார், தாம் கண்டறிந்த உண்மைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்” என்ற ஒன்றை நிறுவி இருப்பதாய்த் தெரிவித்தார். மேலும் அதைப் பற்றி விவரித்தார் அடிகளார். முன்னோர்கள் வகுத்த நான்கு மார்க்கங்கள்
தாசமார்க்கம், இது இறைவனுக்கே அடிமையாதலைக் குறிக்கும் எனவும்
சற்புத்திரமார்க்கம், இறைவனுக்கு நல்ல மகனாதலைக் குறிக்கும் எனவும்
சகமார்க்கம் இறைவனுடன் நண்பனாய்ப் பழகுதலைக்குறிக்கும் எனவும்
சன்மார்க்கம் என்பது இறைவனுடன் ஒன்றி அவனே தானாதலைக்குறிக்கும் எனவும் விளக்கிச் சொன்னார்.

இந்தக் கருத்தையே பெரும்பாலும் ஆன்றோர்கள் கூறி வருவதாயும் தம் கருத்து இதனின்று வேறுபடுவதாயும் கூறினார் அடிகளார். அனைவரும் ஆச்சரியத்துடன் நோக்க அடிகளார் விளக்க ஆரம்பித்தார்.

தாசமார்க்கம் என்பது எல்லா உயிர்களையும் தன் அடிமைகளாய்ப்பாவித்தல் என்றும்
எல்லா உயிர்களையும் தன் மகனாய்ப் பார்த்தல் சற்புத்திரமார்க்கம் என்றும்
எல்லா உயிர்களையும் தன் நண்பனாய்ப் பார்த்தல் சக மார்க்கம் என்றும்
எல்லா உயிர்களையும் தன்னைப் போல் பாவித்தலே சன்மார்க்கம் எனவும், இதுவே ஜீவ நியாயம் எனவும் எடுத்துக் கூறினார். இவை நான்கிலும் சன்மார்க்கமே சிறந்தது எனவும், மற்ற மூன்றும் சன்மார்க்கத்தை நோக்கிச் செலுத்தும் படிகளே என்றும் கூறினார். சன்மார்க்கமே கடைசியில் பரமுத்தியைத் தரும் வல்லமை பெற்றது எனவும் கூறினார். சன்மார்க்கமே இறவாநிலை தரும் எனவும், இறவாநிலை பெற்றவனே சன்மார்க்கி எனவும் கூறினார்.

1 comment:

  1. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
    (First 2 mins audio may not be clear... sorry for that)

    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (part 2)

    http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (part 3)

    Online Books
    http://www.vallalyaar.com/?p=409

    Guru:
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete