Thursday, November 26, 2009
என் பயணங்களில் - கஞ்சி வரதப்பா! எங்கே எல்லாம் ஒளிஞ்சிருக்கே!
ஆற்காடு யுத்தம் நடக்கும்போது ராபர்ட் கிளைவிற்கு உடலநலமில்லாமல் போக, இந்தக் கோயிலின் துளசிதீர்த்தம் பருகக் கொடுத்தனராம். நோய் தீர, நன்றிக்கடனாக ராபர்ட் கிளைவ், தான் போரில் வெற்றி வீரனாய்த் திரும்பும்போடு வரதார்ஜருக்கு விலை உயர்ந்த மகரகண்டியைக் கழுத்தில் அணிவிக்க அன்பளிப்பாய் அளித்தாராம். மேலும் பிரம்மோற்ச்வத்தின்போது காஞ்சிக்கு வந்து பெருமாளையும் தரிசிக்கும் வழக்கமும் கிளைவிற்கு இருந்திருக்கிறது. ஒருமுறை அத்தகைய பிரம்மோற்சவத்தின்போது பெருமாளின் அழகில் மயங்கிய கிளைவ் தன் மனைவியின் தங்கச் சங்கிலியை ஸ்ரீவரதனுக்குக் கொடுத்துவிட்டாராம். இன்றளவும் அந்தச் சங்கிலியை கருடசேவையின்போது சார்த்துவது வழக்கம் என்கின்றனர். கிளைவ் தவிர ஆங்கிலேய அதிகாரியான ப்ளேஸ்துரை என்பவரும் ஸ்ரீவரதருக்குத் தலையில் அணியும் ஆபரணத்தை அன்பளிப்பாய்த் தந்து மகிழ்ந்தாராம். ஸ்ரீவரதராஜர் கோயில் என்று சொன்னாலும் மூலவர் பெயர் தேவராஜப் பெருமாள். உற்சவருக்கே வரதராஜர் என்ற திருநாமம். உற்சவருக்கு இருக்கும் இரு தேவியருமே பூமாதேவியர் என்றும் சொல்கின்றனர். இதன் காரணமாய்ச் சொல்லப் படுவது, முகமதியர் படை எடுப்பின்போது விக்கிரஹங்களை மறைக்கவேண்டி, உடையார்பாளையம் ஜமீனுக்கு விக்கிரஹங்கள் எடுத்துச் செல்லப் பட்டன. பின்னர் அங்கிருந்து மீண்டும் வரும்போது விக்கிரங்கங்கள் மாறிவிட்டதாயும், இரு தேவியருமே பூமிப் பிராட்டியாக அமைந்துவிட்டதாகவும் சொல்கின்றனர். மேலும் உடையார்பாளையம் ஜமீனில் காஞ்சி வரதர் தவிர ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் அங்கே அடைக்கலம் புகுந்ததால், திரும்ப எடுத்து வரும்போது அடையாளம் காணமுடியாமல், சலவைத் தொழிலாளி ஒருவர் காஞ்சி வரதரின் ஆடையின் மணத்தை வைத்துக் கண்டு பிடித்ததாயும் கூறுவார்கள். இதன் காரணமாக சலவைத் தொழிலாளி வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு நவராத்திரியில் மரியாதைகள் செய்யப் பட்டு வருகின்றன.
உற்சவரின் திருமுகத்தில் காணப்படும் வடுக்கள் பிரம்மாவின் யாகத்தின் வெப்பம் தாங்காமல் ஏற்பட்டவை என்கின்றனர். இங்கே இருக்கும் வையமாளிகை என்னும் இடத்தில் உள்ள இரு பல்லிகளின் தரிசனம் மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுவது. ஸ்ருங்கிபேரர் என்னும் முனிவரின் குமாரர்கள் ஹேமன், சுக்லன் இருவரும் கெளதம முனிவரின் சீடர்கள். குருகுலத்தில் இருந்த இவர்கள் குருவுக்கெனக் கொண்டு வரும் தீர்த்தத்தில் சுத்தமில்லாமையால் இரு பல்லிகள் துள்ளிக்குதித்து வெளியே வர, சீடர்களின் கவனக்குறைவைக் கண்ட குருவானவர் இருவரையும் பல்லிகளாய்ப்பிறக்கும்படி சாபம் கொடுக்கிறார். சாபவிமோசனம் வேண்டிய இருவரையும் சத்தியவிரத க்ஷேத்திரமான காஞ்சியில் ஸ்ரீவரதராஜரை வழிபட்டு வரச் சொல்லி அனுப்பி வைக்க, இங்கே வந்து தவம் செய்த இருவருக்கும், யானை ரூபத்தில் வழிபட்டு வந்த இந்திரனுக்கும் ஒரே சமயம்சாபவிமோசனம் கிடைக்கிறது. இவர்களின் கதையைக் கேட்ட இந்திரன் தங்கப் பல்லி ஒன்றும், வெள்ளிப் பல்லி ஒன்றும் செய்து இங்கே பிரதிஷ்டை செய்ததாகவும் இந்தப் பல்லிகளைத் தொட்டுப் பிரார்த்திப்போருக்கு சகல தோஷங்களும் விலகும் என்றும் சொல்கின்றனர்.
இங்கு பாஞ்சராத்திரமுறைப்படி மந்த்ராஸநம் என்னும் திருப்பள்ளி எழச் செய்தல், ஸ்நாநாஸநம் என்னும் திருமஞ்சனம் அல்லது அபிஷேஹம், அலங்காரஸநம் என்னும் ஆடை, ஆபரணங்கள் அணிவித்து மலர்மாலைகள் சூட்டல், போஜ்யாஸநம் என்னும் உணவு படைத்தல், புநர் மந்த்ராஸநம் என்னும் துளசியால் அர்ச்சனையும் பர்யாங்காஸநம் என்னும் பள்ளியறை வழிபாடு போன்றவை நடைபெறுகின்றன. வருடத்தின் பனிரண்டு மாதங்களும் திருவிழாக்கள் உண்டு. மதுரையில் கள்ளழகர் வைகையில் இறங்குவது போல் இங்கே ஸ்ரீவரதராஜர் பாலாற்றில் இறங்குகிறார். இதற்குக் காரணமாய்ச் சொல்லப் படுவது:
மொகலாயர் படை எடுப்பின்போது வரதராஜர் காஞ்சிக்கு அருகே பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு என்னும் ஊரில் லக்ஷ்மிநரசிம்மர் கோயிலில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். ஒரு வருஷத்துக்குக் காஞ்சி வரதருக்கு அந்தக் கோயிலிலேயே திருமஞ்சனம் மற்றும் அனைத்து உற்சவங்களும் நடைபெற்று வந்துள்ளது. இதன் அடையாளமாகவே ஒவ்வொரு சித்ரா பெளர்ணமிக்கும் காஞ்சி வரதர் பாலாற்றில் எழுந்தருளி லக்ஷ்மி நரசிம்மரை வலம் வந்து நன்றி தெரிவித்துச் செல்வதாய் ஐதீகம். இதே போல் வைகாசிமாசம் நடக்கும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் சோளிங்கபுரத்தில் வசித்த ஒரு பக்தனுக்காக பெருமாள் அங்கே சேவை சாதிப்பதாக ஐதீகம் ஒன்று உண்டு. அதற்காக மூன்றாம் நாள் உற்சவத்தின் போது அதிகாலை சூரியோதயத்தில் கருடவாகனத்தில் இரட்டைக்குடைகளோடு எழுந்தருளும் பெருமாளை சில நிமிட நேரம் அந்தக் குடைகளால் மறைக்கின்றனர். அந்த மறைக்கும் சில நிமிடங்கள் பெருமாள் சோளிங்கபுரத்தில் வசித்து வந்த தோட்டாச்சார் என்பவருக்காக அங்கே தரிசனம் கொடுப்பதாய் ஐதீகம். வருடா வருடம் கருடசேவைக்குக் காஞ்சி வந்த தோட்டாசாரியாருக்கு ஒரு வருஷம் வரமுடியாமல் போக மனம் வருந்தி பகவான் நினைவாகவே தவித்துக் கொண்டு இருக்க, பகவான் அவருக்கு அங்கேயே தன் தரிசனத்தைக் காட்டி அருளினார். அதன் நினைவாய் இது இன்றளவும் நடந்து வருவதாய்ச் சொல்கின்றனர்.
ஸ்ரீராமாநுஜருக்கு யக்ஞமூர்த்தி என்பவ்ருடன் நடந்த வாதத்தில் வெல்ல உதவியதும் இங்கேதான். கூரத்தாழ்வார் இழந்த தன் கண்களைத் திரும்பப் பெற்றதும் இங்கேதான். ஸ்ரீவரதாராஜஸ்தவம் என்னும் பாடல்களைப் பாடிப் பெற்றார் என்பார்கள். திருக்கச்சிநம்பிகள் ஸ்ரீவரதராஜருக்கு விசிறி கைங்கரியம் செய்து பெருமாளுடன் நேரடியாகப் பேசி அவர் கட்டளைகளை ஸ்ரீராமாநுஜருக்குத் தெரிவித்து வந்தாய்ச் சொல்லுகின்றனர். கவி காளமேகமும் கஞ்சி வரதரின் கருடசேவையைப் பார்த்துவிட்டு நிந்தாஸ்துதியாக ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.
அடுத்ததாய் திருப்புட்குழி என்னும் தலம்.
Subscribe to:
Post Comments (Atom)
"அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமா லென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும் போதுமோ நீர்மலைக் கென்னும் குலங்கெழு கொல்லி கோமள வல்லிக் கொடியிடை நெடுமழைக் கண்ணி இலங்கெழில் தோளிக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.- "திருமங்கையாழ்வார் மங்களசாஸனம் "
ReplyDeleteம்.. அடுத்தது வீர.. விஜய ராகவ பெருமாளா? ஜடாயுக்கு ராமர் க்ரியை பண்ணின இடம்!! looking forward to that:))
//ஸ்ரீவரதராஜரை வழிபட்டு வரச் சொல்லி அனுப்பி வைக்க, இங்கே வந்து தவம் செய்த இருவருக்கும், யானை ரூபத்தில் வழிபட்டு வந்த இந்திரனுக்கும் ஒரே சமயம்சாபவிமோசனம் கிடைக்கிறது. இவர்களின் கதையைக் கேட்ட இந்திரன் தங்கப் பல்லி ஒன்றும், வெள்ளிப் பல்லி ஒன்றும் செய்து இங்கே பிரதிஷ்டை செய்ததாகவும்....சொல்கின்றனர்.//
ReplyDeleteஅது சரி ஆனை எங்கே இருக்கு?