Saturday, October 10, 2009

சங்கிலித் தொடரில் ஒரு மொக்கை!

கவிநயா மறுபடியும் ஒரு சங்கிலித் தொடர் கொடுத்திருக்காங்க. இதுக்கு யாரையானும் நானும் அழைக்கணுமாம். யாரை அழைக்கிறது? எல்லாரும் பேசக் கூட நேரமில்லாமல், மத்தவங்க போடற பதிவுகளைப் படிக்கவும் நேரமில்லாமல் இருக்காங்க. இந்த அழகிலே யாரைக் கூப்பிடறது? வழக்கம்போல் இதிலேயும் யாரையும் கூப்பிடலை. எண்ணங்கள் வலைப்பக்கத்திலேயும் போடலை. இங்கே போணியாகுதானு பார்க்கலாம்! :))))))))

முதல்லே காதல்: காதல் என்ற வார்த்தையின் அர்த்தமே மாறி இருக்கும் இந்நாட்களில் காதல் என்றால் ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புவதை மட்டுமே குறிக்கிறது. சமீபத்தில் இணையத்தில் தமிழமுதம் குழுமத்தில் இந்த வார்த்தையே இப்போ சமீபத்தில் வந்தது தான் என ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் எழுதி இருந்தார். திருஞானசம்பந்தர், “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதை” அவர் தெரிந்து கொள்ளவில்லையா, மறந்துட்டாரானு புரியலை. திருவாசகத்தில் திருக்கழுக்குன்றப் பதிகத்தில் மாணிக்க வாசகர், “சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனிச்சரண் சரணாமெனக் காதலால் உனை ஓத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே!” என்று சொல்லிக் காதலால் ஈசனை ஓதியதைக் குறிப்பிடுகிறார். இம்மாதிரிப் பல உதாரணங்கள் காட்டமுடியும். தேவாரம், திருவாசகத்தில் இருந்து. இதிலேயே கடவுளும் வந்துவிடுகிறார். கடவுளிடம் மாறா பக்தியுடன் இருப்பதையே குறிப்பிடலாம், காதலுக்கும், கடவுளுக்கும். ஆகவே காதல் என்பது அன்பு செலுத்துவதைக்குறிக்கும் என்ற அளவில் புரிந்துகொண்டு எழுதுகிறேன். இந்த உலகில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தலாம். மரம், செடி,கொடிகள், பறவைகள், பிராணிகள், மலை, மடு, நதி, கடல் என அனைத்திடமும் காதல் கொள்ளலாம். அதெல்லாம் உங்க இஷ்டம். எல்லாவற்றையும் மாறாக் காதலுடன் நேசிக்கக் கற்றுக் கொண்டோமானால் உலகில் ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பதோ, பழி தீர்ப்பதோ, இருக்காது என்றும் தோன்றுகிறது.

கடவுள்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்.”

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.


அழகு: அழகென்ற சொல்லுக்கு முருகா! என்ற பாடல் தான் முன்னாடி நினைவில் வருது. அழகு என்பது ஒவ்வொருத்தர் கண்ணோட்டத்திலும் மாறுபடும். நிறமோ, செம்மையான உடல்கட்டோ, முக அழகோ அழகோடு சேர்க்கமுடியாது என்பதையும் அனைவரும் அறிவார்கள். வயதான எம்.எஸ். அம்மாவின் முக காந்தியும், டி.கே.பட்டம்மாள் அம்மாவின் முக காந்தியும் சுடர்விட்டுப் பிரகாசித்தன. அது அவங்க உள்ளுக்குள்ளே செய்த இசை என்னும் தவத்தால் வந்தது. அதுவும் இறை உணர்வோடு இசை என்னும் தவத்தை விடாமல் செய்தாங்க. ஆகையால் நாமும் அந்த உணர்வை விடாமல் நம் ஒவ்வொரு வேலையிலும் இறை உணர்வை நிரப்பினாலே போதும். வேலை செய்த களைப்பும் இருக்காது. அழகும் கூடும்.

பணம்
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.

பணம் தேவைக்குக் கிடைப்பது கூட இறைவன் அருளாலேயே. அதையும் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இப்படி நம் வாழ்க்கையில் காதலோ, அழகோ அல்லது பணமோ எதுவேண்டுமானாலும் அது இறைவன் அருள் இருந்தால் மட்டுமே நடக்கும். என்றாலும் பணத்தைப் பற்றி மட்டும் கொஞ்சம் அதிகமாய் எழுத நினைக்கிறேன். கூடியவரையில் பணத்தை நாம் துரத்தாமல் இருக்கப் பழகணும். தேவைக்குக் கிடைச்சால் அதுவே அதிகம் என்ற மனப்பான்மை வளரவேண்டும்.

அப்பா வீட்டில் அப்பா ஒரே சிக்கனம். தேவையானதுக்குக் கூட செலவு செய்யமாட்டார். ஆனால் ஒரு பட்டுப் புடைவை, நகை என்றால் அவர் உடனே வாங்குவார். எனக்கு இது விசித்திரமாய் இருக்கும். பள்ளிக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தருவதில் சுணக்கம் காட்டி இருக்கார். தீபாவளிக்குப் பட்டுப் பாவாடை, புடைவை என்றால் தயக்கமே இன்றி வாங்குவார். இங்கே திருமணம் ஆகி வந்தாலோ, எல்லாமே நேர்மாறாக இருந்தது. இதிலே சிக்கனம் என்றால் நம்ம ரங்ஸோட சிக்கனம் தான். ஏற்கெனவே நான் இழுத்துப் பிடிக்கிற டைப். ட்ரெயினிங் அப்படி! இவரோ அலுவலகத்தில் மேஜர்களையும், கர்னல்களையும் கணக்குக் கேட்கும் மனுஷர். சபாஷ், சரியான போட்டினு சொல்றாப்போல இரண்டு பேரோட சிக்கன நடவடிக்கைகளாலேயே எல்லாரும் வெறுத்துப் போயிட்டாங்கனா பாருங்களேன்! இதிலே நான் செலவாளினு என்னை அவரும், நீங்க தான் இஷ்டத்துக்கு சாமான்களை வாங்கறீங்கனு நானும் சொல்லுவேன். எங்க வாழ்க்கையில் நாங்க பணத்துக்குத் தவிச்ச நாட்கள் , மாதங்கள், வருடங்கள் என உண்டு. ஆனாலும் சமாளிச்சோம்.

வேலையை விட்டிருக்கவேண்டாமேனு கேட்டவங்க உண்டு. எனக்கு மாநில அரசு வேலை. அவருக்கு அடிக்கடி மாற்றல் ஆகும் மத்திய அரசு வேலை. இருவரும் வெவ்வேறு இடங்களில் இருந்தால் தான் இது சாத்தியம். வேலை செய்வதன் மூலம் வரும் பணமா? இல்லை குடும்பமா? குழந்தையா? என்ற கேள்வி வந்தபோது நான் பின்னதையே தேர்ந்தெடுத்தேன். என்னோட அம்மா குழந்தையைப் பார்த்துக்கத் தயார்தான். அப்போ பெண் மட்டும் தான். ஆனாலும் எனக்கு விட இஷ்டமில்லை. மூன்று வயசு வரைக்கும் அந்தக் குழந்தைகள் செய்யும் செயல்களைக் கண்டு ரசிக்கணும். சின்ன வயசிலே இருந்து நான் குழந்தைகளோடேயே பழகினவள் வேறே. பெற்ற குழந்தை என்ன செய்யறது, எப்படி விளையாடறதுனு பார்க்கவேண்டாமா? அனுபவிக்க வேண்டாமா? மேலும் குழந்தைகளுக்கு அம்மாவின் அருகாமை பதினைந்து வயது வரையிலும் கட்டாயம் தேவை. ஒருவேளை வேலைக்குப் போயிருந்தால் இன்று பணம் நிறைய இருந்திருக்கும்தான்.

இத்தனை கடமைகளுக்கிடையிலேயும் நாங்க வீடு கட்டியதே ஒரு சாதனைனு சொல்லிக்கலாமோ? அது பத்தி எழுதினா நிறைய வரும். ஆனால் அதுக்கு அப்புறமாய் நிச்சயமாய்க் கஷ்டப் பட்டோம் பணத்துக்கு. அன்றாட நிர்வாகமே சில சமயம் ஸ்தம்பிக்கும்போல் பயமுறுத்தும். புடைவை வியாபாரம், ட்யூஷன் சொல்லிக் கொடுப்பது, தையல் சொல்லிக் கொடுப்பது, என் எஸ் சி ஏஜென்சி எடுத்து என வீட்டில் இருந்தே என்ன வகையில் முடியுமோ அப்படி எல்லாம் சம்பாதிக்க நேர்ந்தது. என்ன?? இதுக்கெல்லாம் வேலை நேரம் என்பது இல்லை. மதிய ஓய்வு நேரத்தில் தையல் வகுப்பு, புடைவை வியாபாரமும், காலையில் பத்து மணிக்கு அப்புறம் போஸ்ட் ஆபீஸுக்குப் போய் வாடிக்கையாளர் சேவையும்னு திட்டம் போட்டு வச்சுப்பேன். எங்கே போனாலும் மதியம் பனிரண்டு மணிக்குள் வீட்டுக்கு வந்துடுவேன். மாமியார், மாமனார் சாப்பிட்டாங்களா, தூங்கினாங்களானு தெரியணுமே! சாயந்திரம் டிபன், காப்பி, வேலைசெய்யற பொண்ணு வரலைனா, வேலைனு இருக்குமே.

எல்லாம் முடிஞ்சு, 5-00 மணிக்கு மேல் சாயங்காலமாய் ட்யூஷன், அந்தக் குழந்தைகளோடு என் குழந்தைகளும் படிப்பாங்க. ஒரே வேலையாக ஆயிடும். எப்படி அப்போ அவ்வளவு நேரம் கிடைச்சது? நானும் படிச்சேன் அப்போ. ஏற்கெனவே ஹிந்தியில் பட்டம் வாங்கி இருந்தாலும் சென்னை ஹிந்தி பிரசார சபா பரிக்ஷை எழுதணும்னு அதுவும் படிச்சுட்டு இருந்தேன். பையர் படிப்புக்கு என்ன செய்யப் போறோமோ, பெண் கல்யாணத்துக்கு என்ன செய்யப் போறோமோனு கொஞ்சம் கவலைதான். ஆனாலும் கடவுள் அருளால் பையருக்கு மெரிட்டில் குஜராத்தில் அரசாங்கக் கல்லூரியில் இடம் கிடைச்சு, குஜராத்திலேயே காம்பஸ் செலக்ஷனில் முதலில் வேலையும் கிடைத்தது. அதே கடவுள் அருளால் பெண்ணுக்கும் கடன்வாங்காமல் கையில் இருந்த சேமிப்பிலேயே கல்யாணமும் நடத்த முடிஞ்சது. வீடு கட்ட நாங்க வாங்கிய கடன் எல்லாம் முடிஞ்சு அப்பாடானு இருந்தப்போ வந்தது பாருங்க ஒரு பூதம்! திடீர்னு இரண்டு வருஷம் பயிற்சி முடிஞ்சு எக்சிக்யூடிவ் ஆக ஆகியிருந்த சமயம் பையர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். “நான் அமெரிக்கா போகப் போறேன்.” சரி, எல் அண்ட் டியில் தான் அனுப்பப் போறாங்களோனு நினைச்சால், இல்லையாமே! படிக்கப் போறாராம். அவரோட கூடப் படிச்சவங்க எல்லாரும், அங்கே ஏற்கெனவே போய் ஆறு மாசம் ஆயாச்சு. நானும் ஜிஆர்ஈ(தங்க மாளிகை இல்லைங்க) டோஃபெல் பரிக்ஷை கொடுக்கப் போறேன்னு சென்னை வந்தார். இதுக்கு மேலேயும் சொல்லணும்னா நேயர் விருப்பம் இருந்தால் சொல்லறேன். இல்லைனா விட்டுடலாம். :)))))))) ரொம்ப போரடிக்கிறேனோனு தோணுது!

17 comments:

  1. ம் !! பண்ணி முடிஞ்சப்புறம் எவ்வளவு எளிதா தெரியறது. ஆனா பண்ணப்பட்ட பாடும் அந்த நிமிஷ வேதனை, பயம், அதை வார்தைகள்ல சொல்லறதும் ரொம்ப கஷ்டம் தானே மிஸஸ் சிவம்? I think quite a few women could relate to what you said. எந்த ஒரு பெண்ணும் தன் மன ஆசைகளையும் திறமைகளையும் ரெண்டாம் பக்ஷமா வச்சுட்டு தன் குடும்பத்துக்கு செய்யறதும் காதலில் வருவதுதான் இல்லையா. காதல் நா மோஹம், LUSTஓட கூடியதுன்னு அர்த்தம் இல்லையே ?! அந்த sacrifice, அன்பு அப்படிங்கற அடிப்படை quality அழகுதான் இல்லையா?!யாருக்கும் எந்தகெடுதலும் இல்லாம வழ்க்கையோட நடந்து போய் செய்யவேண்டியதை செஞ்சு முடித்தப்புறம் கிடைக்கிற நிம்மதி சந்தோஷம் பணம் டாலரைவிட மேல் தானே இல்லையா?வாழ்க்கையோட challenges ஐ face பண்ணற தைரியம்,விட்டுக்கொடுக்கிற சுபாவம், சோதனை நேரத்திலும் foresight ஒடே எது உசிதமோ அதை செய்யற பெண்மையோட குணாதிசயமும் அதை மனசுக்குள்ள நன்னா புரிஞ்சுண்டு வெளிப்படுத்த தெரியாம இருக்கலாம் ஆன அவளை மானசீஹமா RESPECT பண்ணற அவளோட வழ்க்கையின் மறுபாதியை EQUAL ஆ SHARE பண்ணிக்கற ஆண்மையும் தெய்வம் தான் இல்லையா மிஸஸ் சிவம்

    ReplyDelete
  2. உங்க பயணங்களில் இறையுடனான காதல், தவப்பயனான அழகு இரண்டும் அருமை....நம்மைப் போன்ற மிடில் கிளாஸ் குடும்பங்களின் சிரமத்தைச் சொல்லி பொருளையும் விளக்கிட்டீங்க.... :-).

    நீங்க மாநில அரசு ஊழியராக இருந்தது புதுத் தகவல்...

    பகிர்ந்தமைக்கு நன்றிகள் கீதாம்மா.

    ReplyDelete
  3. அட??? எப்போ பப்ளிஷ் ஆச்சுனு தெரியலை, கவிநயாவைக் கேட்டிருந்தேன். அவங்க பதிலையே இன்னிக்குத் தான் பார்க்கிறேன். அதுக்குள்ளே பப்ளிஷும் ஆகி பின்னூட்டமும் வந்தாச்சு? இந்த ப்ளாகர் நான் இல்லைனதும் ஏதோ திரிசமன் வேலை பண்ணி இருக்கு. சேவ் பண்ணி வச்சது எப்படி பப்ளிஷ் ஆச்சு??? ஹிஹிஹி அ.வ.சி. :)))))))) அப்புறமா வந்து பதில் கொடுக்கிறேன் ரெண்டு பேருக்கும். இன்னும் ஆச்சரியம் அடங்கலை ப்ளாகர் பண்ணின வேலை!

    ReplyDelete
  4. மாநில அரசுல வேலை செய்திங்களா!!...சொல்லவேல்ல ;)

    பணத்தை பத்தி சொல்ல ஆரம்பிச்சிட்டு எங்கையோ போயிட்டிங்க தலைவி ;)

    வந்து முடிச்சிடுங்க ;)

    ReplyDelete
  5. //எல்லாரும் பேசக் கூட நேரமில்லாமல், மத்தவங்க போடற பதிவுகளைப் படிக்கவும் நேரமில்லாமல் இருக்காங்க//

    போன் பண்ணினா கூட எவ்ளோ பேர் வாய்ஸ் மெசேஜ்(அதுவும் பேத்தி குரலில்) செட் பண்ணிட்டு புடவை எடுக்க டி நகர் போயிடறாங்க..? :))

    நல்ல வேளை தப்பித்தது மாநில அரசு. :p

    ReplyDelete
  6. அஞ்சு விரலும் ஒண்ணா இல்லையே? நீங்க வேலையை உதறிட்டு விக்ரமன் பட நாயகி மாதிரி கடந்து வந்துட்டீங்க.

    ஆனா எல்லாருக்கும் இது சாத்தியபடுமா? :(

    ReplyDelete
  7. //காதல் நா மோஹம், LUSTஓட கூடியதுன்னு அர்த்தம் இல்லையே ?! அந்த sacrifice, அன்பு அப்படிங்கற அடிப்படை quality அழகுதான் இல்லையா?!யாருக்கும் எந்தகெடுதலும் இல்லாம வழ்க்கையோட நடந்து போய் செய்யவேண்டியதை செஞ்சு முடித்தப்புறம் கிடைக்கிற நிம்மதி சந்தோஷம் பணம் டாலரைவிட மேல் தானே இல்லையா?//

    ஜெயஸ்ரீ, அருமையா எடுத்துச் சொல்லி இருக்கீங்க. நான் இருக்கும் குழுமம் ஒன்றில் இதையே விவாதப் பொருளாக வந்தப்போ, நான் சொன்னதும், எல்லாருமே கேலி செய்தார்கள். தியாகினு பட்டம் கிடைச்சதா? அல்லது பாரத ரத்னா அவார்டு கிடைச்சதானு. இது எதுக்காகவும் இல்லைனு அவங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியலை. இது புரிஞ்சுக்கவேண்டிய ஒரு விஷயம். அதுவும் சிலருக்கு மட்டுமே புரியும் என்பதும் தெரிந்து கொண்டேன். நன்றி ஜெயஸ்ரீ.

    ReplyDelete
  8. வாங்க மெளலி, மாநில அரசுப்பணின்னா, ம்ம்ம்ம்ம்??? அது கூடச் சரியா வராது. மின்சார வாரியத்தில் வேலையா இருந்தேன். பாங்க் ஆப் இந்தியாவிலும் வேலை கிடைச்சது. சேர முடியலை! :)))))))))

    ReplyDelete
  9. வாங்க கோபி, மிச்சமும் சொல்லணுமா??? பார்க்கலாம். :)))))))) மத்தபடி வேலை பத்திய கேள்விக்கு மெளலிக்கு சொன்ன பதிலே ரிப்பீட்டே!

    ReplyDelete
  10. //போன் பண்ணினா கூட எவ்ளோ பேர் வாய்ஸ் மெசேஜ்(அதுவும் பேத்தி குரலில்) செட் பண்ணிட்டு புடவை எடுக்க டி நகர் போயிடறாங்க..? :))

    நல்ல வேளை தப்பித்தது மாநில அரசு. :p//

    ஹிஹிஹி,அ(வ)ம்பி, மெசேஜ் கிடைச்சது, என்ன திடீர்னு??? அப்புறம் தான் தோணிச்சு,வஸ்த்ரகலா புடைவை எடுத்துக் கொடுக்க வந்திருப்பீங்களோனு. நான் தி.நகருக்குப் போகலை நேத்திக்கு! அது தனியாய்ப் பதிவாய் வரும்! அது வரை சஸ்பென்ஸ்! டண்டடண்டடண்ட டய்ங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்

    ReplyDelete
  11. //ஆனா எல்லாருக்கும் இது சாத்தியபடுமா? :(//

    புரிஞ்சுண்டேன், ஆனால் சாத்தியப் படணும். மேலும் கணவன், மனைவி இருவரும் கலந்து பேசி ஒருமித்த கருத்தோடு முடிவையும் எடுக்கணும். போதுமென்ற மனம் முக்கியமாய் வேண்டும். :)))))))))))))))

    ReplyDelete
  12. //போதுமென்ற மனம் முக்கியமாய் வேண்டும்//

    நமக்கு இருக்கு, நம்மோட குழந்தைகளுக்கும் இருக்கனும்னு எதிர்பாக்க முடியாதே! :(

    எல்லாருக்கும் ஹிந்தி தெரிஞ்சு இருக்குமா? இல்ல தையலும் கை வருமா? சிலருக்கு ஆரக்கிள் அப்ளிகேஷன் தான் தெரியும். அதை எல்லாம் ட்யூஷனா எடுக்கவும் முடியாது, அதனால் ஒருமித்த முடிவோட பேசி வேலைக்கு போவாங்க.

    நாளைக்கு பையர் எம்எஸ் படிக்கனும், பைலட்டுக்கு படிக்கனும்னு வந்து நின்னா பாவம் அந்த அம்மாஞ்சி அப்பா என்ன பண்ணுவார்? அதான் அப்போதைக்கு இப்போதே கஷ்டப்படறார். :(

    ReplyDelete
  13. //சிலருக்கு ஆரக்கிள் அப்ளிகேஷன் தான் தெரியும். அதை எல்லாம் ட்யூஷனா எடுக்கவும் முடியாது, அதனால் ஒருமித்த முடிவோட பேசி வேலைக்கு போவாங்க.//

    ஆரகிள் படிச்சும், சிக்னலில் ஸ்பெஷலைஸ் பண்ணியும், நியூரோ சைன்ஸில் எம்.எஸ். பண்ணியும் வேலைக்குப் போகாதவங்க இருக்காங்க அம்பி! இல்லாமல் இல்லை!

    ReplyDelete
  14. //இது எதுக்காகவும் இல்லைனு அவங்களுக்கு என்னால் புரிய வைக்க முடியலை. இது புரிஞ்சுக்கவேண்டிய ஒரு விஷயம். அதுவும் சிலருக்கு மட்டுமே புரியும் என்பதும் தெரிந்து கொண்டேன்.//

    ஆம் அம்மா. ஆனால் என் பிள்ளைக்கு 9 வயதாகும்போது நான் வேலைக்கு போயிட்டேன்.

    இம்புட்டு அழகா எழுதிட்டு அதுக்கு 'மொக்கை'ன்னு பேர் வச்சதை வன்மையா கண்டிக்கிறேன்! பெயரை உடனே மாற்றவும்!!

    சுவாரஸ்யமான இடத்தில் நிறுத்திட்டு தொடரவா, வேண்டாமான்னு கேட்டா எப்படி? தொடருங்கள் அம்மா.

    பதிவிட்டமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  15. //சிக்னலில் ஸ்பெஷலைஸ் பண்ணியும், நியூரோ சைன்ஸில் எம்.எஸ். பண்ணியும் வேலைக்குப் போகாதவங்க இருக்காங்க //

    இருக்கலாம். இப்ப பிரச்சனை ஆரக்கிள் இல்லை. எல்லாருக்கும் எப்போதும் ஒரே விதி பொருந்தாது. யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு அர்த்தம் பண்ணிக்க முடியாது. :))

    ReplyDelete
  16. //யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு அர்த்தம் பண்ணிக்க முடியாது. :))//

    ம்ம்ம்ம்ம்??? புரிஞ்சுக்கலை அம்பி நீங்க. சும்மா மயில்கழுத்துக்கலர் புடைவையையும், பக்கத்து சீட்டு ப்ளாக்ரையும் நினைச்சிட்டிருந்தா எப்படி??? சரி, இதை முடிக்கப் பார்க்கிறேன். தேவை என்பது வேறே. நான் சொல்லுவது வேறே.

    //நமக்கு இருக்கு, நம்மோட குழந்தைகளுக்கும் இருக்கனும்னு எதிர்பாக்க முடியாதே! :(//

    கட்டாயம் இருக்காதுதான், ஆனால் புரிய வைக்கணும், சின்ன வயசிலே இருந்தே. பிட்ஸாவுக்கு ஆசைப்படாமல், சப்பாத்தி போதும் என்ற எண்ணம் வரணும்! புரியும்னு நம்பறேன். :)))))))))))))))

    ReplyDelete
  17. "குதிரைக்கு குர்ரம்னா, ஆனைக்கு அர்ரம்"னு அர்த்தம் பண்ணிக்க முடியாது என்பதே சரி.
    //யானைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்னு அர்த்தம் பண்ணிக்க முடியாது. :))// என இங்கு
    கூறியுள்ளது சரியல்ல!

    குதிரை தெலுங்கில் 'குர்ரம்'
    யானை தெலுங்கில் 'ஏனுக'

    ReplyDelete