Monday, November 2, 2009

என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா!


மலையாக மாறிய கஜேந்திரனின் மேல் பெருமாள் எழுந்தருளி இருப்பதால் மேலே பல படிகள் ஏறிச் சென்றே பெருமாளைத் தரிசிக்கவேண்டும். ஒரு வகையில் இதுவும் ஒரு மாடக்கோயில் என்றே சொல்லலாம். இந்தக் கோயிலுக்கு தேவகுரு பிரஹஸ்பதியும் வந்து வழிபட்டிருக்கிறார். இந்திரன் கொடுத்த சாபத்தால் ஏழ்மை நிலையடைந்த பிரஹஸ்பதிக்கு இங்கேதான் சாப விமோசனம் கிடைத்தது என்கின்றனர். ஐந்து பிராஹாரங்களுடன் இருக்கும் இந்தக்கோயில் கட்டுமலை அமைப்புடன் கூடியது. கட்டுமலைகளை முறையே வாரணகிரி அத்திகிரி எனச் சொல்லுகின்றனர். முதலில் மேலே ஏறுவது வாரணகிரியில். அங்கே அழகிய சிங்கரைத் தரிசனம் செய்து கொண்டே பின்னர் அத்திகிரிக்கு இன்னும் மேலே ஏற வேண்டும். மேலே ஏறினால் தேவராஜப் பெருமாள் என்ற பெயரில் மூலவர் எழுந்தருளி உள்ளார். ஆனால் இங்கே உற்சவர் ஆன வரதராஜருக்கே சிறப்பு அதிகம். அதோடு இந்தக் கோயிலில் தாயாருக்குச் சிறப்பும், செல்வாக்கும் அதிகம் என்கின்றனர். ஆகையால் முதலில் பெருந்தேவித் தாயாரைத் தரிசிக்கவேண்டும். அதுக்கு முன்னால் அத்தி வரதர் பற்றிய சில செய்திகளைப் பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தின் அத்தி வரதர் மிகவும் பிரபலமானவர். அவரை நாம் தினமும் தரிசிக்க முடியாது. அவர் இருப்பதும் வெளியே ஏதோ சந்நிதியில் இல்லை. கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தின் அருகே உள்ள அநந்த சரஸ் என்னும் தீர்த்தத்தில் உள்ள நீராழிமண்டபத்தின் அடியில் நீருக்குள்ளே நிரந்தரமாய் சயனக் கோலத்தில்வெள்ளிப் பேழையில் இருப்பவர் அத்தி வரதர். பெரிய அத்திமரத்தால் செய்யப் பட்ட இவர் யாகத் தீயில் இருந்து தோன்றியதால் உடல் வெப்பத்தால் தகிப்பதாகவும், தினமும் மூன்று வேளை நூற்றுக்கணக்கான குடங்களில் திருமஞ்சனம் செய்யவேண்டும் என்று பட்டாசாரியார் ஒருவரது கனவில் வந்து சொன்னதாகவும், தினமும் திருமஞ்சனம் மூன்று வேளை செய்ய முடியாவிட்டால், தன்னை நிரந்தரமாய் அநந்த சரஸில் மூழ்க வைக்கும்படியும் பெருமாள் சொன்னதாகவும், நூற்றுக்கணக்கான குடங்களில் நீர் எடுத்துத் தினமும் மூன்று வேளை திருமஞ்சனம் செய்ய முடியாது என்பதால் வரதரை நீரில் மூழ்கும்படிச் செய்தார்கள் எனச் சொல்லப் படுகிறது. மற்றோர் தகவலின் படி கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் பெளத்தர்கள் வசம் இந்தக் கோயில் போய்விட, இங்கே இருந்த மூல விக்ரஹங்கள் பாடலிபுத்திரம் அனுப்பப்பட்டன/கடத்தப் பட்டன. நரசிம்மர், ஹரித்ராதேவி தாயார், வரதர் போன்ற அனைவரும் பாடலிபுத்திரம் போய்விட, சில நாட்கள் கோயில் வழிபாட்டிலேயே இல்லை எனச் சொல்கின்றனர்.

ஸ்ரீராமாநுஜர் காலத்தில் கோயிலில் ஏற்கெனவே வழிபாடுகள் ஆரம்பித்திருந்த நிலையில், உற்சவர் இல்லையே என கோயிலின் பட்டர் ஒருவரும் ராமாநுஜரும் கூடி யோசித்து அத்திமரத்தால் வரதராஜரின் சிலா உருவை உருவாக்கியதாகவும், அந்நியர் கண்களில் இருந்து தப்பவேண்டி அநந்த சரஸில் வைத்திருக்கலாமெனவும் சொல்கின்றனர். எது எப்படி இருந்தாலும் ஒரு வெள்ளிப்பேழையில் வைக்கப் பட்ட அத்திவரதர் நீருக்குள் போய் மறைந்தார். இனி மூலவரும் இல்லை, உற்சவரும் இல்லையே என்ன செய்வது? என யோசித்த அர்ச்சகர்களுக்கு பெருமாளே மீண்டும் கனவில் வந்து பழைய சீவரம் என்ற இடத்தில் தன்னைப் போன்றே இன்னொரு வரதர் இருப்பதாகச் சொல்லி அவரைக் கண்டு பிடித்துப் பிரதிஷ்டை செய்யச் சொல்லி இருக்கின்றனர். அவரைக் கண்டுபிடித்து இந்தக் கோயிலுக்குக் கொண்டு வந்து எழுந்தருளப் பண்ணி இருக்கின்றனர். அத்தி வரதரை பெருமாளின் ஆக்ஞைப்படியே நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை நீரில் இருந்து வெளியே எடுத்து ஒரு மண்டலம் ஆராதனைகள் செய்து பின்னர் மீண்டும் நீருக்குள்ளேயே விடுவார்கள்.

கடைசியாய் 1979-ம் ஆண்டு அத்தி வரதர் வெளியே வந்திருக்கார். (அட, நாங்க செகந்தராபாத்தில் இல்லை இருந்திருக்கோம்?) மீண்டும் 2019- வருவாராம். ஹிஹிஹி, இருக்கோமோ, இல்லையோ? யாருக்குக் கொடுத்து வைக்கிறதோ தெரியலை, போகட்டும்! ஜெயஸ்ரீ கேட்ட சக்கரத்தாழ்வார் என்ற சுதர்சனர் இங்கே தான் குளக்கரையில் சேவை சாதிக்கிறார். மிகப் பெரிய சக்கரத்தாழ்வார் என்று சொல்கின்றார்கள். அநந்த சரஸ் தீர்த்தம் தவிரவும் வேகவதி ஆற்றையும் சேர்த்து மேலும் நான்கு தீர்த்தங்கள் உள்ளன எனச் சொல்கின்றனர். ஸ்ரீரங்கநாதருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. வேணுகோபாலன், பூவராகன் ஆகியோரும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். முதல் பிரகாரத்தை நம்மாழ்வார் பெயரில் ஆழ்வார் வீதி என அழைக்கின்றனர். பெருமாள் கருடசேவையின் போது இந்த ஆழ்வார் வீதிக்குத் தான் முதலில் வருகின்றார். மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். இன்னும் பல அடியார்கள், திருக்கச்சி நம்பிகள் ஆகியோரையும் தரிசித்தாலும் எல்லாவற்றையும் விட முக்கியமானது இங்கே உள்ள அம்மாள் காலட்சேபக் கூடம். வேதாந்த தேசிகரின் குருவான நடாத்தூர் வரதாசாரியார் என்பவர் தினமும் பெருமாளுக்கு சேவை செய்து வந்தார்.
அவர் செய்யும் நைவேத்தியங்களில் பாலும் இடம் பெறும். சூடாகக் காய்ச்சப்பட்ட பாலைச் சூடு போக நன்கு ஆற்றி, ஆற்றி இளஞ்சூடாகப் பெருமாளுக்கு நிவேதனம் செய்வாராம்.. ஒரு தாய் தன் மகவுக்கு எப்படி சூடு பொறுக்காது எனக் கவனமாகச் செயல் படுவாளோ அதைப்போல் கவனமாகவும், பொறுமையாகவும் தினமும் இதைச் செய்து வந்ததால் பெருமாளே இவரை, “அம்மையே” என அழைத்ததாகவும், அது முதல் இவர் பெயர் நடாத்தூர் அம்மாள் என அழைக்கப் பட்டதாகவும் சொல்கின்றனர்.

நாலாம் பிரஹாரத்தில் மடைப்பள்ளி. அங்கிருந்து பெருந்தேவி தாயார் சந்நிதிக்குப் போகும் வழியில் மீண்டும் பிரசாத விநியோகம் நடந்தது. இதுவும் பெருமாளுக்குப் படைக்கப்பட்டு மடைப்பள்ளியில் இருந்து வந்ததே. ஆனால் வெளியில் வைத்து விற்பனை செய்ய முடியாது என்பதால் கேட்பவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் தலைக்கு ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு, அவர் கேட்கலை, நாங்களாகவே தீர்மானம் பண்ணிக் கொடுத்தோம், பிரசாதங்கள் வாங்கிக் கொண்டோம். புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை விநியோகிக்கப் பட்டது. எந்தப் பெருமாள் கோயிலுக்கு எப்போது சென்றாலும் பிரசாதம் கிடைக்காமலோ அல்லது சாப்பிடாமலோ வரவே முடியாது. காக்கும் கடவுள் என்பதாலோ என்னமோ பெருமாள் கோயில்களுக்குப் போனால் வயிற்றைக் கவனிச்சுட்டுத் தான் அனுப்பறார் பெருமாள். இனி பெருந்தேவித் தாயாரின் சந்நிதி. அவள் கதை தனிக்கதை./. நாளைக்குப் பார்க்கலாமா? ஏற்கெனவே திவா வந்து ஸ்ரீபுரம் கூட்டிண்டு போகலையேனு கேட்டுண்டு இருக்கார். நிஜமாவே காஞ்சியைப் பத்தி ஓரளவு சுருக்கமாத் தான் எழுதறேன். ஹிஹிஹி, விரிவா எழுத ஆரம்பிச்சால் சிதம்பர ரகசியத்தை விடப் பெரிசாய் வரும்.

6 comments:

 1. நடாத்தூர் அம்மாள் story ரொம்ப touching.என்ன பண்ணறோம்ங்கறத விட எப்படி பண்ணறோம்ங்கறது முக்கியம், மனசோட பாவம் முக்கியம்னு இந்த incident சொல்லறது. மனசை தொட்டது.
  முந்தி வந்த ஆதி பராசக்தி (?!!) படத்தில சுருளிராஜன் பண்ணற ப்ரசாதம் ப்ரேயர் ஐ ஸ்வாமி ஏத்துக்கறது பாக்க எனக்கு "ஜாலி ஜாலி" யா இருக்கும்.
  அப்போ தேவராஜ பெருமாள் ஸ்வாமி அத்தி ஸ்வாமி இல்லையா?
  HASTHAMNA கை நு நினைத்தேன். ஹாதி லேந்து வருதா? ஐராவரதத்து மேல ஸ்வாமி உட்கார்ந்துண்டு இருக்கார் , ஐராவதம் தான் மலைனு யாரோ எழுதி படிச்சதாவும் ஞ்யாபகம்.
  நன்னா இருக்கு. what happend to my palli?பல்லி பத்தி கேட்டேனே? ஒருவேள வேற எங்கையோவா? தேடணும்.

  ReplyDelete
 2. //அவள் கதை தனிக்கதை./. நாளைக்குப் பார்க்கலாமா? ஏற்கெனவே திவா வந்து ஸ்ரீபுரம் கூட்டிண்டு போகலையேனு கேட்டுண்டு இருக்கார். ??//

  sigh!நீங்க மனசு வெச்சு கூட்டிபோறதுக்கு முன்னே 200 டன் தங்கமே நம்ம அரசாங்கம் வாங்கிடுத்து!

  ReplyDelete
 3. வாங்க ஜெயஸ்ரீ, பல்லி பத்தி பெருமாளைச் சேவிக்கும்போது வரும். கொஞ்சம் பொறுங்க. இன்னும் தாயாரையே சேவிச்சு முடியலை! :D

  ReplyDelete
 4. //sigh!நீங்க மனசு வெச்சு கூட்டிபோறதுக்கு முன்னே 200 டன் தங்கமே நம்ம அரசாங்கம் வாங்கிடுத்து!//

  ஆஹா, தமிழர்கள் வாழ்வில் பொன்னாள். எல்லாருக்கும் இலவசமாய் ஒரு கிலோ தங்கம் கிடைக்கும். ரேஷன் கார்டு வச்சிருக்கிறவங்க எல்லாருக்கும்!

  ReplyDelete
 5. ஹஸ்தின் நா யானைனு அர்த்தம் அதுனாலதான் ஹஸ்தினாபுர் நு வந்ததுன்னு hubby சொன்னார்.

  ReplyDelete
 6. "ஆஹா, தமிழர்கள் வாழ்வில் பொன்னாள். எல்லாருக்கும் இலவசமாய் ஒரு கிலோ தங்கம் கிடைக்கும். ரேஷன் கார்டு வச்சிருக்கிறவங்க எல்லாருக்கும் "
  ஹை!! அப்போ நாங்க உங்களை பாத்து பொன்னார் மேனியளே நு பாடலாம் நவகைலாய யாத்திரை பக்கத்தில்!!

  ReplyDelete